Site icon இன்மதி

கருத்து: சீருடை விவகாரமாக மட்டுமே ஹிஜாப் புரிந்துகொள்ளப்படுகிறதா?

Read in : English

கர்நாடக அரசு கல்வி நிலையங்களில் கொண்டுவந்த ஹிஜாப் தடை செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை இப்போது உச்ச நீதிமன்றம் விசாரித்துக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கு இந்தியாவின் கல்வி அமைப்புடனும், குடிமக்கள் வாழ்வுடனும் தொடர்புடையது என்பதால் வழக்கின் அடிப்படைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டிய நேரம் இது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியலமைப்புச் சட்டப் பேரவையின் ஆலோசகராக இருந்த புகழ்பெற்ற அதிகாரவர்க்க சட்டநிபுணரான பெனெகல் நரசிங் ராவ், நீதியரசர் பெலிக்ஸ் ஃபிராங்ஃபட்டரையும், உலகத்திலுள்ள மற்ற சட்ட நிபுணர்களையும் சந்தித்தார்.

அவர்களிடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகளால் நமது அரசியலமைப்புச் சட்டம் உருவானது. அமெரிக்காவில் தனிமனிதனின் அந்தரங்க உரிமைகள் சமூக உரிமைகளுக்கும் மேலாக மதிக்கப்படுகின்றன. அங்கே தனிமனித உரிமைகள் ஒருபோதும் எதற்கும் விட்டுக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், இந்தியாவில் அப்படியன்று.

இங்கே சமூகநலன் அல்லது பொதுமக்கள் நலன் மிகவும் முக்கியமானது. அதற்குக் கட்டுப்படுவதுதான் தனிமனித உரிமைகள். மத உரிமைப் பிரச்சினைகளில் கூட, இந்த இரண்டுவிதமான உரிமை எல்லைகளில் (சமூக உரிமை மற்றும் தனிமனித உரிமை) உள்ள அடிப்படைக் கருத்தியல்களுக்கு வேறுபாடு கிடையாது.

கர்நாடகத்தில் இந்த ஹிஜாப் சர்ச்சை வெடித்தபோது, மேற்சொன்ன சிந்தனைகள்தாம் நினைவுக்குவந்தன. இந்தச் சர்ச்சை ‘அதிமுக்கிய மதப் பழக்கவழக்கங்கள்’ தொடர்பான ஓர் அரசியலமைப்புச் சட்டப் பிரச்சினையாக உருவெடுத்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு இந்த வழக்கை விசாரித்திருக்கிறது.

அமெரிக்காவில் தனிமனிதனின் அந்தரங்க உரிமைகள் சமூக உரிமைகளுக்கும் மேலாக மதிக்கப்படுகின்றன. அங்கே தனிமனித உரிமைகள் ஒருபோதும் எதற்கும் விட்டுக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், இந்தியாவில் அப்படியன்று

பல நாள்கள் நடந்த நீதிமன்ற விசாரணைக்குப் பின்பு, ‘ஹிஜாப் தடை’ விதிப்பதற்கு அரசிற்கு/பள்ளிக்கு அதிகாரம் உண்டு என்ற 129 பக்கத் தீர்ப்பு வெளியானது. தங்களின் ‘மதப் பழக்கவழக்கங்களை’க் காரணமாகக் காட்டி, குறிப்பிட்டவொரு மதத்தைச் சார்ந்தவர்கள் பொதுவிதியோடு இணக்கமாகப் போவதைத் தவிர்க்க இயலாது என்று தீர்ப்பு சொன்னது.

2022, மார்ச் 15 அன்று, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிட்டு ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா திக்ஸிட் மற்றும் நீதிபதி ஜே.எம்.காஜி ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, ‘ஸ்ரீமதி ரேஷம் எதிர் கர்நாடக மாநிலம்’ வழக்கில், கல்வி நிலையங்களில் கொண்டுவரப்பட்ட ஹிஜாப் தடை செல்லும் என்று தீர்ப்பளித்தது. ஹிஜாப் அணிவது ‘அதிமுக்கிய மதவழக்கம் அல்ல’ என்றும், அதனால் பிரிவு 25-ன் கீழ் அது பாதுகாக்கப்படுவதற்குத் தகுதியானதன்று என்றும் நீதிமன்றம் ஒரு நிலைப்பாட்டை எடுத்தது.

