Site icon இன்மதி

பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விட்டு சென்ற மனிதக் கடவுள்கள்!

தேனி மாவட்டத்தில் உள்ள பென்னிகுயிக் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலை

Read in : English

இந்திய துணைக்கண்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இருந்த போதும் பின்னர் ஆங்கிலேய அரசாங்கத்தின் அங்கமான போதும் பல வெள்ளை அதிகாரிகள் இங்கு பணிபுரிந்தார்கள். அவர்களில் சிலருடைய பெயர் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு இங்கு வேரூன்றியுள்ளது.

பெரும் வீரர் என அறியப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியின் ஜெனரல் ஜான் நிக்கல்சன், குரூரத்துக்கு மிகவும் பெயர் போனவர். சிப்பாய் கலகத்தையும் அதில் கலந்துகொண்ட இந்தியர்களையும் அவர் கொடூரமாக கையாண்டவிதமும் ஆங்கிலேய அதிகாரிகளையே அவர்பால் வெறுப்பு கொள்ளவைத்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆனால் அவர் அதிகாரியாக இருந்த வடமேற்கு மாகாணங்களான பஞ்சாப் மற்றும் தற்போதைய பாகிஸ்தானில் நிக்கல்சன் ஓர் ஆதர்ஷ புருஷர். அவரை தெய்வமாக வணங்கிய பதான்கள் இருந்தார்கள். அவரை வணங்குபவர்கள் தங்களை நிக்கல் செய்ன்கள் என்று அழைத்து கொண்டார்கள். அவர்கள் வழிபடும் அளவுக்கு நிக்கல்சன் அவர்களை பிரமாதமாக ஒன்றும் நடத்தவில்லை. இந்தியர்கள் என்றாலே அவருக்கு பாகற்காய் கசப்பு. கோபம் தலைக்கேறினால் தன்னை வழிபடும் நிக்கல் செய்ன்களை  சாட்டையால் வெளுவெளுவென்று வெளுப்பது அவரது வழக்கம்.

சிப்பாய் கலகம் வெடித்தபொழுது நிக்கல்சன் வடமேற்கு மாகாணங்களில் இருந்து ஒரு படைப்பிரிவொடு வந்து முதல் இந்திய போரில் கலந்துகொண்ட நம்மவர்களைக் கொன்று குவித்தார். அவரது படைப்பிரிவில் அணிவகுத்தவர்களில் குதிரைப்படை கையாளுவதில் தேர்ந்த பதான்கள் முக்கியமானவர்கள். டெல்லியை திரும்ப கைப்பற்றும் போரில் குண்டடிபட்டு நிக்கல்சன் இறந்தபின்பு அவரை பின்பற்றி வந்தவர்கள் வேறு யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளவோ அணிவகுக்கவோ மறுத்துவிட்டார்கள் என்றும் தங்கள் தலைவர் (தெய்வம் என்று கூட சொல்லலாம்) இறந்த பின்பு தாங்கள் அங்கு செய்யக்கூடியது ஒன்றும் இல்லை என்று புரவிகளை விரட்டிக்கொண்டு திரும்ப சென்றுவிட்டதாகவும் கதைகள் உண்டு.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை பிடித்தது நம்மை சுரண்ட. ஆனால் அவர்களில் சிலர் காலப்போக்கில் நமக்கு மனிதக் கடவுளாகவே மாறி போனார்கள்.

நிக்கல்சன், அவர்களை நடத்திய விதத்துக்கு பதான்கள் உண்மையில் அவரை வெறுத்து ஒதுக்கியிருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போது கொன்றும் போட்டிருக்கவேண்டும். ஆனால் அவரை தெய்வமாக வழிபட வைத்தது எது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை பிடித்தது நம்மை சுரண்ட. ஆனால் அவர்களில் சிலர் காலப்போக்கில் நமக்கு மனிதக் கடவுளாகவே மாறி போனார்கள்.

