Site icon இன்மதி

கே.பி. சுந்தராம்பாளை பாட்டால் வசியம் செய்த மாயக்காரன் செங்கோட்டை சிங்கம் எஸ்.ஜி. கிட்டப்பா!

எஸ் ஜி கிட்டப்பா மற்றும் கே பி சுந்தராம்பாள்

Read in : English

தமிழக பாடகர்களில் யாருக்குமே கிடைக்காத குரல் வளம் பெற்றவர், செங்கோட்டை சிங்கம் கிட்டப்பா. அதன் மூலம் சாதாரண பாமரர்களையும் கர்நாடக இசையை ரசிக்க வைத்த மாயக்காரன் அவர்.

1906-ஆம் ஆண்டு கங்காதர அய்யருக்கு மகனாகப் பிறந்தார் கிட்டப்பா. இவருடன் பிறந்தவர்கள் 10 பேர். அதில் அப்பாதுரை, செல்லப்பா, சுப்பையா, காசியப்பா முதலியோர் குடும்ப கஷ்டம் காரணமாக சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் இணைந்து நடித்து வந்தனர்.
கிட்டப்பாவுக்கு பள்ளிப்படிப்பு இல்லை; சகோதரர்கள் பாடிய நாடகப் பாடல்களே அவரது கல்வியானது. ஐந்து வயதில் கிட்டப்பாவும் நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லதங்காள், அலிபாதுஷா நாடகங்களில் குழந்தையாக நடித்தார். சங்கரதாஸ் சுவாமிகள் மூலம் நன்றாக பேசவும் பாடவும் கற்றுக்கொண்டார். இவரைவிட நான்கு வயது மூத்த மதுரை மாரியப்பசாமிகள் இவருக்கு நாடகப் பாடங்கள் கற்பித்தார்.

கன்னையா நாடகக் குழுவில் சேர்ந்து நடித்து வந்தார். அதற்குமுன் சிங்கப்பூர் இலங்கை முதலிய நாடுகளுக்கு சென்று நடித்தார். 1926-ஆம் ஆண்டு கன்னையா கம்பெனியில் இருந்து விலகி பி. அய்யர் நடத்திய கம்பெனியில் நடித்துவந்தார்.

கொழும்பில் அப்போது கே.பி.சுந்தராம்பாள் நாடகங்களில் நடித்த துணை நடிகர்கள் அவருடன் பாடி, நடிக்க முடியாமல் இந்தியா திரும்பினர். இந்த நேரத்தில் கிட்டப்பா அங்கு சென்று கே.பி.எஸ்ஸுக்கு இணையாக பாடி நடித்தார். மக்களும் சிறந்த ஜோடி என்று பாராட்டினர்.
“கிட்டப்பா – கந்தர்வனாயிருக்கலாம். அந்த கந்தர்வனும் ‘சோப்ளாங்கி’ (அசட்டு) சுந்தராம்பாளைக்கண்டு, அவரிடம் ஈடுபட்டிருக்க மாட்டார். கந்தர்வனும், ‘பூலோக ரம்பையைக் கண்டுதான் மையல் கொள்ளுவான் என்று கதைகள் சொல்லுகின்றன’ என்கிறார் வ.ரா.

ஒரே நாடகத்தில் பல்வேறு பாத்திரங்களில் பலவித உடைகளில் வந்து பாடி நடிப்பார். அந்தக் கால நாடகங்களில் நடிப்பைவிட பாடலுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் இவரோ நடிப்புடன் பாடலையும் இணைத்துக் கொடுத்துவந்தார்.

