Read in : English
இந்திய மருத்துவக் கல்வியும் மருத்துவப் பயிற்சியும் ஆதிகாலத்திலே தொடங்கிவிட்டன. ஆதிக்க இனங்களைச் சார்ந்த வைத்தியர்களும் மற்ற இனங்களைச் சார்ந்த பழங்குடி மருத்துவர்களும் நோய்களுக்கு வைத்தியம் பார்த்தார்கள். நவீன மருத்துவத் தொழில் பிரிட்டிஷ் இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டில் உருவெடுத்தது. அடிப்படையில் போரில் காயம்பட்ட வீர்ரகளுக்கு வைத்தியம் பார்க்க உதவி செய்வதற்காக, உடல்நல ஆரோக்கிய ஊழியர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சியளிக்கப்பட்டது. அந்தக் காலம் முதல் இன்றைய ‘நீட்’காலம் வரை, மருத்துவக் கல்வியில் பெரிதாக முன்னேற்றமில்லை. இவ்வளவுக்கும் நிறைய மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
முறைசார்ந்த மருத்துவக்கல்வி ஒரு நூற்றாண்டுக்கு முன்புதான் ஆரம்பமானது. சுதந்திரம் அடைந்தபின்னர், பொறியல், சட்டம், கணக்கியல், கலை மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் நிகழ்ந்த முன்னேற்றம் மருத்துவக்கல்வித் துறையில் ஏற்படவில்லை. மேலே சொன்ன துறைகள் தொழில், மக்கள் சேவைப் பிரிவுகளுக்கு ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்களை ஆண்டுதோறும் உருவாக்கி அனுப்புகின்றன. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தொழில்நுட்பம் முன்னேறியதும் தொழில் வல்லுநர்களுக்கான தேவை உலகமெங்கும் அதிகரித்தது.
ஒன்றிய அரசு கல்வி அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாட்டில் இருக்கும் மொத்தம் 59 பல்கலைக் கழகங்களில் (6 சதவீதம்), நான்கு மருத்துவப் பல்கலைக்கழகங்கள். இந்தியாவின் மொத்த கல்லூரிகளில் ஆறு சதவீதத்தைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் 2,610 கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றில் 79 சதவீதம் கலை, விஞ்ஞானம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், ஆசிரியர் பயிற்சி, செவிலியர் படிப்பு ஆகியவற்றுக்கான கல்லூரிகள். மொத்தம் 2,251 கல்லூரிகள் (86 சதவீதம்) தனியார் துறையிலும், வெறும் 375 (14 சதவீதம்) அரசு வசமும் இருக்கின்றன. இந்த மாநிலத்தில் 455 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்குகின்றன; நாட்டின் மொத்த கல்லூரிகளில் இது 17 சதவீதம். இதுபோக இரண்டு சட்டப் பல்கலைக்கழகங்களும், 44 கல்லூரிகளும் இருக்கின்றன (6 சதவீதம்).
வேண்டியவர்களுக்குச் சலுகை செய்யும் மனப்பான்மையும், அரசியல்வாதிகளின் சுயஆதாயப் புத்தியும், தொழில் குழுமங்களின் பேராசையும் லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவர் கனவை நிராசையாக்கின.
ஆனால் கடந்த ஏழு தசாப்தங்களில் மற்ற துறைகள் வளர்ந்ததைப் போல, மருத்துவக்கல்வி, நிறுவனங்களின் நிர்வாகம், மற்றும் ஒழுங்குபடுத்தும் அமைப்புகள் ஆகியவை வளரவில்லை. இந்தியாவின் மருந்தியல் துறை அமைப்பில் உள்ள சவால்களை மீறி ஆராய்ச்சியிலும், வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டிப்பிடித்திருக்கிறது. ஆனால் மருத்துவக்கல்வியைப் பற்றி அப்படிச் சொல்லமுடியாது. அது மெல்ல மெல்ல ஆனால் பலமாக, செல்வாக்குமிக்க சிலரின் கைப்பிடிக்குள் முழுவதுமாகச் சென்றுவிட்டது. வேண்டியவர்களுக்குச் சலுகை செய்யும் அவர்களின் மனப்பான்மையும், அரசியல்வாதிகளின் சுயஆதாயப் புத்தியும், தொழில் குழுமங்களின் பேராசையும் லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவர் கனவை நிராசையாக்கின.
