Read in : English
சென்னை நகரில் உள்ள விளிம்பு நிலை மக்களைப் பற்றி தனது எழுத்தில் இனம் காண்பித்த எழுத்தாளர் ஜெயகாந்தன், சென்னைப் பெருமழையால் குடிசைப் பகுதி மக்கள் பட்ட அவலம் குறித்து ‘பிரளயம்’ என்ற தலைப்பில் குறுநாவலை எழுதினார். இது ஆனந்தவிகடன் இதழில் (18.4.1965) ஓவியர் கோபுலுவின் சித்திரங்களுடன் வெளியானது.
சென்னையில் தாழ்வான குடிசைப் பகுதிகளில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களின் மீது திணிக்கப்பட்ட வாழ்வைச் சொல்லும் இந்தக் கதை, பெருமழையினுடே அவர்களது வாழ்க்கை எப்படி மேலும் பள்ளத்தில் தள்ளப்படுகிறது என்பதை அவர்கள் மொழியில் சொல்லிச் செல்கிறார் அவர்.
“பிரளயம், சென்னையில் ஒரு முறை வந்த வெள்ளத்தின் போது நிகழ்ந்த அலங்கோலங்களை, மனிதனின் சிறுமைகளை, கொடை வள்ளல்களின் மான வெட்கமற்ற தற்பெருமைச் சவடால்தனங்களைக் கண்டபோது என் மனத்தில் ஏற்பட்ட கைப்பு உணர்ச்சியில் எழுந்தததுதான் என்றாலும், நான் எழுதவிருந்த பெரிய நாவலின் ஒரு பாகமே இக் குறுநாவல்” என்கிறார் ஜெயகாந்தன்.
![](https://inmathi.com/wp-content/uploads/2021/11/Jayakanthan-150x150.jpg)
எழுத்தாளர் ஜெயகாந்தன் (Credit: Arunankapilan – Wikimedia Commons)
“அடையற்றில் தியாசபிகல் தோட்டத்தருகே ஆல்காட் பள்ளி என்று ஒன்றிருக்கிறதே, அதன் ஸ்தாபகரான ஆல்காட், தீண்டத்தகாத சமூகத்தினரின் நலனிலும், கல்வியிலும் காட்டிய சிரத்தையின் அடிப்படையில் எழுந்த பறையர் (The Paraiah) என்ற ஆங்கில நூல் ஒன்று என் கைக்குக் கிட்டியது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அந்தப் பள்ளியில் படிக்க நேர்ந்த பல பறைச் சிறுவர்களின் வாழ்க்கை அதில் சுருக்கிக் கூறப்பட்டுள்ளது.
மூன்றே கால் ரூபாய்க்கு ஒரு பறைச் சிறுவன் ஒரு குடியானவருக்கு விற்கப்பட்ட கொடுமைச் சம்பவங்கள் பல அதில் இடம் பெற்றுள்ளன. அப்படி விற்கப்பட்ட ஒரு சிறுவனாகத்தான் அம்மாசிக் கிழவன் நாவலில் வரவிருந்தான்” என்று ஜெயகாந்தன் எழுதியிருந்தபோதிலும், அதில் ஒரு முக்கிய நிகழ்ச்சி `’ஒரு பகல் நேர பாசஞ்சர் வண்டி’யாய் வெளியே நழுவி ஓடிப் போய்விட்டது. அப்புறம், ‘பிரளயம்’ வந்ததுள்ளது. எனினும், இன்னும் எழுத பிரளயம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருப்பதாகவே ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார்.
சென்னைக் குடிசைப் பகுதியின் உள்ள விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை அம்மாசிக் கிழவனின் வளர்ப்பு மகள் பாப்பாத்திக்கும் பொது நல ஊழியர் அழகப்பர் வீட்டில் பிரைவேட் ரிக் ஷா ஓட்டும் தீனனுக்கும் திருமணம் நடைபெறப் போவதிலிருந்து கதை தொடங்குகிறது. அவர்களது திருமணம் முடிந்த இரவே, காற்றும் மழையும் சேர்ந்து நடத்திய பேய்க்கூத்து முடிவற்றுத் தொடர்ந்தது.
இனி அந்தக் கதையில் வரும் மழைச் சம்பவ பாதிப்புகள் குறித்து ‘பிரளயம்’ குறுநாவலிலிருந்து சில பகுதிகள் ஜெயகாந்தன் வரிகளில்:
பெரிய சாலையில் சரிந்து வளர்ந்திருந்த மரங்கள் வேரற்றுச் சாய்ந்ததால், தந்திக் கம்பங்கள் விழுந்து அந்தப் பிரதேசமே இருண்டு கிடந்தது.
வளர்ந்த சமூகத்தின் கொடிய கரங்களால், புறக்கணித்து ஒதுக்கித் தள்ளப்பட்ட அந்த எளிய சேரி, சர்வ வல்லமை மிகுந்த இயற்கையின் இந்த வலிய தாக்குதலைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்தது. அதன் பரிதாபகரமான ஓலம் மட்டும் இந்த இயற்கையின் ஆரவாரத்தையும் மீறி ஒலித்தது. எனினும், ஒரே மண்ணில் சில அடிகளே உயர்ந்த அந்த மேட்டுக்குடி மக்களின் செவிகளுக்கே கேளாதிருந்த அந்த ஓலம், வானத்தையா கிழிக்கப் போகிறது?
குழந்தை குட்டிகளோடு, அவரவர் இழந்துவிடத் துணியாத மதிப்பு மிகுந்த சொத்துக்களான கந்தல் மூட்டைகளோடு, தட்டுமுட்டுச் சாமான்களோடு அவர்கள் அனைவரும சாரி சாரியாகப் பெரிய சாலையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அந்தப் படையின் யுத்த கோஷமே தெய்வத்தை நோக்கி முறையிட்டலறும் அழுகுரல்தான்.
