Read in : English
தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், அரசியல் தலைவர்களின் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. திமுக பொதுச்செயலாளராக இருந்த மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டையொட்டி அவரது நூல்கள் அண்மையில் நாட்டுடமையாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நாவலர் நெடுஞ்செழியனின் நூல்களை தமிழக அரசு நாட்டுடமையாக்கியது. 1963ஆம் ஆண்டு பாரதியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 164 பேரின் படைப்பு•கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
இதுவரை நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை எழுதிய மற்ற முக்கிய அரசியல் தலைவர்களின் விவரம்:
ம.பொ. சிவஞானம்:
தமிழரசுக் கட்சியின் நிறுவனர். சட்ட மேலவைத் தலைவராக இருந்தவர். சிலப்பதிகாரத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆளுமையால் சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்ப்டடார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மதராஸ் மனதே என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, சென்னையைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் போராடியவர். அவரது போராட்டத்தினால்தான் திருத்தணி தமிழகத்துடன் சேர்க்கப்பட்டது. கன்னியாகுமரியும் செங்கோட்டையும் தமிழகத்துக் கிடைக்கப் பாடுபட்டவர். 1984ஆம் ஆண்டில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற நூலும் 2006இல் அவரது அனைத்துப் படைப்புகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன.
அண்ணா:
பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1935இல் நீதிக் கட்சியில் சேர்ந்த அவர், பெரியாருடன் திராவிட கழகத்தில் இணைந்து, பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புவதில் ஈடுபட்டார். பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து விலகி 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இந்திய சீனப் போருக்குப் பிறகு, 1963ஆம் ஆண்டில் தனி திராவிட நாடு என்ற கொள்கையை கைவிட்டார். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அந்தத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து தமிழக முதல்வரானார். அண்ணாவின் முக்கியக் கொள்கை முழக்கம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. அண்ணாவின் ஆரியமாயை என்ற நூல் தடை செய்யப்பட்டு, பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, 1995இல் அவரது படைப்பு•கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.
ப. ஜீவானந்தம்:
ஜீவா என்று அன்புடன் அழைக்கப்படும் ஜீவானந்தம் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தியால் ஈர்க்கப்பட்டு, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இந்த தேசத்தின் சொத்து என்று காந்தியால் பாராட்டப்பட்டவர் ஜீவா. பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1946இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் நாடு சுதந்திரம் பெறும் வரை அவர் தலைமறைவாக இருந்தார். அவரது வாழ்நாளில் பெரும் பகுதியை போராட்டத்திலும் அதற்காக சிறையிலும் கழித்தவர். அதனாலேயே ஜீவா ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு என்று அவரது தொண்டர்கள் சொல்வார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ஜனசக்தி இதழின் ஆசிரியராக இருந்தவர். 1952ஆம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1959இல் தாமரை இலக்கிய இதழையும் . 1961இல் கலை இலக்கியப் பெருமன்றத்தையும் தொடங்கியவர். சிறந்த பேச்சாளர். அவரது படைப்புகள் 1998ஆம் ஆண்டில் அவரது படைப்புகள் நாட்டுடையமையாக்கப்பட்டன.
ஏ.எஸ்.கே.:
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவர் ஏஎஸ்கே. விடுதலைப்போராட்ட வீரர். தொழிற்சங்கத் தலைவர். விடுதலைப் போராட்டத்திலும் அதற்குப் பிறகும் 15 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். இவரது இயற்பெயர்ஆவியூர் சீனிவாச அய்யங்கார் கிருஷ்ணமாச்சாரி. 1969இல் தனது பெயரை ஏ.எஸ்.கே. என்று அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொண்டார். அம்பேத்கர் வாழ்க்கையும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும், பகுத்தறிவின் சிகரம் ஈ.வெ.ரா., கடவுள் கற்பனையே: புரட்சிகர மனித வரலாறு, தொழிற்சங்கம், உலக கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ஆங்கிலத்தில் அவர் எழுதிய கவிதைகள் புத்தகமாக வந்துள்ளன. அவரது படைப்புகள் 1998இல் நாட்டுடைமையாக்கப்பட்டன.
எஸ்.எஸ். தென்னரசு:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பிறந்தவர் எஸ்.எஸ். தென்னரசு. 1949லிருந்து திமுகவில் செயல்பட்டு வரும் அவர், வட்ட செயலாளர், மாவட்ட செயலாளர், அமைப்புச் செயலாளர் போன்ற பதவிகளை வகித்தவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று ஓராண்டு சிறையில் இருந்தவர். அவசர நிலை காலத்திலும் மிசாவில் சிறையில் இருந்திருக்கிறார். 1989இல் திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். Êசட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அவர் சிறுதைகளையும் சமூக நாவல்களையும் வரலாற்று நாவல்களையும் எழுதியிருக்கிறார். அவரது படைப்புகள் 2007-08இல் நாட்டுடைமையாக்கப்பட்டன.
