Site icon இன்மதி

இன்றைக்கும் மிகவும் பின்தங்கியுள்ள ஆதிவாசி மக்களின் வாழ்வு எப்போது மலரும்?

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்யும் பழங்குடியினர்.

Read in : English

குரலற்ற ஆதிவாசி மக்களின் வளர்ச்சியில் முனைப்புடன் செயலாற்றுபவர் டாக்டர் கே. கிருஷ்ணன். ஆதிவாசி மக்கள் உரிமைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பவுண்டேஷன் பார் சஸ்டைனபிள் டெவலப்மென்ட் (Foundation for Sustainable Development (FSD) என்ற அமைப்பின் முதன்மை செயல் இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார். தேசிய ஆதிவாசி சாலிடாரிடி கவுன்சில் அமைப்பின் கன்வீனர் பொறுப்பிலும் உள்ளார். பல பகுதிகளில் கொத்தடிமைகளாக இருந்த, 13,000 ஆதிவாசிகளை களத்தில் நின்று மீட்டு மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்திவருகிறார். பழங்குடியின மக்கள் வாழ்வதாரத்தை மேம்படுத்தும் வகையில், முன்னுதாரணத் திட்டங்கள் பலவற்றை சோதனை முறையில் அமல்படுத்தி வெற்றி கண்டுள்ளார். பழங்குடியின மக்களின் இன்றைய நிலை பற்றி, ‘இன்மதி’ இணைய இதழுடன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவருடன் நடத்திய உரையாடல்:

கேள்வி: பின்தங்கியுள்ள ஆதிவாசிமக்கள் மேம்பாட்டுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறீர்களே?

டாக்டர் கே கிருஷ்ணன்: புறக்கணிக்கப்பட்டு சமூகத்தின் விளிம்பு நிலையில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்களுடன், 32 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். தமிழகத்தில் மட்டுமின்றி, தென்னிந்திய அளவில், ஆறு மாநிலங்களில் ஆதிவாசி மக்கள் வளர்ச்சிக்கான திட்டமிடுதல் மற்றும் உரிமை சார்ந்து இயங்கி வருகிறேன். நீண்ட பெரும் போராட்டமாக இதை நிகழ்த்தி வருகிறேன்.

 

ஆதிவாசி மக்கள் உரிமைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பவுண்டேஷன் பார் சஸ்டைனபிள் டெவலப்மென்ட் என்ற அமைப்பின் முதன்மை செயல் இயக்குநர் மற்றும் தேசிய ஆதிவாசி சாலிடாரிடி கவுன்சில் அமைப்பின் கன்வீனர் டாக்டர் கே. கிருஷ்ணன்.

கேள்வி: தென்னிந்திய அளவில் எத்தனை ஆதிவாசி இனங்கள் உள்ளன?

கிருஷ்ணன்: இங்கு ஆறு மாநிலங்களில், 163 இன அடையாளங்கள் கொண்ட ஆதிவாசி மக்கள் குழுக்கள் உள்ளன. இதில், 25 குழுக்கள் தொல் பழங்குடி இனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழகத்தில், இருளர், தோடர், குறும்பர், கோத்தர், காட்டு நாயக்கர், பணியர் என ஆறு இனங்கள் தொல் பழங்குடி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை அழிவுக்கு உள்ளாகி வரும் இனக்குழுக்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.


கேள்வி: இந்தியாவில் சுதந்திரத்துக்கு பின், பல திட்டங்கள், ஆதிவாசி மக்களை மையமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றால் அவர்கள் வாழ்நிலையில் எந்த வகை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கருதுகிறீர்கள்? சமூக, பொருளாதார ரீதியாக பழங்குடியினர் அடைந்துள்ள மேம்பாடு குறித்த கணிப்பு என்ன?

கிருஷ்ணன்: பொதுவாக, வளர்ச்சி சார்ந்த திட்டமிடுதலில் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லா பழங்குடியின மக்களும் காடு சார்ந்து இயற்கையுடன் வாழ்பவர்கள். அது சார்ந்தே அன்றாட நடவடிக்கைகளை அமைத்துள்ளனர். அது தான் அவர்களின் வாழ்வாக உள்ளது. உலகில் இன்று முதன்மைப்படுத்திப் பேசப்படும், நிலைத்த நீடித்த வளர்ச்சி என்ற கருத்தாக்கமே பழங்குடியினரின் வாழ்க்கை சூழல் சார்ந்து அமைந்ததுதான். இதுபோன்ற வாழ்க்கை முறையை, பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர் ஆதிவாசி மக்கள். இடையில், இந்தியா விடுதலை பெற்றபோது குளறுபடி துவங்கியது. ஆதாவது, சுதந்திர இந்தியாவில் மேம்பாட்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, ஆதிவாசி மக்களிடம் அது குறித்து எந்த கருத்தும் கேட்கப்படவில்லை.

