Read in : English
சீனத்துடன் நேரடி வியாபாரம் லாபகரமாக இருக்கும் என்று நினைத்து தமிழக வியாபார குழுக்களின் விவகாரங்களில் தலையிட்டது எவ்வளவு பெரிய தவறு என்று ஸ்ரீவிஜயா சாம்ராஜ்யத்தின் அரசர் சங்கராம விஜய துங்கவர்மன் உணரும் முன்பு காலம் கடந்து விட்டது. சோழர்களது கடற்படை ஸ்ரீவிஜயத்தின் ஒவ்வொரு துறைமுக நகரங்களையும் தவிடிபொடியாக்கி விட்டது. 1025ஆம் ஆண்டு நிகழ்ந்த ராஜேந்திர சோழனின் இந்த படையெடுப்பின் முன்பு ஸ்ரீவிஜயத்தை ஆண்ட அரசர்கள் சோழ சாம்ராஜ்யத்துடன் நட்புறவு கொண்டிருந்தார்கள். இந்த நட்புறவின் விளைவாகவே நாகப்பட்டினத்தில் புத்த விகாரத்தை அமைக்க சோழர்கள் இணங்கினார்கள் எனலாம். ராஜராஜ சோழனின் காலத்தில் நிலவிய நட்புறவு அவரது மகனது காலத்தில் சிதைய ஆரம்பித்து விட்டது. சோழர்களின் சீனத்துடனான வியாபாரத்தில் ஸ்ரீவிஜயம் தலையிட்டதே முதன்மை காரணமாக கூறப்படுகிறது. ராஜேந்திர சோழனின் இந்தப் படையெடுப்பு உண்டாக்கிய தாக்கத்திலிருந்து ஸ்ரீவிஜயம் மீளவே இல்லை என்றே சொல்லலாம்.
அரசுகளின் வெளிநாட்டு கொள்கைகளில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பலம், அரசோடு இணக்கமான உறவு, தனிப்பட்ட ராணுவம், ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாதுகாக்கும் பண்டகசாலைகள்; கேட்பதற்கு கிட்டத்தட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியை போல தெரிந்தாலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் இருந்த வணிக குழுக்களின் இயல்புகள்தான் மேலே கூறப்பட்டவை. சங்க காலங்களில் இருந்தே தமிழ் நாட்டின் வணிக குழுக்கள் மேற்கே யவனம் எனப்படும் ரோமாபுரியுடனும் கிழக்கே சீனத்துடனும் வியாபாரம் செய்து வந்தார்கள். மிளகுக்கு தங்கத்தை பணமாக கொடுக்கும் ரோம் வியாபாரிகளின் போக்கை அங்குள்ள அறிஞர்களான பிளினி போன்றோர் கடிந்துகொள்ளும் அளவுக்கு வியாபாரம் சிறப்பாக நடந்தது.
முதல் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மிகவும் பெயர்பெற்ற பலம் வாய்ந்த வியாபார குழுக்கள் தென்னிந்தியாவில் தோன்றியதாக பேராசிரியர் சுப்பாராயலு தன்னுடைய ஆய்வு கட்டுரைகளில் தெரிவிக்கிறார். இவற்றில் முக்கியமானது, வெளிநாட்டு வியாபாரிகளின் குழுவான அஞ்சுவண்ணம். இந்த குழுவில் யூதர்கள், பார்சிகள், இஸ்லாமியர் மற்றும் கேரளத்தின் சிரியன் கிறிஸ்தவர்கள் இக் குழுவில் இருந்தார்கள். பண்டைய தமிழகத்தின் கடற்கரைகளில் இவர்கள் இயங்கி வந்தார்கள்.
அரசரையே ஆட்டுவிக்க பலம் இருப்பினும், இந்த வியாபார குழுக்கள் உள்நாட்டு அரசியலில் நேரடியாக தலையிடவில்லை. ஐரோப்பிய கிழக்கிந்திய கம்பெனிகளை போல அயல்நாட்டு அரசியலிலும் குறிக்கிட்டதாக தெரியவில்லை.
இந்தக் காலகட்டத்தில், உள்நாட்டில் வியாபாரம் செய்துவந்த முக்கியமான வியாபார குழு மணிகிராமம். ஒரே வியாபார மையங்களில் இயங்கி வந்த பல்வேறு வியாபாரிகளின் தொகுப்புதான் மணிகிராமம். அஞ்சுவண்ணம் மற்றும் மணிகிராமம் பற்றி சேரர் கால கல்வெட்டு (கி.பி. 849) குறிப்பிடுகிறது. தாய்லாந்தின் தெற்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 9ஆம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டும் மணிகிராமம் பற்றி குறிப்பிடுவதாக சுப்பாரயலு தெரிவிக்கிறார். காலப்போக்கில் அஞ்சுவண்ணமும் மணிகிராமமும் ஒருவருக்கொருவர் உதவியதாகவும் தெரியவருகிறது.