“ரங்கூனில் நடந்ததைச் சொல்றேன். அங்கே ஞானசௌந்தரி நடந்தது. நான் ஞானசௌந்தரி. அவர் பிலவேந்திரன். கை வெட்டப்பட்ட நிலையில் நான் பாட வேண்டும். சொல்லித்தரும்படி அவரைக் கேட்டேன். ஏன் , பணம் நான் மட்டுமா வாங்குறேன். நீயுந்தான் வாங்குறே நீயே பாடு என்று கண்டித்துக் கூறிவிட்டார். என்ன செய்வது என்றே புரியவில்லை. வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு, தனிமையில் சற்று அமர்ந்து ஆ, ஆ, இ, ஈ என்ற உயிரெழுத்துகளைச் சொல்லிப் பார்த்துக் கொண்டேன்> ஞாபகம் வந்துவிட்டது. அவரிடம் சொல்லாமல், மேடைக்கே வந்துவிட்டேன். நான் பாடல் தெரியாமல் திண்டாடுவேன் என்று நினைத்தார். மேடையில் அவர், பெண்•ணே, உன் சவாஸ்தரத்தைச் சொல் என்று கூறியவுடன், இரக்கம் வகித்ததே எனை விசாரித்து அருட் செயல் கொண்ட அரசே என்று பாடினேன். நாயே, தெரியாது என்று ஏமாற்றினாயா என்று மேடையில் கூறினார்” என்கிறார் கே.பி. சுந்தராம்பாள்.

“அவருடன் சேர்ந்து நடித்த எல்லா நாடகங்களும் சிறந்தவைதான். Ðபாமா விஜயம், கோவலன், சத்தியவான் சாவித்ரி, தூக்குத்தூக்கி, பவளக்கொடி, சாரங்கதாரா. இன்னும் எந்த நாடகமாக இருந்தால் என்ன, எத்தனை யெத்தனை தடவை பார்த்தால் என்ன… இந்த வள்ளி எத்தனை ஆயிரம் தடவை போட்டிருப்போம். ஆயலோட்டும் பெண்ணே என்ற அவர் பாட்டையும் மீசை நரைச்சுப் போச்சே கிழவா என்று நான் பாடுவதையும் எத்தனை தடவை மக்கள் கேட்டிருப்பார்கள்! அலுக்குமா? தஞ்சாவூரில் நடந்தால் மாயவரம், திருவாரூரிலிருந்தெல்லாம் வருவாங்க. அவர் சாகீதம் அப்படி. பெரிய பெரிய சங்கீத வித்வான்களே பாராட்டியிருக்காங்களே! வீட்டில் ஒரு நாளும் சாதகம் பண்ணமாட்டார். ஜன்மாந்திர சாதகம் அவருக்கு” என்கிறார் அவர் “அப்போது, நாங்கள் திருநெல்வேலியில் ஒரு மாடி வீட்டில் குடியிருந்தோம். பாட்டெல்லாம் சொல்லிக்கொடுத்து முடித்தபின், ஒரு நாள் அவர் என் வீட்டுக்கு வந்து என் தாயாரிடம், “என்ன அக்கா, சுந்தராம்பாள் எங்கே” என்று கேட்டார். பாட்டுச் சொல்லிகொடுக்கத்தான் வந்திருக்கார் போல என்று எண்ணிக்கொண்ட என் தாயார் நான் மாடியில் இருப்பதாகக் கூறியதும், அவர் மாடிக்கு வந்து நின்றார். அவர் உள்ளத்தில் கள்ளம் இருப்பதை அவருடைய பார்வை காட்டிக்கொடுத்துவிட்டது. “எங்கே வந்தீர்கள்?” என்றேன். அவர் மௌனமாக என்னையே பார்த்துக்கொண்டு நின்றார். அவரது எண்ணம் எனக்குப் புரிந்துவிட்டது. என்னை கடைசிவரை காப்பாற்றுவதாக உறுதிமொழி வாங்கிக்கொண்ட பின்னரே சம்மதித்தேன்” என்கிறார் சுந்தராம்பாள்.

1928ஆம் ஆண்டு கிட்டப்பாவும், கே.பி.சுந்தராம்பாளும் மாயவரத்தில் உள்ள சத்திரத்தில் திருமணம் செய்துகொண்டனர். 1929-ஆம் ஆண்டு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்தது.

