Read in : English
ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் என்று அழைக்கப்படும் பி.வி. அகிலாண்டத்தின் (1922–1988) நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்படுகிறது சித்திரப்பாவை என்ற நாவலுக்காக அவருக்கு 1975ஆம் ஆண்டு ஞானபீட விருது கிடைத்தது.
1922ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி தாயின் சொந்த ஊரான கரூரில் பிறந்தவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருங்காளுர், அவரது அப்பாவின் ஊர். பள்ளியில் படிக்கும் காலத்தில் சக்தி வாலிபர் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார்.
முதலில் பத்திரப் பதிவு அலுவலகத்திலும் பின்னர், 1958இல் ரயில்வே அஞ்சல் துறையில் வேலைபார்த்த அகிலன், 1966லிருந்து 1982 வரை சென்னையில் அகில இந்திய வானொலி நிலையத்தில் வேலை பார்த்தார்.
வேங்கையின் மைந்தன் நாவலுக்காக 1963இல் அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. சித்திரப்பாவை என்ற நாவலுக்காக அவருக்கு 1975ஆம் ஆண்டு ஞானபீட விருது கிடைத்தது
வேங்கையின் மைந்தன் நாவலுக்காக 1963இல் அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. அவரது பாவை விளக்கு என்ற நாவல் திரைப்படமாகியது. அவர் எழுதிய கயல்விழி என்ற நாவல் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற பெயரிலும் வாழ்வு எங்கே என்ற நாவல் குலமகள் ராதை என்ற பெயரிலும் திரைப்படமாக வெளியாகியுள்ளன.
சிறுகதை, நாவல், நாடகம், சிறார் இலக்கியம், பயண நூல்கள், மொழிபெயர்ப்பு என்று பல்வேறு துறைகளில் தடம் பதித்தவர் அகிலன்.
மேலும் படிக்க:
“நான் எழுதிய முதற் கதையும் சரி, இனி நான் எழுதப் போகும் கடைசி கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவைகளே. கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியைக் காணலாம். ஆனால், கருத்தெல்லாம் காணும் உண்மைக்கே. ஒரு புறம் அழகும் வனப்பும் நிறைந்த இயற்கை உலகம். மற்றொரு புறம் வேற்றுமையும் வெறுப்பும் நிறைந்த மனிதர்கள். இதையே என் கதைக் கருத்து என்று சொல்லலாம்” என்கிறார் அகிலன்.
கவிஞர் பொன்னடியானின் முல்லைச்சரம் (15.5.1968) என்ற இதழுக்காக எழுத்தாளர் அகிலன் அளித்த பேட்டியின் முக்கியப் பகுதிகள் அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரசுரமாகிறது:
கேள்வி: பல ஏடுகள் புதுமை என்ற பெயரால் தரக்குறைவான தமிழ்ப்பண்பாட்டைச் சீரழிக்கும் கதைகள் வெளியிட்டு பிழைக்கின்றனவே. அதுபற்றி?
அகிலன்: என்னைக் கேட்டால் பெரும்பாலும் தமிழ்ப் பண்பாடு என்பது மேடைகளில் முழங்கப்பெறுவதோடு முடிந்துவிடுகிறது. வாழ்க்கை ஒவ்வொரு துறையையும் தனித்தனியே ஊடுருவிப்பார்த்தால் நமது பண்பாட்டிற்கும் நடைமுறைக்கும் எவ்வளவு வேற்றுமை இருக்கிறது என்பது தெரிய வரும். ஏடுகளில் இப்படிப்பட்ட கதைகளும் திரைப்படங்களில் இப்படிப்பட்ட பாடல்களும் மலிந்து வருவது உண்மைதான். பிறர்க்கு நல்லது செய்து பிழைப்பது வியாபாரம். பிறர் உடலையோ, மனத்தையோ, ஆன்மைவையோ சீரழித்துப் பிழைப்பது விபச்சாரத்தைவிடக் கேவலமானது.
கேள்வி: தமிழகத்தில் நல்ல கதைகளுக்குப் பஞ்சம் என்று சினிமாக்காரர்கள் கூறுகிறார்களே உண்மையா?
