Read in : English
சென்னையைச் சேர்ந்த அஷ்வதி மோகன் 2019இல் கனடா சென்றார். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பெற்ற காட்சிக் கலைகள் பட்டமும் சென்னையில் ஒரு கலைக்கூடத்தில் சில ஆண்டுகள் கண்காட்சி வடிவமைப்பாளராகப் பெற்ற அனுபவமும்தான் அவர் கையில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக கனடாவில் டொரன்டோ நகரில் வாழ்ந்ததில் அங்கு இருக்கும் கலை உலகைப் பற்றிய அறிவைப் பெற்றார் அவர். அத்துடன் இந்தியக் கலைஞர்களுக்கு, குறிப்பாக சென்னைக் கலைஞர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார். எனவே தான் இந்திய கனடா கலைஞர்களை இணைப்பதற்கு அவர் ‘அசம்பிளேஜ்’ என்ற மெய்நிகர் கலைக்கூடத்தைத் தொடங்கினார்.
அசெம்பிளேஜ் என்றால் தமிழில் ‘ஒரு நோக்கத்திற்காகக் கூடிய கூட்டம்’ என்று பொருள் கொள்ளலாம். கண்காட்சிகளை ஒருங்கிணைப்பதிலும் வடிவமைப்பதிலும் அவருக்கு இருக்கும் அனுபவ அறிவு தன்னுடைய சொந்த ஊரின் கலைஞர்களுக்கும் பயன்பட வேண்டும் அவர்களுக்கு உலக அளவில் பரிச்சயம் ஏற்படுத்த வேண்டும் என்பதாலேயே இந்தக் கலைக்கூடத்தை உருவாக்கியிருக்கிறார்.
வரும் மாதங்களில் சென்னையைச் சேர்ந்த கலைஞர்கள் ஆறு பேர் தங்களுடைய படைப்புகளை ‘அசெம்பிளேஜ்’ என்னும் இந்தக் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப் போகிறார்கள். உணர்தலின் படிநிலைகள் என்று பொருள் கொள்ளக்கூடிய ‘Layers of Perception’ என்ற தலைப்பில் ஓவியர் பி.வெங்கடேஷின் படைப்புகளின் முதல் மெய்நிகர் தனிக் கண்காட்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கிவைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட பல்வேறு வடிவங்களில் அக்ரிலிக், ஆயில், பென் அண்ட் இன்க், வாட்டர் கலர் ஆகியவற்றால் உருவான படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்த கண்காட்சியும் இதே போல சென்னையைச் சேர்ந்த வளர்ந்துவரும் கலைஞர் ஒருவருடைய மெய் நிகர் தனி கண்காட்சியாக இருக்கும். தொடர்ந்து அச்சுக் கலையை ஊடகமாகப் பயன்படுத்துவதைப் பற்றிய ஒரு குழுக் கண்காட்சியும் இருக்கும். “ஏப்ரலில் ‘அசம்பிளேஜ்’ தொடங்கினோம். இப்படி ஒரு மெய்நிகர் கலைக்கூடத்தை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்றால், ஒரு இடத்துக்குள்ளேயே சுருங்கிக் கட்டுப்பட்டுக் கிடக்க வேண்டாம் என்று நாங்கள் விரும்பினோம்.
இந்திய கனடா கலைஞர்களை இணைப்பதற்கு அவர் ‘அசம்பிளேஜ்’ என்ற மெய்நிகர் கலைக்கூடத்தைத் தொடங்கினார். அசெம்பிளேஜ் என்றால் தமிழில் ‘ஒரு நோக்கத்திற்காகக் கூடிய கூட்டம்’ என்று பொருள் கொள்ளலாம்
சென்னையில் பிறந்து தற்போது டொரன்டோவில் வாழ்வதால் இரண்டின் சாதகங்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். காலப்போக்கில் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் மற்ற நகரங்களில் இருந்தும் கலைஞர்களை கனடாவிற்கு வரவழைக்க வேண்டும். அதேபோல கனடாவில் இருந்தும் கலைஞர்களை இங்கே அழைத்துவர வேண்டும் என்று விரும்பினேன்” என்று அஷ்வதி கூறுகிறார்.
புதிய, வளர்ந்துவரும் கலைஞர்களை அறிமுகப்படுத்துவது; அடுத்த தலைமுறை சேகரிப்பாளர்கள் ஓரிடத்திலிருந்தே ஒரு பட்டனை அழுத்துவதன் மூலமாகவே கலைப் படைப்புகளை எளிதாக அணுகக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துவது; கலைஞர்களுக்கும் சேகரிப்பாளர்களுக்குமான இடைவெளியை நிரப்புவதுமே அஷ்வதியின் நோக்கங்கள். கலைஞர்களின் வளர்ச்சியில் கலைக்கூடங்கள் எப்போதுமே பேரளவில் பங்காற்றும். இதுபோன்ற மெய்நிகர் கலைக்கூடங்கள் கலைஞர்களுக்கும் சேகரிப்பாளர்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புமா?
மேலும் படிக்க:
பிரபல சிற்பி சந்ரு கைவண்ணத்தில் புதிய பரிமாணத்தில் பாரதியார் சிலை!
