Site icon இன்மதி

புதிராக வாழ்ந்து புதிராக மறைந்த திராவிட இயக்கத் தலைவராகத் தகவமைத்துக் கொண்ட ஜெயலலிதா!

Jayalalithaa's partymen praying for her at a temple during her illness

Read in : English

சமீபத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்வியையும், கடந்த  ஆண்டு நிகழ்ந்த ஆட்சியிழப்பையும் தாண்டி பிப்ரவரி 24-ஆம் தேதி தங்கள் தலைவி  ஜெ. ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்தநாளைப் பூக்கள்தூவிக் கொண்டாடத் தவறவில்லை முன்னாள் ஆளும்கட்சியும், இந்நாள் எதிர்க்கட்சியுமான அஇஅதிமுக.

இந்தச் சூழலில் ’அம்மா’ மட்டும் உயிரோடும் ஆட்சியிலும் இருந்திருந்தால் அவரின் வயதும் நாட்டின் சுதந்திரமும் 75-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த ஆண்டை, கட்சி ஐம்பதாவது ஆண்டில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ஆண்டை, அதிமுக எப்படி கோலாகலமாகக் கொண்டாடி இருக்கும் என்று உண்மையான ஒரு கட்சித்தொண்டன் ஓர் ஓரத்தில் நின்று எப்படியெல்லாம் கண்ணீர் சிந்தியிருப்பான்.

காலம், விநோதங்கள் பல நிகழ்த்தும் ஒரு விந்தைக்காரன். நாடு சுதந்திரம் அடைந்து ஆறு மாதம் கழித்துப் பிறந்தார் ஜெயலலிதா; அப்போது அவரின் பிற்காலத்துப் பரம அரசியல்வைரியான  மு. கருணாநிதிக்கு ஏற்கனவே 23 வயது. பிராமணருக்கெதிரான திராவிடச் சித்தாந்தமும், இயக்கமும் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில்தான், பின்னாளில் அதை  வழிநடத்தப்போகும் தலைவி ஒரு பிராம்மணப் பெண் குழந்தை வடிவத்தில் பிறந்தார் என்பது காலத்தின் நகைமுரண்.

1960களின் ஆரம்பக்கட்டம் வரை கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் புழங்கிய ஜெயலலிதா பள்ளிப்படிப்பு முடிந்து திரைப்படத்துறைக்கு வந்தது ஒரு விபத்து. கல்வி ஆர்வம் கொண்ட ஒரு பெண் விருப்பமில்லாமல் தாயாரின் வற்புறுத்தலால் நடிக்க வந்ததும் அப்போது தமிழ் மக்களின் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்துகொண்டிருந்த எம்ஜிஆரின் ஆதரவில் மடமடவென்று நடித்து அறுபதுகளிலும், எழுபதுகளிலும் மக்கள் கொண்டாடும் ஒரு பெரிய நடிகையாகப் புகழ்பெற்றதும் எல்லாம் காலம் நிகழ்த்திய புதிர்கள். ஜெயலலிதாவின் கடைசி திரைப்படம் ‘நதியைத் தேடிவந்த கடல்’ (1980); அந்தத் தலைப்பு அவரது வாழ்வின் குறியீடு. கடல் போன்ற அரசியல் அவரது வாழ்க்கை நதியை வாவா என்றழைக்கப் போகிறது என்ற ஆருடத்தை உள்ளடக்கிய தலைப்பு அது.

ஜெயலலிதா அரிதாரம் பூசுவதைவிட்டு அரசியல் அவதாரம் எடுத்தார். கொடுக்கப்பட்ட பாத்திரத்தைக் கனகச்சிதமாக நடித்துக் காட்டும் திறமை அரசியலுக்குச் சரியாகவே கைகொடுத்தது.

சம்பவங்களும், சூழல்களும்தான் ஒருவரை எதிர்பாராத இடங்களில் நிறுத்திவைக்கின்றன. அப்படித்தான் 1980-களில் தன் தலைவர் எம்ஜிஆரின் ஆதரவிலும் வழிகாட்டுதலிலும், ஜெயலலிதா அரிதாரம் பூசுவதைவிட்டு அரசியல் அவதாரம் எடுத்தார். கொடுக்கப்பட்ட பாத்திரத்தைக் கனகச்சிதமாக நடித்துக் காட்டும் திறமை அரசியலுக்குச் சரியாகவே கைகொடுத்தது.