மேலும் படிக்க: ஹிஜாப், இஸ்லாமிய பெண்களின் ஆடை உரிமையை பறிக்கிறதா?: கவிஞர் சல்மா

இந்த வழக்கில் சில ஐயப்பாடுகள், சில வினாக்கள் எழுந்திருக்கின்றன. நீதிமன்றம் இதை ஓர் அரசியலமைப்புச் சட்ட வழக்காகக் கையாள வேண்டுமா? ‘சீருடை’விசயத்தில் கர்நாடகக் கல்விச் சட்டம், 1983இன்படி எல்லா மாணவர்களும் நடந்துகொள்ள வேண்டும் என்றவோர் எளிய வழக்காக இதைக் கையாண்டிருக்கலாமே? கல்வி நிலையங்களில் மாணவர்களிடம் ஆடை நியதிகளை வலியுறுத்துவது அரசியலமைப்புச் சட்டத்தை, அதாவது மாணவர்களின் மத உரிமைகளை மீறுவதாகிவிடும் என்ற ஆராய வேண்டியதொரு கேள்வி பிரதானமான கேள்வியா?

மிகவும் எளிதான வழக்குகளைத் திரைபோட்டு மறைப்பது அல்லது அரசியலமைப்புச் சட்டப் பிரச்சினைகளாக அவற்றை மடைமாற்றம் செய்து சிக்கலாக்குவது; பின் மலையளவு வாய்கிழியப் பேசுவது; இது நம்மிடம் இருக்கும் தனித்துவமான ஒரு திறமை. அதாவது சட்டத்துறையில் இருப்போர்களின் திறமை. சின்னச் சின்ன விவரங்களில் அதீதக் கவனம் செலுத்தி பெரியதொரு பிரச்சினையைப் பார்க்கத் தவறவிடுகின்ற செயலை உச்ச நீதிமன்றம் செய்யாது என்றும், ஜல்லிக்கட்டை அடக்குவதுபோல் அது இந்தப் பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆம், நண்பர்களே! அந்த நம்பிக்கைக்கு ஏற்ப இப்போது உச்ச நீதிமன்றம் செயல்பட்டிருக்கிறது. எப்படி?

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடையை ஆதரித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்துக்கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம், 2022, செப்டம்பர் 5 அன்று இப்படிச் சொன்னது: “நீங்கள் விரும்பியதைச் செய்வதற்கான மத உரிமை உங்களுக்கு இருக்கலாம். ஆனால், அந்த உரிமையை சீருடை விதியைக் கொண்டிருக்கும் பள்ளிக்கு உங்களால் எடுத்துச் செல்ல முடியுமா?”

“வாஸ்தவம்தான். எங்கே போனாலும் ஸ்கார்ஃப் அல்லது ஹிஜாப் அணிந்து செல்வதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனால், சீருடை நியதியை விதித்திருக்கும் ஒரு பள்ளிக்குப் போகும்போது உங்களால் ஹிஜாப் அணிந்து செல்ல முடியுமா?” என்று நீதிபதி ஹேமந்த் குப்தா மனுதாரர்களின் சார்பாக ஆஜரான மூத்த வழக்குறிஞர் சஞ்சய் ஹெக்டேவிடம் கேட்டார்.

ஹிஜாப் அணிவது ‘அதிமுக்கிய மதவழக்கம் அல்ல’ என்றும், அதனால் பிரிவு 25இன் கீழ் அது பாதுகாக்கப்படுவதற்குத் தகுதியானது அல்ல என்றும் கர்நாடக நீதிமன்றம் ஒரு நிலைப்பாட்டை எடுத்தது

சமூகத்தின் சில பிரிவினர்களுக்குக் கல்வியை மறுப்பதற்காகக் கர்நாடகக் கல்விச் சட்டம்-1983 பயன்படுத்தப்படுகிறது என்ற வாதத்திற்குப் பதிலளித்த நீதிபதி சுதன்ஷூ துலியா உட்படப் பிற நீதிபதிகள் இருந்த அமர்வு இப்படிச் சொன்னது: “தாங்கள் எந்த உரிமையையும் மறுக்கவில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். மாணவர்களுக்கென்று விதிக்கப்பட்ட சீருடையில் வாருங்கள் என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள்.”

‘துப்பட்டா’, ‘ஹிஜாப்’ ஆகிய இரண்டுக்குமிடையே இருக்கும் ஒற்றுமைகளை சுட்டிக்காட்டிய மூத்த வழக்கறிஞர் இந்த இரண்டில் துப்பட்டா ஏற்கெனவே சீருடையின் ஓரங்கமாக இருக்கிறது என்றார். ஆனால், இரண்டையும் ஒப்பிட முடியாது என்றது நீதிமன்றம்.

இந்த வழக்கை எளிமையாக்க நீதிபதிகள் முயன்றார்கள்; சட்டச் சிக்கல்கள் என்று சொல்லப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கவே அவர்கள் போராடினார்கள். வழக்கை செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்கள்.

மேலும் படிக்க: பிறமலை கள்ளர் சமூகத்தில் இஸ்லாமிய சடங்கு பரவியது எப்படி?

பிரச்சினை மிகவும் குறுகியது என்றும், பள்ளி ஒழுக்கவிதிகளுடன் மட்டுமே தொடர்புகொண்டது என்றும் கர்நாடக அரசிற்காக ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் சொல்லியிருந்தார். நீதிபதி ஹேமந்த் குப்தா, “ஹிஜாப் அணிந்தால், பள்ளி ஒழுக்கவிதி மீறப்படுகிறது என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்று கேட்டார்.

