Site icon இன்மதி

‘மாநாடு’ வெற்றி: திரைக்கு முன்னாலும் திரைக்குப் பின்னாலும் சிம்பு ஸ்டைல் மாறுமா?

(Source: Twitter.com)

Read in : English

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ ஆச்சர்யங்களில் ஒன்று, ஒழுங்கற்ற கால இடைவெளியில் வெளிவந்தாலும் சிம்புவின் படங்கள் ஈட்டும் வெற்றி. அவ்வாறு கிடைக்கும் வெற்றியைத் தக்க வைக்க முடியாமல்போகும்போது வேறொரு பாதையைத் தேர்ந்தெடுப்பதும், விமர்சனப் பண்டிதர்கள் அதற்காக அவரை வறுத்தெடுப்பதும் ‘மன்மதன்’ காலம் தொட்டு தொடர்கிறது. எத்தனை தோல்விப் படங்கள் தந்தாலும், அவருக்கான வரவேற்பை ரசிகர்கள் தொடர்ந்து தருகின்றனர் என்ற பேச்சும் இதனூடே தொடர்கிறது.

கொரோனா கால இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவே தட்டுத் தடுமாறி நிமிர்ந்து வரும் நிலையில், சிம்புவின் ‘மாநாடு’ வெளியாகியிருக்கிறது. வெற்றியையும் சுவைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, சிம்புவின் ‘கம்பேக்’கை நம்பலாமா என்ற கேள்வியும் நம் மனதில் எழுகிறது.

மன்மதன் விடுத்த அம்பு!

சிம்புவுக்கென்று ஒரு இமேஜ் உண்டு. அது தானாக உருவானதல்ல; அவராக உருவாக்கிக் கொண்டது. அது, மன்மதனின் பிம்பமாக அவர் அறியப்படுவது. ’உறவைக் காத்த கிளி’, ‘ஒரு தாயின் சபதம்’ தொடங்கி ‘எங்க வீட்டு வேலன்’, ‘சபாஷ் பாபு’ வரை குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது, இப்படியொரு இமேஜ் கிடையாது. விடலைப் பருவத்தில் ’மோனிஷா என் மோனாலிசா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியபோது கூட இது உருவாகவில்லை. ஆனால், நாயகனாக நடித்த ‘காதல் அழிவதில்லை’க்குப் பிறகு இந்த இமேஜ் ஒட்டிக் கொண்டது.

முதல் படத்தில் ’லிட்டில் சூப்பர்ஸ்டார்’ என்ற லோகோவைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டாலும், ஒரு காதல் இளவரசனாகவே அவர் அறியப்பட்டார். ‘தம்’, ‘அலை’ படங்களின் வெற்றி மற்றும் படுதோல்விக்குப் பிறகு ‘கோவில்’, ‘குத்து’ தொடர்பான திரைச்செய்திகளில் இந்த இமேஜ் மெல்ல உயர்ந்தது. தனக்கான தனித்துவத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்த சிம்பு, ‘மன்மதன்’ படத்தில் அமைத்த திரைக்கதை இதற்கு உரமேற்றியது.

வெறுமனே ஒரு கதாபாத்திரமாக அதனைக் கடந்துவராமல், திரை மேடைகளிலும் நிகழ்ச்சிகளிலும் அதுவே சிம்புவின் அசல் உருவமாகக் கட்டமைக்கப்பட்டபோது அதையும் அவர் ரசிக்கத்தான் செய்தார். அடுத்தடுத்த படங்களிலும், மன்மதன் விடுக்கும் அம்பாகவே அவருக்கான காதல் காட்சிகள் பின்னப்பட்டன. இதனால், ஒரு கட்டத்தில் அவரது திரைப்படங்களைக் குடும்பத்துடன் கண்டு களிக்க முடியாது என்ற பேச்சு பலமானது. சினிமா கிசுகிசுக்கள், பேட்டிகளில் இந்த இமேஜ் தொடர்பான தகவல்கள் அதிகமானபோதும் சிம்பு அதனை மறுதலிக்கவே இல்லை. ஆனால், அதுவே அவர் படங்களின் வெற்றிகளையும் பின்னுக்கு இழுத்தது.

சிம்புவின் ஸ்டைல்!

