Read in : English
எதிர்பார்ப்புகளுக்கு எதிர் திசையிலோ அல்லது எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டோ இருக்கும் ஒரு படைப்பு எப்போதும் ரசிகர்களின் ஆதரவைப் பெறும்; வெளியான காலத்தில் உரிய அங்கீகாரம் பெறத் தவறினால், காலம் கடந்துகூட அப்படைப்பு வெற்றியைப் பெறலாம். தமிழ் திரையுலகில் வெளியாகும் அனைத்து படங்களையும் சரமாரியாகக் கிண்டலடித்து குப்பையில் தள்ளும்விதமாக யூடியூப்பில் விமர்சனங்களை முன்வைத்தவர் ‘ப்ளூ சட்டை’ மாறன். அவர் இயக்கியுள்ள ‘ஆன்டி இண்டியன்’ திரைப்படம் பெருமளவில் விமர்சனங்களால் பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக வெற்றியோடு கண்ணியமான அபிமானத்தையும் ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது.
மயிரிழையில் மரணம் எனும்படியான சாகச வெளியைக் கடந்து வந்திருப்பதுதான், அதன் வெற்றிக்கு முதன்மையானது. காரணம், முடிந்தவரை எந்த சார்பையும் கைக்கொள்ளாத அதன் திரைக்கதையும் பாத்திர வடிவமைப்பும் தான்!
ஓர் இஸ்லாமிய தந்தைக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் பாட்ஷா. கட்சிகளுக்காக சுவர் விளம்பரம் செய்யும் பணியைச் செய்துவரும் அவர், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு நாள் கொலை செய்யப்படுகிறார். அவரது சடலத்தை அடக்கம் செய்ய மசூதிக்கு எடுத்துச் சென்றால், சுன்னத் செய்யாதது உட்படத் தங்களது மத வழக்கங்களை அவர் பின்பற்றியதில்லை என்று கூறி திருப்பி அனுப்புகின்றனர்.
தாய் மாமன் இந்து என்பதால், இந்து முறைப்படி இடுகாட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். சான்றிதழ்படி பெயர் ‘பாட்ஷா’ என்றிருப்பதால், இப்பிணத்தை அனுமதிக்க முடியாது என்கின்றனர் அரசுப் பணியாளர்கள். இந்த நிலையில்தான், பாட்ஷாவின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு கிறித்துவ மதத்தை தழுவியதால் அம்முறைப்படி அடக்கம் செய்யலாம் என்ற யோசனை எழுகிறது. ஒவ்வொரு பிரச்சினையாகக் கிளம்ப சடலத்திற்கான போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட, இறுதியில் தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கும் ஒரு முன்கதை சொல்கிறார் இயக்குநர். அதாவது, சம்பந்தப்பட்ட தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியே வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என்ற நிலையில் ஆளும் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு காவல் துறை அதிகாரிகள் தள்ளப்படுகின்றனர். பாட்ஷாவின் பிணத்தை அடக்கம் செய்யும் விவகாரத்தில் ஏற்படும் வன்முறை, அந்தத் தேர்தலை ரத்து செய்யும் நிலையை உருவாக்குகிறது. இறுதியில் அப்பிணம் எவ்வாறு அடக்கம் செய்யப்படுகிறது என்பதோடு படம் முடிவடைகிறது.
தமிழ் திரையுலகில் வெளியாகும் அனைத்து படங்களையும் சரமாரியாகக் கிண்டலடித்து குப்பையில் தள்ளும்விதமாக யூடியூப்பில் விமர்சனங்களை முன்வைத்தவர் ‘ப்ளூ சட்டை’ மாறன்
.
மேலே சொன்ன ஒவ்வொரு வாக்கியத்தையும் தனித்தனியாக ஒரு திரைக்கதையில் பொதித்தாலே, சரமாரியாக எதிர்ப்புகள் கொட்டும். இப்படியொரு சமூகச் சூழலில், அரசு இயந்திரத்தையும் காவல் துறையின் தேர்தல் நேரச் செயல்பாடுகளையும் விமர்சித்து கதை சொல்ல பெரும் துணிச்சல் வேண்டும். அதற்காக, ‘இந்த சமூகம் எப்படியிருக்கணும் தெரியுமா’ என்ற ரீதியில் காமிராவை நோக்கிப் பிரச்சாரத் தொனியில் கருத்துகளைக் கொட்டாதது பாராட்டுக்குரிய அம்சம்.
