Read in : English
கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936), சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது 36வது வயதில் சிறையில் இருக்கும்போது 1908ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட, ‘ஸ்ரீமான் வி. ஓ. சிதம்பரம் பிள்ளை ஜீவிய சரித சுருக்கம்’ என்ற வ.உசி.யின் வரலாற்று நூல் 113ஆண்டுகளுக்குப் பிறகு மறுபிரசுரம் செய்யப்படுகிறது.
வ.உ.சி. குறித்து அந்தக் காலத்தில் வந்த பல்வேறு பத்திரிகைச் செய்திகளைத் தொகுத்து எம். கிருஷ்ணசாமி ஐயர் வெளியிட்ட இந்தப் புத்தகம், 1908ஆம் ஆண்டில் சென்னை ஹரிஹர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.
“இந்த வ.உ.சி.சரித்திரத்தில் குறிப்பாக அவரது வக்கீல் தொழிலில் ஏழை, எளிய மக்களுக்காக மிகுந்த கருணை உள்ளத்துடன் நீதி பரிபாலனம் செய்து தருவது, கிரிமினல் வழக்குகளில் இவரது வாதத் திறமையால் எதிரிகளை சரண் அடைய வைப்பது, வழக்குகளில் கட்சிக்காரர்கள் எவ்வளவு கொடுக்க சக்தியுள்ளவர் என்றறிந்து அதற்குத் தக்க வழக்குக்குரிய சன்மானம் வாங்குவது, ஏழை எளிய மக்களுக்கு இனாமாக வாதிடுவது என்பது போன்ற நாம் அறியாத வ.உ.சியின் பல தனிகுணாம்சங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்கிறார் இந்த நூலின் மறுபதிப்புப் பதிப்பாசிரியர்களில் ஒருவரான ரெங்கையா முருகன். மற்றொரு பதிப்பாசிரியர் சக்கரா ராஜசேகர்.
1908ஆம் ஆண்டு வ.உ.சி வரலாற்றை தமிழில் வெளியிட்ட அதே எம். கிருஷ்ணசாமி ஐயர், 1909ஆம் ஆண்டில் அந்த நூலை `’The Life Sketch of Sjt V.O. Chidambaram Pillai’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் தொன்மை காலத்திலிருந்து கடல் ஆதிக்கம் எப்படி இருந்தது காலப்போக்கில் கடல் ஆதிக்கம் நம் கையிலிருந்து நழுவி எவ்வாறு வீழ்ச்சி அடைந்தது என்பன குறித்த விளக்கமான கட்டுரையுடன் இந்த வ.உ.சி.யின் வரலாறு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வ.உ.சி. மீதான ராஜ நிந்தனை குற்ற வழக்கு விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அரசியல் சார்ந்த வாசகங்களை தவிர்த்து, சுதேசி கப்பல் கம்பெனிக்கு எப்படி வ.உ.சி. தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஒப்புவித்து கப்பல் கம்பெனியை ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கொண்டுவந்து சாதித்துள்ளார் என்பதை மக்கள் அறியவேண்டும் என்ற காரணத்திற்காக ஆங்கிலத்தில் இந்த நூலை வெளியிடுவதாக கிருஷ்ணசாமி ஐயர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த ஆங்கில நூலை லண்டன் பிரிட்டீஷ் நூலகம் இந்தியா அலுவலகத்திலிருந்து பெற்றுத் தந்தவர் எனது நண்பர் கோவையைச் சார்ந்த விஜயகுமார். லண்டனில் உள்ள அவருடைய நண்பர் சதீஷ்பாபு மூலமாக இந்த அரிய ஆவணத்தைப் பெற்றுத் தந்தார். தமிழ் நூல் பதிப்பு சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் இருந்து பெற்றேன்” என்கிறார் ரெங்கையா முருகன்.
“வ.உ.சி. கோவை சிறையில் செக்கிழுத்ததை கண்டு முதன்முதலாக 28-11-1908 இல் தன்னுடைய நெஞ்சக் கொதிப்பினை ‘துன்பம் சகியான்’ என்ற புனைப்பெயரில் முதல் கட்டுரை எழுதியவர் பரலி சு. நெல்லையப்பர். 1910ஆம் ஆண்டு பாரதி நடத்திய ‘கர்மயோகி’ இதழில் ‘ஸ்ரீமான் தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளையுடன் சந்திப்பு’ என்ற கட்டுரையையும் வெளியிட்டவர் அவர்.
இந்த நெல்லையப்பரை பலர் வ.உ.சி. சரித்திரத்தை எழுத வேண்டி விரும்பிய நிலையில் 1944ஆம் ஆண்டு திரு.வி.க. முன்னுரையுடன் “வ.உ. சிதம்பரம் பிள்ளை சரித்திரம்” என்ற பெயரால் வெளியிட்டார். 1944 கப்பலோட்டிய தமிழன் என்ற பெயரில் வ.உ.சியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் ம.பொ. சிவஞானம்” என்று வ.உ.சி. வரலாறு குறித்தத் தகவல்களைக் கூறுகிறார் ஆய்வாளர் ரெங்கையா முருகன்.
வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இந்த தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் ஒரே புத்தகமாகச் சேர்த்து தற்போது வெளியிடப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துரையுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தை வருகிற 17ஆம் தேதி ஒட்டபிடாரத்தில் உள்ள வ.உ.சி. நினைவு இல்லத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் சார்பில் நடைபெறும் விழாவில், இந்தப் புத்தகத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிடுகிறார். இந்தப் புத்தகத்தை சக்ரா அறக்கட்டளையின் விதைப் பதிப்பகம் வெளியிடுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரத்தில் வழக்கறிஞருக்கு மகனாகப் பிறந்து, தானும் வழக்கறிஞரானவர் வ.உ.சி. சுதேசி ஸ்டீம் நேவிக்கேஷன் என்ற கப்பல் கம்பெனியைத் தொடங்கி பிரிட்டிஷ் நிறுவனங்களுக்குப் போட்டியாக தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை நடத்தியவர். தொழிற்சங்க செயல்பாட்டாளர்.
சுப்பிரமணிய சிவாவுடன் பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக தேசதுரோகக் குற்றம்சாட்டப்பட்டு 40 ஆண்டுகள் தீவாந்திர சிறைதண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
“சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்” என்று 1908இல் வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த நீதிபதி ஃபின்ஹே கூறியிருந்தார்.
ஆனால், சிறைத் தண்டனை காலம் முடிவடைந்து 1912ஆம் ஆண்டு வ.உ.சி. சிறையிலிருந்து விடுதலையாகித் திரும்பி வருகையில் அவரை வரவேற்க ஒருவர் கூட வரவில்லை என்பது வரலாற்று சோகம். தீவிர அரசியலிலிருந்து விலகியிருந்த அவர், கடைசிக் காலத்தில் வறுமைச் சூழ்நிலைக்கு ஆளானார்.
அந்தக் கால கட்டத்தில் அவரது தமிழ் இலக்கியப் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மறக்கப்பட்ட மாமனிதரைப் பற்றி நினைவுகூர்கிறது அவரது 150வது பிறந்த ஆண்டில் மறுபதிப்பாக வரும் ‘ஸ்ரீமான் வி. ஓ. சிதம்பரம் பிள்ளை ஜீவிய சரித சுருக்கம்’.
Read in : English