Site icon இன்மதி

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ஸ்டைல்: ரஜினியின் இளமை; ரசிகர்களின் முதுமை!

Read in : English

இளமை போனால் திரும்ப வராது. இப்படிச் சொல்லி சொல்லி வளர்த்ததாலேயே, 40களுக்குள் தனி வீடு, கார், ‘கெட்டி’யான பேங்க் பேலன்ஸ் என்றொரு பாதுகாப்பான வாழ்க்கையை அடையத் துடிக்கிறது இன்றைய தலைமுறை.

இதற்கு மாறாக, முந்தைய தலைமுறையோ ’என்றும் இளமை’ என்றொரு தாரக மந்திரத்தை வாழ்க்கைப் பாடமாகக் கொண்டிருந்தது. இது போன்ற வித்தியாசங்களே, அந்தந்த காலகட்டத்துக்கான கலை, இலக்கிய, அரசியல் போக்கைத் தீர்மானிக்கின்றன. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு, அவரை ரசிகர்கள் உணரும் தலைமுறை இடைவெளி பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறது.

ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்கள் எப்படிப்பட்ட விளைவை எதிர்கொண்டாலும், ரசிகப் பெருமக்கள் அவரைத் திரையில் பார்த்துப் புத்துணர்வைப் பெறாமல் இருந்ததே இல்லை.

கிட்டத்தட்ட ‘படையப்பா’ வரை இந்த நிலையே தொடர்ந்தது. ஆனால், இப்போதும் அப்படியொரு புத்துணர்வைப் பெற வேண்டுமென்று ரஜினியின் தீவிர ரசிகர்களும் ஒரு சில திரையுலகப் படைப்பாளிகளும் விரும்புகின்றனர்.

ஆனால், ரஜினி நடித்த சமீபத்திய படங்களில் அந்த மேஜிக் நிகழ்ந்திருக்கிறதா என்பது கோடி ருபாய் கேள்வி.

இளமையின் அடையாளம்!
எம்ஜிஆர், சிவாஜி தங்களுக்கான புகழின் உச்சியில் நின்றுவிட்டபிறகு, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார், ஜெய்கணேஷ், விஜயகுமார் போன்றவர்கள் அடுத்த இடங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது, இளைய தலைமுறையின் அடையாளமாக கமல்ஹாசன் மாறிக் கொண்டிருந்தபோது, ரஜினியின் வருகை நிகழ்ந்தது.

நியாயமாகப் பார்த்தால், இப்படியொரு கடுமையான போட்டிக்கு நடுவே தன்னை நிரூபிக்கவே ரஜினிக்குப் பல ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். ஆனால், ரஜினியின் வசீகரம் அந்த சவாலைச் சுலபமாகத் தாண்டியது. அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு பாத்திரங்களில் நடித்ததும் எப்படிப்பட்ட கதையானாலும் தன்னுடைய ஸ்டைல் முத்திரையைப் பதித்ததும் அவரது தனித்துவ சாதனை.

ரஜினிகாந்த் திரையில் அறிமுகமான 2 ஆண்டுகளிலேயே, இந்தப் பெயர் ரசிகர்கள் மத்தியில் ஒரு மந்திரச்சொல் அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. ’பைரவி’யில் நாயகன் ஆனபிறகு, ரஜினிக்கென்று ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு எத்தனையோ தோல்விகள், வெற்றிகள், சர்ச்சைகள், செய்திகள். ஆனாலும், ரஜினிகாந்தின் புகழ் செங்குத்தாக மேலேறியதே தவிர ஒருபோதும் இறக்கங்களைச் சந்திக்கவில்லை.

