Site icon இன்மதி

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நழுவவிட்ட ரஞ்சன் என்ற பன்முகக் கலைஞன்!

Read in : English

‘காளிதாஸ்’ திரைப்படத்தோடு தமிழ்சினிமா பேசும்படமானது 1931-இல். ஆனால் பத்தாண்டுகள் கழித்து ஒரு பெரிய சூப்பர்ஸ்டாராக உருவாகிக் கொண்டிருந்தார் ரஞ்சன் ; பன்முகத்திறன்களோடும் முதுகலைப் பட்டத்தோடும் உதயமான அந்த மகாநடிகரைப் பார்த்து அரண்டுதான் போனார்கள் புதிய நடிகர்களும் நடிப்புலகில் முத்திரை பதிக்கும் ஆர்வத்தோடு வந்தவர்களும்.

இனி தமிழ்சினிமா இவரது ஆளுகைக்குள்தான் என்று ஆருடம் சொன்னார்கள் ஆயிரம்பேர். ஆனால் விதி வேறுமாதிரியாகக் கணக்குப் போட்டிருந்தது; அவரது காலத்தில் அதிகம் நிராகரிக்கப்பட்டவர்கள்தான் பிற்காலத்தில் அவரைத் தாண்டி ஆட்சி செய்த சூப்பர்ஸ்டார்கள் ஆனார்கள்.

அப்படி சூப்பர்ஸ்டார் அந்தஸ்தைத் தவறவிட்ட நடிகர் ரஞ்சன் என்னும் ராமநாராயண வேங்கடரமணா ஷர்மா; திருச்சிக்கு அருகே ஸ்ரீரங்கத்தைச் சார்ந்தவர். ஆஜானுபாகுவான தோற்றமும், இசை, நடனம், வாள்சண்டை, விமானம் ஓட்டும் கலை, பத்திரிகை, எழுத்து, ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் நுண்மாண் நுழைபுலம் ஆகிய பன்முக வித்தகமும் கொண்ட ரஞ்சனின் அருகேகூட செல்ல முடியாத அளவுக்குச் சாதாரணமாக இருந்த எம்.ஜி.ராம்சந்தரும், விசி கணேசமூர்த்தியும்தான் 1950-க்குப் பின்பு எம்ஜிஆர், சிவாஜி என்னும் இணைபிரியாத இரட்டை சூப்பர் ஸ்டார் ஆனார்கள்.

எம்ஜிஆர் பிறந்து ஓராண்டு கழித்து, 1918-இல் பிறந்த ரஞ்சனின் 104-ஆவது பிறந்தநாளான மார்ச் 2 யாருக்கும் ஞாபகம் வராமலே மெளனமாகக் கழிந்துபோனது.

எட்டு தசாப்தங்களுக்கு முன்பு ஹரிதாஸ், சிந்தாமணி, உத்தமபுத்திரன், கண்ணகி என்று வெற்றிப்படங்களைக் கொடுத்து எம்.கே. தியாகராஜ பாகவதரும், பி.யூ. சின்னப்பாவும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள்.

அந்தச் சூழலில் ரஞ்சன் 1941-இல் பாகவதரின் ‘அசோக்குமார்’ படத்தில் கெளதமபுத்தராக அறிமுகம் ஆனார். வசனம் இல்லை; ஆனால் வசீகரமான அந்த இளைஞனைப் பார்த்து ’ஆ’வென்று வாயைப் பிளந்து ரசித்தார்கள் மக்கள். அந்தப் படத்தில் சிறுவேடத்தில் நடித்த எம்ஜியார் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஜெமினி ஸ்டூடியோவில் வேலை செய்த வேப்பத்தூர் கிட்டுதான் ஒரு நிகழ்ச்சியின்போது வேங்கடரமணா சர்மாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்து அவரைத் திரைப்படத்துறைக்குக் கூட்டிவந்தார். நியூடோன் ஸ்டூடியோவின் ஜித்தன் பானர்ஜி வேங்கடரமணாவிற்கு, ரஞ்சன் என்று பெயரிட்டார் (கே பாலசந்தர் சிவாஜிராவ் கெய்க்வாட்டிற்கு ரஜினிகாந்த் என்று பெயரிட்டது போல).

‘ரிஷ்யசிருங்கர்’ (1941) திரைப்படத்தில் காட்டில் முனிவரால் வளர்க்கப்படும் ஓர் இளைஞனாக நடித்த ரஞ்சனின் அழகிய தோற்றமும் பால்முகமும் அவர் கால்பதித்த இடங்களில் எல்லாம் மழைபெய்யும் என்னும் கதைப்போக்கில் ஒன்றி ஒரு வசீகரத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து வேகமெடுக்க ஆரம்பித்த ரஞ்சனின் திரைப்படவாழ்க்கைப் பயணம் 1960-களின் இறுதிவரை நீடித்தது.

