Read in : English
தற்போது தமிழகத்தை ஆளும்கட்சி ஒரு தசாப்தம் கழித்து ஆட்சியைப் பிடித்து ஆண்டு ஒன்றாகிவிட்டது. இதுவரை ஒன்றிய அரசுடனும், அதன் பல்வேறு பெரிய துறைகளுடனும் மாநிலம் கொண்டிருந்த உறவு மென்மையாக இருந்ததில்லை. திமுக அரசாங்கம் உருவாக்கிய சர்ச்சைகளில் பெரும்பாலானவை தேவையற்றவை.
திராவிட மாடல் என்று வர்ணிக்கப்படும் சந்தேகத்திற்குரிய சமூகநலன் அரசியல் என்பது ஆரம்பத்திலிருந்தே பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருக்கிறது. தேசிய அளவில் நரேந்திரமோடி அரசைப் பற்றித் திமுக அரசு முன்வைக்கும் கடுமையான விமர்சனம் சிந்தனை வறட்சியில் வேர்கொண்டது. குறிப்பாக நீட், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பகிர்வு, இந்திப்பகை, கூட்டாட்சியில் உதட்டளவு ஆர்வம், ஆளுநர் போன்ற அரசியலமைப்புச் சட்டப் பதவிகளைத் துச்சமென மதித்தல் ஆகிய விசயங்களில் திமுக ஆரோக்கியமானதொரு சிந்தனையைக் கொண்டதில்லை.
மாநில வளர்ச்சிக்கான தேசிய திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, திமுக அரசு அதிகாரிகளாலும், கட்சி ஆலோசகர்களாலும், கூட்டணிக் கட்சிகளாலும் முற்றிலும் தவறாக வழிநடத்தப்படுகிறது. ஒரு பிராந்திய கட்சியான திமுக டில்லியிலும் ஒன்றிய அரசிலும் இருக்கும் அதிகார மையத்துடனும், அரசுத் துறைகளுடனும், சிந்தனை ஆலோசகர்களுடனும் உயிர்ப்புள்ள தொடர்புகளை வளர்த்துக்கொள்வதைத் தவிர்த்தே வந்திருக்கிறது. அண்டை மாநிலமான கேரளா, டில்லியில் தொடர்புகளை உருவாக்கி வளர்த்தெடுத்து தனக்கான நோக்கங்களை நிறைவேற்றி சாதித்துக் கொண்டிருக்கிறது.
இதுவரை ஒன்றிய அரசுடனும், அதன் பல்வேறு பெரிய துறைகளுடனும் மாநிலம் கொண்டிருந்த உறவு மென்மையாக இருந்ததில்லை. திமுக அரசாங்கம் உருவாக்கிய சர்ச்சைகளில் பெரும்பாலானவை தேவையற்றவை.
ஒன்றிய அரசு மந்திரிசபையில் இருக்கும் பல அமைச்சர்களும், முக்கிய துறைகளைக் கொண்டிருக்கும் உச்சக் கொள்கை வடிவமைப்பாளர்கள் பலரும் தமிழ்நாட்டில் பலமான வேர்களைக் கொண்டவர்கள்தான். அவர்களின் தேசிய பணியையும், பங்களிப்பையும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்திப் பலன் பெறமுடியும். ஆனால் டில்லியுடன் மோதி விலகி நிற்பதை ஏதோவோர் ஒழுக்கமாக திமுக கொண்டிருப்பதால் இதுவரை மாநிலம் அடைந்திருக்கும் முன்னேற்றம்தான் பாதிக்கப்படும்.
ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், மீன்வளம், கால்நடை, பால்பண்ணை, தகவல், ஒலிபரப்புத்துறை இணைஅமைச்சர் எல். முருகனும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள்தான். ஆனால் மாநில அரசு அவர்களுடன் உறவாடுவதில்லை. மாநில வளர்ச்சிக்கு உயிரான தொழிற்சாலைகள், நிதியுதவி, அரசுக் கொள்கைக்கான ஆதரவு ஆகியவற்றை அவர்கள்மூலம் பெற்றுக்கொள்வதை திமுக அரசு விரும்புவதில்லை.
தேசிய அரசில் உச்சநிலை கொள்கை வடிவமைப்பாளர்கள் பலர் தமிழகத்தை சார்ந்தவர்கள். பின்வரும் பெயர்களைச் சொல்லலாம்: தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், நிதிச் செயலரும் செலவினச் செயலருமான டி.வி. சோமநாதன், ரிசர்வ் வங்கி ஆளுநர் ஷக்திகந்த தாஸ் (தமிழகக் கேடரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி), ஐநா சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, உலக வர்த்தக நிறுவனத்தின் தூதுவரும், நிரந்தரப் பிரதிநிதியுமான பிரஜேந்திர நவ்நித்.
திராவிட மாடல் என்று வர்ணிக்கப்படும் சந்தேகத்திற்குரிய சமூகநலன் அரசியல் என்பது ஆரம்பத்திலிருந்தே பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருக்கிறது. தேசிய அளவில் நரேந்திர மோடி அரசைப் பற்றி திமுக அரசு முன்வைக்கும் கடுமையான விமர்சனம் சிந்தனை வறட்சியில் வேர்கொண்டது.