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தங்களுக்கு தோன்றியபடி, ஆதிவாசி வளர்ச்சி என்ற பெயரில் திட்டங்களை தீட்டினர்; இப்போதும் அதே போன்றுதான் தீட்டி வருகின்றனர். அந்த திட்டங்கள் மக்களை உள்ளடக்கியதாக இல்லை. மற்றொரு பிரிவினர், ஆதிவாசி மக்கள் காட்டிலோ, காட்டை ஒட்டியோ அதே நிலையில் வாழட்டும் என்று சத்தம் போட்டு வருகின்றனர். இந்த இரண்டு வகை செயல்பாடுகளும் ஆதிவாசி மக்களை மேம்படுத்துவதாக இல்லை. வாழ்க்கையை மேம்படுத்தும் கருவிகளாக தீட்டப்பட்டுள்ள திட்டங்கள் எதுவும் அமையவில்லை. உதாரணத்துக்கு, தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம். அங்கு, 1990களில், கிட்டத்தட்ட, 90 சதவீதம் பேர் ஆதிவாசி மக்கள். நிலமும் அவர்கள் கையில்தான் இருந்தது. இன்று, நிலைமை தலைகீழாக உள்ளது. இன்று, 20 சதவீதத்துக்கும் குறைவானவர்களே அங்கு ஆதிவாசிகள். மாவட்டத்தில் பெரும்பான்மை என்ற நிலையில் இருந்த பழங்குடியின மக்களின் வாழ்வுக்கான ஆதாரங்கள், இன்று அவர்களிடம் இல்லை. அவை எங்கு போனது, யாரிடம் உள்ளது என்ற கேள்வி எழுகிறது. வாழ்நிலையில் அவர்கள் மேலும் பின்தங்கியே வருகின்றனர். இது போல்தான் தமிழகம் முழுதும் நிலை உள்ளது.

காடு சார்ந்து பழங்குடியினர் வாழ்க்கை அமைந்திருந்தது. இன்று காடுகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. இது அவர்களின் வாழ்வுக்கான ஆதாரத்தை முற்றாக இழக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி: நில உரிமை சார்ந்து பேசுகிறீர்களா?

கிருஷ்ணன்: நில உரிமை மட்டும் இன்றி வாழ்வதற்கான ஆதார உரிமை பற்றியும் குறிப்பிடுகிறேன். காடு சார்ந்து பழங்குடியினர் வாழ்க்கை அமைந்திருந்தது. இன்று காடுகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. இது அவர்களின் வாழ்வுக்கான ஆதாரத்தை முற்றாக இழக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. வாழிடம் சார்ந்த திட்டமிடுதல், முடிவு எடுக்கும் உரிமை எல்லாம் பறிபோய்விட்டது.

புலிகள் சரணாலயம் சார்ந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. சரணாலயப் பகுதிகளில் வசிப்போரை வெளியேற்ற, பெரும் தொகையை செலவிடுவதாக அரசு கூறுகிறது. வெளியேற்ற ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியாக நிதியை செலவிட தயாராக இருப்பதாக கூறும் அரசு, ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சியில் அக்கறைக் செலுத்துவதில்லை.

கேள்வி: ஆதிவாசிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை என்ன?

கிருஷ்ணன்: ஒருங்கிணைந்த ஆதிவாசி மேம்பாட்டு திட்டம் என்ற ஒன்று செயல்படுத்தப்படுகிறது. அதுபோல், ஐந்தாண்டு திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. இதில் வேடிக்கை என்ன என்றால், அதிகாரிகள் தங்களிடம் உள்ள தரவுகள் அடிப்படையில்தான் அந்த திட்டங்களை உருவாக்குகின்றனர். அவற்றை செயல்படுத்தி முடிக்கும் முன்பே, அந்த திட்டம் சரியில்லை என்கின்றனர். பின், அதே திட்டத்தை தலைகீழாக மாற்றியமைக்கின்றனர். நிர்ணயிக்கப்பட்ட காலத்தையும் மாற்றுகின்றனர். இப்படி திட்டமிடுவதும், திட்டத்தை மாற்றியமைப்பதும் மட்டும் தான் நடந்து வருகிறது. மக்களுக்கு நன்மை எதுவும் நடப்பதில்லை. எந்த மாற்றமும் ஏற்படவில்லை. திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் பெரும்பகுதி, செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்படுகிறது.

