Site icon இன்மதி

பல்லாங்குழி: பழைய விளையாட்டுக்கு பேராசிரியர் பரமசிவன் சொல்லும் புதிய விளக்கம்!

(Photo Credit: Theni.M.Subramani - Wikimedia Commons)

Read in : English

பல்லாங்குழி ஆட்டம் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த விளையாட்டு சொல்லும் செய்தியை விளக்கி இருக்கிறார் பண்பாட்டு நிகழ்வுகளை நுணுக்கமாக இனம் காணும் பேராசிரியர் தொ. பரமசிவன்.

தனி உடமை உணர்வினையும் தனிச்சொத்தின் வளர்ச்சியினையும் அதன் மறுவிளைவாகப் பிறந்த வறுமையினையும் பண்பாட்டு ரீதியாக நியாயப்படுத்தும் வெளிப்பாடே பல்லாங்குழி ஆட்டம் என்று கூறியுள்ள அவர், இந்த நியாய உணர்ச்சி மனித மனங்களில் திணிக்கப்பட்ட பிறகு தனிச் சொத்துரிமையின் வளர்ச்சி தங்குதடையற்ற மிகப் பெரிய வேகத்தினைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார்.

பல்லாங்குழி ஆட்டம் பொதுவாகப் பெண்களால் ஆடப்படுவது. முதற் பூப்படைந்த பெண்ணின் தீட்டுக்குரிய காலத்திலும் கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுதுபோக்குவதற்கும் ம்டடுமே இந்த விளையாட்டை இப்பொழுது ஆடிப்பார்க்கிறார்கள்.

பல்லாங்குழி ஆட்டம் பற்றி அறிஞர் தேவநேயப் பாவாணர் தமிழ்நாட்டு விளையாட்டுகள் என்ற தம் நூலில் முதன்முதலாக எழுதினார். பின்னர் பேராசிரியர் தாயம்மாள் அறவாணவன் பல்லாங்குழி (திராவிட ஆப்ரிக்க ஒப்பீடு) என்ற விரிவான நூலை எழுதியுள்ளார். உலகெங்கிலும் பல்லாங்குழி ஆட்டம் சிற்சில மாறுதல்களுடன் பழங்குடிகளிடம் விளங்கி வருவதை இந்த நூல் காட்டுகிறது.

அறியப்படாத தமிழகம் என்ற நூலில் இடம் பெற்றுள்ள பல்லாங்குழி குறித்த பேராசிரியர் தொ. பரமசிவன் கட்டுரை அந்த விளையாட்டு எப்படி என்பதை விளக்கமாகச் சொல்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,. தமிழ்நாட்டின் பல்லாங்குழி விளையாட்டு கர்நாடகத்தில் ‘அலிகுலி மனே’ பெயரிலும், ஆந்திராவில் ‘வாமன் குண்ட்லு’ என்ற பெயரிலும் விளையாடப்படுவதாக கூறினார். தட்டில் வரிசையாக உள்ள குழிகளில் முத்துக்களை நிரப்பி விளையாடும் பல்லாங்குழி விளையாட்டு தென்னிந்தியாவில் மட்டுமின்றி தெற்கு ஆசியாவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் பிரபலமாகி வருவதாகவும் கூறினார்.

அறியப்படாத தமிழகம் என்ற நூலில் இடம் பெற்றுள்ள பல்லாங்குழி குறித்த பேராசிரியர் தொ. பரமசிவன் கட்டுரை அந்த விளையாட்டு எப்படி என்பதை விளக்கமாகச் சொல்கிறது:

· இருவர் ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் (பக்க எல்லைக் குழியாக இருந்தால் வலதுகைப்பக்க குழியையும் சேர்த்து) குழிக்க்கு ஐந்து காய்களாக ஆளுக்கு ஏழு குழிகளாகத் துல்லியமான சம தன்மையுடன் ஆட்டம் தொடங்குகிறது.

· தன்னுடைய காய்களை எடுத்து முதல் ஆள் ஆட்டம் தொடங்குகிறபொழுது முதன்முறையாகச் சமதன்மை குலைகின்றது.

· எடுத்தாடுபவர் குழியில் காய்கள் தற்காலிக இழப்புக்கு உள்ளாகின்றன.

· சுற்றிக் காய்களை இட்டுவந்து ஒரு வெற்றுக்குழியினைத் (இன்மை அல்லது இழப்பு) துடைத்துவிட்டு அதற்கடுத்த குழியினை எடுக்கும்பொழுது முதலில் இட்ட ஐந்து காய்களுக்குப் பதிலாக நிறைய காய்கள் (பெருஞ்செல்வம்) ஆடுபவர்களுக்குக் கிடைக்ககின்றன. அல்லது குறைந்த காய்களையுடைய குழி கிடைக்கிறது. சில நேரங்களில் துடைத்த குழிக்கு அடுத்த குழி வெற்றுக் குழியாக இருந்தால் ஒன்றுமே கிடைக்காமல் போய்விடுகின்றது.