தொடக்ககட்ட விவாதங்கள் மிகவும் ரத்தினச் சுருக்கமாகவே இருந்தன. சட்ட நிபுணர்கள் இதை ஓர் எளிய விசயமாக்க, குழப்பமில்லாத நேரடியான ஒரு விசயமாக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வு எழுந்தது. சாதாரணமாக எல்லாப் பள்ளிகளிலும் நடைமுறையில் இருப்பதைப் போல, ‘சீருடை நியதியைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று ஒரு பள்ளி வலியுறுத்தினால், மாணவர்களின் சட்டப்பூர்வமான உரிமைகளைத் தடுப்பதற்காகக் கர்நாடகக் கல்விச் சட்டம்-1983 பயன்படுத்தப்படுகிறது என்று அர்த்தமாகுமா? மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஓர் எளிய அதிகாரப்பூர்வமான நியதிதானா இது? ‘ஹிஜாப்’ ஓர் ‘அதிமுக்கிய மத உரிமைப் பழக்கமா,’ இல்லையா என்ற பிரச்சினையை ஆராய வேண்டிய தேவை இருக்கிறதா?

‘அதிமுக்கிய மத உரிமைப் பழக்கம்’ என்பது ஓர் இறையியலாளருக்குக் கூட துர்சொப்பனம்தான். சந்தேகமே இல்லாமல், சட்ட நிபுணர்களுக்கு அது ஒரு சறுக்குப் பாதை. அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் எப்போதும் இப்படிச் சொல்வார்: “நீதிமன்றங்கள் வழக்குகளின் ‘அதிமுக்கிய’ பிரச்சினைகளை ஆராய்ந்துதான் தீர்ப்பளிக்க வேண்டும். பிரச்சினைகளைப் பற்றி வீரதீரக் கற்பனைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

 “எங்கே போனாலும் ஸ்கார்ஃப் அல்லது ஹிஜாப் அணிந்து செல்வதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனால், சீருடை நியதியை விதித்திருக்கும் ஒரு பள்ளிக்குப் போகும்போது உங்களால் ஹிஜாப் அணிந்து செல்ல முடியுமா?”

தங்கள் முன்பு வழங்கப்பட்ட எளிய உண்மைகளின் அடிப்படையிலேயே வழக்குகளின் தீர்ப்புகள் அமைய வேண்டும். அவற்றைத் தாண்டிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற விதியை நீதிபதிகள் பின்பற்ற வேண்டும்.” (மேற்கோளின் அசல் மொழி மாற்றியமைக்கப்பட்டது).

கருக்கலைப்பு பற்றிய சமீபத்து டாப்ஸ் தீர்ப்பில் அவர் பெரும்பான்மையான தனது சகநீதியரசர்களுக்கு இதைத்தான் அறிவுறுத்தினார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ‘ரோ எதிர் வாடே வழக்குத்’ தீர்ப்பை அது தலைகீழாகப் புரட்டிப் போட்டு ஏற்கெனவே இந்தப் பிரச்சினையில் பிளவுபட்டிருந்த தேசத்தை மேலும் பிளவுபடுத்தியது.

இந்தியாவில் இப்போது இந்த ரேஷம் வழக்கில், வழங்கப்பட்ட தரவுகளின், உண்மைகளின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு எழுதப்படும் என்று நாம் நம்புகிறோம். இந்த வழக்கிற்கு வழக்குரைஞர்கள் கொடுத்திருக்கும் அரசியலமைப்புச் சட்டக் கோணம் வெறும் மடைமாற்றம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்; புரிந்துகொள்ள வேண்டும். நல்ல வேளை! உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதைச் சரியாகப் புரிந்துகொண்டது போலத் தெரிகிறது.

இதே பாதையில் பயணித்து இந்த எளிய வழக்கில் ஓர் எளிய தீர்ப்பை அவர்கள் தருவார்களா? இல்லை, இதை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசில் எழுந்திருக்கும் மலைபோன்ற சட்டப் பிரச்சினையாக மாற்றத் துடிக்கும் ஆர்வமுள்ள வழக்கறிஞர்களின் மனப்போக்கிற்கு ஏற்றவாறு அவர்கள் நடந்துகொள்வார்களா? மிக எளிதாகவே உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையைக் கையாளும் என்று நம்புகிறோம்.

(கட்டுரையாளர் ‘அரசியலமைப்புச் சட்டமும் அதன் உருவாக்கமும்/செயற்பாடும்’ என்ற புத்தகத்தை எழுதியவர்: ஓக்பிரிட்ஜ் பதிப்பகம், 2020/2021. மேலும், அவர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்)

Share the Article

Read in : English

Exit mobile version