Site icon இன்மதி

தமிழகக் கோயில்கள்: முழுமை அனுபவம் தரும் ஆவணக் காட்சிகள்

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில்

Read in : English

தமிழகக் கோயில்கள் குறித்த விவரங்களைத் தரும் ஏராளமான காணொலிக்காட்சிகளும், வலைப்பதிவுகளும் உள்ளன. பெரும்பாலானவை கல்வி எனும் மட்டத்திலோ ஆன்மிகம் எனும் மட்டத்திலோ தேங்கிவிடுகின்றன. இதற்குத் தீர்வு காண, சென்னையைச் சார்ந்த இயற்கைப் பாதுகாப்புக் கட்டிடக் கலைஞர் மதுசூதனன் கலைச்செல்வன் ‘டெம்பிள் ரன் 2.0’ என்ற பெயரில் ஒரு காணொலிக்காட்சித் தொடரை ஆகஸ்டு 1 அன்று தொடங்கியிருக்கிறார். இந்தத் தொடரில், தேர்ந்தெடுக்கப்பட்ட கோயில்கள் அவற்றின் வரலாறு, கலை, கட்டிடக்கலை, கல்வெட்டுகள், புனித இலக்கியம், உள்ளூர் மரபுகள் ஆகியவற்றைப் பற்றிய குறுங்காணொலிக் காட்சிகளை (7-10 நிமிடங்கள்) அவர் வழங்கவிருக்கிறார்.

கோயிலுக்குச் செல்லும் அனுபவத்தை முழுமையாக்குவதுதான் அவரது திட்டத்தின் நோக்கம். 2014-15 காலகட்டத்தில், கலைச்செல்வன் ஒன்றிய அரசின் ‘ஹைரைடே’திட்டத்தின்கீழ் காஞ்சிபுரத்தின் பாரம்பரியக் கட்டமைப்புகளை ஆவணப்படுத்தும் பணியில் மூத்த ஆலோசகராகச் செயற்பட்டிருக்கிறார். தற்போது அவர் தமிழகத்தில் ஆவணப்படுத்த 16 கோயில்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

முதலில் அவர், 108 வைஷ்ணவத் திருத்தலங்களில் ஒன்றான, கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலிலிருந்து தொடங்கவிருக்கிறார். ஏன்? பேரளவிலான முக்கியத்துவம் கொண்டது அந்தக் கோயில் என்பதுதான் காரணம். ஆனால், பலருக்கும் அதன் முக்கியத்துவம் பற்றித் தெரிந்திருக்கவில்லை. “வரலாற்றுச் சிறப்பும் பாரம்பரியமும் கொண்ட இந்தக் கோயில் ஒரு கட்டிடக்கலை ஆச்சரியம். பலருக்கும் இதைப் பற்றித் தெரியவில்லை என்பதால் இந்தக் கோயிலை வைத்து எங்கள் திட்டத்தைத் தொடங்கலாம் என்று நினைத்தோம்” என்றார் அவர்.

கலைச்செல்வனின் இந்தக் கோயில்கள் ஆவணப்படுத்துதல் திட்டம் ஐந்து காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. ஒரு கோயிலைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்குத் தொடக்கப்புள்ளியே புராணம்தான். ஒரு கோயில் பெயரின் வேர் அல்லது அதன் ஸ்தலப் பெயரின் வேர் புராணங்களில்தான் இருக்கிறது.

கலைச்செல்வனின் கோயில் ஆவணப்படுத்துதல் திட்டம் புராணங்கள், கட்டிடக்கலை, கல்வெட்டுகள், புனித இலக்கியங்கள், கோயில்விழாக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது

அந்தப் பெயரின் வேர் கோயிலைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் அள்ளிவழங்கும். “தொன்மம், நம்பிக்கை இவற்றைத் தவிர்த்து, புராணங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைப் பதிவுசெய்திருக்கும் பாரம்பரிய ஆவணங்கள். அந்த அரசியல் மாற்றங்களிலிருந்து பல்வேறு நம்பிக்கைகள் பல்லாண்டுகளில் எப்படி உருவாயின என்பதைப் புராணங்கள் காட்டுகின்றன. ஒரு கோயிலைப் பற்றித் தெரிந்துகொள்ள நான் புராணங்களைத்தான் முதல் கருவியாகப் பயன்படுத்தப் போகிறேன்” என்றார் அவர்.