· ஆட்டத்தில் மற்றும் ஒரு இடைநிகழ்வும் ஏற்படுகின்றது. ஒரு வெற்றுக் குழியில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு காயினை இட்டு வரும்போது அது நாலாகப் பெருகிய உடன் அதனைப் பசு என்ற பெயரில் அந்த ஆட்டத்தைக் குழிக்குரியவர் எடுத்துக் கொள்கிறார்.

· இதன் விளைவாக, ஆட்டத் தொடக்கத்தில் இருந்த ஐந்து காய்கள் (தொடக்க நேரத்து சமத்தன்மை அல்லது முழுமை) மீண்டும் ஒரு குழிக்கும் ஒருபோதும் திரும்பக் கிட்டுவதே இல்லை.

· காய்களை இழந்தவர் (எடுத்துக்காட்டாக 15 காய்கள் குறைவாகக் கிடைத்தன என்றால்) தன்னுடைய பக்கத்தில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டுவிட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும். அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) சுற்றி வரும்போது காய்களைப் போடமாட்டார். சில இடங்களில் தோற்றவரும் போடமாட்டார். இப்போது தோற்றவருடைய குழி இழப்புக்கு ஒரு நிரந்தரத்தன்மை ஏற்படுகிறது.

· ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிறபோது அவர் கையில் எஞ்சியிருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய ஐந்துகூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒவ்வொரு காயை இட்டு ஆட்டம் தொடர்கிறது. இதற்குக் கஞ்சி காய்ச்சுதல் என்று பெயர். கஞ்சி என்ற சொல் வறுமையினை உணர்த்தும் குறியீடாகும்.

· தோற்றவர் ஒரு காய்கூட இல்லாமல் தோற்கின்றபோதே ஆட்டம் முற்றுப் பெறுகிறது.

சமதன்மை நிலவி வரும் பழைய சமூகத்தில் ஆட்டத்தின் (அல்லது சூதின்) பெயரால் சமதன்மை குலைக்கப்பட்டு ஒருவனது செல்வம் அடுத்தவன் கைக்கு நேரடி வன்முறை இல்லாமல் எளிமையாகப் போய் சேர்ந்து விடுகிறது. தோற்றவனின் இழப்பு நிரந்தரமாக்கப்படுகிறது.  

சமதன்மை நிலவி வரும் பழைய சமூகத்தில் ஆட்டத்தின் (அல்லது சூதின்) பெயரால் சமதன்மை குலைக்கப்பட்டு ஒருவனது செல்வம் அடுத்தவன் கைக்கு நேரடி வன்முறை இல்லாமல் எளிமையாகப் போய் சேர்ந்து விடுகிறது. தோற்றவனின் இழப்பு நிரந்தரமாக்கப்படுகிறது. புராதனப் பொதுவுடைமை சமூகம் சாய்ந்து தனிச் சொதுத்துரிமைக்கான உணர்வுகள் அரும்புகிறபோதே பொருளியல் சார்ந்த (மேடு பள்ளங்கள்) உருவாகின்றன. சிறிய அளவிலான நிலப்பகுதி வாழ்க்கையில் பள்ளத்து மண் மேட்டினை உருவாக்குகிறது. ஒரிடத்தில் குவிகிற செல்வம் மற்றொரு இடத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதே. பறிப்பதும் பிடுங்குவதுமான நேரிடையான வன்முறை இங்கே நிகழவில்லை.

செல்வமோ வறுமையோ வந்து சேர்வதற்குரிய காரணமாக மனிதனை மீறிய ஒரு சக்தி உள்ளது என்னும் கருத்தும் உணர்வும் இப்படித்தான் மனித மனங்களில் படிப்படியாக உருவாகத் தொடங்கின. தனிச்சொத்துரிமையின் தோற்றத்தினை மனித மனம் ஏற்றுக்கொண்டது.

தனிச் சொத்துரிமையின் நியாயப்பாட்டை மனித மனங்களில் பதித்து வளர்த்ததில் சூதாட்டத்துக்கும் சூதாடு கருவிகளுக்கும் கணிசமான பங்கு உண்டு. சூதாட்டத்துக்கும் விளையாட்டுக்கும் தொடர்பு உண்டு என்பதை நிகழ்கால உலக அரசியலிலும் காணலாம். Ðபன்னாட்டு வணிக நிறுவனங்கள் கவர்ச்சிகரமான பரிசுத் தொகைகளின் மூலம் விளையாட்டு வீரர்களையும் தடகள வீரர்களையும் சூதாட்ட உணர்வுடையவர்களாக மாற்றி இருக்கின்றன. வெல்வதற்காக அல்ல விளையாடுவதற்காகவே விளையாட்டு என்ற ஒலிம்பிக் குறிக்கோள் எளிதாக முறியடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் தொ.பரமசிவன்.

Share the Article

Read in : English

Exit mobile version