அகிலன்: அப்படிக் கூறுகின்றவர்களுக்கு இன்னும் நல்ல கதைகளைப் படித்துப் புரிந்துகொள்கிற அறிவு வளரவில்லை என்பதுதான், ஒரு சிலருக்கு திருடுவதற்கு மட்டும் எங்கிருந்து நல்ல கதைகள் கிடைக்கின்றனவாம்?
நான் எழுதிய முதற் கதையும் சரி, இனி நான் எழுதப் போகும் கடைசி கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவைகளே. கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியைக் காணலாம். ஆனால், கருத்தெல்லாம் காணும் உண்மைக்கே
கேள்வி: கலப்பு திருமணம், காதல் திருமணம் இவைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
அகிலன்: என்னுடைய கதைகளிலேயே இதற்கு விடை இருக்கிறது. வாழ்வு எங்கே? என்ற என்னுடைய நாவல் இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். சாதிகள் ஒழிய வேண்டும் என்று உதட்டளவில் பேசாமல் உண்மையிலேயே உழைத்து வருபவன் நான்.
கேள்வி: இன்றைய எழுத்துலகில் கையாளப்படும் தமிழ் நடையைப்பற்றி தங்கள் கருத்து என்ன?
அகிலன்: பொதுவாகத் தமிழ் உரைநடை என்பது வேறு. குறிப்பிட்ட ஓராசிரியரின் தனிப்பட்ட நடையழகு என்பது வேறு. முன்னது ஆங்கிலத்தில் புரோஸ் எனப்படும். பின்னது ஸ்டைல் எனப்படும். இப்போது தனிப்பட்ட நடை அழகைப் பற்றியே நீங்கள் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அது ஆசிரியருக்கு ஆசிரியர் வேறுபட்டது. வாழ்க்கை அனுபவம், கற்பனைத் திரன், வாழ்க்கை பற்றிய அந்த ஆசிரியரின் கண்ணோட்டம் அவருடைய எழுத்துப் பயிற்சி மொழியைக் கையாள்வதில் அவருக்குள்ள ஆற்றல் இவ்வளவும் சேர்த்து அவருடைய நடையை உருவாக்குகின்றன. வெளி வாழ்க்கையாகிய மாபெரும் பல்கலைக்கழகத்தில் இன்ப, துன்ப அனுபவம் பெற்று பயிலும் அவர்கள் வாழ்க்கையிலிருந்து பெரும்பாலும் அவர்கள் எழுதும் சொற்களைப் பெறுகிறார்கள்.
வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், காலப்போக்கில் அவர்களுடைய எழுத்து நடையிலும் அவர்களை அறியாமலேயே ஏற்பட்டுவிடும். 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பெற்ற கதைகளில் வடமொழிச் சொற்களோ, ஆங்கிலச் சொற்களோ கலந்திருப்பதில்லை. காரணம், நம்முடைய பேச்சுமொழியே பெரும்பாலும் இப்போது மாறிவிட்டது.
உரையாசிரியர் 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய தமிழ் நடையும் இப்பொழுது எழுதும் தமிழ்நடையையும் ஒப்பிட்டுப் பார்த்தால்கூட இந்த மாற்றம் விளங்கும். சிறிதளவும்கூட அடிப்படை மொழியறிவு இல்லாதவர்கூட எழுதுவது இப்போது குறைந்து வருகிறது.
நடையைப் பற்றி விளக்கம் கூறப் போனால் அதுவே ஒரு நூலாகிவிடும். வெறும் தமிழ் சொற்கள் மட்டுமே நடையாகாது. அந்தச் சொற்களுக்குள்ளிருக்கும் உயிர்த்துடிப்பு, உணர்ச்சி வேகம், கருத்தாழம் இவ்வளவும் கொண்டுதான் நாம் அதை ஆராய வேண்டும். அகராதியிலே சொல் உள்ளபோது அது வெறும் கருவி, சிறந்த எழுத்தாளரிடமோ கவிஞரிடமோ அது ஓர் உயிர்ப் பிறவி.
Read in : English