Site icon இன்மதி

தமிழ் கல்வெட்டு மைப்படிகள் மைசூரிலிருந்து சென்னைக்கு மாற்றம் ஏன்? உண்மையான அக்கறையா? அரசியலா?

முக்கியமான ஆவணங்களை கல்வெட்டுகளாக வடித்து வைப்பது பண்டைய வழக்கம்

Read in : English

இந்திய தொல்லியல் துறையின் மைசூர் வளாகத்தில் பராமரிக்கப்படும் தமிழ் கல்வெட்டு மைப்படிகளை சென்னையிலுள்ள பிராந்திய அலுவலகத்துக்கு மாற்ற  இந்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை  உயர்நீதி மன்ற மதுரை கிளை கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவின் பேரில் மத்திய தொல்லியல் துறை இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள் சரியாக பராமரிக்க படுவதில்லை என்ற குற்றச்சாட்டு 2006ஆம் ஆண்டு ஒரு தமிழ் இதழில் வந்த கட்டுரையை மையமாக வைத்து தொடங்கியது. ‘காவேரியும் போச்சு கல்வெட்டும் போச்சு’ என்ற அந்த கட்டுரை தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள் முறையாக பராமரிக்க படுவதில்லை என்று குற்றம் சாட்டியது.

இந்திய தொல்லியல் துறை  கல்வெட்டுகளுக்கான துறையை 1887ஆம் ஆண்டு தொடங்கியது. சென்னையில் இயங்கிவந்த அலுவலகம் பின்பு 1911ஆம் ஆண்டு ஊட்டிக்கு மாற்றப்பட்டது. குளிர்சாதன வசதிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் காகித மைப்படிகளை நீண்டகாலம் பாதுகாக்க வேண்டி வெப்பநிலை குறைவாக உள்ள நீலகிரி மாவட்டத்துக்கு மைப்படிகள் மாற்றப்பட்டன. அங்கிருந்து 1966ஆம் ஆண்டு மைசூருக்கு மைப்படிகள் மாற்றப்பட்டன.

கல்வெட்டியலின் வரலாறு

முக்கியமான ஆவணங்களை கல்வெட்டுகளாக வடித்து வைப்பது பண்டைய அரசர்களின் வழக்கம். அரச ஆவணங்கள் மட்டுமல்ல, வணிக ஒப்பந்தங்கள், காவல் அதிகாரங்கள், கோவில் தர்மகாரியங்களுக்கான நில தானங்கள், அரசர்களின் மெய்க்கீர்த்திகள் அனைத்தும் கல்வெட்டுகளாக வரையப்பட்டன. இந்த கல்வெட்டுகளின் மதிப்பறிந்த கிழக்கிந்திய கம்பெனியும் அதனை தொடர்ந்து அமைந்த பிரிட்டிஷ் அரசாங்கமும் முறையாக அவற்றை பராமரிக்க முயற்சிகள் மேற்கொண்டன.

சமஸ்கிருதத்துக்கு அளப்பரிய முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசின் கீழ் உள்ள கல்வெட்டியல் துறையில், சமஸ்கிருத மைப்படிகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், தென்னிந்திய மொழிகளின் மைப்படிகளுக்குக் கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்தன.

1887ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கல்வெட்டியல் துறைக்கு மைசூர் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மைய வளாகங்கள் இருக்கின்றன. மைசூரில் தென்னிந்திய மொழிகள் மற்றும் சமஸ்கிருத கல்வெட்டுகளின் மைப்படிகள் பாதுகாக்கப்படுகின்றன. நாக்பூரில் பெர்சியன் மற்றும் இஸ்லாமிய கல்வெட்டுகளின் மைப்படிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மைசூர் வளாகத்துக்கு சென்னை மற்றும் லக்னோவில் பிராந்திய அலுவலகங்கள் உள்ளன.

