Read in : English
பையன் பெண்ணை பார்க்கிறான், கிட்டத்தட்ட அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் போல, அவர்களுக்குள் என்னமோ நடக்கிறது. பெற்றோரும் சுற்றாரும் எதிர்க்கிறார்கள், காதலர்கள் எதிர்ப்பைமீறி கைப்பிடிக்கிறார்கள் அல்லது உயிரை விடுகிறார்கள். பெற்றோர் எதிர்ப்பதின் காரணம் வேறு சாதி, மதம் அல்லது வர்க்கம்.
சினிமா, சின்னத்திரை, புத்தகங்களில் துவைத்து பிழிந்து காயப்போட்ட ஒரு கரு இது ஆனாலும் இன்னும் உயிர்ப்புடன் இருந்துகொண்டு இருக்கிறது. இந்த கருவை அடிப்படையாக கொண்ட கதைகள், உண்மையோ அல்லது கற்பனையோ, இளைய தலைமுறைக்கும் பிடிக்கிறது பழைய தலைமுறைக்கும் பிடிக்கிறது. ஏனென்றால் அவை கல்லூரி காலங்களில் தவறவிட்ட காதல்களையும் உறவுகளையும் பழைய தலைமுறையினருக்கு நினைவூட்டி விடுகின்றன.
திருமணம் என்று வரும்போது நடைமுறை சிக்கல்கள், வேலை மற்றும் வருமானம், என்று எல்லாவற்றையும் யோசிக்க வேண்டியுள்ளது. நீண்டகால திட்டமிடுதல் தேவைப்படுகிறது.
அற்பமான நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்று இந்த கரு தோன்றக்கூடும். எதிர்பாலினர் மேல் தோன்றும் கவர்ச்சி அல்லது காமம் மட்டுமே உண்மையான காதலாகாது என்பது மூத்த தலைமுறையினர் கருத்து. காதலுக்கு தன்னலமற்ற அன்பும் அக்கறையும் முக்கியம். திருமணம் என்று வரும்போது நடைமுறை சிக்கல்கள், வேலை மற்றும் வருமானம், என்று எல்லாவற்றையும் யோசிக்க வேண்டியுள்ளது. நீண்டகால திட்டமிடுதல் தேவைப்படுகிறது. உடல் மற்றும் மனப்பொருத்தமும் தேவை.
தங்களுக்கு தெரிந்த வட்டத்தில் திருமணம் என்பது மேற்கூறியவைக்கு நிச்சயமளிக்க கூடியதாக இருக்கிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் இன்னும் நடைமுறையில் இருக்கும் நமது சமூகத்தில், சொந்த சாதியில் நடைபெறும் திருமணம் ஆரம்பகட்ட சிக்கல்களை எளிதாக்க ஓரளவு உதவுகிறது. இதை ஆணும் பெண்ணும் ஒரே சமூக பின்னணியிலிருந்து வருவதினால் ஏற்படும் ஒரு பயன் எனலாம். மதம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் போன்ற விஷயங்களிலும் உள்ள பிணைப்பு ஆணும் பெண்ணும் ஒரு உறவில் நுழைய உதவியாக இருக்கும்.
பெற்றோர்களை பொறுத்த வரை, சொந்த சாதிக்குள் நடக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஒரு பாதுகாப்பு உணர்வை கொடுக்கிறது. நமக்கு தெரிந்தவர்கள் என்ற நம்பிக்கை அங்கே இருக்கிறது. மட்டுமல்ல தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்று மனிதனுக்குள் இருக்கும் ஒரு அடிப்படை உள்ளுணர்வுக்கு அது தீனியாகிறது. நம்மில் சிலருக்கு, சாதி என்பது சிலரை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று கட்டமைப்பது. அடிப்படை சமூக கலப்பையே பாதிக்கும் சாதி என்ற ஒன்று திருமணம் போன்ற அந்நியோன்யமான உறவின் மேல் தன்னுடைய தாக்கத்தை செலுத்தாமல் இருக்குமா?
பெண்களின் திருமண வயதை 21 என்று உயர்த்தியதை எதிர்த்து போராடும் சமூக போராளிகள், நாம் ஒரு சமூகமாக எங்கிருக்கிறோம் என்பதின் அடையாளமாக இருக்கிறார்கள். பெரும்பாலான ஆணவ கொலைகளில் பாதிக்கப்பட்ட பெண் 21 வயதுக்கு கீழுள்ளவளாக இருக்கிறாள். கொலையில் சென்று முடியும் கலப்பு திருமணங்களில் கல்லூரி அல்லது பள்ளிகளில் ஏற்படும் காதல் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. உடுமலைப்பேட்டை சங்கர் மற்றும் கவுசல்யா வழக்கில், கவுசல்யாவின் வயது 19. உசிலம்பட்டியில் 2014ல் ஆணவக்கொலை செய்யப்பட்ட விமலாதேவியின் வயது 19.