பத்தாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய அய்யாவோலே 500 என்ற வியாபார குழு சிறிதுகாலத்தில் மிகப்பெரிதாக வளர்ந்தது. ஐநூற்றுவர் என்றும் இந்த குழு அழைக்கப்பட்டது. அஞ்சுவண்ணமும் மணிகிராமமும் இந்த புதிய குழுவின் அங்கமாக மாறி விட்டன. ராஜேந்திர சோழனின் கடார படையெடுப்பின் பின்னணியில் இந்தக் குழுவின் தாக்கம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அரசரையே ஆட்டுவிக்க பலம் இருப்பினும், இந்த வியாபார குழுக்கள் உள்நாட்டு அரசியலில் நேரடியாக தலையிடவில்லை. ஐரோப்பிய கிழக்கிந்திய கம்பெனிகளை போல அயல்நாட்டு அரசியலிலும் குறிக்கிட்டதாக தெரியவில்லை. வியாபாரத்தில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினார்கள். துர்க்கையின் மக்கள் என்று தங்களை அழைத்துக்கொண்ட அவர்கள் எல்லா மதத்தினரையும் வெளிநாட்டு மதங்களான இஸ்லாமையும் கிறிஸ்தவத்தையும் ஆதரித்தார்கள். கோவில்கள் மற்றும் இதர வசதிகள் கட்டவும் மிகுந்த பொருளுதவி செய்தார்கள். மற்றபடி ஐரோப்பிய கம்பெனிகளின் பல்வேறு கூறுகள் அவர்களிடம் இருந்தன என்கிறார் தொல்பொருள் வல்லுநர் சாந்தலிங்கம் அவர்கள்.
தமிழ் இலக்கியத்தில் அடிக்கடி கூலவாணிகன் என்ற சொல் அடிபடும். கூலவாணிகம் என்பது தானியங்கள் விற்பது. பெரும் விவசாயிகள் கூலவணிகர்களாகவும் மாறினார்கள். எனவே விவசாயத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கு வணிகர்கள் பொருளுதவி செய்தார்கள்.
ஐரோப்பியர் கண்ணோட்டத்தில் இருந்து வரலாற்றை பார்த்தால் இந்தியர்கள் மட்டமாகவே தெரிவார்கள். அவர்கள் வியக்கும் அளவுக்கு இங்கு வியாபார குழுக்கள் இருந்தன. அன்றைய காலகட்டத்தின் உலக சந்தையின் மூன்றில் ஒரு பங்கை இந்தியா கையாண்டது. சர்வதேச வியாபாரம் கொடிகட்டி பறந்ததால்தான் துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிளை 1453 ஆம் ஆண்டு கைப்பற்றியபின் இந்தியாவுக்கு கடல்வழி கண்டுபிடிக்க அவ்வளவு பாடுபட்டார்கள் என்கிறார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ராஜவேலு.
வணிக குழுக்களின் நடவடிக்கைகளால்தான் பண்டைய தமிழ்நாடு நகரமயமான நாகரிகமாக பரிணமித்தது. வணிகர்கள் வியாபாரம் செய்த பகுதிகள் பேட்டை, பட்டினம் மற்றும் நகர் என்று அழைக்கப்பட்டன. அங்கு சகல வசதிகளும் சிறிது சிறிதாக பெருகி சிறுநகரங்கள் பெருநகரங்களாக உருவாயின. குறிப்பாக அவர்களது பண்டகசாலைகளை ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாத்ததால் ‘எரிபடைநல்லூர்’ என்று அழைக்கப்பட்டன. அவர்கள் பண்டங்களை கொண்டு செல்ல நெடுஞ்சாலைகள் அரசர்களால் அமைக்கப்பட்டன. வணிகர்கள் தங்க விடுதிகளும் ஓய்விடங்களும் நெடுஞ்சாலைகள்தோறும் உருவாயின.
வணிக குழுக்களின் நடவடிக்கைகளால்தான் பண்டைய தமிழ்நாடு நகரமயமான நாகரிகமாக பரிணமித்தது. வணிகர்கள் வியாபாரம் செய்த பகுதிகள் பேட்டை, பட்டினம் மற்றும் நகர் என்று அழைக்கப்பட்டன.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை ஏறுசாத்து மற்றும் இறங்குசாத்து என்றழைத்ததாக சாந்தலிங்கம் குறிப்பிடுகிறார். வணிகர்கள் இருபது வகை வரிகளை செலுத்தியதாகவும் அது எடை மற்றும் பொருள்களைப் பொருத்து மாறியதாகவும் அவர் சொல்கிறார். வரி ‘உல்கு’ என்றழைக்கப்பட்டது. உல்கு பெருவழி என்று சுங்கம் செலுத்தவேண்டிய சாலைகள் அழைக்கப்பட்டன. தங்களுடைய கஜானவை நிரப்பிய வணிகர் குழுக்களுக்கு சாதகமாக அரசர்கள் செயல்பட்டதில் எந்த வியப்பும் இல்லை என்கிறார் சாந்தலிங்கம்.
பேராசிரியர் சுப்பராயுலுவின் ஆய்வு கட்டுரை ஏறக்குறைய பதிமூன்றாம் நூற்றாண்டுவரை காணப்படும் வணிகர் குழுக்களை பற்றிய குறிப்புகள் அதன்பிறகு மறைய துவங்குகின்றன என்கிறார். விஜயநகர அரசர்கள் காலத்திலும் சீன தொங்கு கப்பல்கள் பழவேற்காடு துறைமுகத்தில் நங்கூரம் இறக்கிய தரவுகள் இருக்கின்றன என்கிறார் பேராசிரியர் ராஜவேலு. மிச்சமீதி இருந்த வணிக குழுக்களின் ஆதிக்கமும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் தொடங்கியபின்பு மறைந்து போனது என்கிறார் சாந்தலிங்கம்.
Read in : English