ஆந்திராவின் சர் ஆர்தர் தாமஸ் காட்டன் 

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் பாலக்கோலில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ண பிரசாத் ஒரு ருசிகரமான சம்பவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவருடைய அந்தணர் நண்பர் ஒருவர் கோதாவரி நதியில் சந்தியாவந்தனம் செய்யும்போது மற்றொரு அந்தணர் ‘ஓம் ஸ்ரீ காட்டனாய நமோ’ என்றிருக்கிறார். அதிர்ந்துபோன அவர் யாரது காட்டனாய என்று கேட்க, தண்ணீரும் சோறும் தருபவர் கடவுள் என்றால் சர் ஆர்தர் காட்டனும் கடவுள் தான். நான் சொன்னதில் என்ன தவறு என்று அந்த அந்தணர் கிருஷ்ண பிரசாத்தின் நண்பரை கேட்டிருக்கிறார். “உண்மையில் ஆங்கிலேய என்ஜினீயர் ஆர்தர் காட்டன் செய்தது மிகவும் உன்னதமான காரியம். ஆந்திராவின் கோதாவரி டெல்டாவின் தலையெழுத்தை மாற்றிய கடவுள் அவர்,” என்கிறார் கிருஷ்ண பிரசாத்.

பென்னிகுயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணைக்கட்டு

ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் கட்டிய தௌலேஸ்வரம் அணைக்கட்டு, பிரகாசம் அணைக்கட்டு மற்றும் கர்னூல் கடப்பா வாய்க்கால் ஆந்திராவின் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை நன்செய் பூமியாக மாற்றியது. ஆந்திராவின் கடற்கரை மாவட்டங்களில் காட்டன் ஒரு தெய்வம். அவரை தங்களின் முன்னோராக கருதி பிண்டம் வைப்பது முதல் பாலபிஷேகம் வரை எல்லாம் நடக்கும். அந்த பகுதிகளில் அவரை பற்றி தவறாக ஒரு வார்த்தை பேசி அடிவாங்காமல் திரும்புவது மிக கடினம்.

தென்தமிழகத்தின் சிற்பி பென்னிகுயிக் 

வடகிழக்கு மாகாணங்கள் அல்லது ஆந்திராவை விடுங்கள். தேனி மாவட்டத்தில் கர்னல் ஜான் பென்னிகுயிக் பற்றி தவறாக ஒன்று சொல்லிப்பாருங்கள். ஆந்திராவுக்கு எப்படி காட்டனோ அதுபோலத்தான் தென்தமிழகத்துக்கு பென்னிகுயிக். கர்னல் ஜான் பென்னிகுயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மக்களின் தாகம் தீர்க்கிறது. ஒருபோகம் கூட விளையாத லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூன்று போகம் அவரது சாதனையால்தான் விளைகின்றன.

இந்த தென்மாவட்டங்களின் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் பென்னிகுயிக் பேரை சூடி நிற்கின்றன. தேனி பேருந்து நிலையம் அவரது பெயரைத்தான் தாங்கி நிற்கிறது. தேநீர் நிலையங்கள், கடைகள், பண்ணைகள், வியாபார நிறுவனங்கள், விவசாய அமைப்புகள் என அவரது பெயர் இல்லாத ஒன்று தேனி மாவட்டத்தில் இல்லை எனலாம். தங்கள் குழந்தைகளுக்கு அவரது பெயரையும் அவரது உதவி பொறியாளர் லோஹனின் பெயரையும் சூட்டுபவர்கள் இங்கு இருக்கிறார்கள்.

பென்னிகுயிக் பெயர் சூட்டப்பட்டிருக்கும் தேனி பேருந்து நிலையம்

“அந்த பெயரை சூட்டி பிற்காலத்தில் ஏதாவது தவறு செய்து எங்கள் தெய்வத்தின் பெயருக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்றுதான் எங்களூரில் அவர் பெயரை பயல்களுக்கு வைக்காதீர்கள் என்கிறேன்,” எனும் கர்னல் பென்னிகுயிக் பேரவை தலைவர் ஆண்டி தனது மகளுக்கு சாரா என்று பெயர் சூட்டியிருக்கிறார். சாரா என்பது பென்னிகுயிக்கின் தாயார் பெயர்.

ஆண்டியின் பாலார்பட்டி கிராமத்தில் மாட்டுப்பொங்கலன்று பென்னிகுயிக் பொங்கல் வைக்கிறார்கள். இந்த வழக்கம் கடந்த இருபது வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. “அவரது பிறந்த நாளை கண்டுபிடிக்க நாங்கள் அலைந்தது பெரிய கதை. ஜனவரி 15, அவரது பிறந்த நாள் என்பதால் அன்று பொங்கல் வைக்கிறோம். பொங்கல் சாமிக்கு வைப்பது. ஒரு வகையில் அவரும் எங்களுடைய குலசாமி, எங்களை வாழவைத்த தெய்வம்,” என்று பக்திப்பரவசம் காட்டுகிறார் ஆண்டி.