சாதி மறுப்பு போராளிகள், இந்த வயது எனும் காரணத்தைத்தான் கலப்பு திருமணங்களை எதிர்க்கும் பெற்றோர் கையிலெடுப்பார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார்கள். பெண்ணை வயது வராதவள் என்பதை நிரூபிப்பதன் மூலம் பையனை போக்சோ சட்டத்தின் கீழ் கற்பழிப்பு புகாரில் கைது செய்ய எல்லா முயற்சிகளும் எடுப்பார்கள்.
பெரியவர்கள் காமம் அல்லது பாலின ஈர்ப்பு என்று சொல்லும் இந்த காதலுக்கு பின்னால் தோற்றம், நடத்தை, அணுகுமுறை மற்றும் தன்மை என்று பல்வேறு காரணிகள் உள்ளன.
இள வயதில் வரும் காதலுக்கு சாதி ஏற்றத்தாழ்வுகள் பெரும்பாலும் ஒரு பொருட்டல்ல. ஆணும் பெண்ணும் சந்திக்கும்போது நடக்கும் ஒரு மாற்றம் காதலாக மலர்கிறது. பெரியவர்கள் காமம் அல்லது பாலின ஈர்ப்பு என்று சொல்லும் இந்த காதலுக்கு பின்னால் தோற்றம், நடத்தை, அணுகுமுறை மற்றும் தன்மை என்று பல்வேறு காரணிகள் உள்ளன. கலப்பு மணங்களை எதிர்க்கும் பாமகவின் ராமதாஸ் போன்றவர்கள் இதைத்தான் நாடக காதல் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். பட்டியலினத்து இளைஞர்கள் நன்றாக உடைஉடுத்தி, கண்ணாடி அணிந்து, இருசக்கர வண்டிகளில் வந்து உயர்சாதி பெண்களை மயக்குவது என்று சதித்திட்டமாக அதை காணுகிறார்கள்.
அப்படியொன்றும் உயர்சாதி பெண்கள் அப்பாவிகளோ யதார்தத்திற்கு அப்பாற்பட்டவர்களோ அல்ல. தங்கள் சாதி இளைஞர்களிடம் இல்லாத ஒன்றை அவர்கள் பட்டியலின இளைஞர்களிடம் காணுகிறார்கள். சட்டத்தினால் உறுதிசெய்யப்பட்ட உதவிகளை அறிந்திருக்கும் பட்டியலின இளைஞர்கள், படிப்பு தங்களை உயர்த்தும் என்று உணர்ந்திருக்கிறார்கள். சாதி ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் தங்களால் உயர முடியும் என்று அவர்களுக்கு தெரியும். இந்த உணர்வு அவர்களுக்கு ஒரு முதிர்ச்சியையும் நிதானத்தையும் தருகிறது.
மாறாக, உயர்சாதி இளைஞர்கள் சாதி என்ற மிதப்பில் இருக்கிறார்கள். சராசரிக்கு குறைவான படிப்பு ஒரு நிச்சயமற்ற எதிர்காலம் என்றிருந்தாலும், அவர்களது உயர்சாதி பிறப்பு யதார்த்தத்தை மறைக்கிறது. சாதி என்னும் ஒன்று அவர்களது ஆண் திமிரை அதிகப்படுத்துகிறது. சாதி அமைப்பில் பட்டியல் இனத்திலிருந்து வரும் இளைஞனிடம் பெண்ணை அடிமைப்படுத்த நினைக்கும் அந்த திமிர் பொதுவாக இருப்பதில்லை. அந்த நடத்தை சில உயர்சாதி பெண்களுக்கு அவனை மிகவும் உகந்தவனாக மாற்றுகிறது.
அகமண முறையின் தீமை பற்றி புதியதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சமூகத்தின் நீண்டகால நன்மைக்காகவாவது திருமணங்கள் சாதியை கடந்து சென்றாகவேண்டும். கலப்பு மணங்கள் சமூக வேற்றுமைகளை குறைக்கும். ஆரோக்கியமான தலைமுறைகளுக்கு மரபணுக்களின் கலப்பு அவசியம்.
நமது சமூகம் முன்னேறும்போதும், தொழில் வாய்ப்புகள் பன்முகமாகும் நிலையில், முதிர்ச்சியான திருமணத் தேர்வுகள் இயல்பாகவே மற்ற காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். அப்படியாகும் பட்சத்தில், சாதி எதிர்ப்பாளர்கள் விடலை காதலின் மீதான திருமணங்களுக்கு சட்டபூர்வமாக கொடுக்கப்படும் பாதுகாப்பின் மீது மட்டும் அபரிமிதமான முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டியிருக்காது.
Read in : English