சிபி சிற்றரசு:
சி.பி. சிற்றரசு காஞ்சிபுரத்தில் பிறந்தவர். அவரது பெயர் சின்னராசு. கு.மு. அண்ணல் தங்கோவின் தாக்கத்தால் தனது பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டவர். அண்ணாவுடன் இணைந்து நீதிக் கட்சியில் பணியாற்றிய அவர், 1949இல் திமுக தொடங்கியபோது அதில் இணைந்து செயல்படத் தொடங்கினார். 1950களில் மார்டன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்தவர். 1960இல் வெளிவந்த ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். உலகைத் திருத்திய உத்தமர்கள், எமிலி ஜோலா, சரிந்த சாம்ராஜ்யங்கள், சுதந்திரத் தந்தை ரூசோ உள்பட பல்வேறு புத்தகங்களை எழுதியவர். கதைகளும் நாடகங்களும் எழுதியிருக்கிறார். 1970லிருந்து 1976வரை தமிழக சட்ட மேலவைத் தலைவராக இருந்தார். திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நம் நாடு’ இதழின் ஆசிரியராக இருந்தவர். அவரது படைப்புகள் 2007-08இல் நாட்டுடைமையாக்கப்பட்டன.
ஏவிபி ஆசைத்தம்பி:
விருதுநகரில் பிறந்தவர் ஏவிபி ஆசைத்தம்பி. திராவிடர் கழகத்தில் விருதுநகர் நகரக் கழகச் செயலாளர், ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர், மாநிலக் கழகச் செயற்குழு உறுப்பினர் பதவிகளை வகித்தவர். திமுக தொடங்கியபோது, அக்கட்சியில் இணைந்தார். திமுகவின் பொதுக்குழு உறுப்பினராகவும் செயற்குழு உறுப்பினராகவும் சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினராகவும் இருந்தவர். குடியரசு, திராவிட நாடு, விடுதலை இதழ்களில் எழுதியிருக்கிறார். 1948இல் தனியரசு என்ற இதழை நடத்தினார். திராவிட சினிமா என்ற இதழையும் நடத்தினார். மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பான சர்வாதிகாரி (1951) படத்துக்கு வசனம் எழுதினார். பாரதிதாசன் வசனம் எழுதிய வளையாபதி திரைப்படத்திலும சில காட்சிகளுக்கு வசனம் எழுதியிருக்கிறார். துப்பறியும் நாவல்கள், சிறுகதைகள், அரசியல் புத்தகங்களை எழுதியிருக்கிறார். 1950களில் காந்தியார் சாந்தியடைய என்ற அவரது சிறுநூலை அன்றைய தமிழ்நாடு அரசு தடை செய்தது. அதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீனில் வெளிவருவதற்கு முன் அவரது தலை மொட்டை அடிக்கப்பட்டது. இதைக் கண்டித்து அண்ணா திராவிடநாடு இதழில் அகிம்சா ஆட்சியின் அழகினைப் பார் என்று திராவிட நாடு இதழில் கட்டுரை எழுதினார். 1957இல் ஆயிரம் விளக்குத் தொகுதியிலிருந்தும் 1967இல் எழும்பூர் தொகுதியிலிருந்தும் தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 இல் வடசென்னையிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது படைப்புகள் 2007-08இல் நாட்டுடைமையாக்கப்பட்டன.
டி.கே. சீனிவாசன்:
திருச்சியைச் சேர்ந்த டி.கே. சீனிவாசன் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றில் இருந்த அவர், பின்னர் திமுகவில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினராக இருந்தார். திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராகவும் மாநிலங்களவைக் கட்சித் தலைவராகவும் இருந்தவர். தத்துவ வரலாறு குறித்து அவர் ஆற்றிய சொற்பொழிவுகளை அடுத்து அவரை தத்துவமேதை டிகேசி என்று அழைக்கப்பட்டார். 1952இல் அவர் எழுதிய ஆடும் மாடும் நாவல் பிரபலமானது. கதைகள் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது படைப்புகள் 2007-08இல் நாட்டுடைமையாக்கப்பட்டன.
இராம அரங்கண்ணல்:
நாகப்பட்டினம் மாவட்டம் கோமல் ஊரில் பிறந்தவர். அவரது சிறுகதையிலிருந்த உருவாகிய செந்தாமரை, மகனே கேள், பொன்னு விளையும், பூமி, பச்சை விளக்கு, அனுபவி ராஜா அனுபவி போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார். அண்ணா எழுதிய கதை, தாய் மகளுக்குக் கட்டிய தாலி என்ற திரைப்படமாக உருவானபோது அதற்கு வசனம் எழுதினார். தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களைத் தயாரித்தவர். 1949இல் திமுக தொடங்கியபோது அக்கட்சியில் சேர்ந்தார். 1962,1967 ஆம் ஆண்டுகளில் மயிலாப்பூர் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971இல் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1970ஆம் ஆண்டு குடிசைப் பகுதி மாற்று வாரியத் தலைவரானார். 1976இல் திமுகவிலிருந்து வெளியேறி மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் பின்னர் அக்கட்சி அதிமுகவில் இணைக்கப்பட்ட போது அவரும் அதிமுகவில் இணைந்தார். 1984இல் மீண்டும் திமுகவில் சேர்ந்தார். அவர் எழுதிய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் போன்றவற்றை புத்தகங்களாக வெளிவந்துள்ளன. 2007-08ஆம் ஆண்டில் அவரது படைப்பு•கள் நாட்டுட்டுடைமையாக்கப்பட்டன
மு. தமிழ்க்குடிமகன்:
தமிழ்க்குடிமகனின் இயற்பெயர் சாத்தையா. தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவர். மதுரை யாதவர் கல்லூரியில் முதல்வராக இருந்தார். 1989, 1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராநார். 1989முதல் 1991 வரை தமிழக சட்டப்பேரவைத் தலைவராக இருந்தார். 1996 முதல் 2001வரை தமிழ் வளர்ச்சி மற்றும் அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார். 2001 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். அவரது படைப்புகள் 2018இல் நாட்டுடமையாக்கப்பட்டன.
Read in : English