Read in : English
ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வரும் அவளது கணவர், அவருக்குக் கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதியைத் தினசரி குலுக்கல் லாட்டரிச் சீட்டுகள் வாங்குவதிலேயே செலவழித்துவிடுகிறார். குடும்பச் செலவுக்குப் போதிய பணம் கொடுப்பதில்லை. ‘இதே நிலை நீடித்தால், குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழி இல்லை’ என்று கடிதத்தில் அப்பெண் குறிப்பிட்டிருந்தாள். அந்தத் தகவல்கள் குறித்து சென்னை மாநகர உளவுப்பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தன.
தினந்தோறும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களின் பெயர்களால் குலுக்கல் நடத்தப்படும் லாட்டரிச் சீட்டுகள் சென்னை நகரின் பல பகுதிகளில் அதிக அளவில் விற்பனையாகி வருவதும், மாலை நேரங்களில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்யும் கடைகள் சூதாட்ட ‘கிளப்’ போன்று சுறுசுறுப்பாக இயங்கி வருவதும், அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட பலர் தினசரி வருமானத்தின் பெரும்பகுதியை லாட்டரிச் சீட்டுகள் வாங்குவதன் மூலம் தொலைத்து விடுகிறார்கள் என்பதையும், லாட்டரிச் சீட்டால் குடும்ப வாழக்கையைச் சீரழித்தவர்கள் மற்றும் தற்கொலைக்குத் தள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் உளவுப் பிரிவு விசாரணை உறுதிப்படுத்தியது.
லாட்டரிச் சீட்டுகள் விற்பனை தொடர்பான உளவுப் பிரிவின் அறிக்கையைப் பரிசீலனை செய்த காவல் ஆணையர், என்னை நேரில் அழைத்தார். தபால் மூலம் கிடைக்கப் பெற்ற அந்தக் கடிதத்தையும், அது தொடர்பான உளவுப் பிரிவு அறிக்கையையும் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக என்னிடம் கொடுத்தார். அப்போது நான் சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவில் துணை ஆணையராகப் பணிபுரிந்து வந்தேன்.
சமுதாயச் சீர்கேடுகளை ஏற்படுத்தும் தினசரி குலுக்கல் லாட்டரிச் சீட்டுகள் விற்பனை குறித்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் முன்னர், லாட்டரிச் சீட்டுகள் விற்பனை தொடர்பான பின்னணி நிலவரம் குறித்து மத்திய குற்றப் பிரிவில் பணிபுரியும் ஆய்வாளர்களிடம் ஆலோசனை செய்ததில் சில முக்கியத் தகவல்கள் கிடைத்தன.
லாட்டரிச் சீட்டுகள் விற்பனை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணை செய்வதற்கு எதிராக லாட்டரிச் சீட்டு முகவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இடைக்காலத் தடை ஆணை பெற்றுள்ளனர். அந்த தடை ஆணையை அகற்ற காவல்துறை உரிய முயற்சி மேற்கொள்ளவில்லை. தடை ஆணை தொடர வேண்டும் என்பதே பெரும்பாலான மாநகர காவல்நிலைய அதிகாரிகளின் விருப்பம் என்பது தெரியவந்தது.
இந்தச் சூழலில் சட்ட விதிமுறைகளை மீறி விற்கப்படும் தினசரி குலுக்கல் லாட்டரிச் சீட்டுகள் குறித்து நடவடிக்கை எடுப்பதில் உள்ள சட்ட ரீதியான சாதக பாதகங்களைப் பரிசீலனை செய்த பின்னர், சென்னை நகரில் முக்கிய இடங்களில் செயல்பட்டு வந்த லாட்டரிக் கடைகளில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்த நாள் குறிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் ரகசியமாகச் செய்யப்பட்டன.
அப்படி நடத்தப்பட்ட திடீர் சோதனையில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனை விதி மீறல்களில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து லாட்டரிச் சீட்டுகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டன.
உயர் நீதிமன்ற தடை ஆணை நடைமுறையில் இருக்கும்போது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் எந்த அடிப்படையில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை நடத்தினார்கள்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்;திக்க வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்படும் என்ற கருத்தை சென்னை மாநகரக் காவல் நிலைய அதிகாரிகள் கசியவிட்டனர்.
