Read in : English
அழைப்பிதழ் என்று எதுவும் இல்லை. ஆட்டோவில் பிரசாரம் கிடையாது. நவீன தொடர்பு சாதனமான வாடப்ஸ் ஆப் நினைவூட்டல் எதுவும் இல்லை. கூலிக்கு பணம் கொடுத்து ஆட்களை சேர்க்கும் முயற்சி இல்லை. குடிக்க, ‘குவாட்டர் மது’ கொடுத்து குட்டியானையில் ஏற்றி செல்லும் அவலத்தை காண முடியவில்லை. இவை எதுவும் இன்றி, குறிப்பிட்ட நாளில், உரிய நேரத்தில் முன் நிபந்தனையின்றி கூடிவிடுகின்றனர் பழங்குடியின மக்கள். நூற்றுக் கணக்கில் அல்ல… ஆயிரக் கணக்கில் குடும்பம் குடும்பமாக குவிந்து, பாரம்பரியத்தை நினைவு கூர்ந்து பிரிகின்றனர்.
மாமல்லபுரம் கடற்கரையில் ஆண்டு தோறும் இந்த அற்புதம் நிகழ்கிறது. தமிழகத்தின் தொல் பழங்குடியினமான இருளர் பழங்குடி மக்கள், மாசி பௌர்ணமி யை தங்கள் கலாசார மீட்பு நாளாக கடைபிடித்து வருகின்றனர். காலங்காலமாக இது நிகழ்ந்து வருகிறது.
இந்த ஆண்டு நிகழ்வு, பிப்ரவரி 16ஆம் தேதி வழக்கமான உற்சாகத்துடன் மாமல்லபுரம் கடற்கரையில் நடந்தது. ஆயிரக்கணக்கில் இருளர் இனமக்கள் குடும்பத்துடன் கூடி மகிழ்ந்திருந்த காட்சி, தமிழ் சமூகத்துக்கு பெரும் செய்தி. அன்று மாசி மகம். முழு நிலவு நாள். கடற்கரையில் பிற்பகல் முதலே கூடத் துவங்கினர் இருளர் இன மக்கள். இருப்பதில் நல்லதை உடுத்தி, குல தெய்வமாக கருதும் மண்ணால் செய்த இசைக்கருவியுடன், குடும்பம் குடும்பமாக கடற்கரை பகுதிக்கு வந்தனர்.
பயணக் களைப்பு நீங்க சமையலுக்காக குறைந்த பட்ச உணவு பொருட்களையும் எடுத்து வந்திருந்தனர். மிகவும் முக்கியமாக, தங்கள் உயிர் என போற்றும் இசைக்கருவியை மிகவும் கவனத்துடன் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
கடற்கரையில் தற்காலிகமாக டெண்ட்களை அந்தந்த குடும்பத்தினரே அமைத்திருந்தனர். அவற்றுக்கு பூட்டும் இல்லை சாவியும் இல்லை. எந்த செலவும் இன்றி, அங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டே நேர்த்தியாக அவை உருவாக்கப்பட்டிருந்தன. கொண்டு வந்திருந்த பொருட்களை குறிப்பாக இசைக் கருவியை அதற்குள் வைத்து இளைப்பாறினர். பின், மாமல்லபுரம் சுற்றுப்புறத்தில் விறகு, சுள்ளிகள் சேகரித்து தற்காலிக குடியிருப்புக்கு கொண்டு வந்தனர்.
தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, வேலுார், ஆந்திரா பகுதிகளில் வசிக்கும் இருளர் இன மக்கள், மாசி மாத பௌர்ணமியை ஒட்டி, மாமல்லபுரம் கடற்கரையில் கூடி இந்த நிகழ்வை அரங்கேற்றுகின்றனர்.