கேள்வி: திட்டங்களால் பயன் ஏற்படவில்லை என்கிறீர்களா?

கிருஷ்ணன்: திட்ட அணுகுமுறை குடைப்பாட்டால் அவை தோல்வியடைகின்றன. இதனால் திட்டத்தை செயல்படுத்துவதாக கூறும் காலங்களில், மக்களிடம் உள்ள நிலம், வனம் எல்லாம் பறிபோகின்றன. மலர்ச்சிக்கான எந்த செயலும் நடக்கவில்லை. அது பற்றி, விமர்சனப்பூர்வமாக யாரும் பேசுவதுமில்லை. கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் போது மட்டுமே, பழங்குடியின மக்கள் பிரச்சினை பற்றி பொதுவெளியில் பேசப்படுகிறது. குறிப்பாக சினிமா போன்ற கலை வடிவங்கள், மக்கள் பாதிப்பின் தீவிரத்தன்மையை வெளிப்படுத்தும்போதோ, அல்லது பெரும் பாதிப்பால் ஏற்படும் குமுறல் கசியும் போதோ மட்டுமே, பொது வெளியில் ஒரு விவாதம் ஆதிவாசிகளைப் பற்றி உருவாகிறது. அதன்பின், யாரும் கண்டுகொள்வதேயில்லை.

ஆதிவாசி மக்கள் வளர்ச்சித் திட்டங்களுக்குவிகிதாச்சார அடிப்படையில் நிதி ஒதுக்க வேண்டும் என விதி உள்ளது. குறிப்பாக மாநில அளவில், 27 துறைகள் சார்ந்து வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும். அதற்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு அமைய வேண்டும்.

கேள்வி: ஆதிவாசி மக்களுக்கான திட்டங்களில் நிதி ஒதுக்கீடு எப்படி அமைகிறது?

கிருஷ்ணன்: ஆதிவாசி மக்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு, விகிதாச்சார அடிப்படையில் நிதி ஒதுக்க வேண்டும் என விதி உள்ளது. குறிப்பாக மாநில அளவில், 27 துறைகள் சார்ந்து வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும். அதற்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு அமைய வேண்டும்.

அகில இந்திய அளவில், ஆதிவாசிகள் வளர்ச்சி திட்டங்களுக்கு பொது நிதிநிலை அறிக்கையில், 8 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும். தமிழகத்தில், 1 சதவீதம் ஒதுக்க வேண்டும். இப்படி ஒதுக்கப்படும் நிதியில், 40 சதவீதம் மட்டுமே, இவர்கள் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு வருகிறது. அதுவும் முழுமையாக இல்லை. மற்ற, 60 சதவீத நிதியும் மடைமாற்றம் செய்யப்படுகிறது. பல திட்டங்களில் நிதி முழுமையாக செலவிடப்படாமல், திருப்பி அனுப்பப்படுகிறது. இது போன்ற நடைமுறை வளர்ச்சியை எப்படி உந்தும்.

கேள்வி: தமிழகத்தில் ஆதிவாசிகளுக்கான குடியிருப்பு திட்டங்கள் எப்படி உள்ளன?

கிருஷ்ணன்: பல ஆண்டுகளாக, குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், முழுமை பெறாமல் நீண்டுகொண்டே இருக்கிறது. குளக்கரை, ஏரி புறம்போக்கு என தகுதியற்ற இடங்களில், எந்த வசதியும் இன்றி வாழ்ந்து வருகின்றனர் பழங்குடி மக்கள். இந்த நிலைமை எந்த விதத்திலும் மாறவே இல்லை.

 

சென்னையில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் மீன்பிடிக்கும் பழங்குடியினர்.

கேள்வி: பழங்குடி சிறுவர்களுக்கான கல்வி நிலை எப்படி உள்ளது?