இயக்குநர், இசையமைப்பாளர், நடிகராக அறியப்பட்ட டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, ‘காதல் அழிவதில்லை’ முதல், தன் பட புரோமோஷன்களின்போது தன்னை மாபெரும் ரஜினி ரசிகனாகவே உலகிற்குத் தெரிவித்துக்கொண்டார். ரஜினியின் ஸ்டைலை பிரதியெடுத்தது போல, ’தம்’ படத்தில் சிம்பு செய்த சேட்டைகளை ’விரல் வித்தை’ என்று கொண்டாடினர் அவரது ரசிகர்கள்.

நடுவே ‘தொட்டி ஜெயா’ படத்தில் ’சத்யா’ கமலைப் பிரதியெடுத்தது போல இளம் வயது அடியாள் வேடத்தில் நடித்தது, அவரது ரசிகர் வட்டம் தாண்டியும் கொண்டாடப்பட்டது. ஆனாலும் ‘சரவணா’, ‘காளை’, ’சிலம்பாட்டம்’ படங்களில் அவரது ஸ்டைலும் ஹீரோயிசமும் தனியே துண்டாகத் தெரிந்தது. சிம்புவே இயக்கிய ‘வல்லவன்’ திரைப்படத்தின் மொத்த திரைக்கதையும் ‘மன்மதனை’ ரசித்தவர்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, வழக்கமான சிம்புவை ஒரு கதாபாத்திரமாக மாற்றியது. அதன் வெற்றி, சிம்புவுக்குப் புதிதாக பெண் ரசிகைகளை உருவாக்கியது. கிரிஷ் இயக்கத்தில் வந்த ‘வானம்’ கூட, வழக்கமான கமர்ஷியல் படமாக அறியப்படவில்லை. விக்னேஷ் சிவன் இயக்கிய ’போடா போடி’யில் கூட வித்தியாசமான சிம்புவைப் பார்க்க முடிந்தது.
இதற்கு பிராயச்சித்தம் செய்தது போல, சல்மான் கான் நடித்த ‘டபாங்’ திரைப்படம் சிம்புவை நாயகனாகக் கொண்டு ‘ஒஸ்தி’யாக ரீமேக் செய்யப்பட்டது. திரையில் இப்படித்தான் தோன்ற விரும்புகிறாரா என்ற வெறுப்பையும் சாதாரண ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது இத்திரைப்படம்.

2011 முதல் மூன்றாண்டு கால இடைவெளியில் சில படங்களில் கவு கௌரவ தோற்றத்தில் வந்துபோன சிம்பு, ‘வாலு’ படத்தில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கினார். அதில் மீண்டும் ‘தம்’, ‘அலை’ கால உடல்மொழியை வெளிப்படுத்தினார். ஒரு டீசண்டான வெற்றி என்றளவில் அப்படம் தப்பித்தது. ’செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்புவின் நடிப்பு பேசப்பட்டபோதும், அது மணிரத்னம் படைப்பு என்றானது.

இந்த காலகட்டத்தில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ ஆகியன சிம்புவின் படங்களுக்கான வரவேற்பை அடியோடு சரித்தது. இனிமேல் வழக்கமான சிம்பு ஸ்டைல் எடுபடாது என்ற எண்ணத்தையும் பலப்படுத்தியது.

இப்படியொரு கலவையான பிலிமோகிராபி கொண்ட சிம்பு, வெங்கட்பிரபு இயக்கியுள்ள ‘மாநாடு’ மூலமாக மீண்டுமொரு வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

இதில் வழக்கமாக அவர் காட்டும் ஸ்டைல், பஞ்ச் டயலாக்குகள், நாயகி உட்படப் பெண் பாத்திரங்களை கலாய்த்தல், சுய பெருமை ஆராதனைகள் என்று எதுவுமில்லை. ’சிம்பு ஸ்டைல் படம் கிடையாது’ என்ற பேச்சே, சாதாரண ரசிகர்கள் மத்தியில் மாநாட்டுக்கான வரவேற்பை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டு கால சிம்புவின் நாயக வாழ்க்கையில் கண்டிப்பாக இது ஒரு முக்கியமான காலகட்டம்.

நெகடிவ் இமேஜ்!