அஇஅதிமுக நிறுவனத்தலைவர் எம்ஜிஆர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி காலமானதும், கட்சியில் பிளவு ஏற்பட்டது. அதுதான் ஜெயலலிதா முதன்முதலில் அரசியலில் சந்தித்த முதல் அக்கினிப்பிரவேசம். குருவின் உதவியின்றி களம் குதித்த பரிசோதனைக்காலம். நிகழ்ந்த சம்பவங்கள் அவருக்கு அரசியல் லாபம் கொடுக்க ஆரம்பித்தன. மாற்று அணியின் தலைவியும் எம்ஜிஆரின் மனைவியுமான வி.என். ஜானகி கொஞ்சநாள் முதல்வர் சிம்மாசனத்தில் அமர்ந்துவிட்டு ஒதுங்கிக்கொண்டார்; கட்சி ஒன்றுபட்டது, ஜெயலலிதாவின் தலைமையில்.

அரசியல் என்னும் ஆணாதிக்கக் கோட்டையைப் பிடிக்கப் புறப்பட்டார் ஜெயலலிதா. எம்ஜிஆரின் இறுதி ஊர்வலத்தின்போது பட்ட அவமானம், பின்பு கருணாநிதி முதல்வராக ஆட்சிசெய்தபோது 1989-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி சட்டசபையில் தனக்கெதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை, 1990 பிப்ரவரியில் தான் சிக்கிக்கொண்ட சாலை விபத்து.. இப்படி பல அக்கினிப் பிரவேசங்களைச் சந்தித்த ஜெயலலிதாவின் அரசியல்மனம் இறுகி இறுதியில் இரும்பானது.

“அவர்கள் என்னை இலக்காக்கினர். என் தலைமேல் அடிகள் விழுந்தன. கையில் அகப்பட்டதை எல்லாம் என்மேல் எறிந்தனர். எனக்கு மயக்கம் வந்தது. கிட்டத்தட்ட மயங்கிவிழுந்தேன். என் கட்சி எம்எல்ஏக்கள் என்னைப் பாதுகாப்பாக வெளியே கொண்டுபோனபோது, ஒரு மந்திரி என் சேலையைப் பற்றி இழுத்தார். என் தோளிலிருந்த சின்ன பாதுகாப்பு ஊசி உரசி எனக்கு இரத்தக் காயம் ஏற்பட்டது. என் சேலை கிழிந்தது.” (தி இந்து).

இப்படிப் பேசினார் ஜெயலலிதா. இந்த வாக்குமூலம் யார் மனங்களைக் கரைக்கும்; எப்படி அனுதாபத்தை உருவாக்கும் என்று ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இப்போது அவர் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி.  அக்கினிப்பிரவேசம் என்பது அனுதாபத்தைச் சம்பாதிக்க உதவும் என்பது ஏற்கனவே திராவிட இயக்கம் அவருக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. 1967இ-ல் குண்டடிப்பட்ட எம்ஜிஆர் கழுத்தில் கட்டுக்களோடு மருத்துவமனையில் இருப்பது போன்ற படங்களும், 1984இ-ல் அமெரிக்காவில் ப்ரூக்ளின் மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்ட பரிதாபமான படங்களும் தேர்தல் அரசியல் லாபங்களை அறுவடை செய்வதற்கு உதவின என்ற நிகழ்கால வரலாறு ஜெயலலிதாவுக்குச் சாணக்கியத்தனத்தைக் கற்றுக்கொடுத்திருந்தது.

