Site icon இன்மதி

கலைமகள் இதழுக்கு 90 வயது!

பல ஆண்டுகளாக கலைமகள்

Read in : English

இந்திய விடுதலைக்கு முன், மணிக்கொடி இதழ் தோன்றுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 1932ஆம் ஆண்டு ஜனவரியில் தோன்றிய கலைமகள் மாத இதழுக்கு 90 வயது ஆகிறது. வெகுஜன இலக்கிய இதழாக வந்த கலைமகளுக்கும் இதழியல் வரலாற்றில் முக்கிய இடம் உண்டு.

தொடக்க காலத்தில் மரபுத் தமிழ் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த கலைமகள், பின்பு கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட ஆரம்பித்தது. அதற்காக தமிழின் பல்வேறு தரப்பு எழுத்தாளர்களும் எழுத களம் அமைத்துக் கொடுத்தது கலைமகள். மராத்தி மொழி எழுத்தாளரான காண்டேகர், அந்தக் காலத்தில் தமிழிலும் பிரபலமாக இருந்ததற்குக் காரணம் அவரது கதைகளை தமிழில் வெளியிட்ட கலைமகள்தான்.

உ. வே. சாமிநாதையர் முதல் ஆசிரியராக செயல்பட்டார்

1931ஆம் ஆண்டில் தீபாவளிக்குப் பிறகு, சென்னை மயிலாப்பூர் சித்திரக்குளத்தில் இருந்த பெ.நா. அப்புஸ்வாமி வீட்டில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் “கலைமகள்” என்ற பெயரில் உ.வே.சாமிநாதையரை ஆசிரியராகக் கொண்டு இலக்கியப் பத்திரிகை கொண்டு வருவது என்று முடிவு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ‘மெட்ராஸ் லா ஜர்னல்’ ஆசிரியர் ஆர். நாராயணசாமி அய்யர், “திரிவேணி’ என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடத்தி வந்தார். அவரிடம் அச்சுக்கூட வசதி இருந்ததால், தானே அந்தப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிடுவதாகக் கூறினார்.

அதையடுத்து, 1932ஆம் ஜனவரியிலிருந்து கலைமகள் வெளிவர ஆரம்பித்தது. சாமிநாதைய்யர் அதன் முதல் ஆசிரியராக செயல்பட்டார். பத்திரிகையில் நிர்வாகப் பத்திராதிபராக டி.எஸ். ராமச்சந்திர அய்யர் பெயர் இருந்தது. அதன் துணை ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன். பெ.நா. அப்புஸ்வாமி, வையாபுரிப்பிள்ளை, நீலகண்டசாஸ்திரி ,மு. ராகவைய்யங்கார், ஆர்.ராகவவைய்யங்கார் போன்ற பிரபலமானவர்கள் ஆசிரியர் குழுவில் இருந்தார்கள்.

1936ஆம் ஆண்டிலிருந்து 1988வரை கி.வா.ஜகந்நாதன் ஆசிரியராக இருந்தார்

1936ஆம் ஆண்டிலிருந்து 1988வரை கி.வா.ஜகந்நாதன் ஆசிரியராக இருந்தார். 50 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராக இருந்த அவர், கலைமகளுக்கு முகமாகத் திகழ்ந்தார். எழுத்தாளர் தி.ஜ.ர., ஆர்.வி., கா.ஸ்ரீ.ஸ்ரீ. போன்றோர் துணை ஆசிரியர்களாக இருந்திருக்கின்றனர். 1988லிருந்து 1995 வரை ரமணி ஆசிரியராக இருந்தார். 1995லிருந்து கீழாம்பூர் எஸ். சங்கரசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்து வருகிறார்.

உ. வே. சாமிநாதையர் ஆசிரியராக இருந்தவரை தமிழ் இலக்கியக் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவந்த கலைமகள், கி.வா.ஜகந்நாதன் ஆசிரியரான பிறகு கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது.

“1936லிருந்து கி.வா. ஜகந்நாதன் முற்றிலும் ஆசிரியர் பொறுப்பில் இருந்து வருகிறார். அக்காலத்திலிருந்தே இந்த இதழின் தரம் மாறி, கலைமகள் படிப்படியாக கதை மகள் ஆகிவிட்டது. புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன் போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் கலைமகளில் கதை எழுதியிருக்கிறார்கள். இலக்கியக் கதைகளை முதலில் வெளியிட்டதும் கலைமகள்தான்” என்று எழுத்தாளர் சோமலெ எழுதியிருக்கிறார்.

