Read in : English
வேலு பாயாயிருந்தாலும் சரி, சவுக்கு சங்கர் என்றாலும் சரி, அல்லது வேறு எவராயினும் சரி, எல்லாம் ஒரு கலவைதானே. உறுதியாக, தெளிவாக எதையும் கூறவியலாது. சரி சங்கர் உண்மையிலேயே ஊழல், ஒழுக்க மீறல்களுக்கெதிராகப் போராடுபவரா, அவரே அறம் வழுவியவரா?
நான் அந்தத் தம்பியுடன் சில காலம் நெருங்கிப் பழகியிருப்பதால் இத்தகைய வினாக்கள் என் முன் அடிக்கடி வைக்கப்படுகின்றன.
நான் சொல்வதெல்லாம் உண்மையா, நான் நேர்மையாகத்தான் பதிலளிக்கிறேனா என்பதையெல்லாம் வாசகர்கள் முடிவு செய்துகொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை எனக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை அமையும்.
சவுக்கு சங்கர் இப்போது நீதி மன்றத்தின் முன் ஆஜராகி அவர்மீது நீதிபதி சுவாமிநாதன் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்க வேண்டும். என் கணிப்பு சரியெனில் நிச்சயம் சங்கர் பின்வாங்கப்போவதில்லை. வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை. துணிந்தவனுக்குத் தூக்குமேடை பஞ்சு மெத்தைதானே.
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி இன்னமும் கூடுதலாகக் கூடச் சொல்லலாம். நீதிமன்றத்தைத் தர்மசங்கடத்திற்குள்ளாக்கலாம். பின்னர் நீதிபதிகளும் பின் வாங்கவியலாது. சில நாள்களோ, வாரங்களோ, மாதங்களோ அவருக்குச் சிறைதான்.
பரபரப்பாகச் சில நாள்களுக்கு ஊடகங்கள் பேசும். அகில இந்திய அளவில் ஆச்சிமுத்து சங்கர் பிரபலமாகிவிடுவார். இப்போதே ஓரளவு அறியப்பட்டவர்தான். அம்மதிப்பு பல மடங்கு கூடும். அதைத்தான் அவர் எதிர்பார்க்கிறாரோ?
செல்வாக்கிற்காக வேண்டாத வம்பை விலைக்கு வாங்குகிறாரோ? உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனின் நேர்மை குறித்து அய்யம் எழுப்பினால் விளைவுகள் எப்படி இருக்கக்கூடும் என்பது தெரியாமலா இருக்கும்?
அகில இந்திய அளவில் ஆச்சிமுத்து சங்கர் பிரபலமாகிவிடுவார். இப்போதே ஓரளவு அறியப்பட்டவர்தான்
ஆள்வோரைக் கண்டித்துக் கட்டுரைகள் எழுதி அதிர்வலைகளை ஏற்படுத்தத் தொடங்கிய சவுக்கு சங்கர் பின்னர் முக நூல், ட்விட்டர், யூ ட்யூப் எனச் சமூக வலைத்தளங்கள் வழியே தமிழ் கூறு நல்லுலகு முழுவதும் அறியப்பட்டவராகிவிட்டார். அவரைக் கண்டு பொறாமைப் படாத ஆர்வலர்களே இல்லை எனலாம்.
மேலும் படிக்க:
செய்தி ஊடகங்களை நம்ப முடியுமா?: சவுக்கு சங்கர் நேர்காணல்
எளிய நிலையிலிருந்து இந்த அளவு அவர் உயர்ந்திருப்பதற்குக் காரணம் அவருடைய தணியாத இலட்சிய வேகமும் அயராத உழைப்புமே. அவருடைய ஊழல்-உளவு-அரசியல் எனும் நூலில் தன் பின் புலத்தைப் பற்றி விரிவாகவே குறிப்பிட்டிருக்கிறார். அவர் பத்தாம் வகுப்பு முடித்தபோது, காவல் துறையில் பணியாற்றிய அவருடைய தந்தை இறந்துவிடுகிறார். ஆகவே, சவுக்கு சங்கர் கருணை அடிப்படையில் அரசு வேலையைப் பெறுகிறார்.
1991ஆம் ஆண்டில் அவர் 16 வயதே நிரம்பியிருந்த நிலையில் தந்தை பணியாற்றிய ஊழல் இலஞ்ச ஒழிப்புத் துறையிலேயே இள நிலை உதவியாளராக நியமிக்கப்படுகிறார். 2006-11 காலகட்ட திமுக ஆட்சியில் அஇஅதிமுகவின் அப்போதைய பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவைத் தப்பிக்கவியலாத ஏதோவோர் ஊழல் வழக்கில் சிக்கவைக்கவைக்க வேண்டுமென அமைச்சர்களும் அதிகாரிகளும் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது தலைமைச் செயலருக்கும் ஊழல் ஒழிப்புத் துறை இயக்குநருக்குமிடையே நடந்த உரையாடல்கள் வெளியானது. இது, முதலமைச்சரான கருணாநிதி அரசுக்குப் பெரும் சிக்கலானது. சங்கரே அதற்குக் காரணம் என அதிகாரிகள் முடிவெடுத்து அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்தனர். இது நடந்தது 2008 ஜூலையில். அன்றிலிருந்து இன்றுவரை அத்தற்காலிகப் பணிநீக்கம் தொடர்கிறது.
இடைக்காலப் பணிநீக்கத்தின் போது ஒருவர் பெறும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு வழங்கப்படும். சில நலம் விரும்பிகள் அவ்வப்போது ஏதாவது சிறிய உதவிகள் செய்யலாம். அவ்வளவுதான். சுவாமிநாதன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவுடனேயே முன்னர் அவர் ஓர் ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதைக் காட்டும் புகைப்படம், அந்நிகழ்ச்சி அழைப்பிதழ், எல்லாவற்றையும் வெளியிட்டுவிட்டார் சங்கர்.