குறிப்பிட்ட நேரத்தில் ஓரிடத்தில் இருப்பதாகச் சொன்னால், சரியாக அந்த நேரத்திலோ அல்லது அதற்கு முன்பாகவோ இருப்பது நல்லதொரு அம்சம். எந்த தொழிலில் ஈடுபடுபவருக்கும் இந்த ‘டைம் பங்சுவாலிட்டி’ மிக முக்கியம்.
சமீபத்தில் பார்த்த யூடியூப் வீடியோவொன்றில் ‘தான் பணியாற்றிய ஒவ்வொரு நாயகரைப் பற்றியும் ஒரு பொய் சொல்ல வேண்டும்’ என்ற கேள்வி இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் முன்வைக்கப்பட்டபோது, ’சரியான நேரத்துக்கு சிம்பு வந்துவிடுவார்’ என்று குறிப்பிட்டார். ஆனால், இந்த வார்த்தைகளை அவர் முதன்முறையாக உதிர்க்கவில்லை.

இதற்கு முன்னர் பல்வேறு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், சக நடிப்புக் கலைஞர்கள் இதனைக் கூறியிருக்கின்றனர். திரை உலகத்துக்கு வெளியே சாதாரண மனிதர்கள் மத்தியில் இந்த விஷயம் மிகச்சாதாரணமாக அறியப்படுவது சிம்புவின் தோல்விகளுள் ஒன்று. இதற்குக் காரணமும் அவரே.
’நெகடிவ் இமேஜ்’ மூலம் வேகமாகப் பெறும் புகழை, சிம்பு வெகுவாக நம்பினார்.

சில உச்ச நட்சத்திரங்களின் ‘பர்சனல் வாழ்க்கை’யை அதற்கான முன்மாதிரியாகக் கொண்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், நேர விஷயத்தில் அது அவருக்குக் கைகொடுக்கவில்லை. ‘லேட்டா வந்தாலும் உடனே வேலையை முடித்து கொடுத்துவிடுவார்’என்று பல இயக்குநர்கள் வெளிப்படையாகக் கூறியது ’புகழ்மொழிகள்’ கணக்கில் சேரவில்லை.

‘கோ’, ‘வேட்டை’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது, தான் தவறவிட்ட படங்களுக்குப் போட்டியாக புதிய பட அறிவிப்புகளை வெளியிட்டது போன்ற செயல்பாடுகள் சிம்புவை தனித்து அறியச் செய்தன. இவ்வளவு ஏன், ‘மாநாடு’ பட தொடக்கத்தின்போது ஏற்பட்ட முரண்பாட்டினால் ‘மகா மாநாடு’ என்ற பெயரில் புதிய படம் குறித்த அறிவிப்பு சிம்பு தரப்பில் இருந்து வெளியானது.

ஆனால், அதன்பிறகு நிகழ்ந்த சமாதானப் பேச்சுகளால் இன்று ‘மாநாடு’படத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது, இதுவரை தான் பெற்ற ‘நெகடிவ் இமேஜை’ முற்றிலும் பாசிட்டிவானதாக அவரால் மாற்ற இயலவில்லை என்பதையே காட்டுகிறது.
ஹீரோயிசத்தில் புதுமை!

இதுவரை தான் பெற்ற ‘நெகடிவ் இமேஜை’ முற்றிலும் பாசிட்டிவானதாக அவரால் மாற்ற இயலவில்லை

சமீபத்திய பேட்டியொன்றில், ’சார்பட்டா திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் அதன் வெற்றியை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை’ என்று தெரிவித்திருந்தார் சிம்பு.

தமிழ் சினிமா ரசிகர்கள் பலரது கருத்தும் கூட அதுதான். ‘இனிமேல் ஹீரோயிசம் என்பது பஞ்ச் டயலாக் பேசுவதிலோ, பில்டப் ஷாட்களிலோ இல்லை’ என்பதையும் அப்பேட்டியில் பதிவு செய்திருந்தார் சிம்பு. கால மாற்றத்தின் ஊடே, நாயக பாத்திரம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாறுவதை சிம்பு புரிந்து கொண்டதையே இது காட்டுகிறது.

ஹீரோயிசத்தில் யதார்த்தத்தைக் கலப்பதொன்றும் புதுமையல்ல; ஊமை விழிகள், தளபதி, ஏர்போர்ட் என்று அதற்கான கடந்த கால உதாரணங்கள் பல உண்டு. ஆனால், தொடர்ச்சியாக அந்த வழியில் சிம்பு செல்வாரா என்பது அவர் மட்டுமே பதிலளிக்கக்கூடிய கேள்வி.

