Site icon இன்மதி

ஐ-டி வேலையும் வேண்டாம்; இண்டர்நெட்டும் வேண்டாம்; பசுமாடுகள் வளர்க்கும் இளைஞர்

வி. கே. கிரிஷ்

Read in : English

மாடு விற்பவர் 35,000 ரூபாய் விலைசொன்னார். வாங்குபவரான கிரிஷ்க்கு 27 வயதிருக்கலாம்; நவீன உலகப் பணியாளர் தோற்றம். அவருக்கு இந்த விளையாட்டுத் தெரியும்.

விடாப்பிடியாகப் பேரம்பேசி விலையைக் குறைத்துகொண்டே வந்தார். மாலைப்பொழுது இருட்டாகிக் கொண்டே வந்தது. விற்பவர் தன் சரக்கை விற்றுத்தீர்க்கும் ஆர்வத்தில் இருந்தார் என்பதைக் கிரிஷ் புரிந்துகொண்டார். விலை கட்டுப்படியாவது போல தெரிந்தவுடன், அவர் தன்கையை விற்பவனின் கையோடு சேர்த்து அவற்றின்மேல் ஒருதுண்டைப் போர்த்தினார்.

இங்கே வியாபாரம் இப்படித்தான் நடக்கும். இருவரின் விரல்களும் துண்டுக்கடியில் குறிப்பிட்ட இடத்தில் இணைவது கிட்டத்தட்ட வாங்கிய பொருளுக்குப் பில் போடுவதற்குச் சமம். விற்பவனின் விரலும், வாங்குபவனின் விரலும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டால் இருவரும் ஒத்துக்கொள்ளக் கூடிய இறுதிவிலை என்று அர்த்தம். சென்னையில் வளர்ந்த வி. கே. கிரிஷ் சமீபகாலம் வரை ஒரு சுகாதார நிறுவனத்தில் ‘கன்ஃபிகரேஷன் அனலிஸ்டாக’ இருந்தவர். இப்போது வேலூர் வாரச்சந்தையில் பசுமாடு ஒன்று வாங்கிக் கொண்டிருந்தார்.

கிரிஷிடம் தற்போது மூன்று பசுமாடுகள் இருக்கின்றன. அவர் படித்த விஐடி-க்கு அருகில் அரை ஏக்கர் நிலத்தை அவருக்குக் குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார் அவரது குடும்ப நண்பர் ரங்கநாதன். அந்த இடத்தில் கிரிஷ் ஒரு மாட்டுத்தொழுவம் கட்டியிருக்கிறார். டிசம்பர் 21-ஆம் தேதியில் அவர் வாங்கிய பசுமாட்டைத் தன்வீட்டில் ஏழுநாள் தனிமைப்படுத்தி வைத்துவிட்டு அதை மாட்டுத்தொழுவத்திற்குக் கொண்டு செல்வார். “மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பண்ணைநிலத்திற்குக் கூட்டிச் செல்வதற்கு முன்பு பசுவிற்கு ஏதாவது நோய் இருக்கிறதா என்று பார்ப்பேன்,” என்று அனுபவப்பட்ட ஒரு விவசாயி போல பேசுகிறார் கிரிஷ்.

பள்ளிநாட்களில் விடுமுறையின் போது கிரிஷ் சென்னையிலிருந்து தன்குடும்பத்தோடு வேலூரில் உள்ள தன்தாத்தா வீட்டிற்குச் செல்வார். அங்கே ஒரு பசுமாடு இருந்தது. அது ஒவ்வொருநாளும் மூன்றுலிட்டர் பால்சுரக்கும். மாட்டோடு நேரத்தைச் செலவழிப்பது அவருக்குப் பிடித்திருந்தது.

மாட்டுக்குத் தீவனம் வைப்பது, அதன் தலையைத் தடவிக்கொடுத்து மேய விடுவது அவருக்குப் பிடித்தமான செயற்பாடுகள். அந்த நாட்களை நினைத்து நினைத்துப் போற்றிவருகிறார் கிரிஷ். ஆனால் அவர் தாத்தா மாட்டைக் கவனிக்க முடியாததால் அதை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டார்.

வாழ்க்கைமுறை மாற்றம்

நடுத்தர குடும்பத்து வழக்கத்தின்படி, பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் கிரிஷ் சாஃப்ட்வேர் படித்தார். வி.ஐ.டியில் ஒருங்கிணைந்த ஐந்துவருடம் எம்.எஸ் கோர்ஸ் முடிந்ததும், ஒரு தனியார் சுகாதார நிறுவனத்தில் சேர்ந்தார். வேலையில் சேர்ந்து ஒருவருடம் கழித்து, முகநூலை விட்டு வெளியே வந்தார். அடுத்த வருடத்தில் டிவிட்டரை விட்டார்.

