Site icon இன்மதி

மதி மீம்ஸ்: நடமாடும் டீ கடையில் அரசியல் பேச டீ கடை பெஞ்ச் இருக்குமா?

Read in : English

தேயிலை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நாடு சீனா. ஆங்கிலேயர் காலத்தில் அசாம் பகுதிகளில்  பயிரிடப்பட்ட தேயிலை, நீலகிரி உள்ளிட்ட மலைப்  பகுதிகளில் பயிரிடப்பட்டது. ஆங்கிலயேர் காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, மலேசியா, இலங்கையில் தேயிலைத் தோட்டங்களுக்கு கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய கூலிகளாகச் சென்ற மலையகத் தமிழர்களின் வாழ்க்கை சொல்லொணா துயரம் கொண்டது. இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்ததை அடுத்து இந்தியாவுக்கு மீண்டும் அழைத்து வரப்பட்ட அந்தத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வு இன்னனும் விடியாததாகவே உள்ளது என்பதும் வரலாறு.

இலங்கைத் தோட்டங்களில் வாழும் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை தெளிவத்தை ஜோசப் எழுதிய சிறுகதைகள் ‘நாமிருக்கும் நாடே’ என்ற தலைப்பிலும் என்.எஸ்.எம். ராமையாவும் கதைகளாக எழுதிய கதைகள் ‘ஒரு கூடைக் கொழுந்து’ என்ற தலைப்பிலும் புத்தகங்களாக வெளியாகியுள்ளன.

தேயிலை எஸ்டேட் தொழிலாளர்களின் அவலமான வாழ்க்கையைச் சித்தரிக்கும் நாவல் டி. செல்வராஜ் எழுதிய ‘தேநீர்;. இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு 1984இல் ஜெயபாரதி இயக்கத்தில் ‘ஊமை ஜனங்கள்’ என்ற படம் வெளியானது. இந்தப் படத்தில் பாக்யராஜ் நடித்திருக்கிறார்.

1930களில் நடந்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் ‘ரெட் டீ’ என்று பிஎச் டேனியல் ஆங்கிலத்தில் எழுதிய நாவலை, ;எரியும் பனிக்காடு’ என்ற தலைப்பில் இரா. முருகவேள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தக் கதை பாலாவின் இயக்கத்தில் ‘பரதேசி’ என்ற படமாக 2013இல் வெளிவந்தது.

அசாமில் அரிய வகை கோல்டன் டீ தூள் ஒரு கிலோ ரூ.99,999 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட செய்திகள் நம்மை ஆச்சரியமூட்டுகின்றன. இந்த டீ எப்படி ருசியாக இருக்கும், அதை நம்மால் ஒரு முறையாவது குடித்துப் பார்க்க முடியுமா என்ற ஆவலைத் தூண்டுகின்றன. எனினும்கூட, சாமானிய மக்களால் விரும்பி அருந்தக்கூடிய அன்றாட பானம் டீ தான். சாமானியர்களால் வாங்கக்கூடிய குறைந்த விலை.

வீட்டில் தேநீர் அருந்துவதைவிட டீ கடைகளுக்குப் போய், அங்கு திறந்த வெளியில் போடப்பட்டிருக்கும் பெஞ்சில் அமர்ந்து டீ சாப்பிடுவதே தனி சுகம் பலருக்கு. அங்கு, டீ கடைக்காரர் வாங்கிப் போட்டிருக்கும் அன்றைய நாளிதழைப் பார்த்து படித்து விட்டு, அரசியல் விவகாரங்கள் குறித்த விவாதம் களை கட்டிவிடும். ஊர் பெரியவர்கள் சப்தம் போட்டு பேசுவதை சின்னப் பையன்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார்கள். சில நேரங்களில் பத்திரிகைகளை ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம்.

இது சிறு கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் இன்றைக்கும் பார்க்கக் கூடிய காட்சி. தேர்தல் நேரங்களில் டீ கடைகளில் அமர்ந்து அரசியல் தலைவர்கள் டீ குடிப்பது பெரிய செய்தியாகிவிடுகிறது.

தற்போது நகரங்களில் டீ கடைகளின் வெளியே டீ குடிக்க வருபர்கள் அமர்வதற்கு பெஞ்ச் போடுவது குறைந்துவிட்டது. நின்று கொண்டுதான் டீ குடிக்க வேண்டும். சில கடைகளில் அமர்ந்து டீ குடிப்பதற்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தாலும்கூட, ‘இங்கு அரசியல் பேசாதீர்கள்’ என்ற போடு போட்டுவிடுகிறார்கள்.

அரசியல் வம்பு விவகாரங்கள் கொண்ட பகுதியை வெளியிடும் தினமலரின் ‘டீ கடை பெஞ்ச்’ அந்தப் பத்திரிகை வாசகர்களிடம் பிரபலமானது டீயைப் போல.
தற்போது அரசு தொடங்கியிருக்கும் நடமாடும் டீ கடை செய்தியாகி இருக்கிறது. சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 3 கோடி மதிப்பீட்டில் நடமாடும் டீ விற்பனை கடைகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.

பழங்குடி மக்கள், சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பளிக்கம் வகையில் நடமாடும் டீ விற்பனை கடைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்களின் அனைத்துக் கட்டடங்களிலும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்ளில் இந்த நடமாடும் டீ கடைகள் செயல்படும்.

இந்த நடமாடும் டீ கடைகளில் டீ, காபி மற்றும் சிறுதானிய உணவுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்று இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் இன்கோசெர்வ் அமைப்பு தெரிவித்துள்ளது.

கேப் காபி டே, ஸ்டார்பக்ஸ் போல ஒரு பிரபலமான பராண்ட் ஆக நடமாடும் டீ கடைககளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறுகிறார்கள். அதுசரி, டீ கடைகளின் வெளியே டீ குடிக்க வருகிறவர்கள் அமர்ந்து பேச டீ கடை பெஞ்ச் போடப்படுமா?

இதுகுறித்த மீம்ஸ்கள் இதோ.

 

 

Share the Article

Read in : English

Exit mobile version