1980களின் தொடக்கம் முதல் 2000 வரை ஒரு தலைமுறையே அவருடைய இமாலய வளர்ச்சியுடன் இணைந்திருந்தது. அவர்களது தினசரி வாழ்வின் திசையை முடிவு செய்யும் அளவுக்கு, ரஜினிகாந்தின் தாக்கம் பிரம்மாண்டமாக இருந்தது.
விசுவின் கதை திரைக்கதை வசனத்தில் வெளியான ’குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் வரும் பூபதியின் பாத்திரம் இதற்கொரு உதாரணம். அந்த காலத்தில், விடலைகளே ரஜினியின் தீவிர ரசிகர்களாக இருந்தனர்.

ரஜினியின் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அவரது திரை இருப்பு அந்த ரசிகர்கள் மத்தியில் புத்துணர்வைப் பாய்ச்சியது. அதனால், ரஜினிக்காக எதையும் செய்யும் மனநிலையில் அவர்கள் இருந்தனர். இது, சமகாலத்தில் அவரது போட்டியாளராக இருந்த பல நடிகர்களுக்கு வாய்க்காதது.

இங்குதான், நாம் ஒரு அம்சத்தை உற்றுநோக்க வேண்டும். 1975 முதல் 1985 வரை விடலைகளாக இருந்தவர்களே, அதன்பிறகும் அவரது ரசிகர்களாகத் தொடர்ந்தார்கள். ரஜினி ரசிகர் மன்றங்களின் பதிவு விவரங்கள், அவற்றின் பெயர்கள், தொடங்கப்பட்ட ஆண்டு போன்றவற்றில் இருந்து இதனை அறிய முடியும்.

பழைய வெற்றி வாய்க்காதது ஏன்?
ரஜினி திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் ஆகின்றன. முதன்முதலில் அவருக்கு ரசிகரானவரின் வயது 15 என்று வைத்துக்கொண்டால் கூட, இன்று அந்த நபருக்கு 60 வயதாகியிருக்கும். அந்த வகையில், ரஜினிக்கு சம வயது ரசிகர்களும் கணிசமாக உண்டு.

ரசிகர் மன்றம், ரஜினியின் அரசியல் வருகை போன்ற விஷயங்களில் தீவிரமாகப் பற்று கொண்டிருந்தாலும், இப்படிப்பட்ட ரசிகர்களுக்கு தனிப்பட்ட முறையில் குடும்ப, சமூகப் பொறுப்புகள் கண்டிப்பாக இருக்கும். ஒருகாலத்தில் ரஜ்னி படங்களின் அடுத்தடுத்த காட்சிகளை அடித்துப் பிடித்து பார்த்தவர்களாகவும் அந்த ரசிகர்கள் இருக்கக் கூடும்.

தற்போது, அதே போன்றதொரு ஆராதனையை அவர்களே நினைத்தாலும் தங்களது தங்கத் தலைவனுக்குத் தர முடியாது. கட்அவுட்டின் மீது ஏறி நின்று பாலாபிஷேகம் செய்யும் வாய்ப்பையும் அந்த வயது தராது.

‘பாபா’வின் படுதோல்விக்குப் பிறகு, ‘சந்திரமுகி’ எனும் ஹாரர் மசாலாவின் பெருவெற்றிக்குப் பிறகு, ரஜினியின் நடிப்புலக வாழ்க்கைக்கு ‘போற்றி’ பாடும் வகையில் உருவாக்கப்பட்ட ‘சிவாஜி’யிலேயே இது நன்கு தெரிந்துவிட்டது. ‘எந்திரன்’ வெற்றியோ, ‘கபாலி’யின் பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்களோ, கண்டிப்பாக இந்த உண்மையை மறைக்க முடியாது.

‘சிவாஜி’ போன்றே ஒரு ரசிகனின் ஆராதனையாக உருவாக்கப்பட்ட ‘பேட்ட’ படமும் இதே நிலையைத்தான் சந்தித்தது. ஆனால் ‘தர்பார்’ மற்றும் ‘அண்ணாத்த’ படங்களுக்கு தியேட்டரில் கிடைத்த வரவேற்பு, ரஜினியின் தீவிர ரசிகர்கள் பலர் தங்களது பழைய ஆற்றலை வெளிக்காட்ட முடியாத அளவிற்கு முதுமையை எட்டிவிட்டதைக் காட்டிவிட்டது.