ஒரே நாடகத்தில் பல்வேறு பாத்திரங்களில் பலவித உடைகளில் வந்து பாடி நடிப்பார். அந்தக் கால நாடகங்களில் நடிப்பைவிட பாடலுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் இவரோ நடிப்புடன் பாடலையும் இணைத்துக் கொடுத்து வந்தார்.

ஜி.எஸ்.முனிசாமி நாயுடுக்குப் பிறகு, ‘தூக்குத்தூக்கி’ நாடகத்தில் ‘பைத்தியக்கார’ வேடத்தில் கிட்டப்பா ஒருவரே வெற்றிகரமாக நடித்து வந்தார். ‘கோவலன்’ நாடகத்தில் வெட்டுண்ட பாறையிலும், ‘சாரங்கதாரா’வில் மாறுகால் மாறுகை வாங்கி விடும்படி நரேந்திரர் தண்டனை விதிக்கும் போதும் ‘நந்தனாரி’ல் நடராஜரைக் காண ஆண்டையிடமிருந்து உத்தரவு கிடைக்காத சமயத்திலும், காட்டில் மரம் வெட்டும் போதும் திடீரென சத்யவான் மயக்கமுற்று கீழே விழுந்து உடலை விட்டு போகும் நிலையிலும், ராமன் பரதனுக்குப் பாதுகை அளித்து அனுப்பும் இடத்திலும் உருக்கமாக நடித்துக் கைத்தட்டுப் பெறுவார்.

அந்தக் காலத்தில் பெரும் நடிகர்களும் வயது மூத்த நடிகர்களான பெரியசாமா, சின்ன மகாசேஷய்யர், சூரிய நாராயண பாகவதர், வி.பி.ஜானகி அம்மாளுடன் நடித்திருக்கிறார்.
இவருக்கு சுருதியே தாய், லயமே தகப்பன். இவ்விரண்டு வகையிலும் சங்கீத ஞானமே அவரது ஜீவ நாடி. ஒரு உடலுக்கு வாத, பித்த, சிலேட்டுமம் எப்படி முக்கியமோ அதேபோல் சங்கீதத்திற்கு சுருதியும், லயமும் கற்பனையும் முக்கியம். இம்மூன்றும் நிறைந்திருக்கும் கிட்டப்பாவின் சங்கீதத்தில்.

ஒரு சிலர் கீழே (மந்திர ஸ்தாயியில்) பாடும்போது பாட்டு கனமாயிருக்கும். மேலே (தாரங் ஸ்தாயியில்) ரொம்பவும் மெல்லியதாக இருக்கும். கிட்டப்பாவின் பாட்டு மூன்று ஸ்தாயியிலும் ஒரே நிறையுள்ளதாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக, ‘தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கு அடியேன்’ என்னும் சுந்தரர் தேவாரத்தில் மேல் ஷட்ஜமத்திலிருந்து மேல் பஞ்சமம் வரையிலும் சஞ்சார முள்ளது. ‘இல்லையே என்னாடி இயற்கைக்கும் அடியேன்’ என்னுமிடம் அங்கு மந்திர ஸ்தாயியில் என்ன கனம் இருக்கிறதோ அதே அளவுக்கு தாரஸ்தாயியிலும் கனத்தைக் கொடுப்பது வழக்கம். இது மற்றவர்களுக்கு தெரியாது. அவர்கள் தூரஸ்தாயியில் போகும்போது கீழ் சென்றுதான் பாடுவார்கள். அவ்வாறு பாடாமல் அங்கும் கனமாகவே தொனிக்கும்படி பாடுவது கிட்டப்பாவின் சாமர்த்தியம்.