பின்பு 1943-இல் வெளியான ‘மங்கம்மா சபதம்’ அவரை வில்லத்தனமான கதாநாயகனாகவும், பெண்களோடு கூத்தடிக்கிற இளவரசனாகவும் காட்டியது. தந்தை-மகன் என்று இரட்டைவேடத்தில் நடித்தார் அவர். வைஜயந்திமாலாவின் தாயார் வசுந்துராதேவி கதாநாயகியாக நடித்தார். புறாப்பிடிக்க வரும் கதாநாயகியோடு ரஞ்சன் பேசும் வசனமும், காம உணர்வு கொப்பளிக்கும் உடல்மொழியும் படத்தை ஜனரஞ்சக வெற்றியாக்க உதவின.

1945-இல் வெளிவந்த ‘சாலிவாகனன்’ திரைப்படத்தில் ரஞ்சன் கதாநாயகனாகவும் எம்ஜிஆர் வில்லனாகவும் நடித்தார்கள்.

சந்திரலேகா படத்தில் இருந்து ஒரு ஸ்டில் (Photo Credit-Cinestaan.com)

1945-இல் வெளிவந்த ‘சாலிவாகனன்’ திரைப்படத்தில் ரஞ்சன் கதாநாயகனாகவும் எம்ஜிஆர் வில்லனாகவும் நடித்தார்கள். கடுமையான வாள்சண்டைக் காட்சியில் ரஞ்சனின் கைதேர்ந்த வாள்சுழற்சிகளில் அதிர்ந்துபோன எம்ஜிஆர் இயக்குநர் பி.என். ராவ்விடம் சென்று ரஞ்சன் நிஜமாகவே வாளால் தன்னைத் தாக்க வருகிறார் என்று புகார் தெரிவித்தார் என்று திரைப்பட வரலாற்று ஆசிரியர் ராண்டார் கை சொல்கிறார்.

1936-இல் ‘சதிலீலாவதியில்’ சிறுவேடத்தில் அறிமுகமான எம்ஜிஆருக்குத் தொடர்ந்து சிறுசிறு வேடங்களே கிடைத்தது; கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு 1941-இல் ‘சாயா’ படத்தில் அவருக்குக் கிடைத்தும் இந்திக்காரரான இயக்குநர் நந்த்லால் ஜஸ்வந்லாலுக்கு அவருடைய நடிப்பு பிடிக்காமல் போக எம்ஜியாரை நீக்கிவிட விரும்பினார். தயாரிப்பாளர்கள் அவருடைய பேச்சைக் கேட்கவிரும்பவில்லை. இறுதியில் படம் வெளிவரவே இல்லை.

ஒருவேளை ’சாயா’ படம் வெளிவந்து வெற்றி பெற்றிருந்தால், ரஞ்சனை எம்ஜிஆர் தொழில்ரீதியாக 1940-களிலேயே எதிர்கொண்டு வெற்றி பெற்றிருப்பார். ஆனால் ‘ராஜகுமாரி’ (1947), ‘மந்திரிகுமாரி’ (1950) படங்களுக்காகக் காலம் அவரைக் காத்திருக்க வைத்துவிட்டது.

இதற்கிடையில் ரஞ்சனின் பிரபல்யம் உச்சத்தைத் தொட்டது, அனைத்திந்திய புகழ் பெற்ற, ஜெமினி அதிபரான எஸ்எஸ் வாசனின் ’சந்திரலேகா’ (1948) படத்தில்தான். எம்ஜிஆர் தனது வாழ்நாள் முழுவதும் அண்ணனாகப் பாவித்து பாசம் காட்டிய எம். கே. ராதாதான் அந்தப் படத்தில் கதாநாயகன்.

அவரோடு வாள்சண்டையில் மோதிய ரஞ்சன் வில்லனாக நடித்தபோதும் அளவில்லாத பேர்புகழ் பெற்றார். ’சந்திரலேகா’ போன்ற படங்கள் நிச்சயமாக அந்தக் காலகட்டத்தில் கதாநாயகனாக புதுஅவதாரம் எடுத்திருந்த எ எம்ஜிஆருக்குத் தான் நடித்திருக்க வேண்டிய படம் என்ற எண்ணத்தை உருவாக்கியிருந்திருக்கும். ரஞ்சனின் அளவில்லாத திறமைகள் அவரைக் கலங்கடிக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நீலமலைத் திருடன்- படத்தின் போஸ்டர்- (Wikipedia)