இரண்டாம் கருவி கோயிலின் கட்டிடக்கலை. தென்னிந்தியக் கோயில்களின் அழகு அடுக்குகளில் இருக்கிறது என்றார் கலைச்செல்வன். “கோயில்கள் பலமுறை புனர்நிர்மாணம் செய்யப்படுகின்றன. ஒரு கோயிலின் வளர்ச்சியில் பல்வேறு வம்ச ஆட்சிகள் பங்கெடுத்திருக்கின்றன. ஒரு கோயிலின் கட்டிடக்கலையை ஆராய்ந்தால், அந்தக் கோயிலிருக்கும் பகுதியில் எந்த வம்சத்தின் ஆட்சி அந்தக் காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது என்பதைப் புரிந்துகொள்ளலாம்” என்றார் அவர்.

திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கலைச்செல்வன்

மூன்றாம் கருவி கல்வெட்டு. ஏனென்றால், ஒரு கோயில் தொடர்பான சமூக, கலாச்சார வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள உதவுவது கல்வெட்டுகள்தாம் என்றார் கலைச்செல்வன். “தமிழகத்தின் கோயில்களைப் பார்த்தால், பெரும்பாலான கோயில்கள் 10 அல்லது 11ஆம் நூற்றாண்டிலிருந்து இருக்கின்றன; அவற்றில் கல்வெட்டுகளும் இருக்கின்றன. அவை கோயில்களின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஏராளமான தகவல்களைத் தருகின்றன” என்றார் அவர்.

நான்காம் கருவி, கோயில் குறித்த புனித இலக்கியம். ஆழ்வார்களும் (வைணவப் புலவர்கள்), நாயன்மார்களும் (சைவப்புலவர்கள்) தங்களின் தெய்வங்களுக்குப் புகழ்மாலை சூட்டும் பாடல்களை ஆயிரக்கணக்கில் பாடியுள்ளனர். “அவர்களது படைப்புகள் ஏராளமான வரலாற்று உண்மைகளை நமக்கு வழங்குகின்றன. கோயில்களின் பூகோளத்தையும் கட்டிடக்கலையையும் புரிந்துகொள்வதற்கு ஆழ்வார்களின், நாயன்மார்களின் பாடல்கள் பெரிதும் உதவுகின்றன” என்றார் அவர்.

மேலும் படிக்க:

தமிழகத்தின் கஜுராஹோ: குளங்களின் படிக்கட்டுகளில் காதல் சிற்பங்கள்

பல்லக்கில் பட்டணப் பிரவேசம்: 1953ஆம் ஆண்டிலேயே நிராகரித்த குன்றக்குடி அடிகளார்

ஐந்தாம் கருவி பண்டிகைகளைப் பற்றிய ஆய்வுகள். ஒரு கோயிலில் நிகழும் திருவிழாக்களும் சடங்குகளும் அக்காலச் சமூகத்தில் நிலவிய அரசியல், சமூக, கலாச்சார மாற்றங்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

“டெம்பிள் ரன் 2.0’ திட்டத்தில், கலைச்செல்வனும், அவரது ஒளிப்பதிவாளர் முத்துகிருஷ்ணனும் தமிழகத்தின் 16 கோயில்களை ஆவணப்படுத்தவிருக்கிறார்கள்.

108 வைஷ்ணவத் திருத்தலங்களில் ஒன்றான, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலிலிருந்து தொடங்கவிருக்கிறார். ஏன்? பேரளவிலான முக்கியத்துவம் கொண்டது அந்தக் கோயில் என்பதுதான் காரணம். ஆனால், பலருக்கும் அதன் முக்கியத்துவம் பற்றித் தெரிந்திருக்கவில்லை

கோயில்களின் தேர்வைக் கலைச்செல்வன் எப்படி நியாயப்படுத்துகிறார்? கோயில்கள் மதமுக்கியத்துவம் கொண்ட மையங்கள். மேலும், அவற்றில் ஆன்மிக, சமூக அம்சங்களும் இருக்கின்றன; அவையில்லாமல் கோயில்களால் இவ்வளவு காலம் நிலைத்திருக்க முடியாது. சமூக அம்சங்களுடன், கலாச்சார, பொருளாதார அம்சங்களும் இருக்கின்றன. “ஒரு கோயிலுக்குப் பல்வேறு அம்சங்கள் உண்டு; மதம், ஆன்மிகம், அரசியல், கலாச்சாரம் ஆகிய அம்சங்கள் முக்கியமானவை. இந்த அம்சங்கள் தலைமுறை தலைமுறையாகக் தொடர்ந்து வந்திருக்கின்றன. எல்லாவற்றையும் இணைத்து நான் ஒரு சமச்சீர் புரிதலை உருவாக்க முயல்கிறேன். ஒரு கோயிலின் அழகை ரசிக்க வேண்டுமென்றால், கோயிலைப் பற்றிய முழுமையானதோர் அறிவைப் பெறுவது நலம். அதைத்தான் நான் எனது வீடியோக்கள் மூலம் கொடுக்க முயல்கிறேன்” என்றார் அவர். அந்த வீடியோக்களின் இணைய முகவரி: https://youtube.com/c/MadhusudhananKalaichelvan