திராவிட இயக்கத்தில் ஜெயலலிதா தவிர்க்க முடியாத ஒரு தலைவியாக உருவானது மிகவும் விநோதமானது; ஆச்சரியமானதும்கூட. பிராமணர்களுக்கு எதிரான ஒரு கருத்தாக்கத்தில் பிறந்து வளர்ந்த இயக்கம் அது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று தமிழிலும், சௌத் இந்தியன் லிபரல் ஃபெடரேஷன் என்று ஆங்கிலத்திலும் 1917-இல் அது உருவானது. பிராமணர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மாநாடுகளின் விளைச்சல் அது. பின்னாடி எழுந்த நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம், திமுக, அஇஅதிமுக, மதிமுக, தேமுதிக என்ற எல்லாத் திராவிட கட்சிகளுக்கும் அதுதான் தாய் இயக்கம். நடேசன் முதலியார், சர் பிட்டி தியாகராஜன், பி.டி ராஜன் (இன்றைய நிதியமைச்சரின் தாத்தா), டி.எம். நாயர், பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர்..என்று திராவிட சித்தாந்தம் ஈன்றெடுத்த தலைவர்கள் பட்டியல் முடிவில்லாதது. அந்த வரிசையில் உள்ளோர்களின் வரலாற்றை எழுதும்போது சாதியைக் காரணம்காட்டி ஜெயலலிதாவை நிச்சயமாய் விட்டுவிட முடியாது.

தனது சாதியைப் பற்றிய பிரக்ஞையைப் பிரதானமாகக் காட்டாமல் இருந்தது அவரின் பலம். திராவிட சித்தாந்தத்தை நன்றாகப் புரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாகத்  தன்னைத் தகவமைத்துக் கொண்டது அவரின் மற்றொரு பலம்.

தனது சாதியைப் பற்றிய பிரக்ஞையைப் பிரதானமாகக் காட்டாமல் இருந்தது அவரின் பலம். தன்னை மக்களுக்காக ஒப்படைத்த அவரது வாசகம் “மக்களால் நான்; மக்களுக்காக நான்’ கோடிக்கணக்கான வாக்காளர்களைச் சென்றடைந்தது; திராவிட சித்தாந்தத்தை நன்றாகப் புரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாகத்  தன்னைத் தகவமைத்துக் கொண்டது அவரின் மற்றொரு பலம். காலங்காலமாக திராவிட இயக்கம் தூக்கிப்பிடித்த இடஒதுக்கீடு சித்தாந்தத்தில் ஜெயலலிதா சமரசம் செய்துகொள்ளவில்லை. அதனாலேயே பிராமணீயத்தை எதிர்த்த திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி அவருக்குச் ’சமூகநீதி வீராங்கனை’  பட்டத்தை வழங்கினார். காஞ்சி சங்கராச்சாரியார் மீதான  கொலைவழக்கில் தேவையில்லாமல் சாதீய கோணத்தை ஜெயலலிதா அவர் கொண்டுவரவில்லை. இப்படி படிப்படியாக அரசியல் முதிர்ச்சி பெற்ற ஜெயலலிதா ஒரு கால் நூற்றாண்டு காலம் தமிழகக் கோட்டையில் கோலோச்சி தவிர்க்க முடியாத ஓர் அதிகார சக்தியாக விளங்கினார்.

ஜே. ராம்கி எழுதிய அம்மு முதல் அம்மா வரை என்ற புத்தகமும், வாஸந்தி எழுதிய ஜெயலலிதா: மனமும் மாயையும் என்ற புத்தகமும், “தலைவி” என்ற திரைப்படமும் அவரைப் பற்றி அறிந்துகொள்ள உதவக்கூடியவை.

ஆங்கிலத்தில் ‘ஸ்ஃபிங்ஸ்” என்பது பெண்முகமும், சிங்க உடலும் கொண்ட ஒரு கற்பனை வடிவத்தைக் குறிக்கும்சொல். மர்மத்தையும், ரகசியப் புதிரையும் உள்ளர்த்தங்களாகக் கொண்டிருக்கும் சொல் அது. எகிப்தில் கெய்ரோ அருகிலிருகும் பாலைவனத்தில் ‘ஸ்ஃபிங்ஸ்” சிலைகள் உண்டு. திகிலையும் குழப்பத்தையும் உண்டாக்கக்கூடியவை.

ஜெயலலிதா ஒரு ’ஸ்பிங்ஸ்’ போல வாழ்ந்தார்; மரணித்தபோதும் கூட!

Share the Article

Read in : English

Exit mobile version