இதற்கிடையில் ‘சந்திரலேகாவில்’ ரஞ்சனுக்கு மெய்க்காப்பாளனாக தனக்கொரு வாய்ப்பு கிடைக்குமா என்று முயற்சி செய்த விசி கணேசன் என்னும் நாடகக்கலைஞனுக்கு, பிற்காலத்தில் நடிப்பின் இலக்கணத்தந்தை என்று புகழ்பெற்ற சிவாஜிகணேசனுக்கு, எஸ்எஸ் வாசன் “நீ சினிமாவுக்குப் பொருத்தமானவன் அல்ல; வேறு வேலை பாரு,” என்று பதில் சொன்னார் என்பது காலத்தின் நகைமுரண்.

மஞ்சள் பத்திரிகை அதிபர் லஷ்மிகாந்தன் கொலைவழக்கு, பாகவதரை வீழ்ச்சியடைய வைத்தது; அகால மரணம் பியூ சின்னப்பாவை அகற்றியது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் பதவி காலியாக இருக்க அதில் மிகவும் பொருந்தக்கூடியவர் ரஞ்சன்தான் என்று 1950-க்கு முன்புவரை கணிக்கப்பட்டிருந்தது. அவருக்கு என்று தோன்றிய ரசிகர் பட்டாளம் ‘சந்திரலேகா’ ரஞ்சனைத் தலைமேல் வைத்துக் கொண்டாடியது.

1996-இல் புகழின் உச்சத்தில் இருந்தபோது கிடைத்த ஆகப்பெரும் அரசியல் வாய்ப்பைத் தவறவிட்ட நடிகர் ரஜினிகாந்தைப் போல, ரஞ்சன் தனக்காகக் காத்திருந்த தமிழ்சினிமா சூப்பர்ஸ்டார் அந்தஸ்தைத் தவறவிட்டது அவரது துரதிர்ஷ்டமே.

1996-இல் புகழின் உச்சத்தில் இருந்தபோது கிடைத்த ஆகப்பெரும் அரசியல் வாய்ப்பைத் தவறவிட்ட நடிகர் ரஜினிகாந்தைப் போல, ரஞ்சன் தனக்காகக் காத்திருந்த தமிழ்சினிமா சூப்பர்ஸ்டார் அந்தஸ்தைத் தவறவிட்டது அவரது துரதிர்ஷ்டமே. அதற்குக் காரணம் அவர்தான்.

ரஞ்சன் இந்திப்படவுலகிற்குச் சென்றார்; அங்கேயும் வெற்றிக்கொடி நாட்டினார்; ’நிஷான்’ (1949), ‘ஷின் ஷினாகி பூப்லா பூ’ (1952), ‘ஹம் பீ குச் காம்’ (1958) போன்ற இந்திப்படங்கள் ரஞ்சனை மற்றுமொரு சிகரத்தில் ஏற்றிவைத்தது; ஆனால் அதற்குள் தமிழ்திரைத் துறையில் மாற்றங்கள் பல நிகழ்ந்துவிட்டன என்பதை ரஞ்சன் அவதானிக்க தவறிவிட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகம் சினிமாவைக் கையில் எடுத்து பிரபல்யமாகத் தொடங்கியது; பராசக்தி (1952) சிவாஜி கணேசனை ஒரே நாளில் உச்சத்திற்குக் கொண்டுபோனது என்றால், மர்மயோகி, சர்வாதிகாரி, மலைக்கள்ளன், தாய்க்குப் பின்தாரம் என்று வரிசையாக வந்த திரைப்படங்கள் எம்ஜியாருக்கான ராபின்ஹூட் படிமத்தை உருவாக்கி, ஏழைகளுக்காகவும், சத்தியத்திற்காகவும் போராடும் ஒரு வீரனாக அவரைக்காட்டி இருபத்தியைந்து ஆண்டுகால திரைப்படத் துறை ஆட்சியை அவரது கைகளில் ஒப்படைத்தன.

1940-களில் சம்பாதித்த பேரையும் புகழையும் ரஞ்சன் 1950-களில் விரயமாக்கத் தொடங்கினார். என்றாலும் 1957-இல் எம்ஜியாருடன் கொண்ட சின்னதோர் உரசல் காரணமாக சாண்டோ சின்னப்ப தேவர் ரஞ்சனை எம்ஜியாருக்கு மாற்றாக ‘நீலமலைத் திருடன்’ படத்தில் கொண்டுவந்தார். தலையில் தொப்பியும், கெளபாய் ஆடையும் அணிந்து ரஞ்சன் குதிரையில் ‘சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா’ என்று பாடி திரையில் தோன்றியபோது, 1940-களில் ரஞ்சன் மீதிருந்த தொழில்அச்சம் மீண்டும் எம்ஜியாருக்குத் தோன்றியதில் ஆச்சரியமில்லை.

