Read in : English
மதுரைக்கு தத்தனேரி மயானம் ஈம சடங்குகள் செய்யும் முக்கியமான இடங்களில் ஒன்று. இங்கு கடந்த 45 வருடங்களுக்கு மேலாக மயான உதவியாளர் வேலை செய்து வருபவர் ஹரி அவர்கள். தத்தனேரியில் ஹரியை தெரியாதவர்கள் குறைவு எனலாம். “அடிக்கடி அவார்ட் வாங்குவாரே அவரத்தானே கேக்குறீங்க,” என்கிறார் மயானத்தில் வேலை செய்யும் ஒருவர்.
ஹரி மயானத்துக்கு வந்தபொழுது அவருக்கு சற்றேறக்குறைய 14 வயது இருக்கலாம். அந்த 70களில் தத்தனேரி மதுரையின் ஒதுக்குபுறமான பகுதி. பகலில் ஆட்கள் வருவதே குறைவு. இரவில் சொல்லவே வேண்டாம் என்கிறார் ஹரி. மயானத்தில் எடுபிடி வேலைகள் செய்த நேரம் போக சிறுவனான ஹரிக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில், அங்கிருந்த ஒரு வேப்பஞ் செடியோடு அவரது பொழுது கழிய தொடங்கியது.
ஹரி 2600 மேற்பட்ட மரங்களை மதுரையின் பல்வேறு இடங்களில் நட்டு வளர்த்திருக்கிறார். கடந்த 2018 ஆண்டு அதற்காக அவருக்கு பசுமை நாயகன் விருது வழங்கப்பட்டது.
அந்த செடியின் மீது ஆர்வமான அவர், தொடர்ந்து செடிகள் நட தொடங்கினர். 59 வயதான ஹரி 2600 மேற்பட்ட மரங்களை மதுரையின் பல்வேறு இடங்களில் நட்டு வளர்த்திருக்கிறார். கடந்த 2018 ஆண்டு அதற்காக அவருக்கு பசுமை நாயகன் விருது வழங்கப்பட்டது.
![](https://inmathi.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-28-at-9.58.29-PM-177x300.jpeg)
தான் சிறுவனாக இருந்தபோது நட்டு வளர்த்த வேப்ப மரங்களுடன் ஹரி
ஆனால் செடி நடுவது மட்டும் ஹரியின் சிறப்பு அல்ல. தத்தனேரியை சுற்றி வசிக்கும் பல ஏழை மக்களுக்கு அவர்தான் ஆபத்பாந்தவன். விதவைகளுக்கு உதவி, ஏழை குழந்தைகளின் கல்வி, உடல் ஊனமுற்றோருக்கு தள்ளுவண்டி, முதியோருக்கு கண் கண்ணாடி, மகப்பேறு மருத்துவமனைக்கு கட்டில்கள் என்று ஹரி செய்யாத உதவிகள் இல்லை. மகப்பேறு மருத்துவமனைக்கு கட்டில் வாங்கி கொடுத்த கதை கொஞ்சம் நெகிழ்வானது. “அது நடந்து பலவருடங்கள் கடந்து விட்டன. பிரசவத்தின்போது இறந்த ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு ஈம சடங்கு செய்யவேண்டி வந்தது. அது என்னை கொஞ்சம் உலுக்கிவிட்டது. எனவே மகப்பேறு மருத்துவமனைக்கு இரண்டு கட்டில்கள் வாங்கி கொடுத்தேன்,” என்கிறார் ஹரி.
விதவைகளுக்கு உதவி, ஏழை குழந்தைகளின் கல்வி, உடல் ஊனமுற்றோருக்கு தள்ளுவண்டி, முதியோருக்கு கண் கண்ணாடி, மகப்பேறு மருத்துவமனைக்கு கட்டில்கள் என்று ஹரி செய்யாத உதவிகள் இல்லை.
சமீபத்தில் மூன்று குழந்தைகள் பள்ளிக்கட்டணம் கட்ட இயலாததால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டதை கேள்விப்பட்ட ஹரி அவர்களுக்கு பள்ளிக்கட்டணம் கட்டியுள்ளார். “தன்னால் முடிந்த எல்லா உதவியும் அவர் செய்வார். ஆனால் அவர்கள் நிஜமாகவே முடியாதவர்களாக இருக்கவேண்டும். காசு இருந்து உதவி கேட்பவர்கள் தன்னுடைய உறவினர்கள் ஆனாலும் அவர் செய்ய மாட்டார்,” என்கிறார் தத்தனேரியில் வசிக்கும் தமிழ்செல்வி அவர்கள்.
ஈம சடங்குகள் செய்ய வசதி இல்லாத ஆயிரக்கணக்கான உடல்களை எரித்திருப்பதாக சொல்லும் ஹரி, மருத்துவமும் சுகாதாரமும் வளராத 70களில் மனிதர்கள் எப்படி குருவிகளை போல இறந்து போனார்கள் என்று நினைவு கூறுகிறார். “மருத்தவ வசதிகள் பலமடங்கு பெருகிவிட்டன. ஆனால் அந்த காலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த சிலருக்கு நான் ஈம சடங்குகள் செய்திருக்கிறேன். நூறு வயதை கடந்தவர்கள் பலர் இருந்தார்கள். இப்பொழுது அப்படி பட்டவர்களை பார்ப்பது அரிது,” என்று சொல்கிறார் ஹரி.
ஹரி தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். “என் மகள் குடும்பத்தினர் சிறிது சிரமத்தில் இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்து பார்த்து கொள்கிறேன். பணவசதிக்கு கொஞ்சம் சிரமம்தான் ஆனால் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்ல முடியவில்லை,” என்கிறார் ஹரி.
பள்ளிக்கு சென்றதில்லை எனினும் பட்டறிவினால் ஹரி தெரிந்து வைத்திருப்பது அதிகம். மரம் நடுவதில் நான் ஒரு கஜினி முஹம்மத் என்கிறார் சிரித்துக்கொண்டே. அவர் நட்ட பல மரக்கன்றுகளை மயானத்திற்கு வரும் மக்கள் நாசப்படுத்தி விடுவதாக வருத்தம் தெரிவிக்கும் அவர், இன்னும் 400 மரக்கன்றுகள் நடும் எண்ணத்தில் இருக்கிறார். “அரசு ஊழியராக நான் ஓய்வு பெற இன்னும் ஏழு மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் அவற்றை நட்டுவிடுவேன். பணி ஓய்வு பெற்றாலும் இங்கேதான் எங்கேயாவது இருந்து கொண்டிருப்பேன். மக்களுக்கு உதவி செய்ய ஓய்வு என்று ஒன்று உண்டா என்ன?” என்பது அவரது கேள்வி.
Read in : English