ஆனந்தவிகடன், கலைமகள், மணிக்கொடி ஆகிய மூன்று பத்திரிகைகளின் போக்குகளைச் சுட்டிக்காட்டி அந்தக் காலத்தில் நவசக்தியில் கட்டுரை எழுதிய கு.ப. ராஜகோபாலன், “ஆனந்தவிகடன் எழுத்தாளர்களும் மணிக்கொடி எழுத்தாளர்களும் பரஸ்பரம் மாறி மாறி எழுதுவது அதிகமாகத் தென்படவில்லையே தவிர, இரு கோஷ்டியினரும் கலைமகளுக்கு வெகுவாக எழுதியிருக்கிறார்கள். இந்த முறையில் கலைமகள் ஒரு பொதுக் கருவி என்றுகூடச் சொல்லலாம்ÕÕ என்கிறார்.

“கலைமகள் இதழில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.சிதம்பரசுப்பிரமணியன், மௌனி, ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, க.நா.சு., சி.சு. செல்லப்பா, தி. ஜானகிராமன், லா.ச .ராமாமிருதம் போன்ற இலக்கிய எழுத்தாளர்களுக்கு இடம் அளித்ததுடன், மொழிபெயர்ப்புக் கதைகளையும் நாவல்களையும் வெளியிட்டிருக்கிறது. அகிலன், ராஜம் கிருஷ்ணன், அநுத்தமா, ஆர். சூடாமணி, குமுதினி, எம்.எஸ். கமலா, கி. சரஸ்வதி அம்மாள், கி. சாவித்திரி அம்மாள், கமலா சடகோபன், லட்சுமி ராஜரத்தினம் போன்ற பலரின் படைப்புகள் கலைமகளில் வெளியாகியுள்ளன. சுப்பு, ரமணி, சங்கர், மகான், ரசாக், பாப்பு, ஸுபா போன்ற பல ஓவியர்கள் கலைமகளில் படம் வரைந்துள்ளனர். குறிப்பாக, ஓவியர் நடராஜன் வரைந்த ஓவியங்கள் அட்டைப்படத்தில் வெளியாகியுள்ளன.

பாரதியின் கையெழுத்தில் அப்படியே அந்தக் கவிதை 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் கலைமகளில் பிரசுரமானது.

மாயவரத்தைச் சேர்ந்த எஸ். ராமகிருஷ்ணா எடுத்த புகைப்படங்களும் கலைமகளில் இடம் பெற்றுள்ளதைப் பார்க்க முடியும்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ். சிவகுமார். பெரியசாமி தூரனால் சேகரிக்கப்பட்ட பாரதியாரின் படைப்புகள் 1940களில் கலைமகளில் வெளியானது. எட்டயபுரம் மகாராஜாவுக்கு பாரதியார் எழுதிய கவிதையின் கையெழுத்துப் பிரதியை பாரதியின் சகோதரர் விசுவநாதன் கலைமகளுக்குக் கொடுத்தார். பாரதியின் கையெழுத்தில் அப்படியே அந்தக் கவிதை 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் கலைமகளில் பிரசுரமானது.

ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதையான ‘முள்ளில் ரோஜா’ கலைமகளில் பிரசுரமானது. ஆங்கிலப் பேராசிரியர் சீனிவாசராகவன், ‘நாணல்’ என்ற பெயரில் கலைமகளில் தமிழில் கட்டுரை எழுதியிருக்கிறார். நீலகண்ட சாஸ்திரியை தமிழில் கட்டுரை எழுத வைத்தது கலைமகள்தான். பழங்குடி மக்கள் பற்றி பிலோ இருதயநாத் எழுதிய கட்டுரைகள் கலைமகளில் தொடர்ந்து வெளிவந்தன.

மராத்திய எழுத்தாளர் வி.எஸ். காண்டேகர் நாவல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்தன. சரத்சந்திரர், பிரேம்சந்த் போன்ற பிறமொழி எழுத்தாளர்களின் கதைகளை வெளியிட்டது கலைமகள்தான். இலங்கை எழுத்தாளர்கள் இலங்கையர்கோன் உள்பட பல எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். விடையவன் பதில்கள் என்ற பகுதியை கி.வா.ஜ. எழுதினார்.

தற்போதைய ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

சேஷாத்திரி நாதன் எழுதிய மருத்துவக் கட்டுரைகளும் பிரபலம். கலைமகள் களஞ்சியம் இரு தொகுப்புகளாக கலைஞன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது” என்று கூறும் கலைமகளின் தற்போதைய ஆசிரியர் கீழாம்பூர் எஸ். சங்கரசுப்பிரமணியன், “2017ஆம் ஆண்டிலிருந்து பி.டி.டி. ராஜன் இந்த இதழின் பதிப்பாளராக இருந்து வருகிறார்.

காலத்துக்கேற்ற மாற்றங்கள் இருந்தாலும், கி.வா.ஜ. காட்டிய வழியில் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

Share the Article

Read in : English

Exit mobile version