கிருஷ்ணன்: கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு பின், பழங்குடியின பகுதிகளில் கல்வி நிலை மிகவும் பின்தங்கிவிட்டது. பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், ‘ஆன்லைன்’ மூலம் இணைய வழியில் கற்பிப்பதாக கூறினார்கள். அது, கல்வி நடைமுறையில் புதிய வழிமுறை. அதற்கு  உரிய கருவிகளான, கணினி, அலைபேசி, மின்சாரம், இணைய இணைப்பு போன்ற வசதிகள் தேவை. அவற்றை பெற்று உள்ளவர்கள் மட்டும் தானே இந்த முறையிலான ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியும்.

எந்த அடிப்படை வசதியுமற்ற குளக்கரை, வீதி ஓரம், ஏரிப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு, இது போன்ற நடைமுறை எல்லாம் எட்டக்கனியாகவே உள்ளது. மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள மக்களை, இதுபோன்ற சூழ்நிலை மேலும் பின்தள்ளியுள்ளது. சிறப்பு கவனம் செலுத்தி, முன்னுரிமை கொடுத்து திட்டங்களை வகுக்க வேண்டியது இன்றியமையாதது. இல்லந்தேடி கல்வி என்றொரு திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு உள்ளது. இல்லமே இல்லாதவர்களுக்கு இந்த திட்டத்தால் என்ன பயன் ஏற்படும். பழங்குடி மக்கள் கல்வியில் புதிய அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

கேள்வி: பழங்குடியின மக்கள் முன்னேறுவதற்கு வழிவகைகள்தான் என்ன?

கிருஷ்ணன்: பொதுவாக, பழங்குடியின மக்கள் முன்னேற்றத்துக்காக தேசிய மற்றும் மாநில அளவில் திட்டங்களை தீட்டுகின்றனர். கருத்து நிலையில் இந்த வகை சிந்தனை பழங்குடியினர் மேம்பாட்டுக்கு எந்த வகையிலும் உதவாது. மாற்றாக, பழங்குடியின மக்கள் வாழும் இடம் சார்ந்து, மிகவும் நுண்ணிய அளவில் கருத்து நிலையுடன் கூடிய அணுகுமுறை திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதுவும், அவர்களையும் உள்ளடக்கியதாக இருந்தால்தான் பயன்தரும். பொது உதாரணம் ஒன்றை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என்ற ஒரு மனநிலை உள்ளது. அதற்கு காரணம், ஒரு மொழியின் ஆதிக்கம் என்று கூறப்படுகிறது. பழங்குடியின மக்களுக்கும் இது போன்ற பிரச்னைகள் உண்டு. பொதுவாக, பழங்குடியினர் பேசும், புழங்கும் மொழி இயல்பாக மற்ற வட்டார மொழிகளிலிருந்து வேறுபட்டது.

பெரும்பான்மை மொழியை பேசும் மக்கள் வாழும் பகுதியில், அந்த மொழியின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அங்கு ஆதிவாசி போன்ற குறைந்த எண்ணிக்கையில் வாழும் மக்களுக்கு, பெரும்பான்மையினர் பேசும் மொழி ஆதிக்கமாகவே தெரியும். அந்த மொழியை பயன்படுத்தி நடக்கும் பரிமாற்றங்களில் அந்நியராகவே அவர்கள் உணர்கின்றனர். எனவே, பழங்குடியின மக்கள் வாழும் இடம், சிந்திக்கும் மொழி போன்றவறறை கருத்தில் கொண்டு தீட்டப்படும் திட்டங்களே உரிய பலன் தரும்.

ஒரு சமூக மேம்பட திட்ட நிதியும், பரவலான கல்வியும் சில மாற்றங்களை நிகழ்த்தலாம். பழங்குடியின சமூகங்களில் அதுவே, முழு மாற்றத்தை கொண்டு வரும் என கணிக்க முடியாது. முக்கியமாக, பழங்குடி மக்கள் வாழும் இடம் சார்ந்த அறிவைப் பெற்றுள்ளனர். முதலில் அந்த அறிவை மதித்து அங்கீகரிக்க வேண்டும். அது மரபு, இயற்கை, வாழ்விடம், வட்டார தொழில் நுட்பம் சார்ந்ததாக இருக்கலாம்.

ஒரு திட்டத்தை உருவாக்க முனைபவர்கள், இந்த மரபு அறிவை அங்கீகரித்து சிந்திந்தால் மட்டுமே, வளர்ச்சிக்கான ஆயுதமாக அந்த திட்டம் அமையும். அதை செய்ய, அரசியல் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் முதலில் மனத்தடையை நீக்கி, நெகிழ்வு மனநிலையில் சிந்திக்க வேண்டும்.

Share the Article

Read in : English

Exit mobile version