2013ம் உடல்நலமில்லாமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி சிகிச்சை பெற்றபோது, அவருக்காக கோயில்களிலும் தேவாலயங்களிலும் மசூதிகளிலும் வேண்டுதல்களைக் கொட்டிய ரசிகர்களைக் கணக்கிட முடியாது. அரசியல் நோக்கிய பயணத்தைப் பாதி வழியில் முடித்துக்கொண்டபோதும், ரஜினியின் தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பளித்தவர்கள் அனேகம்.

ஆனால், அந்த ரசிகர்களால் ’பாட்ஷா’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ வெற்றியை மீண்டுமொரு முறை தர முடியாது. ஏனென்றால், ரஜினியைப் போலவே, அந்த ரசிகர்களுக்கும் வயதாகிவிட்டது.

2000க்கு பிறகான இளம் தலைமுறையோ, அடுத்து வந்த நட்சத்திரங்களின் மீது தங்கள் பார்வையைத் திருப்பிக் கொண்டது. ரஜினிக்கு முன்னும் பின்னும் எந்தவொரு உச்ச நடிகரும் எதிர்கொண்ட, எதிர்கொள்ளவிருக்கும் விஷயம் இது. இவர்களை மட்டுமல்ல, அடுத்துவரும் தலைமுறையையும் கவர வேண்டுமானால் ரஜினி திரையில் இளமையாகத் தோன்றுவதைவிட தியேட்டருக்கு வருபவர்களை இளமையாக உணர வைப்பதுதான் முக்கியம்.

தோற்றத்தில் இளமை வேண்டுமா?
‘பேட்ட’ படத்தின் வெற்றியை மிதமாகக் கடந்து சென்ற ‘விஸ்வாசம்’ படத்தில் பதின்வயது குழந்தையின் தந்தையாக நடித்திருப்பார் அஜித். ‘தெறி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடுத்தர வயது பாத்திரத்தில் தோன்றினார் விஜய்.

’அண்ணாத்த’ படத்தில் கீர்த்தி சுரேஷின் அண்ணனாக, கிட்டத்தட்ட 30களைத் தாண்டிய பாத்திரத்தில் நடித்திருந்தார் ரஜினி. அவரது உடல்மொழியில் எத்தனைதான் வேகம் கூட்டினாலும், அவரால் கண்டிப்பாக ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘ராஜாதி ராஜா’ பெர்பார்மன்ஸை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. ஆனாலும், ‘சிவாஜி’ முதல் ‘அண்ணாத்த’ வரை அனைத்து படங்களிலும் ரஜினியை ‘இளமை’யாகக் காட்டுகிறோம் என்று படக்குழுவினர் வெளியிடும் தகவல் ஏதேனும் ஒரு அப்டேட்டில் தவறாமல் இடம்பெற்றுவிடுகிறது.

ஒவ்வொரு முறை அதனைத் தெரிந்துகொள்ளும்போதும், எதற்காக இனி இளமைத் தோற்றத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்ற கேள்வி மனதுக்குள் ஊசலாடும்? ’தர்பார்’ படத்தில் நிவேதாவின் தந்தையாகத்தானே ரஜினி நடித்தார் என்பவர்கள், அதில் நயன்தாரா உடனான ரொமான்ஸ் காட்சிகளை அனைத்து மக்களும் ரசித்தார்களா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்.

ரஜினிகாந்த் தனது வழிகாட்டியாகப் போற்றும் அமிதாப் பச்சன் கூட, 2000களில் தனது இரண்டாவது இன்னிங்ஸின் மூலம் வேறொரு சிகரத்தை எட்டினார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக, அவர் நடித்த படங்கள் தனி அந்தஸ்தை ரசிகர்களிடம் பெற்று வருகின்றன.