ரஞ்சன் ரசிகர்கள் கொண்டாடினார்கள்; எம்ஜிஆர் ரசிகர்கள் திண்டாடினார்கள். “என்ன இது? எங்கள் தலைவருக்கான பாத்திரம் அல்லவா இது? பாட்டும் அவருக்கானதுதானே,” என்றெல்லாம் ரசிகர்கள் புலம்பியது எம்ஜிஆர் காதுவரைக்கும் சென்றது. தன்தவறைப் புரிந்துகொண்ட எம்ஜிஆர் சுதாகரித்துக் கொண்டார்; தனது ஆப்த நண்பர் தேவரிடம் சமாதானம் ஆனார்; மீண்டும் நட்பு வலுப்பெற தேவர்- எம்ஜிஆர் கூட்டணியில் ‘த’ வரிசைப் படங்கள் வந்து எம்ஜியாரை புதியதோர் உச்சத்திற்குக் கொண்டுபோனது என்பது எல்லோரும் அறிந்த வரலாறு. தேவர் எம்ஜியாரை மீண்டும் தூக்கிப் பிடித்தார்; கோபத்தில் கொண்டுவந்த ரஞ்சனைக் கழற்றிவிட்டார்.

தலையில் தொப்பியும், கெளபாய் ஆடையும் அணிந்து ரஞ்சன் குதிரையில் ‘சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா’ என்று பாடி திரையில் தோன்றியபோது, 1940-களில் ரஞ்சன் மீதிருந்த தொழில்அச்சம் மீண்டும் எம்ஜியாருக்குத் தோன்றியதில் ஆச்சரியமில்லை

சிவாஜி, திராவிடப் பாசறையை விட்டு விலகி, காமராஜரிடம் பற்றுவைக்கத் தொடங்கினார்; என்றாலும் அவரது திரைப்பட வாழ்க்கை உச்சத்தை நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தது. அண்ணாத்துரை, கருணாநிதி ஆகிய திராவிடத் தலைவர்களோடு தோழமையில் இருந்த எம்ஜியாருக்கு அரசியலும் புரிந்தது; திரைப்படத்துறையும் புரிந்தது.

இந்த திரைப்படத்துறை அரசியலும் அரசியல்சாயம் பூசிய திரைப்படத் துறையும் ரஞ்சனுக்கு 1960-களில் பிடிபடவும் இல்லை; புரியவும் இல்லை. 1969-இல் ‘கேப்டன் ரஞ்சன்’ என்ற படுதோல்விப் படத்தைக் கொடுத்துவிட்டு சினிமாவிடமிருந்து விடைபெற்று அமெரிக்காவிற்குத் தன்மனைவி கமலாவோடு சென்று குடிபுகுந்தார் ரஞ்சன்; 1983 செப்டம்பர் 12-இல் மாரடைப்பால் காலமாகும்வரை அங்கே ஒரு பல்கலைக்கழக ஆசிரியராக வாழ்நாளைக் கழித்தார்.

முதுகலைப் பட்டம் பெற்று, நடனம், இசை போன்ற பல்துறைகளில் வித்தகராக இருந்த ரஞ்சன் என்னும் அறிவாளி சினிமாவில் தோற்றுப்போனதும், ஆரம்பப்பள்ளிப்படிப்பைக் கூட தாண்டாத எம்ஜியாரும், சிவாஜியும் திரையில் உச்சநட்சத்திரங்களாக ஜொலித்து மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்ததும் காலம் என்னும் பின்நவீனத்துவவாதியின் பித்தலாட்ட மாயமந்திரங்கள்தான்.

சினிமா கைவிட்டாலும் ரஞ்சனுக்கு மற்ற திறமைகள் கைகொடுக்கும் என்ற நிலையில் அவர் சினிமாவைப் பெரியதொரு விஷயமாக நினைத்திருக்க மாட்டார்; ஆனால் எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் சினிமா என்பது சுவாசம்; உயிர்; வாழ்க்கை. வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் சினிமாவில்தான் என்ற மனஉறுதியோடு அவர்கள் வாழ்ந்தார்கள்.

அதிலும் மக்கள் மனதைச் சரியாகப் படித்தவர் எம்ஜிஆர். படித்தவர்கள் பலர் தோற்றுப்போவது இந்த விசயத்தில்தான். அதற்கு ரஞ்சன் சரியானதோர் எடுத்துக்காட்டு.

Share the Article

Read in : English

Exit mobile version