கடந்த பத்தாண்டில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள், கிராமப்புறங்களிலிருந்தும், பொருளாதாரம் மற்றும் சாதியில் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளிலிருந்தும் வந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கு நம்பிக்கையைத் தந்தது. ஆகப்பெரிய சீர்திருத்தம் என்பது 2019-இல் உருவாக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணையம்தான். அதுசம்பந்தமான மசோதாவைக் கொண்டுவந்த ஒன்றிய அரசு சுகாதார அமைச்சர், “இந்திய மருத்துவக் கவுன்சிலில் ஊழல் மலிந்துவிட்டது” என்றார். ஊழல் நிறைந்த, திறமையற்ற, ரகசியத்தன்மை கொண்ட இந்திய மருத்துவக் கவுன்சிலை முற்றிலும் சீர்படுத்தி மாற்றியமைக்க வேண்டிய தேவை இருந்தது. ஊழல் சீர்கேடுகளின் காரணமாக அதன் தலைவராக இருந்த டாக்டர் கேட்டன் தேசாயை நீக்கச்சொல்லி டில்லி உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. “இந்திய மருத்துவக் கவுன்சில் ஓர் ஊழல் பாசறை என்பது நிச்சயம்,” என்று சொன்னது நீதிமன்றத் தீர்ப்பு. மேலும், 2018-இல் கவுன்சில் அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவுசெய்தது.
இந்தப் பின்புலத்தில்தான், தமிழ்நாட்டில் ’நீட்’ என்றழைக்கப்படும் தேசிய நுழைவு, மற்றும் நுழைவுத்தேர்வின் மீது நிகழும் விவாதங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றிய அரசு கூட்டாட்சிக்கு எதிரானது என்று குற்றஞ்சாட்ட அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படும் ஆயுதம்தான் ’நீட்’. மருத்துவக்கல்விக்குத் தாங்கள் தகுதியானவர்களா என்பதை மதிப்பிடுவதற்கு நீட் ஒரு நியாயமான வழிமுறை அல்ல என்று மாணவர்கள் சிந்திக்கும் அளவுக்கு அவர்களை தவறாக அரசி்யல்வாதிகள் வழிநடத்துகிறார்கள். ’நீட்’ என்பதை மேட்டுக்குடிக்கானது என்று சித்தரிப்பதற்கு அவர்கள் திராவிடச் சித்தாந்தத்தின் சமூகநீதிக் கோட்பாட்டைப் பயன்படுத்துகிறார்கள். ஏனென்றால் மருத்துவக் கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் நடத்தும், சுய ஆதாய அரசியல் கட்சிகளோடு தாங்கள் வைத்திருக்கும் ரகசிய உறவை மறைத்துக்கொள்ள அந்த அரசியல்வாதிகள் விழைகிறார்கள்.
மருத்துவக் கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் நடத்தும், சுய ஆதாய அரசியல் கட்சிகளோடு தாங்கள் வைத்திருக்கும் ரகசிய உறவை மறைத்துக்கொள்ள அந்த அரசியல்வாதிகள் விழைகிறார்கள்.
தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுங்கட்சியான திமுக, 2019-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ‘நீட்’ ஒழிக்கப்படும் என்று வாக்குறுதி தந்தது. வாக்குறுதியைக் காப்பாற்ற முடியுமால் போனால் அதற்குக் காரணமாக ’நீட்’டுக்குச் சாதகமான உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டித் தப்பித்துவிடலாம் என்று அந்தக் கட்சிக்கு நன்றாகவே தெரியும். அரசு, தனியார், சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கு மருத்துவக்கல்வியில் ஒரு சமதளத்தை ’நீட்’ உருவாக்கிக் கொடுக்கிறது என்று உச்சநீதிமன்றம் கருத்துச் சொன்னது.
இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகள் அதிகம் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மொத்தம் 69 கல்லூரிகள் இங்கே இருக்கின்றன. மொத்த இடங்கள் 10,375. இவற்றில் அரசுக்கல்லூரிகள் 37 (54 சதவீதம்); இடங்கள் 5,125 (49 சதவீதம்); தனியார்க் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் 32 (46 சதவீதம்); இடங்கள் 5,250 (51 சதவீதம்). மேலும் மொத்தம் 1,450 இடங்கள் கொண்ட 11 புதிய கல்லூரிகள் அரசுத் துறையில் உருவாகியுள்ளன. இப்படி தமிழ்நாட்டில் அரசுத்துறை மருத்துவக் கல்வி இடங்கள் மொத்தம் 6,575 இருக்கின்றன; அதாவது, 2021 நிலவரப்படி, இந்தியாவில் இருக்கும் மொத்த மருத்துவக்கல்வி இடங்களில் இது 12 சதவீதம்.
தமிழ்நாடு சட்டசபை நிறைவேற்றிய நீட் மசோதா-2021-யை மறுஆய்வுக்காக சட்டப்பேரவைத் தலைவருக்குத் திருப்பி அனுப்பினார் ஆளுநர். அவர் சரியாகத்தான் செய்திருக்கிறார். மக்கள் நலன்களுக்கான சட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்வதில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட தலைவருக்கு உரிமையுண்டு. அரசின் மசோதா, “மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புறத்து ஏழை மாணவர்களுக்கு எதிரானது,” என்று ஆளுநர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் 2007-2016-இல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து மொத்தம் 388 மாணவர்கள் மருத்துவக் கல்வி இடங்களை பெற்றனர். 2018-19-இல் அந்த எண்ணிக்கை வெறும் ஏழுதான்; 2020-21-ல் அது 334. தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுத 2019-ல் 1.4 லட்சம் மாணவர்கள் பதிவுசெய்தனர்; 2020-ல் 1,21,617 மாணவர்கள் பதிவு செய்தனர்; அந்த எண்ணிக்கை 2022-ல் 1,12,889 ஆக குறைந்தது. நடப்புக் கல்வியாண்டு 2021-22-இல் மொத்தம் 535 இடங்கள் (435 பொது மருத்துவம், 100 பல் மருத்துவம்) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
நீட் தேர்வுக்காக 2020-இல் தமிழ்நாட்டில் பதிவு செய்த 1,21,617 மாணவர்களில் 99,610 பேர் தேர்வு எழுதினர்; 57,215 மாணவர்கள் (57.43 சதவீதம்) வெற்றி பெற்றனர். 2018-லும், 2019-லும் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் சதவீதங்கள் முறையே 39.56 மற்றும் 48.57. மேலும், 2019-இல் முதுகலைப் படிப்புக்காக நடந்த நீட் தேர்வை எழுதிய 17,067 தமிழ்நாட்டு மாணவர்களில் 11,121 பேர் வெற்றிபெற்றனர். நாட்டிலே இதுதான் அதிக எண்ணிக்கை.
இந்திய மருத்துவக் கழகத்தில் நிகழ்ந்த அமைப்பியல் சீர்திருத்தங்களாலும், மற்றும் இப்போதைய நீட் தேர்வாலும், கிராமத்து மாணவர்களும், பிற்படுத்தப்பட்டசாதி மாணவர்களும் தங்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றிக் கொள்ள முடியும். நீட் தேர்வில் வெற்றிபெற்ற எல்லா மாணவர்களுக்கும் சீட் கிடைப்பதில்லை என்றாலும், இந்தத் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு என்பது சிறந்த சீர்திருத்தக்களுக்கான முதல்படி என்பதில் சந்தேகமில்லை.
(ஆசிரியர் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் பொதுக் கொள்கை நிபுணர்)
Read in : English