லாட்டரி ஒழுங்குமுறை சட்டப் பிரிவுகளின் கீழ் லாட்டரிச் சீட்டு விற்பனை நிலையங்களில் சோதனையிட்டு, வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் தடை ஆணை வழங்கியுள்ளது. ஆனால், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்ற தடை ஆணையில் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து உயர் நீதிமன்றம் எவ்விதமான கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. மாறாக, லாட்டரிச் சீட்டுகள் விற்பனை முறைகேடுகள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் முறையான புலன் விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையைத் தினந்தோறும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
லாட்டரி ஒழுங்குமுறை சட்டத்தின்படி, லாட்டரிச் சீட்டு திட்டத்தை ஒரு மாநில அரசு நடத்தினால், பரிசு தொகை உள்ளிட்ட அனைத்து நிர்வாகச் செலவுகளுக்கும் அந்த மாநில அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு குலுக்கல் நடைபெறுவதற்கும் முன்பாக, அச்சிடப்பட்ட லாட்டரிச் சீட்டுகளின் எண்ணிக்கை, விற்பனை செய்யப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்படாத சீட்டுகள் குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஒரு மாநில அரசின் பெயரில் லாட்டரிச் சீட்டுகள் அச்சிட்டு, விற்பனை செய்யும் உரிமத்தை ‘கமிஷன்’ அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, தினசரி குலுக்கல் லாட்டரிகள் நடத்தக் கூடாது. இந்த விதிமுறைகள் அனைத்தும் வடகிழக்கு மாநிலங்களின் பெயரால் நடத்தப்படும் லாட்டரிகளில் கடைபிடிக்கப்படவில்லை என்பது போலீசாரின் புலன் விசாரணையில் தெரியவந்தது.
வடகிழக்கு மாநிலங்களின் பெயர்களில் சென்னை நகரில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் அம்பத்தூர் பகுதியில் அச்சிடப்படுவதும், சென்னை நகரில் அவர்களது அலுவலகம் செயல்பட்டுவருவதும் புலன் விசாரணையில் தெரிய வந்தன.
தினசரி கூலி வேலை பார்ப்பவர்களும், குறைந்த வருமானம் கிடைக்கக் கூடிய வாராந்திர மற்றும் மாத சம்பளத்தில் வேலை செய்பவர்களும் அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் பெரும் பகுதியை லாட்டரிச் சீட்டுகள் வாங்குவதில் செலவழித்துவிட்டு, குறைந்த தொகையுடன் வீட்டுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். குறைந்த வருமானம் ஈட்டும் சராசரி பொதுமக்களின் பேராசைக்கு வடிகாலாக லாட்டரிச் சீட்டு கடைகள் நகரின் முக்கியப் பகுதிகளில் சுறுசுறுப்பாக இயங்கி வந்தன. லாட்டரிச் சீட்டில் முதல் நாள் இழந்த தொகையை அடுத்து நாள் கைப்பற்றிவிடலாம் என்ற மயக்கத்துக்கு ஆட்பட்டு, இறுதியில் வாழ்க்கையைத் தற்கொலையில் முடித்துக்கொள்ளும் சூழலுக்குப் பலர் தள்ளப்பட்டு வந்தனர் என்பதும் விசாரணையில் தெளிவானது.
அந்த காலகட்டத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் நேரடி மேற்பார்வையில் செயல்பட்டுவந்த தமிழ்நாடு அரசு லாட்டரித் துறை ஆண்டுக்கு ரூ.20 கோடிக்கும் சற்று அதிகமாக அரசுக்கு வருவாய் ஈட்டிக் கொடுத்தது. ஆனால், சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அசாம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் பெயர்களால் நடத்தப்பட்ட தினசரி குலுக்கல் லாட்டரிகள் ஆண்டு ஒன்றுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவுக்கு வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.
லாட்டரிச் சீட்டு விற்பனை முறைகேடுகள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர், தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்த அறிக்கையானது அரசின் கவனத்தை ஈர்த்தது.
வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்க வேண்டும் என்ற உணர்வில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசு லாட்டரிச் சீட்டு திட்டம், காலப்போக்கில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வருமானத்தை விழுங்கும்பூதமாக மாறி, பல உயிர்களைத் தினந்தோறும் பறித்து வந்ததை உணர்ந்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனைக்குத் தடை விதிக்கும் ஆணையை ஜனவரி 2003-ல் பிறப்பித்தார். அந்தத் தடையை அகற்ற நடந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன.
தன் மனக் குமுறலை வெளிப்படுத்தி எழுதிய ஒரு பெண்ணின் கடிதம், பல்லாயிரம் கோடி ரூபாய் வியாபாரம் செய்து வந்த லாட்டரி நிறுவனங்களைப் புதைகுழியில் மூழ்கடித்த சம்பவம், ஒற்றைச் சிலம்புடன் பாண்டிய மன்னின் அரசவையில் நீதி கேட்ட கண்ணகியின் செயல்பாட்டை நினைவுபடுத்துகிறது.
அனைத்து வகையான லாட்டரிச் சீட்டுகள் விற்பனையும் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டு பதினைந்து ஆண்டுகள் கடந்த நிலையில், இன்றும் லாட்டரிச் சீட்டுகள் விற்பனை பல்வேறு உருவங்களில் பல நகரங்களில் வெளிப்படையாக நடைபெற்று வருவதை அனைவரும் அறிவார்கள். நீதி கேட்டு மீண்டும் மற்றொரு பெண் வருவது எந்நாளோ?
(இந்த கட்டுரையின் ஆசிரியர் ஓய்வுபெற்ற மூத்த மாநில போலீஸ் அதிகாரி ஆவார், அவர் IGP (உளவுத்துறை) உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்)
கட்டுரை paarvaaiyalar.com இன் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது
Read in : English