சர்ச்சையின் பின்னணி

இந்திய தொல்லியல் துறையின் கீழ் செயல்படும் கல்வெட்டியல் துறை கல்வெட்டுகளை மைப்படி எடுப்பதோடல்லாமல் அவற்றை ஆண்டுவாரியாக தொகுப்பது, தொகுத்த விவரங்களையும் கல்வெட்டுகளில் உள்ள விவரங்களையும் புத்தகங்களாக பதிப்பிக்கிறது. அவற்றில் முக்கியமானது, ஆண்டுதோறும் வெளியிடப்படும் ‘Annual Report on Indian Epigraphy’ ‘ சுருக்கமாக ARE என்பார்கள். இந்த அறிக்கை, ஆண்டுதோறும்  கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளை பற்றியும் அவற்றின் சுருக்கமான சாராம்சமும் இருக்கும். இதற்க்கு அடுத்த முக்கியமான பதிப்பென்பது ‘South Indian Inscriptions’. சுருக்கமாக SII என்பது கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளின் முழு விவரம். இந்த இரண்டுமே ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கியமான ஆவணங்கள்.

ஆண்டுதோறும் பதிப்பிக்கப்படும் ARE அறிக்கை கடந்த ஆண்டு வரை கண்டுபிடித்த கல்வெட்டுகளின் சாராம்சத்தை தரும் வேளையில், கல்வெட்டுகளை பற்றி முழு விவரம் தரும் SII பதிப்பு, 1920ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளோடு நிற்கிறது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் கல்வெட்டுகளின் மைப்படிகள் இருப்பதாக சொல்லப்படும் மைசூர் வளாகத்தில், ஏறக்குறைய 60,000 கல்வெட்டுகளின் மைப்படிகள் தமிழில் உள்ளன.

காவேரியும் போச்சு கல்வெட்டும் போச்சு என்ற கட்டுரை வெளியானபின்பு, புத்தகமாக வெளியிடப்படாத  மைப்படிகள்  கதி என்ன என்ற கேள்வி எழுந்தது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு இடைவெளி உள்ள நிலையில் மைப்படிகள் பாதுகாப்பாக உள்ளனவா என்ற கவலையும், சமஸ்கிருதத்துக்கு அளப்பரிய முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசின் கீழ் உள்ள கல்வெட்டியல் துறையில், சமஸ்கிருத மைப்படிகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், தென்னிந்திய மொழிகளின் மைப்படிகளுக்குக் கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்தன.

காவேரியும் போச்சு கல்வெட்டும் போச்சு கட்டுரை

பல்வேறு தமிழ் அமைப்புகள் இதைப்பற்றி குரல் எழுப்பிய நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகளை சென்னை அலுவலகத்துக்கு மாற்ற உத்தரவிட்டது.

 

கல்வெட்டுகளின் முக்கியத்துவம்

பண்டைய வரலாறை தொகுக்க பயன்படும் முக்கியமான கருவிகளில் ஒன்று கல்வெட்டுகள். “இலக்கிய சான்றுகளும் கல்வெட்டுகளும் வரலாற்றை அறியும் வழிகள். இரண்டையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போதுதான் முழுமையான தகவல்கள் கிடைக்கும். தொல்லியல் மற்றும் வரலாறு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு கல்வெட்டியல் என்பது ஒரு கைவிளக்கு போன்றது” என்கிறார் ராமநாதபுரம் தொல்லியல் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் வி ராஜகுரு.

பண்டைய கல்வெட்டுகளை மைப்படி எடுப்பது, தொகுப்பது, காப்பகப்படுத்துவது ஒரு புறமெனில், கல்வெட்டுகளில் என்ன உள்ளது என்பதை படித்து ஆய்வு செய்ய தேர்ந்த கல்வெட்டு நிபுணர்கள் தேவை. இந்திய முழுவதும் கல்வெட்டு நிபுணர்களுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது.

கல்வெட்டுகளின் மைப்படிகள் சென்னை அலுவலகத்துக்கு மாற்றப்படுவது ஆய்வாளர்களுக்கு அனுகூலமாக இருக்கும் என்று குறிப்பிட்ட, ஓய்வு பெற்ற கல்வெட்டு நிபுணர் வேதாச்சலம், மைசூர் வரை சென்று அங்கு தங்கி மைப்படிகளை படித்து தகவல் பெறும் சிரமங்களை தவிர்த்துவிட முடியும் என்கிறார். இருந்தாலும், மைப்படிகளை சென்னைக்குக் கொண்டு வருவதால் ஒரு நூற்றாண்டு காலமாக வெளியிடப்படாத தமிழ் கல்வெட்டுகளின் தகவல்கள்  நமக்கு கிடைக்குமா என்பதில் சில சிக்கல்கள் உள்ளன.