மேலும் தமிழகக் கேடரைச் சேர்ந்த அதிகாரிகளான பி. ஆனந்த் (முன்னாள் இராணுவத்தினர் நலச் செயலர்), ஜதிந்த்ர நாத் ஸ்வெயின் (மீன்வளச் செயலர்), கே. ராஜராமன் (மின்னணு தகவல்கள் ஆணையத்தின் செயலர் மற்றும் சேர்மன்), விபூ நய்யார் (செயல் இயக்குநர், வர்த்தக மேம்பாடு), அனிதா பிரவீன் (டெலிகாம் விசேஷ செயலர்), ஆர். ஜெயா (கூடுதல் செயலர், மலைவாழ் மக்கள் துறை) ஆகியோரின் ஆதிமூலங்கள் தமிழக வேர்கள்தான். ஆனால் அவர்களுடன் தமிழக அரசு தொடர்பில் இருப்பது போலத் தெரியவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆட்சிமுறைமையில் பெரிய மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்திருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் அந்தச் சிறப்பான ஆட்சிமுறைமை சரிந்தது. மாநிலத் தலைநகரில் இங்கேயும் அங்கேயும் தவிர ஓரிடத்திலும் உயிரோட்டமான உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மீதான குற்றங்கள் வேறு ஏறிக்கொண்டே போகின்றன.
மாநில முதல்வர்களின் செயல்திறனையும் துறைவாரியான செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்யும் ‘ஸ்கோச்’ நிறுவனம் வெளியிட்ட 2021-ஆம் ஆண்டுக்கான தரமதிப்பீடு பட்டியலில் (ரிப்போர்ட் கார்டு) ஆகச்சிறந்த மதிப்பெண் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு இடம்பெறவே இல்லை. வேளாண்மைத்துறையில் மட்டும் தமிழகம் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. சுகாதாரம், கிராம வளர்ச்சி, காவல்துறை, பாதுகாப்பு, நீர், நகராட்சி ஆட்சிமுறைமை, போக்குவரத்து, மின்னணு ஆட்சிமுறைமை, மாவட்ட நிர்வாகம், நிதி, மற்றும் வருவாய் போன்ற பெரிய துறைகளில் எதிலும் தமிழ்நாடு சிறந்த திறன் கொண்ட மாநிலமாக அறிவிக்கப்படவில்லை.
வாக்குவங்கியை மனதில் வைத்துக்கொண்டு திமுக அரசு சமூக நலன் நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. சட்ட ஒழுங்கு நிலையை மேம்படுத்தாமல், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற முக்கிய துறைகளில் மாற்றம் ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல், ஊழலை அடியோடு ஒழிக்காமல், தமிழ்நாடு ஆகப்பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாது; தொழில் வளர்ச்சியை அடையவும் முடியாது. மேலும், மாநிலப் பொதுத்துறை நிறுவனங்களில் பெரும்பான்மை நட்டத்தில் தள்ளாடுகின்றன. அவற்றை இலாபகரமாக்கத் தேவைப்படும் சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை.
நீட், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பகிர்வு, இந்திமீது பகை, கூட்டாட்சியில் உதட்டளவு ஆர்வம், ஆளுநர் போன்ற அரசியலமைப்புச் சட்டப் பதவிகளைத் துச்சமென மதித்தல் ஆகிய விசயங்களில் திமுக ஆரோக்கியமானதொரு சிந்தனையைக் கொண்டதில்லை
மாறாக டெல்லி அமைப்புகளுடன் கொண்ட பேத உணர்வால், ஒன்றிய அரசின் முக்கிய திட்டங்களை மாநில அரசு நீர்த்துப்போகச் செய்கிறது. இதற்கு ஆகச்சிறந்த உதாரணம் ’கெயில்’ திட்டம்; அது இன்னும் தமிழ்நாட்டில் தேங்கிப்போய்க் கிடக்கிறது. கேரளாவில்கூட அந்தத் திட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.
தமிழக அரசின் மோசமான நிர்வாகத்தின் பாதிப்பு மின்சாரம், போக்குவரத்து, சாலை, நெடுஞ்சாலை வளர்ச்சி ஆகிய துறைகளில் கடுமையாக இருக்கிறது., அதன் விளைவாக வேலை வாய்ப்புகள் சரிந்துவிட, படித்த இளைஞர்கள் பலர் பிற மாநிலங்களுக்கு அல்லது மாநகரங்களுக்கு புலம்பெயர்கின்றனர்.
சுருங்கச் சொன்னால், டில்லியிலுள்ள பலன்தரக்கூடிய வளங்களைத் தமிழகம் பயன்படுத்தத் தவறிவிட்டது. தேசிய அரசுடனும், அதன் துறைகளுடனும் ஆழமானதொரு தொடர்பை வளர்த்தெடுக்காமல் திமுக அரசாங்கம் தமிழகத்தின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுபோக முடியாது.
(ஆசிரியர் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் பொதுக் கொள்கை நிபுணர்)
Read in : English