Site icon இன்மதி

கடன் சுமை: எப்படி எதிர்கொள்ளப் போகிறது தமிழக அரசு?

தனது முதல் பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2021-22 நிதியாண்டில் மாநில அரசு ரூபாய் 92,484.50 கோடி கடன்வாங்கும் என்று மதிப்பிட்டுள்ளார்.

Read in : English

ஒரு மாநிலப் பொருளாதாரத்தின் பலங்களும், பலகீனங்களும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் தமிழ்நாடு ஒரு பெரிய மாநிலம்; அதன் பொருளாதாரம் தேசிய பொருளாதாரத்தின்மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8-லிருந்து 9 வரையிலான சதவீதம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீதப் பங்களிப்பைக் கொண்டிருக்கும் ஒருசில உச்ச மாநிலங்களில் அதுவும் ஒன்று. என்றாலும், சமீபகாலமாக தமிழ்நாட்டின் பொருளாதாரம் கீழ்நோக்கிச் சரிந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு தசாப்தங்களில் தமிழ்நாட்டை அதிமுக மூன்று தடவையும், திமுக ஒரு தடவையும் ஆட்சி செய்திருக்கின்றன. பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக 2021இல்தான் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. மொழி, பிராந்திய சமத்துவமின்மை, மாநிலத்தின் அதிகரிக்கும் கடன் சுமை, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, நீட், மாநிலங்களுக்கிடையிலான உறவுகள், நதிநீர்ப் பங்கீடு, இயற்கை இடர்களுக்கான நிவாரணம், கோவிட் நிவாரணம், விவசாயிகள் நலன், பொது சுகாதாரம் மற்றும் கல்வித்துறை ஆகிய துறைகளில் பல்வேறு பிரச்சினைகளில் பாஜகவின் ஒன்றிய அரசை அல்லது அதிமுகவின் மாநில அரசைக் கேலி செய்யவே ஒவ்வொரு அரசியல் வாய்ப்பையும் திமுக பயன்படுத்தி வந்துள்ளது.

இந்தப் பிரச்சினைகளில், துறைதோறும் இருக்கும் சவால்களில் ஆழமாகக் கவனம் செலுத்தி ஆக்கப்பூர்வமாக, பொறுப்பாக விமர்சனம் செய்யாமல் வெறுமனே அரசியல் விளையாட்டிலே இறங்கி விளையாடியிருக்கிறது திமுக. மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த தலைமுறைச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து மாநிலத்தை உயர்த்துவோம் என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் முழங்கியிருக்கிறது திமுக. ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்பது மாதங்களில் மாநிலப் பொருளாதாரத்தில் இருக்கும் முக்கியப் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தவில்லை அந்தக் கட்சி. முழுவீச்சில் அது கொண்டுவந்திருக்கும் பொதுநலத் திட்டங்களால் ஏற்கனவே வருவாய்க்கு வழியற்று அழுந்திக் கிடக்கும் கிடக்கும் கஜானா காலியாகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகாரப் பரவலாக்கம், மாநகரங்களின், நகரங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்குமான நிதி மற்றும் நிர்வாகப் பங்கீடு ஆகிய முக்கிய பிரச்சினைகள் கண்டுகொள்ளப் படவில்லை.

சமீபத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரையில் எடுத்துச் சொல்லப்பட்ட அரசு சாதனைகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சினைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதிகாரப் பரவலாக்கம், மாநகரங்களின், நகரங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்குமான நிதி மற்றும் நிர்வாகப் பங்கீடு ஆகிய முக்கிய பிரச்சினைகள் கண்டுகொள்ளப் படவில்லை.

சமீபத்தில் தலைப்புச் செய்தியான சில தொழிலதிபர்களுடன் அரசு செய்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே தேர்தல் பரப்புரையில் இடம்பெற்றன. மாநில நிதிநிலை பற்றி கட்சி வெளியிட்ட வெள்ளை அறிக்கை, துறைதோறுமான வளர்ச்சி மற்றும் மாநிலப் பொருளாதார முன்னேற்றம் சம்பந்தமான பிரச்சினைகளை எடுத்துரைத்தது. ஆனால் அவற்றில் சிலவற்றையாவது இந்த நடப்பு நிதியாண்டில் தீர்த்து வைக்க எந்த பலமான நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.

நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட நிதியமைச்சர் தியாக ராஜன் (Photo Credit: P.Thiaga Rajan’s Twitter page)

பெருங்கடன்களையும், வட்டிகளையும் பாரமாகக் கொண்டிருக்கும் ஒரு கடன் சுமை மாநிலம்தான் தமிழ்நாடு. மாநிலம் வாங்கிய கடன்களில் பாதிக்கும் மேல், இலவசச் சலுகைகளுக்காகச் செலவழிக்கப்பட்டன. சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ.84,500 கோடிவரை தமிழ்நாடு கடன்வாங்கியுள்ளது.

தனது முதல் பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2021-22 நிதியாண்டில் மாநில அரசு ரூபாய் 92,484.50 கோடி கடன்வாங்கும் என்று மதிப்பிட்டுள்ளார். அதே ஆண்டில் அரசு ரூபாய் 44,700 கோடி வட்டி கட்டுமென்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறாக வாங்கும் கடன்களில் கிட்டத்தட்ட பாதி வட்டிக்கட்டவே சரியாக இருக்கிறது. இதுவோர் ஆரோக்கிய நிலை அல்ல.