‘தொட்டி ஜெயா’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ உட்பட மிகச்சில படங்களில் மட்டுமே அப்படியொரு நடிப்பை வெளிப்படுத்திய சிம்பு, அடுத்தடுத்த படங்களில் தன் வழமையான பாதைக்குத் திரும்பினார். ‘மாநாடு’ படத்திற்குப் பிறகும் கூட அது நிகழலாம். ஆனால், ரசிகர்கள் மத்தியில் ஹீரோக்களுக்கான வரையறைகள் மாறியது போல ஒழுங்கற்ற இடைவெளியில் வெளியாகும் சிம்பு படங்களுக்கான வரவேற்பிலும்கூட மாற்றம் நிகழலாம்.

ஒரு நடிகர் மிகுந்த ஈடுபாட்டைச் செலுத்தி குறைந்தபட்சம் 10 ஆண்டு கால இடைவெளிக்குப் பின் அறிந்துகொள்ளும் சினிமா குறித்த புரிதலைத் தனது முதல் படத்திலேயே பெற்றிருந்தார் சிம்பு. கண்டிப்பாக, இது சாதாரண விஷயமில்லை. ஒரு துறையில் அதீத திறமை இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். என்னதான் யாரோ ஒரு நட்சத்திரத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டாலும், அவரது வெற்றியை அப்படியே ‘ரீகிரியேட்’ செய்வது நடவாத காரியம். சம்பந்தப்பட்ட நட்சத்திரத்தினால் கூட அது முடியாது.

அதனால், தொடர்ந்து வெற்றிகளைப் பெற, சிம்பு ஒரேயொரு விஷயத்தைச் செய்தால் போதும். ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 3 படங்களையாவது சிம்பு தர வேண்டும். ஏனென்றால், அப்படியொரு சம்பவம் சிம்புவின் திரையுலக வாழ்வில் இதுவரை நிகழவே இல்லை. ‘பாட்ஷா’வுக்குப் பிறகு ரஜினி மேற்கொண்ட ஒரு முடிவை தன் திரையுலகப் பயணத்தின் தொடக்கத்திலேயே சிம்பு தேர்ந்தெடுத்தது தேவையற்றது.

அதுபோலவே, ஒரு திரைப்படத்தின் எந்த இடத்திலும் சிம்பு தென்படாமல் சம்பந்தப்பட்ட கதாபாத்திரமாக மட்டுமே அறியப்படுவதும் அவசியமான ஒன்று. ‘மாநாடு’ படத்தில் சிம்புவை விட எஸ்.ஜே.சூர்யா பாத்திரத்துக்கான பில்டப் ஷாட்கள் அதிகம். வசனங்களிலும் நடிப்பிலும் எளிதாக ரசிகர்களைச் சென்றடையும் வாய்ப்பும் மிக அதிகம். ’தனி ஒருவன்’, ‘மாஸ்டர்’ படங்களில் ஜெயம் ரவியும் விஜய்யும் இப்படியொரு பிரச்சினையை எதிர்கொண்டனர்.

ஒரு திரைப்படத்தின் எந்த இடத்திலும் சிம்பு தென்படாமல் சம்பந்தப்பட்ட கதாபாத்திரமாக மட்டுமே அறியப்படுவதும் அவசியமான ஒன்று

ஆனாலும், பலமான வில்லன் பாத்திரமே நாயகனை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த புரிதலே ‘மாநாடு’ படத்தின் திரைக்கதையைச் செரிவாக்க உதவியிருக்கிறது. இது தொடர்ந்தால், வழக்கமான ரசிகர் வட்டத்தை மீறி சிம்புவின் படங்கள் பரவலான வரவேற்பைப் பெறுவது தொடர்கதையாகும்.

மற்றபடி, திரைக்கு முன்பும் வெளியேயும் தான் உருவாக்கிக் கொண்ட பிம்பத்தை உடைப்பது சிம்புவின் சொந்தப் பிரச்சினை. அவரது ரசிகர்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. அவர்களது தேவையெல்லாம் ‘மாநாடு’ போன்ற ஒரு வெற்றிப்படம் மட்டுமே!

Share the Article

Read in : English

Exit mobile version