கட்டுரைகளிலும் விவாதங்களிலும் வெட்டி அரட்டைகளிலும் நிரம்பியிருக்கும் சமகால சமூக, அரசியல், பண்பாட்டு விமர்சனங்களைக் கோர்த்து, காலத்தோடு ஒட்டிய ஒரு காட்சி ஆவணத்தில் பதிவு செய்திருப்பது சாதாரண விஷயமில்லை. அதில் குறிப்பிட்ட சில விஷயங்கள் பொதுவெளியில் பகிரங்கமாகச் சொல்லத் தயக்கம் ஊட்டுபவை. கட்சி, ஊடகங்கள் முதற்கொண்டு பாரபட்சம் பார்க்காமல் எல்லா தரப்பையும் விமர்சித்திருக்கிறது ‘ஆன்ட்டி இந்தியன்’.
இதன் விளைவாக, அனைத்து தரப்பிலிருந்தும் உமிழப்படும் வெறுப்பை, வெறித் தாக்குதல்களை, நெருக்கடிகளை அடுத்த படத்தில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார் இளமாறன். கூடவே, மிக கனமான கதைக்கருக்களை மட்டுமே கையாள வேண்டுமென்ற வளையத்தினுள்ளும் சிக்கியிருக்கிறார். முதல் படத்தின் வழியே இப்படிப்பட்ட இக்கட்டான நிலைமைக்கு ஆளான இயக்குநர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம்.
திரைக்கதை இலக்கணத்தைப் பொறுத்தவரை, நாயகனின் பக்கம் நியாயம் இருப்பதாக நம்ப வேண்டுமானால் வில்லனை மிக மோசமானவனாகச் சித்தரிக்க வேண்டும். ‘ஆன்டி இண்டியனை’ பொறுத்தவரை, படம் பார்க்கும் ரசிகர்களே நாயகர்கள் என்பதால் ஒட்டுமொத்த பாத்திரங்களும் அதனதன் பலவீனங்களுடன் நடமாடுகின்றன. வாக்குக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்றதும், மகனைப் பிணமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தாய் வாக்காளர் அடையாள அட்டையைக் கொடுத்தனுப்புவது அதற்கொரு உதாரணம். எளிய மக்களின் வாழ்க்கை அதிகாரம் படைத்தவர்களால் மாற்றியமைக்கப்படுவதைக் காட்டியபோதும், எந்த மட்டத்தையும் விமர்சிக்கத் தயங்கவில்லை.
கட்டுரைகளிலும் விவாதங்களிலும் வெட்டி அரட்டைகளிலும் நிரம்பியிருக்கும் சமகால சமூக, அரசியல், பண்பாட்டு விமர்சனங்களைக் கோர்த்து, காலத்தோடு ஒட்டிய ஒரு காட்சி ஆவணத்தில் பதிவு செய்திருப்பது சாதாரண விஷயமில்லை
ஒரு தரப்பை உயர்த்தி இன்னொரு தரப்பை தாழ்த்தும்போது, ஏதாவது ஒரு பக்கமிருந்துதான் எதிர்ப்பு பெருகும். இப்படியொரு அணுகுமுறையால் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் புறக்கணிப்பையும் ஒருங்கே பெறவே வாய்ப்பு அதிகம். எப்படிப்பட்ட நடுநிலையாளர்களும்கூட, ஏதாவது ஒரு விஷயத்தில் சார்பு நிலை எடுப்பதையே விரும்புவார்கள். அதையும் கூட தவிர்க்க முயன்றிருப்பதுதான் ஓர் இயக்குநராக இளமாறன் பெற்றிருக்கும் வெற்றி.
சமூக, பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பான குடும்ப விழாக்களின்போது இந்து, முஸ்லிம், கிறித்தவர்கள் என்று வெவ்வேறு மதத்தினர் உறவினர்களாகக் கூடும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த வகையில், மரணம் நிகழ்ந்த வீட்டில் அவர்கள் ஒன்றாக இருக்கும்போது ஏற்படும் சலசலப்புகளைக் கூடக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
சென்னை வட்டாரத்தில் மரணம் நிகழ்ந்த வீடுகளில் தாளமிட்டு இரங்கல் பாட்டு பாடுவதும், பிண ஊர்வலத்தின்போது ஆட்டம் போடுவதும் இயல்பு. சவ ஊர்வலம் கடந்து செல்லும்போது ஆடிக்கொண்டிருப்பவர்களை உற்றுக் கவனித்தால், அவர்களது ஆட்டத்தில் உற்சாகம் கூடும். வாழ்நாள் முழுக்க மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கமுடியாத வேட்கை அதன் வழியே வடியும். நேரம் அதிகமாக அதிகமாக, ஆட்டம்பாட்டத்தின் போக்கும் திசை மாறும். அவ்வாறே சடலத்தின் முன்னால் அமர்ந்துகொண்டு காதலை வீசும் பாடல்கள் பாடப்படுவதைக் காட்டுகிறது ‘ஆன்டி இண்டியன்’.