மாலைச் சூரியன் இறங்கியது. குடியிருப்பின் நடுவில், விறகு சுள்ளிகளைக் குவித்து, தீப்பொறி ஏற்றினர். வழிபாட்டுக்கு வழிகாட்டும் வகையில் ஒளி பாய்ச்ச துவங்கியது அந்த நெருப்பு. குடும்பமாக அதை சுற்றி அமர்ந்தனர். தீ தணல் ஒளியும், கதகதப்பும் அவர்களை புதிய உலகுக்கு இழுத்தது. கடற்கரையில் வீசிய இதமான காற்று களிப்பூட்டியது. அதன் வழியாக பிறந்தது இனிய பாடல்கள். அந்த நாதத்துக்கு இணையில்லை. விதம் விதமான குரல்களில் தேனொழுகியது பாடல்கள். அந்த குரல் இனிமை ஆடலாக வியாப்பித்தது. இசை… இசை… எங்கும் கேட்க முடியாத இசை வடிவங்கள் கடற்கரையில் படர்ந்து நிறைந்தது. நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஒலித்தது அந்த பழங்குடியினர் இசை. பழங்குடி மக்கள், இயற்கையை வழிபடுகின்றனர். பாடலுடன் இசைக்க பாரம்பரிய இசைக்கருவியை பயன்படுத்துகின்றனர். அதை கடவுளாக மதிக்கின்றனர். அது இயல்பான வழிபாடாக, மகிழ்ச்சியாக, கடந்து வந்த பாதையை காட்டும் வரலாற்று சுவடாக எங்கும் வியாப்பிக்கிறது. இனிமையும், சோகமும், நம்பிக்கையும் அதில் இழைந்தோடுகிறது.
நடனமும் சேர்ந்து கொள்கிறது. நெருப்பை சுற்றியாடும் நடனம், பாடல் வழியாக பாரம்பரிய கலாசாரத்தை புதுப்பிக்கிறது. ஆட்டத்தால் அகம் மகிந்த முதிய கால்களுக்கு ஓய்வு கொடுத்து, ஆண்டு தோறும் புதிய இளம் கால்கள் அந்த நுட்பத்தைப் பற்றிக் கொள்கின்றன. ஆண், பெண், மூன்றாம் பாலினம் என்ற பேதம் எதுவும் இல்லை.
வியப்புக்குரிய இந்தப் பாரம்பரிய நடனம் இரவு முழுதும் அரங்கேறுகிறது. சலிப்பு தட்டாத வகையில் பொங்கி பெருகி வழிகிறது. இந்தச் சூழலுடன் மாமல்லபுரம் கடல் ஜொலிக்கிறது.
இப்படித்தான் பாரம்பரியத்தை ஆண்டாண்டாக மீட்கின்றனர் இருளர் பழங்குடியின மக்கள். தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, வேலுார், ஆந்திரா பகுதிகளில் வசிக்கும் இருளர் இன மக்கள், மாசி மாத பௌர்ணமியை ஒட்டி, மாமல்லபுரம் கடற்கரையில் கூடி இந்த நிகழ்வை அரங்கேற்றுகின்றனர். இந்த வழக்கம் துவங்கிய கால எல்லையை யாரும் இன்னும் கண்டறியவில்லை. வரலாற்றில் இதற்கு பதிவு உள்ளதா எனவும் தேடி கண்டறியவில்லை.
இருளர் மக்களின் ஆடல் பாடல்களால் நிறைந்திருக்கிறது மாசி பௌர்ணமி இரவு. மறுநாள் அதிகாலை, நிலைமை வேறுவிதமாக மாறுகிறது. ஆடல் பாடல்களை முடித்து, அலைவாய் கரையில் குவிகின்றனர் மக்கள். தங்கள் முன்னோராக கருதும் கன்னியம்மாவை நினைத்து வழிபாடு செய்கின்றனர். அது மிகவும் வித்தியாசமாக நடக்கிறது.
கடல் அலை மோதும் வெளியில், மணல் குவித்து ஏழு தடைகள் அமைக்கின்றனர். அவற்றில் பூ பழம் படைத்து, தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அடர்ந்த காட்டில் வேட்டையாடுவது போன்ற பாவனையுடன் ஒருவித ஓசையை எழுப்புகின்றனர். ஒவ்வொரு குடும்பத்தின் பிரதிநிதியும் உறுப்பினர்கள் புடை சூழ இந்த நிகழ்வு நடத்துகின்றனர். மிகுந்த மன ஒருமைப்பாட்டுடன் செய்யப்படுகிறது. அழகியலுடன் நுட்பமாக நிறைவேற்றப்படுகிறது.
