Read in : English
ஆதிச்சநல்லூர் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட தினமொரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்திக் கொண்டு வருகிறார்கள். ஆகஸ்டு 9 அன்று அவர்கள் ஒரு வெண்கல மான் சிலையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கு முன்பு தங்க நெற்றிச்சுட்டி ஒன்றை அவர்கள் கண்டெடுத்தார்கள்.
2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆதிச்சநல்லூர் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி தாமிரபரணி நதியருகே திருச்செந்தூர்-திருநெல்வேலி சாலையின் மறுபக்கத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த தங்க நெற்றிச்சுட்டியைப் பாறை அடுக்கு வரைவியல்படி பார்த்தால் அது கிமு ஆண்டு 1,000-த்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று மதிப்பீடு செய்கிறார் அகழ்வாராய்ச்சி இயக்குநர் அருண் ராஜ். 2004ஆம் ஆண்டு தொடங்கிய இந்த அகழ்வாராய்ச்சியில் தோண்டியெடுக்கப்பட்ட கலைப்பொருள்களில் செய்யப்பட்ட கரிமக் காலக்கணிப்பு (கார்பன் டேட்டிங்) அவை கிமு 800ஆம் ஆண்டு பழமை வாய்ந்தவை என்று சொல்கிறது.
1905ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ரியா என்னும் ஆங்கிலேயர்தான் வரைபடத்தில் இந்த அகழ்வாராய்ச்சித் தளத்தைக் கண்டுபிடித்தார். இன்றுவரை இருக்கும் பாண்டிக் கோயிலை அவர் அடையாளங்கண்டார்.
ரியா அகழ்வாராய்ச்சிக் களத்திற்கு அருகில் ஒரு களத்தை இன்றைய குழு செயற்கைக்கோள் வரைபடம் மூலமாகவும், புவியியல் தகவல் முறைமை (ஜிஐஎஸ்) மூலமாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறது. மொத்தம் ஏழு தளங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அவற்றில் முதல் தளத்தில்தான் தற்போது அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மேலும் படிக்க:
எக்மோர் மியூசியத்தை உயிர்த்துடிப்பும் உற்சாகமும் சுவாரஸ்யமும் கொண்டதாக மேம்படுத்த இயலும்
வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் இருக்கும் எல்லா இந்திய கலைப்பொருட்களும் திரும்பக் கிடைக்குமா?
இந்தியத் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக் கழகத்தைச் சார்ந்த ஒரு நான்கு- உறுப்பினர்க் குழு முதல் தளத்தில் 90 முதுமக்கள் தாழிகளைக் கண்டறிந்தது. அவற்றில் 88 தாழிகளில் ஒன்றும் காணக் கிடைக்கவில்லை. எனினும், 99ஆம் தாழி ஒரு புதையல் போலக் காணப்பட்டது; அதில் இரும்பு ஈட்டிகள் போன்ற ஆயுதங்கள், மான்கள், பறவைகள் போன்ற வெண்கல உருவங்கள், 11 அம்புகள், தங்கக்கிரீடம் ஆகியவை அந்தத் தாழியில் காணப்பெற்றன.
அந்தக் கல்லறையின் உயரத்தை வைத்துப் பார்க்கும்போது, அது ஓர் இனத்தலைவனுடையது போலத் தோன்றியது. பாறை அடுக்கு வரைவியல் ஆய்வு செய்யும்போது, ஆதிச்சநல்லூரில் ஏதோவொரு வர்க்கக் கட்டமைப்பு இருந்திருக்க வேண்டும் என்பது போலத் தோன்றுகிறது. ”ஈட்டிகள் செங்குத்தாக நின்ற நிலையிலேயே புதைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வீரனின், அதாவது ஒரு வீரத்தலைவனின், கல்லறையாக இருக்கலாம் என்பதைத்தான் இது காட்டுகிறது,” என்கிறார் அருண் ராஜ்.
கலைவினைப் பொருள்கள் உயர்ரக தகரம் கொண்ட வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இருக்கும் 23 விழுக்காடு தகரத்தினால்தான் அவை வளையும் தன்மையுடன் நீடித்து இருக்கின்றன. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்களில் ஒரு சிப்பல்தட்டும் (வடிகட்டி) இருந்தது. அதன் வலையும் கைப்பிடியும் தனித்தனித் துண்டுகளாகக் காணப்பெற்றன. அலங்காரமான அதன் மூடியில் விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
கிடைக்கப்பெற்ற நெற்றிச்சுட்டி நெளிந்து கிடந்தது. இந்தமாதிரியான அணிகலன்கள் வேண்டுமென்றே நெளிக்கப்பட்டிருந்தன. ஒருவேளை ஒரு தலைவனின் அணிகலனை மறுபடியும் பயன்படுத்தக் கூடாது என்பது போல கூட இருக்கலாம். இது நெற்றிச்சுட்டியாக இல்லாமல் இருக்கும் சாத்தியமும் உண்டு, சுமேரியாவில் இருந்ததைப் போன்று வீர்ர்கள் தோள்களில் அணியும் ஓர் தோள்பட்டை அணிகலனாக இருக்கலாம் என்றவொரு கருத்தை முன்வைக்கிறார் அருண் ராஜ். “காணப்பெற்ற பொருள்கள் பல வெளிநாட்டுப் பொருள்கள். ஆதிச்சநல்லூர் கடல் வியாபாரத்தோடு தொடர்பு கொண்டதைத்தான் இது காட்டுகிறது,” என்கிறார் அவர். மொத்தம் 14 நெற்றிச்சுட்டிகளைக் கண்டறிந்திருக்கிறார் ரியா என்று மேலும் ஒரு தகவலை அருண் ராஜ் பகிர்ந்துகொண்டார்.