‘பிக் பி’ போன்ற விதவிதமான பாத்திரங்களில் ரஜினி நடிக்க வேண்டாம். ஆனால், அவரது தற்போதைய உடல்நலம், தோற்றத்திற்கு ஏற்ப சரியான கதாபாத்திரங்களை ஏற்று அதகளம் செய்ய முடியும்.

‘கபாலி’யில் இளம் வயதில் தவறவிட்ட மனைவியைப் பல ஆண்டுகள் கழித்து சந்திப்பதற்காகக் கண் விழித்து காத்திருக்கும் காட்சியொன்று போதும். இப்போதும் ‘முள்ளும் மலரும்’ காலத்து ரஜினி இப்போதும் உயிர்ப்போடு இருக்கிறார் என்பதை நிரூபிக்க..

’திரிசூலம்’ படத்தின் வெற்றி சிவாஜி கணேசனைப் பல்வேறு கமர்ஷியல் படங்களுக்குள் தள்ளியது. ஆனாலும், அவரை மீட்டெடுத்து மக்கள் மனதில் நினைவுகூர வைத்தது ‘முதல் மரியாதை’ தான். அதுவே ‘ஜல்லிக்கட்டு’ தொடங்கி ‘படையப்பா’ வரை அவரது திரையிருப்பு அர்த்தமுள்ளது என்பதை உணர வைத்தது. அதற்காக யதார்த்தமான, கலையம்சமுள்ள கதைகளைத்தான் ரஜினி தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதில்லை. இதுவரை அவர் சென்ற வழியிலேயே மேலும் சில புதுமைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

அறுபதுகளைத் தாண்டிய பிறகும் சீன் கானரியும் ஹாரிசன் போர்டும் ஆக்‌ஷன் படங்களில் நடித்ததை நாம் அனைவருமே அறிவோம். ரஜினி ரசிக்கும் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் கூட, இப்போதும் ஆக்‌ஷன் படங்களில் நடிக்கிறார். புதிய கலைஞர்களுடன் கைகோர்க்கின்றனர்.

‘மலையூர் மம்பட்டியான்’ பார்த்துவிட்டு ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘படிக்காதவன்’, ‘மாவீரன்’, ‘தர்மதுரை’ படங்களில் ராஜசேகரை இயக்குனராக்கி அழகு பார்த்தவர் ரஜினி. பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் என்று கடந்த பத்தாண்டுகளில் அறிமுகமான இளையவர்களுடன் கைகோர்ப்பதிலும் ரஜினி தயக்கம் காட்டுவதில்லை. இத்தனையையும் இருக்க, இன்னும் ஏன் திரையில் ‘பில்லா’ ரஜினியைப் பிரதியெடுக்கச் சிலர் துடிப்பதை அவர் ஆதரிக்க வேண்டும்.

இனிமேலாவது தான் விரும்பும், சிரமம் ஏதுமில்லாமல் செயலாற்ற துணை செய்யும், அனுபவங்களின் வழி கற்ற பாடங்கள் மூலமாகப் புத்துணர்வைப் பாய்ச்சும், முக்கியமாகப் படம் பார்ப்பவர்கள் திரையில் இளமையை உணரும் வகையில் அவரது ஸ்டைலை வெளிக்காட்டும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும்.

அப்போது மட்டுமே, ‘படையப்பா’ போன்றதொரு வெற்றியை இனி ஒருமுறை ரஜினி ரசிகர்களால் பார்க்க இயலாதா என்ற கேள்விக்குப் பதிலளிக்க முடியும்!

பின்குறிப்பு: ரஜினிக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் என்றும் வயதாகாது என்று உணர்ச்சிவசப்படுபவர்கள் மீண்டும் மீண்டும் ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ படங்களைப் பார்க்கலாம்!

Share the Article

Read in : English

Exit mobile version