மூன்று வருடத்திற்குள் வேலையை விட்டார். வேலூரில் உள்ள தாத்தாவின் வீட்டுக்குக் குடிபோனார். தாத்தாவின் பசுமாட்டுக்குப் பிறந்த பசுக்களை மீண்டும் வாங்கி அவற்றை வளர்க்க ஆரம்பித்தார். “மாடு மேய்த்தாலும் கூட இனி யாரிடம் கைகட்டி அடிமைபோல வேலை பார்க்க வேண்டாம் என்று நான் தீர்மானித்தேன்,” என்று சொல்கிறார்.

இது வெறும் வேலை மாற்றம் அல்ல; வாழ்க்கைமுறை மாற்றம்; மனமாற்றம்; முன்னுரிமைகளின் மாற்றம். தனது மின்னஞ்சல் பெட்டியைக் காலிசெய்துவிட்டு மின்னஞ்சல் கணக்கை மூடிவிட்டார். செய்தித்தாள்களையோ செய்திகளையோ வாசிப்பதில்லை. “அடுத்த கிராமத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் தேவை எனக்கில்லை.

“மாடு மேய்த்தாலும் கூட இனி யாரிடம் கைகட்டி அடிமைபோல வேலை பார்க்க வேண்டாம் என்று நான் தீர்மானித்தேன்,” என்று சொல்கிறார்

என் பசுமாடுகளை வளர்க்கிறேன்; கொஞ்சம் பணம் பார்க்கிறேன்; பால் விற்கிறேன்; என்னை எனக்குள்ளே வைத்துக் கொள்கிறேன்; அதனால் சந்தோசமாக இருக்கிறேன்,” என்று சொல்லும் கிரிஷ் மேலும் தொடர்கிறார்: “என் ஸ்மார்ட்போனை தூர எறிந்துவிட்டு, நோக்கியா போனை வாங்கிக் கொண்டேன். இப்போது நான் சமூக ஊடகங்களில் இல்லை.”

கிரிஷின் மூன்று மாடுகளும் நாளுக்கு பத்து லிட்டர் பால் தருகின்றன. அவரது நாள் காலை 4.30—க்கு ஆரம்பமாகி இரவு 9.30-க்கு முடிகிறது. பசுக்களுக்கு தீவனமும் தண்ணீரும் கொடுக்க வேண்டும். பின் பால்விற்க அலையவேண்டும். அவரது தினசரி வாழ்க்கை மிகவும் இறுக்கமாக இருப்பதினால், வேறு எதற்கும் அவரிடம் நேரமில்லை.

ஒரு பசு சூல்கொண்டிருக்கிறது. பின்னர் பால்சுரக்க பொங்கல் அன்று இன்னொரு பசுக்கன்று வரலாம். “இதுதான் அந்த மாட்டிற்கு முதல்பிரசவம். அதனால் 20 நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதித்தோ பிரசவம் ஆகலாம்,” என்று சொல்கிறார் கிரிஷ்.

ஒரு பால்காரர் தினமும் வந்து பால் கறக்கிறார். கிரிஷ் காலையிலும் மாலையிலும் வாடிக்கையாளர்களுக்குப் பால் விற்கிறார். “இப்போது வருமானத்தை விட செலவுகள் அதிகமாகின்றன. என்னிடம் ஏழு பசுமாடுகள் இருந்தால், வரவும் செலவும் சரியாக வரும். அதிகப்பட்சம் 10 என்பதுதான் ஒருவரிடம் இருக்கும் பசுக்களின் எண்ணிக்கை,” என்கிறார்.

இயற்கையோடு ஒன்றிவாழ்தல்

சமீபத்து மழை தீவனப் பயிர்களை நாசமாக்கிவிட்டதால், விலைஅதிகமான பச்சைப் புல்லை வாங்குவதற்கு அவர் அதிகப்பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது.

அந்தப் பண்ணை கிரிஷை பசுமாடுகளோடு மட்டுமல்ல, இயற்கையோடும் நெருங்க வைத்திருக்கிறது. மழை நேரத்தில் பண்ணையில் வெள்ளம் சூழ்ந்ததால் நண்டுகள் படையெடுத்தன. தவளைகளும் அதிகமாகி விட்டன.

அதனால் பாம்புகள், நல்ல பாம்புகள் வரத்தும் தொடங்கி விட்டது. ”பசுமாடுகளின் அருகே ஒரு விஷப் பாம்பு கிடந்தது. நல்லவேளை; நான் மட்டும் அதை மிதித்திருந்தால், நான் காலியாகி இருந்திருப்பேன்,” என்று சொல்கிறார் கிரிஷ் புன்னகையுடன்

Share the Article

Read in : English

Exit mobile version