சிறு உரலில் பாக்கு இடிப்பதை அதன் நிகழ்நேரத்தோடு கலை வடிவங்களாகக் காட்சிப்படுத்தியதை ஒப்பிடுகையில், இப்படத்தில் வரும் கானா பாடல்கள் நீள்வது அயர்ச்சி தரும் வகையில் இல்லை. Ðபடத்தின் இறுதியில், முஸ்லிம் மத முறைப்படி பாட்ஷாவின் சடலம் அடக்கம் செய்யப்படுவது ஒரு சார்பானது என்ற விமர்சனம் சிலரால் முன்வைக்கப்படுகிறது. மாறாக, சடலத்தின் மீது சிறு கீறல் கூட விழக்கூடாது என்று அனைத்து மதங்களும் முன்வைக்கும் கூற்றுக்கு எதிரான ஒரு செயலை, அதே மத சம்பிரதாயங்களைக் காப்பதற்காகக் காட்டியிருப்பது பெரும் விவாதத்துக்கான விதை.
இப்படத்தின் தலைப்பு கூட, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது. ஆனால், திரைக்கதையில் அரசுப் பொறுப்பில் இருப்பவர்களும் அதில் அங்கம் வகிப்பவர்களும் மத ரீதியான ஒழுக்கங்களைப் போதிக்கும் ஆசனங்களில் அமர்ந்திருப்பவர்களும் மட்டுமே தங்களது நியாயங்களில் இருந்து விலகி நாட்டின் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் அநீதிகளுக்குத் துணை நிற்கும் சூழ்நிலை உள்ளது. அதனால், படத்தின் தலைப்பு கூட ‘ஆன்டி இண்டியன்ஸ்’ என்று பன்மையில் அமைவதுதான் பொருத்தம்.
சமீபகாலமாகப் புனைவுகளில் நீதிமன்றச் செயல்பாடுகள் அதிகம் விமர்சிக்கப்படும் நிலையில், இதில் அது தொடர்பான காட்சிகள் இடம்பெறவில்லை. ஆனால், ’மத விஷயத்துல கோர்ட்டுக்கு போனா 25, 30 வருஷம் ஆகும் தீர்ப்பு வர’ எனும் தொனியில் பேசப்படும் வசனம் மூலமாக நீதியமைப்பையும் கதைக்குள் இழுத்திருக்கிறார் இளமாறன்.
கருத்து ரீதியில், தொழில்நுட்ப அம்சங்களில் குறைகள் இப்படத்தில் குவிந்திருக்கலாம். உரிய சான்றிதழ்கள் இல்லாமல் இந்தியாவில் எந்த சுடுகாடு அல்லது இடுகாட்டிற்கும் சடலங்களைக் கொண்டுசெல்ல முடியாது என்பது அதிகாரப்பூர்வமான நடைமுறை. அதனை மீறியிருப்பது சினிமாத்தனம் என்ற வகையில் புறந்தள்ளத்தக்கது. மறைந்துபோன மாறன் காமிரா நோக்கி வசனம் பேசுவதைக்கூட தவிர்த்திருக்கலாம். பின்னணி இசையைக்கூட வேறொரு கலைஞரிடம் ஒப்படைத்திருந்தால் இன்னும் தக்க தாக்கம் உருவாகியிருக்கும்.
ஒரு விஷயத்தில் சார்பு நிலை
இதர படங்களில் ஒரு விமர்சகராக இளமாறன் என்னென்ன குறைகளை அடுக்கினாரோ, அந்த தவறுகள் ‘ஆன்டி இண்டியனி’ல் இடம்பெறவில்லை. அந்த தவறுகளை ரசிப்பவர்களுக்கு இளமாறன் படைப்பு ஒரு குப்பை. ஆனால், அவரது விமர்சனங்களை ரசித்துவிட்டு இப்படைப்பை மட்டும் தனிப்பட்ட வன்மத்துடன் எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். மற்றவர்•கள் எடுத்த திரைப்படங்களைக் கிண்டலடித்து சர்ச்சைக்கு ஆளானவர் எடுத்த இந்தத் திரைப்படம் மேலும் பல சலசலப்புகளுக்கு ஆளாகும் என்று தோன்றுகிறது!
Read in : English