கல்வெட்டு நிபுணர்களுக்கு தட்டுப்பாடு

பண்டைய கல்வெட்டுகளை மைப்படி எடுப்பது, தொகுப்பது, காப்பகப்படுத்துவது ஒரு புறமெனில், கல்வெட்டுகளில் என்ன உள்ளது என்பதை படித்து ஆய்வு செய்ய தேர்ந்த கல்வெட்டு நிபுணர்கள் தேவை. இந்திய முழுவதும் கல்வெட்டு நிபுணர்களுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. சமீபத்தில் இந்திய தொல்லியல் துறை 700க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பியது. அவற்றில் ஒன்று கூட கல்வெட்டு துறைக்கென்று இல்லை.

இந்தக் கல்வெட்டு நிபுணர்கள் தட்டுப்பாட்டால், மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறையில் ஓய்வு பெற்ற கல்வெட்டு நிபுணர்களை இந்திய தொல்லியல் துறை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை கொண்டுவரும் கல்வெட்டு மைப்படிகளை எவ்வளவு விரைவில் படித்து ஆய்வு செய்து தகவல்களை வெளிக்கொண்டு வர முடியும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

தேவையற்ற அரசியல்?

இந்த மைப்படிகளை சுற்றிய சர்ச்சை ஒரு பிராந்திய அரசியல் என்கிறார் ஓய்வு பெற்ற  கல்வெட்டு   நிபுணர் ராமச்சந்திரன். மத்தியில் பாஜக ஆள்வதால், தமிழ் மைப்படிகள் பாதுகாப்பாக இருக்காது என்ற பிம்பம் கட்டமைக்கபட்டுவிட்டது. 2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை செம்மொழி இயக்கத்தின் தலைவராக இருந்த மு கருணாநிதி, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் கூட்டணியில் இருந்தார். 2014ஆம் ஆண்டு வரை இருந்த ஆட்சியில் மத்திய நிறுவனமான இந்திய தொல்லியல் துறைக்கு தமிழ் கல்வெட்டு மைப்படிகளை பாதுகாக்கவும் ஆய்வு செய்யவும் அழுத்தத்தை கொடுத்திருக்க முடியும். ஆனால் அதை  கருணாநிதியோ திமுகவோ செய்யவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், 2011இல் தமிழ் பல்கலைகழகம் மைப்படிகளை டிஜிட்டல் மயமாக்குவதை பற்றிய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மைப்படிகளை டிஜிட்டல் வடிவத்தில் மாற்றுவது அவற்றை பாதுகாக்கும் வழி என்பதையும் அவர்  வலியுறுத்துகிறார்.

மத்திய தொல்லியல் துறையும் மாநில அரசும் ஒன்றிணைந்தால் மைப்படிகளை சென்னை கொண்டுவருவதின் நோக்கம் அர்த்தமுள்ளதாக இருக்கும்

இந்த சர்ச்சை நடந்துகொண்டிருந்தபோது மைசூர் கல்வெட்டியல் வளாகத்திற்கு ஆய்வுக்காக சென்ற ஒரு தொல்லியல் அறிஞர் மைப்படிகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றசாட்டை மறுக்கிறார். கேட்கும் மைப்படிகளை ஐந்து நிமிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்படி அங்கு வசதிகள் இருந்தன. “சென்னை கொண்டுவருவது நல்ல விஷயம்தான். ஆனால் மத்திய தொல்லியல் துறை மைசூரில் அவற்றை சரியாக பராமரிக்கவில்லை என்ற கூற்றில் உண்மையில்லை” என்றார் அவர்.

கல்வெட்டு மைப்படிகளை சென்னைக்கு மாற்றும் பணிகள் முழுமையடைய சில காலம் பிடிக்கும். அதற்கு முன்பு தேவையான கட்டமைப்புகளை செய்வது முக்கியம் என்கிறார்கள் துறை சம்பந்தப்பட்டவர்கள். “மைப்படிகளை சரியான தட்ப வெப்பநிலையில் பாதுகாக்க குளிர்சாதன வசதி கொண்ட காப்பகம் வேண்டும். முறையான கட்டிட வசதிகள் வேண்டும். மத்திய தொல்லியல் துறையும் மாநில அரசும் ஒன்றிணைந்தால் மைப்படிகளை சென்னை கொண்டுவருவதின் நோக்கம் அர்த்தமுள்ளதாக இருக்கும்” என்கிறார் ஓய்வு பெற்ற தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்.

 

Share the Article

Read in : English

Exit mobile version