கலைச்செல்வன் மற்றும் அவரது ஒளிப்பதிவாளர் முத்துக்கிருஷ்ணன்

ஆவணப்படுத்தும் கோயில்களின் தேர்வில் பல கூறுகள் இருக்கின்றன. உதாரணமாக, அடுத்து கலைச்செல்வன் காஞ்சிபுரத்தில் வைகுண்ட பெருமாள் கோயிலை ஆவணப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார். அறிஞர்கள் பலர் அந்தக் கோயிலை ஆய்வு செய்திருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் அந்தக் கோயிலுக்குச் செல்கிறார்கள். பிறகு கலைச்செல்வன் ஏன் அதை ஆவணப்படுத்த வேண்டும்? “வாஸ்தவம்தான். அறிஞர்கள் பலர் அந்தக் கோயிலை ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் கோயிலில் இருக்கும் சிற்பங்களைப் பாமரர்களுக்கும் புரியும் வகையில் ஆய்வுக் கலைச்சொற்கள் இல்லாமல் சிறப்பான முறையில் விளக்க வேண்டும் என்று எண்ணினேன்” என்றார் கலைச்செல்வன்.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலை அதன் பண்பாட்டு, வரலாற்று முக்கியத்துவத்திற்காகத் தான் தேர்ந்தெடுத்திருப்பதாகக் கலைச்செல்வன் கூறினார். “திருவட்டாறு ஊரின் பெயர் தமிழ்ச்சங்க இலக்கியப் படைப்பான புறநானூற்றில் சொல்லப்பட்டிருக்கிறது, பிற்காலத்தில் தனது பிரதானத்தை இழந்தது அந்த ஊர்.

அடுத்து கலைச்செல்வன் காஞ்சிபுரத்தில் வைகுண்ட பெருமாள் கோயிலை ஆவணப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 22 அடி விஷ்ணு சிலை இருக்கிறது; அதுவோர் அற்புதமான கலைப்படைப்பு. 400 ஆண்டுகளுக்குப் பின்பு, ஜூலை 6 அன்று கோயில் சம்ப்ரோக்‌ஷணம் நிகழ்ந்த போதுதான், கோயில்மீது ஊடகவெளிச்சம் பட்டது. வரலாற்றுரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் இந்தக் கோயில் முக்கியமானது என்றாலும், பலர் இதை அறிந்திருக்கவில்லை. மக்களுக்கு ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தக் கோயிலிலிருந்து எனது காணொலித் திட்டத்தைத் தொடங்கினேன்” என்றார் கலைச்செல்வன்.

360 டிகிரி கோணத்திலிருந்து கோயில்களை ஆராய்வது ஆகப்பெரும் சவால் என்பதை கலைச்செல்வன் அறிந்துவைத்திருக்கிறார். ஏழு அல்லது எட்டு நிமிடம் ஓடும் காணொலிக்காட்சியில் ஒரு கோயிலை முழுவதுமாய் ஆவணப்படுத்த முடியுமா? “ஒவ்வொரு கோயிலுக்கும் மூன்று அல்லது நான்கு எபிசோடுகள் எடுக்கிறேன். வாரம் ஒரு வீடியோ போடுவது எனது திட்டம். ஆகஸ்ட் 1 அன்று முதல் வீடியோவைப் போட்டிருக்கிறேன். சில மாதம் கழித்து அடிக்கடி கோயில் வீடியோக்கள் போடப்படும்” என்று முடித்தார் கலைச்செல்வன். ஒவ்வொரு கோயிலையும் மூன்று நான்கு எபிசோட்டில் ஆவணப்படுத்தும் அவரது முயற்சியில் அவர் வெற்றியைக் காணும்போது, கோயில்கள் தொடர்பான ஒரு காட்சி வடிவ ஆவணம் நமக்குக் கிடைக்கும் என்பதே நமக்கான ஆசுவாசம்.

Share the Article

Read in : English

Exit mobile version