இந்த நிகழ்வு தொடர்பாக, பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. அவை புராணத்தில் பேசப்படுவது போன்ற பாவனையுடன் இருக்கிறது. ஆனால், புராண நாயகர்கள் யாரும் அந்த கதைகளுக்குள் இல்லை. அதை வழிபாடாக உருவாக்கவுமில்லை. அங்கு நிரந்தர வழிபடுதலுக்கு அமைப்பு, பீடம் எதுவும் இல்லை. வாழ்மொழியாக, மன அமைதியாக கன்னியம்மா என்ற கனவு மட்டுமே அவர்கள் நம்பிக்கையாக உள்ளது. அது உருக்கம் நிறைந்தது. அந்த உருக்கமே, அடுத்த மாசி பௌர்ணமி வரை அந்த குடும்பத்தை காப்பதாக நம்புகின்றனர்.
கன்னி வழிபாடு, தமிழகத்தில் பல இனக்குழுக்களிடம் இன்றும் உள்ளது. கன்னி என்பது முதன்மையைக் குறிக்கும் சொல். விவசாயத்தில் முதல் அறுவடையை கன்னி என்று குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது. இது இன்று வழக்கொழிந்து வருகிறது. குடும்பத்தில் முதலில் பிறக்கும் குழந்தையை கன்னி என்று அழைப்பர். இப்படி, உற்பத்தி சார்ந்த எல்லா தொடர்புகளிலும் கன்னி என்ற நம்பிக்கைக்கு முக்கியத்துவம் உண்டு. அது போல்தான், இருளர் இன மக்களும் கன்னியை முதன்மையாக்கி வழிபடுகின்றனர். அதை நோக்கி கவிதைகள் புனைகின்றனர். அது காதலாக, கருணையாக, அன்பாக, நம்பிக்கையாக, விளசை்சலாக, வேட்டையாக கருத்தமைகிறது. அந்த கருத்தமைவை இசையுடன் பாடுகின்றனர். அந்தக் கருத்தை பாரம்பரியமாக குடும்ப உறுப்பினர்களுக்கு கடத்துகின்றனர். பாடலாக, நிகழ்காலத்தில் பேசும் பழங்கதையாக, வழிபாடாக நகர்த்துகின்றனர்.
இந்த நிகழ்வுகள் முடிந்ததும், இருளர் இன குடும்பங்களில் திருமணங்கள், கடற்கரையிலே நிச்சயிக்கப்படுகின்றன. எந்த செலவுமின்றி எளியமுறையில் அவை நடத்தி வைக்கப்படுகின்றன. குடும்பப் பெரியவர்களே முன்னின்று நடத்துகின்றனர்.
பிறந்த குழந்தைகளுக்கு, முதல் மொட்டை போடும் நிகழ்வும் நடக்கிறது. காலங்களைக் கடந்தும் இருளர் இன குடும்பங்களின் ரத்தத்தில் இந்த பாரம்பரியம் பிணைந்துள்ளது. உரிய காலத்தையும் வழிகாட்டலையும் அவர்களுக்கு அதுதான் அறிவிக்கிறது.
உணவு, இருப்பிடம், வாழும் உரிமை, கல்வி என எல்லாம் முற்றாக மறுக்கப்படும் நிலையிலும், ஆடம்பரமற்ற அவர்கள் வாழ்வு அந்த பாரம்பரியத்தை கனிவுடன் தடயங்களாக பதிவு செய்து கொண்டே இருக்கிறது.
நாகரிக சமூகம், வளர்ச்சியில், இருளர் பழங்குடியின மக்களுக்கு உரிய உரிமையையோ, தக்க இடத்தையோ கொடுக்க மறுத்தே வருகிறது. உணவு, இருப்பிடம், வாழும் உரிமை, கல்வி என எல்லாம் முற்றாக மறுக்கப்படும் நிலையிலும், ஆடம்பரமற்ற அவர்கள் வாழ்வு அந்த பாரம்பரியத்தை கனிவுடன் தடயங்களாக பதிவு செய்து கொண்டே இருக்கிறது.
இருளர் இன மக்கள் ஆண்டுதோறும் மாமல்லபுரம் கடற்கரையில் கூடுவது, தென்னிந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்வின் பின்னணியில் பெரும் வரலாற்று தடயங்கள் இருக்கலாம். அது, உரிமைப் போராட்டத்தின் ஒரு பகுதியாகக்கூட இருக்கலாம். மானுடவியலாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் இதன் உட்பொருளைக் காண முயல வேண்டும். அதன் மூலம் வரலாற்றிலும், நவீன உலகிலும் இருளர் இன மக்களுக்கு உரிய இடத்தை வழங்க முயல வேண்டும்.
Read in : English