அந்த வைகறைப் பொழுதில் காடுகளிலிருந்து நகரத்துக்குள் நுழைந்துவிட்ட ஆதிவாசிகளைப் போல, அந்த மேட்டுப் பிரதேசத்தில் அமைந்த ஒரு புதிய காலனிக்குள் அவர்கள் நிர்பந்தப் பிரவேசம் செய்து, எங்கே ஒதுங்குவது என்று தெரியாமல் மழையில் சிதறிக் கிடந்தார்கள்.
சென்னை நகரின் பல பகுதிகளிலுள்ள சேரிகள் வெள்ளத்தில் மூழ்கின. Ðபல பிரதான ரஸ்தாக்களில் கூட மரங்கள் வீழ்ந்தும், முழங்காலுக்கு மேல் ஆறாக மழை நீர் பாய்ந்தும், போக்குவரத்துகள் ஸ்தம்பித்திருந்தன.
தினசரிப் பத்திரிகைகளெல்லாம் அந்தக் காட்சியைப் படம் பிடித்துப் போட்டுப் பிரசுரித்தும், ‘பேய்மழை’ என்று தலைப்பிட்டும் ‘புயல் உருவாகி வருகிறது’ என்று எச்சரித்தும் மழையால் விளைந்த நாசங்கள் குறித்தச் செய்திகளும் வெளியிட்டன. இவை எல்லாவற்றிற்கும் சிகரம் போல உதவிக்கு ஓடோடி வரும் நகரப் பிரமுகர்களின் வள்ளன்மையைக் குறித்து அவை புகழ்பாடின.
தினசரிப் பத்திரிகைகளெல்லாம் அந்தக் காட்சியைப் படம் பிடித்துப் போட்டுப் பிரசுரித்தும், ‘பேய்மழை’ என்று தலைப்பிட்டும் ‘புயல் உருவாகி வருகிறது’ என்று எச்சரித்தும் மழையால் விளைந்த நாசங்கள் குறித்தச் செய்திகளும் வெளியிட்டன
நகரத்தின் பல பகுதிகளிலும் பள்ளிகளுக்குக் குடியேறியுள்ள சேரிவாசிகளுக்கு, சில பெரிய மனிதர்கள் ஆயிரக்கணக்கான உணவுப் பொட்டணங்களை விநியோகம் செய்தார்கள்.
மூன்றாம் நாள் மாலைப் பத்திரிகைகளில் சுவரொட்டிகளில் ‘இன்றிரவு எந்த நேரத்திலும் புயல் வீசும்’ என்று பெரிய எழுத்தில் ஒற்றைத் தலைப்பு மட்டுமே வந்தது. இப்போது சில பிரதான ரஸ்தாக்களில் இடுப்பளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.
அதன் அளவுக்கேற்ப பிரபலஸ்தர்களின், பெரிய மனிதர்களின் அனுதாபமும் பண உதவியும் சற்று கூடியிருந்தன. அந்தக் கார்ப்பரேஷன் பள்ளியில் சேரியின் அசுத்தமும் நாற்றமும், சேரி வாழ்க்கையின் தாரக மந்திரம் போன்ற ஆபாச வார்த்தைப் பிரயோகங்கள் நிறைந்த சச்சரவுகளும், நெருக்கத்தின், விளைவாய் ஏற்பட்ட நெருக்கடிகளும் அதிகமாயிருந்தன.
அந்தப் புதிய காலனியிலும் தந்திக் கம்பங்களின் மீது மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் தடைபட்டு அந்தப் பிரதேசமே இருண்டு கிடந்தது. கார்ப்பரேஷன் பள்ளியில் காடா விளக்குகள் பல எரிந்தன.
நான்காம் நாள் மழையின் மூர்க்கத்தனம் குறைந்து அன்றிரவு முற்றாக நின்றிருந்தது. நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வானத்தில் தெரிந்தன. எனினும் பல வீதிகளில் இடுப்பளவு ஆழத்திற்கு மழை நீர் ஓடிக்கொண்டிருந்தது.
சாலைகளில் முறிந்து விழுந்த மரக்கிளைகளைக்கூட இன்னும் அப்புறப்படுத்தவில்லை.அன்றையப் பகற்பொழுதிலும்கூட போட்டியிட்டுக் கொண்டு புண்ணியம் செய்யும் தருமவான்கள் பொட்டணச் சோற்றைத் தந்துவிட்டுப் போயிருந்தனர்.
மழையின் வேகம் குறையக் குறைய நாளைக்கு இது கிடைக்காதே என்ற ஏக்கம் அவர்களைப் பிடித்து ஆட்ட ஆரம்பித்தது.
மனம் ஒத்து இணைந்து மறுவாழ்வைத் தேடி இடுப்பளவுத் தண்ணீரில் ஆனந்தமாய் பார்வை தெரியாத கோகிலாவுடன் நடந்து செல்லும் மாணிக்கமும் தண்ணீர் பெருகி நின்ற சாலையில் திறந்து கிடந்த பாதாளச் சாக்கடையில் விழுந்து இறந்து போவதுடன் ‘பிரளயம்’ குறுநாவல் முடிகிறது.
‘ஒரு பிரளயமே வந்து இந்த உலகை அழித்தாலும் அது மீண்டும் புதிதாய் பிறக்கும்! கேவலம் இந்த மழையா வந்து மனிதர்களின் வாழ்வுக்கு முடிவு கட்டிவிடும்?’ இது ஜெயகாந்தன் கேள்வி
Read in : English