தென்மாவட்டங்களின் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் பென்னிகுயிக் பேரை சூடி நிற்கின்றன. தேனி பேருந்து நிலையம் அவரது பெயரைத்தான் தாங்கி நிற்கிறது. தேநீர் நிலையங்கள், கடைகள், பண்ணைகள், வியாபார நிறுவனங்கள், விவசாய அமைப்புகள் என அவரது பெயர் இல்லாத ஒன்று தேனி மாவட்டத்தில் இல்லை எனலாம்.

காட்டனும் பென்னிகுவிக்கும் ஆங்கிலேய சுரண்டலின் அங்கங்களே 

வரலாற்று பேராசிரியர் சாலமன் பெர்னார்ட் ஷா ஆங்கிலேயர்கள் அணைக்கட்டுகள் கட்டியதும் நீராதாரங்களை உண்டாக்கியதும் தங்களது வருவாயை பெருக்கத்தானே தவிர நம் மேல் கொண்ட நலனால் அல்ல என்கிறார். காரல் மார்க்ஸ் ஆசிய உற்பத்தி வடிவம் என்ற ஒன்றை பற்றி சொல்லியிருப்பார். நாற்பத்தைந்து சென்ட் நிலம் இருந்தால் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வாதாரத்தை உருவாக்கி பாதுகாத்து கொள்ளும் வடிவம் அது. ஆங்கிலேயர்கள் தங்களுடைய நில சீர்திருத்தங்களான ஜமீன்தாரி ராயத்துவாரி திட்டங்களால் அதை அழித்தொழித்தார்கள் என்கிறார் ஷா.

தங்களுடைய ஜவுளி தொழிலுக்காக இந்திய விவசாயிகளின் மீது பருத்தியையும் இண்டிகோவையும் திணித்து அவர்களை பஞ்சத்தில் தள்ளினார்கள். அவர்கள் மேற்கொண்ட ஒவ்வொரு திட்டத்தின் பின்பும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நலன் மட்டுமே இருந்தது. ஆர்தர் காட்டனும் ஜான் பென்னிகுயிக்கும்  இந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கைப்பாவைகளே, “வழக்கமான வெள்ளை அதிகாரிகளை விட கொஞ்சம் வித்தியாசமானவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்,” என்கிறார் அவர்.

கம்பம் லோயர்காம்பில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் அணைக்கட்டு தொடர்பான புகைப்படங்கள் உள்ளன

எப்படியாயினும் சாமானியர்களுக்கு காட்டனும் பென்னிகுயிக்கும் கடவுளின் அவதாரங்கள் தான். அவர்கள் அணைக்கட்டுகள் கட்டிய காலங்கள் சிரமமானவை. வெள்ளை அரசாங்கமே அவர்களுக்கு துணையாய் நின்றதா என்ற சந்தேகங்களும் உண்டு. “அப்படியென்றால் இடையில் கட்டுமானங்கள் வெள்ளத்தில்  அழிந்துபோனபோதே பென்னிகுயிக் முல்லைப்பெரியார் திட்டத்தை கைவிட்டிருக்க வேண்டும். எதற்காக அவர் தன்னுடைய சொத்துக்களை விற்று இந்த அணையை கட்டவேண்டும். அணைக்கட்டும் வேளையில் எங்களுடைய மூதாதையர் 500 பேர் இறந்து போயிருக்கிறார்கள். ஒரு வகையில் பென்னிகுய்க்கும் எங்கள் மூதாதையர்களில் ஒருவரே,” என்கிறார் ஆண்டி.

இந்தியர்கள் மட்டுமல்ல முல்லைப்பெரியார் அணை கட்டும்போது இறந்த வெள்ளை அதிகாரிகளின் கல்லறைகளும் அணையின் அருகே இருக்கின்றன. நோயும், தட்பவெட்ப நிலையும், காட்டுவிலங்குகளும் அலைக்கழித்த ஒரு திட்டத்தை முடிப்பது சாதாரணமாக மனிதன் செய்வது அல்ல. “பென்னிகுயிக் கடவுளின் மறுஅவதாரம். அதனாலதான் அவரை நாங்கள் இவ்வளவு நேசிக்கிறோம். வணங்குகிறாம்,” என்கிறார் ஆண்டி

Share the Article

Read in : English

Exit mobile version