ராஜா ரவிவர்மா, கடவுளை ஜனநாயகப்படுத்திய ஓவியர்
“தொழில்நுட்ப வளர்ச்சிகள் நிறைந்த ஒரு காலத்தில் நாம் இப்போது வாழ்கிறோம். இப்போது, அனைவரும் தங்களுடைய வீட்டில் இருந்துகொண்டே தங்கள் மடிக்கணினி, கைப்பேசி வாயிலாக வேலைபார்க்கிறார்கள். மெய் நிகர் கண்காட்சிகளை நடத்துவதன் வாயிலாக இளம் வயதினரைத் தாண்டி பரவலான பார்வையாளர்களைச் சென்றடைய நான் விரும்புகிறேன். மெய் நிகர் கண்காட்சிகளின் எளிமையும் வாய்ப்பும் ஒரு புதிய தலைமுறைச் சேகரிப்பாளர்களை உருவாக்க உதவும் என்று நான் நம்புகிறேன். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் படைப்புகளை உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் சேகரிப்பாளர்கள் வாங்க முடியும்” என்று அவர் கூறினார்.
ஒரே இடத்தில் எந்தக் கலை, கலை தொடர்பான சேவைகளும் கிடைப்பதாக இருக்க வேண்டும் என்பதுதான் அஷ்வதியின் திட்டம். “விரைவில் கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்துவது, சுவர்களில் தொங்கக்கூடிய படைப்புகளைக் காட்சிப்படுத்துவது, கலைப்படைப்புகளைப் பாதுகாக்கும் சேவைகள் உட்படப் பலவற்றையும் செய்யும்
தொழில்முறை கலைச் சேவைகளைத் தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.
எங்களுடைய சிறப்பான குழு உங்கள் வீட்டுக்கோ அலுவலகத்துக்கோ வந்து உங்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பார்கள்” என்று அஷ்வதி கூறினார்.
அஷ்வதியைப் பொறுத்தவரை கலைகளுக்கான வலிமையான மையமாக சென்னை எப்போதும் இருந்து வருகிறது. “அந்நாள்களின் ‘மெட்ராஸ் இயக்க’த்தில் இருந்து இன்று வரை கலைஞர்கள், கண்காட்சி அரங்கங்கள், கலைக் காதலர்கள் ஆகியோரின் மாபெரும் வளர்ச்சியைச் சென்னை பார்த்திருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தங்களுடைய படைப்புகளைக் கண்காட்சி வைக்கும் கலைஞர்களுடைய எண்ணிக்கை வளர்ந்து வருவதையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
மெய்நிகர் கண்காட்சிகளின் வழியே நாங்கள் கலை உலகுக்கு வந்திருந்தாலும், பார்வையாளர்கள் நேரடியாக வந்துபோகும் அரங்கக் கண்காட்சிகளை வடிவமைப்பதிலும் ஆர்வத்துடன் தான் இருக்கிறோம்
சென்னையில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் சிறந்த கலைக் கல்வியை வழங்குவதால் பல புதிய வளர்ந்துவரும் கலைஞர்களை வருங்காலத்தில் பார்க்க விருப்பமாக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.
உலக அளவில் ஏற்பட்ட பெருந்தொற்று பல தொழில் நிறுவனங்களையும் போல கலைக்கூடங்களும் தொடர்ந்து இயங்குவதற்காகப் பல புதிய முயற்சிகளையும் எடுக்கவைத்திருக்கிறது. அந்தத் தொற்றின் இரண்டாவது அலையில் கண்காட்சி அரங்கங்கள் மெய் நிகர் அரங்கங்களாக மாறத் தொடங்கி இருக்கின்றன.
ஆனால், அதுபோன்று தொற்றின் காரணமாக ஏற்பட்ட நிலையற்ற தன்மையின் காரணமாக அசம்பிளேஜ் மெய்நிகர் கலைக்கூடமாக உருப்பெறவில்லை என்பதையும் அஷ்வதி சுட்டிக்காட்டினார். “ஏப்ரலில் நாங்கள் மெய்நிகர் கலைக்கூடத்தைத் தொடங்கியதற்கு நாங்கள் ஒரு இடத்தில் கட்டுப்பட்டுக் கிடக்க வேண்டாம் என்று நினைத்ததுதான் காரணம்.
மெய்நிகர் கண்காட்சிகளின் வழியே நாங்கள் கலை உலகுக்கு வந்திருந்தாலும், பார்வையாளர்கள் நேரடியாக வந்துபோகும் அரங்கக் கண்காட்சிகளை வடிவமைப்பதிலும் ஆர்வத்துடன் தான் இருக்கிறோம். 2023 பிப்ரவரியில் அப்படியான கண்காட்சிகள் தொடங்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.
‘அசம்பிளேஜ்’இல் ஒரு கலை உருவாகும் முறைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன் என்று அஷ்வதி கூறினார். “நானே ஒரு கலைஞராக இருப்பதால், முதலில் கலை எண்ணமாக உருவாவதிலிருந்து இறுதியாக கலைப்படைப்பாக உருவாவதுவரையான நடைமுறைகளை முழுமையாகத் தெரிந்துவைத்திருக்கிறேன்.
ஒவ்வொரு கலைஞருக்கும் தனக்கென்று ஒரு தனியான எண்ணமும் செய்முறையும் இருக்கும், இந்த முறையைக் காட்சிப்படுத்துவதன் மூலமாக அந்த கலைஞருக்கும் கலைப் படைப்பிற்கும் கூடுதல் மதிப்பைக் கொடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று அஷ்வதி உரையாடலை முடித்தார்.
Read in : English