‘விரிந்த செஞ்சடையாட’ என்ற விருத்தத்தில் காபி, தனந்த பைரவி, தேவமனோகரி, சுருட்டி, ஆமேரி இந்த ராகங்களில் தனித்தனியாகவே பல சமயங்களில் பாடியிருக்கிறார். தேவமனோகரியில் பாடும்போது கொஞ்சம் மாறினால் ‘சுருட்டி’ அல்லது ‘சுத்தபங்காள’ ‘சுத்த சாவேரி’யாய் போய்விடும். அவ்வாறு ராகம் மாறாமல் கவிஞனுடைய பாவ ரசமும் குறையாமல் பாடியிருக்கிறார்.

கிட்டப்பாவின் ராகம் பாடும் பாணியைக் கேட்டு மற்ற வித்வான்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதற்குக் காரணம் என்னவென்றால், பைரவி, தோடி, கரகரப்பிரியா, கல்யாணி, பிலகரி, காம்போதி, பியாக், செஞ்சுருட்டி, காபி முதலிய ராகங்களை பாடகர்களிடம் இசைத்தட்டிலும் கேட்டு கிரகித்து வைத்துக்கொண்டு நாடக மேடையில் பாடும் சமயங்களில் எந்தெந்த ராகத்தில் எத்தனை எத்தனை வித்வான்களுடைய கேள்வி இருக்கிறதோ அவ்வேறு பாணிகளையும் பல்வேறு ராகங்களைப் பாடும்படியான சூழ்நிலையில் இணைத்துப் பாடுவார்.
கிட்டப்பா தமது கடைசி காலத்தில் திருவாரூரில் வள்ளி நாடகம் நடத்தினார். அவர் சுப்ரமண்யராக வேடம் பூண்டு ‘காயாத கானகத்தே’ என்ற சங்கரதாஸ் சாமிகளின் விருத்தத்தை பைரவியில் பாடினார். அரங்கில் ஏராளமான நாடகக்காரர்கள் அன்று அங்கிருந்தனர். அவர் சாதாரணமாக ஒரு ராகத்தை ஒரே வழியில் பாடாமல் முறையை அடிக்கடி மாற்றுவது வழக்கம். அன்று பாடிய பைரவி முத்துசாமி தீட்சிதரின் ‘பால கோபால’ என்ற கீர்த்தனையில் இருந்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பாடியவர்களுடைய கர்நாடக பரிசுத்தமான பைரவி எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.

“கிட்டப்பாவுக்கு இருந்த அருமையான சாரீரத்தைப் போல் எவருக்கும் அமைந்திருந்ததாக எனது வாழ்நாளில் நான் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. அவர் எந்த ராகம் பாடினாலும் அந்தந்த ராகத்திற்கு வேண்டிய முக்கியமான அம்சங்கள் அதில் அமைந்திருக்கும். ஜீவகளை முற்றிலும் அதிலிருக்கும். எந்த ராகத்தைப் பாடத் தொடங்கினாலும் தொட்டவுடனேயே ராகத்தின் உயிர்நிலையைக் காட்டிவிடும் சாமர்த்தியம் அவரிடம் உண்டு” என்கிறார் முத்தையா பாகவதர்.

“ராக பாணிகளும் தசவித கமகங்களும் பொருந்திய வக்கிரமான பிர்க்காக்களும் எவ்வளவு வேகமாக பாடினாலும் ‘அபசுர’ மென்பது சிறிதேனும் வராது.” என்கிறார் ராஜரத்தினம் பிள்ளை. அதனால்தான் அவரது நாடகத்திற்கு திரும்பி பிடில் கோவிந்தசாமிபிள்ளை, வீராசாமிபிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை, நாராயண பிள்ளை முதலிய பெரும் வித்வான்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

1933 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி 27 வயதில் அற்ப ஆயுளில் மறைந்தது தமிழ் இசை உலகிற்கு பெரும் தவக்குறை. அவர் இல்லாத குறையை 60 இசைத் தட்டுக்கள் ஏதோ அவர் நினைவை சொல்லிக்கொண்டிருக்கின்றன.

 

Share the Article

Read in : English

Exit mobile version