பின்னர் காஞ்சி சங்கர மட அதிபர் விஜயேந்திரர் ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நிற்கவில்லை என்று பிரச்சினையாக, வழக்கும் தொடுக்கப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த சுவாமிநாதன் விஜயேந்திரரை விடுவித்தபோது, விடுவாரா சங்கர்? விளாசித் தள்ளிவிட்டார்.
மைக்கேல்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை பாரதீய ஜனதாவினர் பிரச்சினையாக்க, அவ்வழக்கு விசாரணையை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற உத்திரவிட்ட சுவாமிநாதன் அப்போது மதமாற்றம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். கிறித்தவர்கள் இன்னமும் தீவிர மதமாற்றப் பணியில் இருப்பதாகச் சித்தரித்தார், மைக்கேல்பட்டி பெயரே மாற்றப்பட்ட பெயர் தானென்றார். அத்தீர்ப்பு பல விமர்சனங்களுக்குள்ளானது.
சவுக்கார் மதச்சார்பின்மையில் உறுதியாக இருப்பவர். எப்போதும் எதற்காகவும் அவர் அதில் சமரசம் செய்துகொள்வதில்லை. எனக்கு அவரைப் பிடித்துப்போனதன் முக்கியக் காரணமே அதுதான். சமூக வலைத்தளங்களில் இந்துத்துவப் பிரபலங்களைக் கடுமையாக விமர்சனம் செய்யும்போது, வேண்டாமே, கொஞ்சம் அடக்கி வாசிங்க என்று அறிவுறுத்தினாலும் கேட்கமாட்டார். நம் நாட்டின் மிகப் பெரிய விரோதிகள் இந்துத்துவர்களே. அவர்களோடு சமரசமின்றிப் போராடுவது நம் கடமை என்பார்.
காரவன் ஆங்கில இதழில் 2012ஆம் ஆண்டு ஜசோதாபேன் உட்பட மோடியின் பல்வேறு பரிமாணங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து விநோத் ஜோஸ் எழுதியிருந்தார்.
அதை நான் மொழிபெயர்த்தேன். மொழிபெயர்ப்பு சவுக்கு இணைய தளத்தில் தொடராக வெளியானது. பின்னர் அவற்றைத் தொகுத்து சிவலிங்கத்தின் தலையில் செந்தேள் என்னும் பெயரில் சங்கர் ஒரு சிறு நூலாக, 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலின்போது வெளியிட்டதோடு அது பலரையும் சென்றடையச் செய்தார். அவரது அணுகுமுறையினை முரட்டு மதச்சார்பின்மை என்றுகூடச் சொல்லலாம்.
தனக்கு எது சரி என்று படுகிறதோ அதைத் தயக்கமில்லாமல் சொல்வார். மனித உரிமைகளே அவரது ஒரே அளவுகோல் என நினைக்கிறேன்
அதே நேரம் சில அமைப்புகள் போன்று இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு வக்காலத்து வாங்கமாட்டார். முஸ்லிம் சமூகத்தை அடிப்படைவாதிகள் அடியோடு நாசம் செய்துவிடுவர் என்று கருதுபவர் சவுக்கு சங்கர். கமல்ஹாசனின் விஸ்வரூபம் 1 வெளியானபோது பழமைவாதிகள் தீவிர ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதை வன்மையாகக் கண்டித்தார் சங்கர். அந்நேரத்தில்தான் நான் அவருக்கு நெருக்கமானேன்.
ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்மீது அபார மோகங்கொண்டிருந்தார். இப்போது அதெல்லாம் விலகிவிட்டது என்றே நினைக்கிறேன். தவிரவும் வேறு பல பிரபாகரன் அபிமானிகள் போன்று தமிழ்த் தேசிய இயக்கங்களில் அவர் தன்னை இழந்துவிடவுமில்லை.
தனக்கு எது சரி என்று படுகிறதோ அதைத் தயக்கமில்லாமல் சொல்வார். மனித உரிமைகளே அவரது ஒரே அளவுகோல் என நினைக்கிறேன். அவருக்குத் தகவல் தரக்கூடியவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். சில சமயம் அவசரப்பட்டுக் கூட ஏதாவது எழுதிவிடுவார் ஆனால், அவருக்கு உள்நோக்கமிருப்பதாக நான் எப்போதும் நினைத்ததில்லை.அவர் பிளாக்மெயில் பேர்வழி என்றுகூடச் சிலர் தூற்றுகின்றனர். எனக்கு அதில் உடன்பாடில்லை. மிரட்டிப் பணம் பறித்திருந்தால் அவரது வாழ்க்கை வளமாயிருக்க வேண்டும். ஆனால், அவருக்கோ இன்றும் வாய்க்கும் கைக்குமான போராட்டம்தான்.
அவர் மிகப் பொறுப்பாக, நிதானமாகச் செயல்படவேண்டும் என அவரிடம் நேரடியாகப் பலமுறை தெரிவித்திருக்கிறேன். இப்போது அதனையே மீண்டும் வலியுறுத்துகிறேன். வளர வேண்டியவர். மையநீரோட்ட ஊடகங்கள் தொடவே அஞ்சும் பலவற்றை அம்பலப்படுத்துபவர். அவரது செய்திகள் சில ஆதாரமற்ற ஊகங்களாகக்கூடப் போகலாம். ஆனாலும் துணிச்சலுடன் செயலாற்றும், அவர் போன்ற பலர் இச்சமூகத்திற்குத் தேவைப்படுகின்றனர்.
Read in : English