Read in : English
புதுச்சேரி வில்லியனூர் கணுவப்பேட்டையைச் சேர்ந்த சுடுமண் சிற்பக் கலைஞர் வி.கே. முனுசாமிக்கு (55) பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. சுடுமண் சிற்பங்களை உருவாக்கி வருவதற்காக, 2005ஆம் ஆண்டில் Ñயுனெஸ்கோவின் சீல் ஆப் எக்ஸலன்ஸ் விருது (UNESCO and CCI Seal of Excellent Award) உள்பட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏராளமான விருதுகளைப் பெற்ற இந்த கிராமியக் கலைஞர், கிராம தேவதைச் சிற்பங்களைச் செய்வதில் நிபுணர்.
கும்பகோணம் அருகே ஜெயங்கொண்டம் செல்லும் வழியில் உள்ள அருள்மொழி என்ற ஊரில் உள்ள பெரியசாமி கோயிலுக்காக 21 அடி உயர பெரியசாமி சிலையை உருவாக்கியுள்ளார் முனுசாமி. உலகிலேயே மிகப் பெரிய சுடுமண் சிற்பம் இதுதான் என்று கூறும் இவர், இந்தச் சிலையைச் செய்து முடிக்க 7 மாதங்களாகியது என்றும் வருகிற ஜனவரி மாதம் இந்தச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என்றும் கூறுகிறார்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவச்சூர் மலையில் பெரியசாமி, பொன்னுசாமி, செங்கமலை அய்யன் ஆகிய சிலைகளை பதினேழரை அடி உயரத்தில் செய்ததும் இவர்தான். அங்கு பதிமூன்றரை அடி உயர குதிரையையும் செய்து வைத்துள்ளார். “என்ன காரணமோ தெரியவில்லை. தற்போது அந்தச் சுடுமண் சிலைகள் உடைக்கப்பட்டு விட்டன. எனினும், பல்வேறு இடங்களிலிருந்து வந்த கேட்பவர்களுக்காகக் கிராம தேவதைகள் சிலைகள் செய்து வருகிறேன்” என்கிறார்.
மண்பாண்டம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த எனது தந்தை கிருஷ்ண பத்தர், மாநில அரசின் விருது பெற்றவர். அவரது தாயார் மங்கலட்சுமி, கொலு பொம்மை தயாரிப்புக்காகக் கலைமாமணி விருது பெற்றவர். மண்பாண்டம் செய்யும் எங்களது குடும்பத்தில் நான் 22வது தலைமுறை. வில்லியனூர் மாதா கோவில் அருகே எங்களது வீடு இருந்தது. அங்கு வரும் வெளிநாட்டினர் எங்களிடம் மண் பொம்மைகளை வாங்கிச் செல்வார்கள். எனக்கும் மண்பொம்மைகளைச் செய்வதில் ஆர்வம் உண்டு.
படிப்பதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. எனவே, எட்டாம் வகுப்பு வரைப் பள்ளிப் படிப்பைப் படித்தேன். அங்கு படிக்கும்போதே ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை மோல்டிங், மெட்டலிங், கார்ப்பென்டரி போன்ற தொழிற் பயிற்சிகளைப் பெற்றேன். இதையடுத்து பெங்களூரில் உள்ள பொம்மை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். பிறகு கேரளத்தில் பாலக்காடு அருகே நெடுவங்காடு என்ற இடத்தில் ஓராண்டு வேலை பார்த்தேன்.
அப்புறம், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் ஆர்ட்டிஸ்ட் மாடலராக இருந்த ஆரியநாடு ராஜேந்திரன் மூலம் சிற்பம் குறித்த பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அங்கு மூன்று ஆண்டு காலம் இருந்து விட்டு ஊருக்குத் திரும்பி வந்து விட்டேன்” என்கிறார் முனுசாமி.
“1989இல் நான் செய்த அலங்கார வண்டி சுடுமண் சிற்பத்தைப் பார்த்து, Ñமாவட்ட தொழில் மையம் மூலம் பயிற்சி பெண்களுக்குப் அளிக்க எனக்கு அனுமதி வழங்கியது. அதிலிருந்து சுடுமண் சிற்பம் குறித்து மற்றவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். இதுவரை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு பயிற்சி முகாம்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்து. சுடுமண் சிற்பக கலையை மற்றவர்களுக்குத் தொடர்ந்து கற்றுத் தந்து வருகிறேன்.
என்னிடம் பயிற்சி பெற்ற 800 பெண்கள் கைவினைப் பொருட்களைச் செய்து வாழ்வாதாரத்துக்கான வருவாய் ஈட்டி வருகிறார்கள். கடந்த 33 ஆண்டுகளில் இதுவரை 10 ஆயிரம் ஆண் பெண்களுக்கும், 3 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும், 2258 கைவினை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளேன்” என்கிறார் அவர்.
அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ருமேனியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கைவினைப் பொருள் கண்காட்சிகளில் அவர் பங்கேற்று இருக்கிறார். அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் உள்ள அருங்காட்சியகத்தில் இவரது நடனமாடும் குதிரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் பார்ஸலோனாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இவரது படைப்பு உள்ளது.
இதேபோல, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ருமேனியா ஆகிய இடங்களில் உள்ள அருங்காட்சியகங்களிலும், இந்தியாவில் ராஷ்ட்ரபதி பவன் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் இவரது சுடுமண் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி மாநில அரசின் விருது, மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவு விருது, கலைமாமணி, லலித் கலா அகாதெமி வழங்கிய நுண்கலை விருது, மத்திய அரசின் சில்ப குரு விருது உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்ற அவர், பெஸ்ட் மாஸ்டர் ஆர்டிஸன் விருது (ஸ்பெயின், 2004), மாஸ்டர் ஆஃப் இந்தியன் கிராப்ட் விருது (ருமேனியா, 2013) மாஸ்டர் ஆர்ட்டிஸான் விருது (பிரான்ஸ், 2015) ஆகிய வெளிநாட்டு கௌரவங்களையும் பெற்றவர்.
புதுச்சேரி கைவினை கலைஞர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் புதுச்சேரி கைவினை கலைஞர்கள் நல வாரியத்தின் இயக்குநராகவும இருந்தவர். வில்லியனூர் சுடுமண் சிற்பத்துக்கு புவியியல்சார் குறியீடு (Geographical indication registry) பெறுவதிலும் முனுசாமியின் முன்முயற்சி முக்கியமானது.
சுடுமண் சிற்பக் கலையை அழிந்து விடாமல் பாதுகாப்பதற்காக அடுத்த தலைமுறைக்கு இந்தக்கலையை தொடர்ந்து கற்றுத்தர வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார்
இவரால் பள்ளிப் படிப்பைத் தாண்ட முடியாமல் போனாலும்கூட, இவரது இரண்டு மகள்களும் ஒரு மகனும் தொழில்நுட்பப் பட்டப் படிப்பைப் படித்துள்ளனர். அவர்களும் சுடுமண் சிற்பக் கலையில் ஆர்வத்துடன் உள்ளதாகக் கூறும் முனுசாமி, சுடுமண் சிற்பக் கலையை அழிந்து விடாமல் பாதுகாப்பதற்காக அடுத்த தலைமுறைக்கு இந்தக்கலையை தொடர்ந்து கற்றுத்தர வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார்.
Read in : English