நெற்றிச்சுட்டி என்பது குறிப்பாகத் திருமண வைபோகங்களில், அந்தப் பகுதி ஆண்களும் பெண்களும் இன்றுகூட அணியும் ஓர் அணிகலன்.
இந்த அகழ்வாராய்ச்சிகள் தொடர்பான ஓர் அருங்காட்சியகத்தைக் கட்டமைக்கும் திட்டம் இருக்கிறது; அநேகமாக அது ஆதிச்சநல்லூர் கிராமத்திலே இருக்கலாம். அகழ்ந்தெடுத்த ஆதிக் கலைபொருள்களைக் காட்சிப்படுத்தி, சங்கத்தமிழ் இலக்கியத்தில் விவரிக்கப்பட்ட கொற்கைத் துறைமுகம் சார்ந்த ஒரு நதிக்கரை நாகரிகத்தை மீளுருவாக்கம் செய்யும் வண்ணம் அந்த அருங்காட்சியகம் அமையலாம். இன்மதியில் முன்பு இடம்பெற்ற வினோத் டேனியல் என்னும் ஓர் அருங்காட்சியக நிபுணர் அதை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அந்த அகழ்வாராய்ச்சித் தளத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், அங்கே கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் அடிப்படையிலும் கட்டமைக்கப்படும் என்றார். வழமையாக இந்திய அருங்காட்சியகங்களில் காணப்படும் பாணியிலிலிருந்து விலகி அகழ்வாராய்ச்சிப் பொருள்களைப் புதுமையாகக் காட்சிப்படுத்தலுக்குப் பேர்பெற்றவர் டேனியல்.
அகழ்வாராய்ச்சி ஆய்வுக் கோணத்தில் கீழடியைவிடப் பெரும் வரலாற்றுத் தொன்மை கொண்டதாக ஆதிச்சநல்லூர் இருக்கலாம். இங்கே காணப்பெற்ற பொருள்கள் ஏற்கெனவே கிமு 1,000 ஆண்டு பழமை வாய்ந்தவை என்று கரியமில காலக்கணிப்பு முறைமை நிரூபித்திருக்கிறது. இன்னும் 500 ஆண்டுகள் பின்னுக்குச் சென்றால் ஆதிச்சநல்லூரை புரோட்டோ திராவிட நாகரிகம் என்று வர்ணிக்கப்படும் சிந்துசமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியாகக்கூடப் பார்க்கமுடியும். ஆதிச்சநல்லூரின் உலோகப் பயன்பாடுகள் சிறப்பானவை; சிந்துசமவெளி நாகரிகத்தின் தன்மையையும், தொன்மையையும் கொண்டவை.
சுமார் 150 ஆண்டுகளாக ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியாளர்களை ஈர்த்திருக்கிறது. ஆதியில் ஃபெடார் ஜாகோர் என்னும் ஜெர்மானிய கல்வெட்டு ஆராய்ச்சியாளர், 34 மாட்டுவண்டிகளில் 9,000 பெட்டிகளில் ஆதிச்சநல்லூர் அகழ்வுகளை ஏற்றி ஜெர்மனிக்குக் கொண்டு சென்றார் என்றார் ரியா. ஜாகோரின் பணியின் உந்துதல் பெற்ற ரியா ஆதிச்சநல்லூரில் மேலும் அகழ்வாராய்ச்சி செய்தார். அவரின் கண்டுபிடிப்புகள் எழும்பூர், கொல்கத்தா அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன.
ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளில் கண்டெடுத்த எலும்புகள் மானுடவியலாளார்களை 20ஆம் நூற்றாண்டின் பின்பகுதிவரை கவர்ந்திழுத்தன. அந்தக் காலகட்டத்தில் மனிதனின் தோற்றம் பற்றிய விஞ்ஞான ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் லூயி லாபிக் உட்படப் பல்வேறு மானுடவியலாளர்கள் எலும்புகளை ஆய்வு செய்ய ஆதிச்சநல்லூருக்கு விஜயம் செய்தனர். ரியா அகழ்ந்தெடுத்த எலும்புகள் தற்காலத்து தமிழர்களின் எலும்புகள் போல இல்லை என்பதால் அவை ஏராளமான விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன.
இறுதியாக, மனிதனின் ஆதிப் பிறப்பிடம் ஆஃப்ரிக்கா என்று மானுடவியல் மற்றும் மரபணு ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், மனிதகுலத்தின் ஆதியினங்கள் ஆதிச்சநல்லூரில் குடியிருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் பலர் தொடர்ந்து நம்புகிறார்கள்.
Read in : English