Site icon இன்மதி

ஒரு லிட்டர் ரூ.7 ஆயிரம்: கைக்கு எட்டாத தூரத்தில் கழுதைப் பால் விலை!

Read in : English

‘அழுத பிள்ள சிருச்சுச்சாம் கழுத பால குடிச்சுச்சாம்’ என்றொரு பழமொழி தமிழில் உண்டு. பல ஆயிரம் ஆண்டுகளாக கழுதைகள் நம்மோடு வாழ்கின்றன. சொல்லப்போனால் கழுதைகள் ஏழைகளின் குதிரைகள். பொதிசுமக்கவும் பயணம் செய்யவும் கழுதைகள் பயன்பட்டிருக்கின்றன. கழுதைகள் பற்றி பைபிளில் கூட பல்வேறு குறிப்புகள் உண்டு.

சவலை பிள்ளைகளுக்கு சலவை செய்பவர்கள் வளர்க்கும் கழுதைகளிடம் இருந்து பாலை எடுத்து கொடுத்து வரும் வழக்கம் கிராமங்களில் உண்டு. இப்பொழுதும் கிடைக்கிறது. விலைதான் கொஞ்சம் அதிகம். பத்து மில்லி 150 ரூபாய். ஒரு லிட்டர் கழுதை பால் இந்தியாவில் 2000 முதல் 7000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனில் ஒரு லிட்டர் 43 யூரோ. இந்திய மதிப்பில் 3,614 ரூபாய்.

கழுதைப்பாலின் இந்த திடீர் மதிப்பால் உலகம் முழுவதும் கழுதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கழுதைப்பாலின் இந்த திடீர் மதிப்பால் உலகம் முழுவதும் கழுதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஸ்பெயின், இத்தாலி மற்றும் பல்கேரியா நாடுகளில் இந்த பண்ணைகள் அதிகம் உள்ளன. இந்த கழுதை பண்ணைகளில் இருந்து கிடைக்கும் பால் பாட்டிலில் அடைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கழுதைப்பால் பவுடர் அமேசானில் கூட கிடைக்கிறது. கழுதை பாலுக்கான மதிப்பிற்கு காரணம் என்ன?

கழுதைப்பாலின் மீதான மிகுதியான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதே கழுதை பால் தாய்ப்பாலுக்கு நிகரானது என்று சொல்லப்படுகிறது. பிறந்த சில பச்சிளம் குழந்தைகளுக்கு பாலில் உள்ள இனிப்பு (milk sugar) ஒத்துக்கொள்வதில்லை. இதை லாக்டோஸ் இன்டாலோரென்ஸ் என்கிறார்கள். மற்றும் சில குழந்தைகளுக்கு பசும்பாலில் உள்ள புரதம் ஒத்து கொள்ளாது. இதை பசும்பால் புரத ஒவ்வாமை என்பார்கள். இது போன்ற குழந்தைகளுக்கு கழுதை பால் அருமருந்தாக அமைகிறது. காரணம் ஒவ்வாமை ஏற்படுத்தும் கேசின் புரதம் கழுதை பாலில் 100 மில்லிக்கு 0.7 கிராம் மட்டுமே உள்ளது. பசும்பாலில் இந்த புரதம் 100 மில்லிக்கு 3.5 கிராம் உள்ளது.

பசும்பாலுக்கு ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளுக்கு கழுதை பால் சிறந்த மாற்றாக உள்ளது. சொல்லப்போனால் தாய்ப்பாலுக்கு மாற்றாகவே கழுதை பாலை கொடுக்கலாம்

பசும்பாலுக்கு ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளுக்கு கழுதை பால் சிறந்த மாற்றாக உள்ளது. சொல்லப்போனால் தாய்ப்பாலுக்கு மாற்றாகவே கழுதை பாலை கொடுக்கலாம். கழுதை பால் குழந்தைகளின் வயிறுக்கு உகந்ததாக உள்ளது. பசும்பாலை விட வைட்டமின்களும் கனிமச்சத்துகளும் கூடுதல். வைட்டமின் சி கிட்டத்தட்ட தாய்ப்பாலிற்கு ஒத்திருக்கிறது. லைசோஸம் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகளுக்கு பாக்டீரியா தாக்குதலால் ஏற்படும் வயிற்று உபாதைகளை கழுதை பால் தடுக்கிறது. மேலும் கொழுப்பு சத்து மிக குறைவாக உள்ளதால் வயதானவர்களுக்கும் உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு கூட சிறந்தது.

கழுதை பால் மட்டுமல்ல அதிலிருந்து எடுக்கப்படும் பால் பொருட்களுக்கான சந்தை மதிப்பும் அதிகம். உலகின் விலையுர்ந்த பாலாடை கட்டிகளில் ஒன்று கழுதை பாலில் இருந்து கிடைப்பது. கழுதைப்பாலில் செய்யப்படும் சாக்லேட்டின் மதிப்பும் அதிகம்.

உலக அழகி கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்ததாக சொல்ல கேட்டிருப்போம். சாதாரணமாகவே அழகுப்பொருட்களில் பால் முக்கிய அங்கம் வகிக்கிறது. கழுதைப்பாலின் குணாதிசயங்கள் அழகுப்பொருட்கள் தயாரிக்க அதை மிகவும் ஏற்றதாக மாற்றுகிறது என்றே சொல்லலாம். இறந்த செல்களை அகற்றி முகப்பொலிவை கழுதைப்பால் அளிக்கிறது. கழுதை பால் கிடைக்காவிட்டால் கழுதைப் பாலில் செய்த சோப்பு, க்ரீம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

உணவாகவும் அழகு பொருளாகவும் பயன்படும் கழுதை பாலின் மதிப்பினால் ஒரு கழுதை விலை 80,000 முதல் ஒரு இலட்சம் வரை சென்று விட்டது. அடுத்த முறை யாரையும் உதவாக்கரை கழுதை என்று திட்டுவதற்கு முன்பு ஒரு தரம் யோசித்து செய்யுங்கள்.

Share the Article

Read in : English

Exit mobile version