Site icon இன்மதி

கோலாகலமான கோலத்திருவிழா கொண்டுவரும் குடிமையுணர்வு

பரிசு பெற்ற பச்சைக்கிளி கோலம்

Read in : English

எந்தப் பண்டிகையைப் போலவும் பொங்கல் என்றாலே பிரம்மாண்டமான கோலங்களின் ஆட்சிதான். பெண்களின் நிபுணத்துவக் கைகள் வீட்டு முன்வாசலில் அரிசிமாவை இழைத்து புள்ளிகளும் கோடுகளும் வரையும் அந்த நுட்பமான கலை, கோலங்கள் வீற்றிருக்கும் இடத்திற்கு ஒரு புனிதத்துவத்தைக் கொடுக்கிறது. நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான், தரைமீது வரையப்படும் அழகான ‘ஓவியங்கள்’ வரவேற்புச் சமிக்ஞைகள் என்று. குறிப்பாக செல்வத்தையும் செழுமையையும் அள்ளிக் கொண்டு  உள்ளேவரும் மகாலட்சுமி என்னும் பெண்கடவுளுக்கான பெரிய வரவேற்புகள் அவை.

சமீபகாலங்களில் விசேஷமான விழாக்களிலும் கலாச்சார நிகழ்வுகளிலும், தனியொரு பெண்ணின் காலைநேரத்துச் சடங்கான கோலம்போடும் கலை ஒரு பிரபலமான கூட்டுச் செயற்பாடாக பரிணமித்திருக்கிறது. புகழ்பெற்ற சென்னை மைலாப்பூர் திருவிழாவில் முக்கிய போட்டிகளில் ஒன்றாக  கோலப்போட்டியும் கோலோச்சுகிறது.

மயில் கோலம்

இந்தக் கருத்தாக்கத்தை மேலும் முன்னெடுத்து, சென்னையில் ஒருபகுதிவாழ் மக்கள் தங்களின் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள கோலத்தைப் பயன்படுத்தினால் என்ன  என்று யோசிக்க ஆரம்பித்தனர். அதன் விளைவுதான் ‘கோலக் கொண்டாட்டம்’ என்னும் நிகழ்வு. ரமாமணி ஜெயராமன் மற்றும் உஷா குமாரி ஆகியோரின் முயற்சியில் உருவான இந்தக் கோலப்போட்டி அடையார் கேபி நகர் மக்களிடையே தங்கள் தெருவைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டியது.

சமூக வலைத்தளங்கள் கோலம்

சிறந்த கோலத்திற்கான போட்டி கரோனா நோய்த்தொற்று வருவதற்கு முன்பு  தொடர்ந்து இரண்டு வருடங்களாக நடந்தது. அருகிலிருக்கும் ருக்மணி நகர் வீட்டுவாரிய குடியிருப்புவாசிகள் உட்பட பெரியவர்களும், குழந்தைகளும் இந்தப் போட்டியில் ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டனர். கோலம் போடுவதற்கு ஏதுவாகத் தெருவில் கார் பார்க்கிங் ஒரு ஓரமாகக் கொண்டுசெல்லப்பட்டது. எல்லோரும் ஒத்துழைத்தனர்; குடியிருப்புவாசிகள் தங்கள் பணத்தைப் போட்டு பரிசுகளை உருவாக்கினர்; ஆண்களும் இதில் தங்கள் பங்கைக் கொடுத்தனர்.

போட்டிக்கான நீதிபதிகளாக ஜெயஸ்ரீ கண்ணன், மற்றும் பிரேமா வடகுநாதன் ஆகியோர் இருந்தனர். அவர்கள் இருவரும் கோல நிபுணர்கள் மட்டுமல்ல; ஆர்வர்லர்களுக்குக் கோலக்கலையைக் கற்றுத்தருபவர்களும்கூட.

நடுவர்கள் கோலங்களை பார்வையிடுகிறார்கள்

முதல்பரிசை வென்றவர் அலமேலு. அவர் உள்ளூர் காய்கறி விற்பனையாளரின் மனைவி.

திருநெல்வேலியில் வளர்ந்த அலமேலு தற்போது வசிக்கும் தன்பகுதியில் இழைக்கப்படும் கோலங்களால் கவரப்பட்டார். அந்தக் கோலங்களின் வடிவங்களில் சின்னசின்ன மாற்றங்கள் செய்து தன்வீட்டு வாசலில் புதுவடிவக் கோலங்கள் போட்டார். புதிய கோலவடிவங்களில் ஆர்வம், பெருக்கெடுக்க, நிறைய புத்தகங்கள் வாங்கி வாசித்தார். சில வருடங்களுக்கு முன்பு, தன் சொந்தஊரிலும், மைலாப்பூர் விழாவிலும் நடந்த கோலப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றதாக அவர் சொல்கிறார்.

ஒருமுறை போட்ட கோலத்தின் வடிவை அவர் மறுமுறை வரைவதில்லை. மேலும் யூடியூப் வீடியோக்கள் மூலமாகவும் ஓர் உந்துதல் பெற்றார். இரவு கோலங்கள் போட்டுப்போட்டு பயிற்சி செய்து காலையில் தன்வீட்டு வாசலில் அவற்றைப் போடுவார். தன் பகுதிவாசிகள் அமைத்திருக்கும் ‘வர்ணஜாலம்’ என்னும் வாட்ஸ்அப் குழுவில் தன் படைப்புகளின் படங்ளை போஸ்ட் செய்வார். ஒவ்வொருநாள் காலை 7 மணியளவில் உருவாகும் அவருடைய வாட்ஸ்அப் பதிவுகள், குழு உறுப்பினர்கள் கண்விழிக்கும்போது அவர்களை வரவேற்கும் மங்களகரமான படிமங்களாக ஜொலிக்கும். காலை நடைப்பயிற்சியாளர்கள்கூட அலமேலுவின் கடையில் நின்று அவருடைய அன்றைய கோலத்தைப் பற்றி புகழ்ந்துத் தள்ளிவிட்டுத்தான் போவார்கள். அவருடைய மகள் தரையில் அம்மா வரைந்திருக்கும் அரிசிமாவு வடிவங்களுக்கு வர்ணம் தீட்டுவாள்.

அந்தத் தெருவில் அலமேலு மற்றும் மற்ற கோல வடிவமைப்பாளர்களின் முயற்சியால், சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய தேவையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வும், ஒன்றாய் வாழும் ஓர் இனஉணர்வும் மக்கள் மனங்களில் விதைக்கப்பட்டன.

”இந்தக் கோலாகலமான கோலநிகழ்வுக்குப் பின்பு, மக்களின் போக்கில் ஒருமாற்றம் தெரிகிறது. நிறையபேர் நின்று ’ஹலோ’ சொல்லி பேசிவிட்டுச் செல்கிறார்கள். ஒரேயிடத்தில் ஒன்றாய் வாழ்கிறோம் என்ற ஒரு குழுவுணர்வு இப்போது உருவாகியிருக்கிறது. இது வெறும் தொடக்கமே. கரோனா நோய்ப்பரவல் முடியட்டும் என்று காத்திருக்கிறோம். பின்பு நிறைய நிகழ்வுகள் நடத்துவோம்,” என்று சொல்கிறார் ரமாமணி.

இந்த மாதிரி நிறைய பகுதிகள் எழுச்சி பெற்றால் முற்போக்கான, ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் சமூகம் முழுக்க நிகழும் என்று நாம் நம்புவோமாக!

Share the Article

Read in : English

Exit mobile version