இவ்வளவு கடன்கள் இருந்தபோதிலும், 2022-23 நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீதம் அளவுக்கு கடன் வாங்குவதற்காக ஒன்றிய அரசின் நிபந்தனையில்லாத அனுமதியை மாநில அரசு கேட்டிருக்கிறது. 1991-ஆம் ஆண்டின் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முன்பு, பல மாநிலங்கள் பெரும் கடன்களை வாங்கின. ஆனால் கடன்வாங்கிய அந்தநிதி மூலதனச் செலவுக்காகப் பயன்படுத்தப்படவில்லை.

பல ஆண்டுகளாக, அதிமுக தமிழ்நாட்டைக் கடன்சுமை மாநிலமாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்று திமுக கட்சித் தலைமை குற்றஞ்சாட்டியது. ஆனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்பு கடன்வாங்குவதை நிறுத்தவும், வருமானத்தைப் பெருக்கவும் எந்தவொரு சீர்திருத்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தைப் பலகீனமாக்கிய விஷயத்தைப் பொறுத்தவரை, இந்த இரண்டு திராவிடக்கட்சிகளுக்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை.

உற்பத்தி, சேவை துறைகளில் கடந்த தசாப்தத்தில் (2010-11 முதல் 2020-21 வரை) பதிவுசெய்யப்பட்ட வளர்ச்சிவிகிதம், முந்தைய தசாப்தத்தோடு (2001-02 முதல் 2010-11 வரை) ஒப்பீடு செய்கையில் மிகவும் சரிந்துவிட்டது என்றே சொல்லலாம். எனினும் வேளாண்மைத்துறை தேசிய சராசரி விகிதத்தைத் தாண்டி நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாயத்துறைக்கென்று ஒரு தனிபட்ஜெட் தேவையற்றது. ஏனென்றால் அது நீண்டகாலமாகவே நன்றாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தத் தனி பட்ஜெட் உற்பத்தித்திறனை அதிகப்படுத்தாமல் விவசாயிகளையும் நுகர்வோர்களையும் குழப்பவே செய்யும்.

நிதியாண்டு 2022-23-க்கான பட்ஜெட் அமைப்பியல் பிரச்சினைகளில் சிலவற்றையாவது எதிர்கொண்டு தீர்க்க முயலவேண்டும். அந்தச் சில பிரச்சினைகள் பின்வருமாறு: நஷ்டத்தில் இயங்கும் மாநிலப் பொதுத்துறை நிறுவனங்கள் (மின்சாரத் துறையைத் தவிர்த்து மொத்தம் 70-தில் 55 நிறுவனங்கள்), அழுத்தத்தில் இருக்கும் மின்சாரத்துறை, நஷ்டத்தில் செயல்படும் பொதுப்போக்குவரத்துக் கழகங்கள், ஆந்திர பிரதேசத்தில் இருப்பது போன்று நேரடியாக பலன்பெறுவோர் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டச் சீர்திருத்தம், வழிவழியாக சில தொழில்களுக்கு வழங்கப்படும் மின்சார, உணவு மானியங்கள் ஆகியவை.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்பு கடன்வாங்குவதை நிறுத்தவும், வருமானத்தைப் பெருக்கவும் எந்தவொரு சீர்திருத்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை

தமிழ்நாட்டில் “ஆட்சி அமைப்புகளில் பல்வேறு பலகீனங்கள் இருக்கின்றன; மனிதவள நிர்வாகம், முதுகெலும்பு போன்ற தரவு அமைப்புகள், தணிக்கை மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் ஆகியவை முற்றிலும் சீர்திருத்தப்பட்டு சரிசெய்யப்படும்” என்று மாநில நிதியமைச்சர் தனது முதல் பட்ஜெட் உரையில் அறிவித்திருந்தார். ”நகர்ப்புற ஆட்சிக் கட்டமைப்பு வெளிப்படையானதாக, பங்கெடுப்பு ரீதியிலானதாக, விரைந்து எதிர்வினை ஆற்றக்கூடியதாக மாற்றியமைக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்திருந்தார். இவையெல்லாம் சொல்வது எளிது.

தேசத்திலே மிக அதிகமான அளவுக்கு தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை 34.1 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. அரசியல் சுயநலமிகளின் நலன்களுக்காகவே பல திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. “தொழில், மற்றும் சமூக சச்சரவுகளின் அதிகமான போக்கு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்திருக்கிறது. கைவிடப்பட்ட பல திட்டங்கள் மீட்டெடுக்க வேண்டும்; உழைப்பாளிகளின் குறைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் பல நூற்றாண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட பெரும் மரியாதையைத் தமிழ்நாடு இழக்க நேரிடும்,” என்று அனிஷ் குப்தா, மௌசுமி பிஸ்வாஸ், மற்றும் ராகுல் ரஞ்சன் ஆகியோர் சமீபத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

உதாரணமாக, அரசியல் லாபங்களுக்காகத் தூண்டிவிடப்பட்ட விவசாயிகள் போராட்டத்தினால் தமிழ்நாட்டில் எரிவாயுத் திட்டம் (கெயில்) கைவிடப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் கேரளா போன்ற மாநிலங்களில் பெரிய சிரமங்கள் ஏதுமில்லாமல் நிறைவேற்றப்பட்டது.

மாநில நிதியமைச்சர், ஆட்சிமுறையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அப்போதுதான் மாநிலப் பொருளாதாரம் கட்டுத்தளைகளிலிருந்து விட்டு விடுதலையாகி டிரில்லியன் டாலர் இலக்கை நோக்கி நகரமுடியும். மேலும், ஒன்றிய அரசிற்குக் கூட்டாட்சித் தத்துவத்தை, குறிப்பாக நிதிக்கூட்டாட்சியைப் போதிப்பதற்கு முன்பு மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை, நிதியை, நிர்வாகத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

(ஆசிரியர் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் பொதுக் கொள்கை நிபுணர்)
Share the Article

Read in : English

Exit mobile version