Site icon இன்மதி

சர்ச்சை இல்லாமல் உருவாகுமா பென்னி குவிக் வரலாற்றுப் படம்?

Source: Twitter.com

Read in : English

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் பென்னி குவிக்கின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்க விரும்புவதாகப் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி நவம்பர் ஒன்று அன்று தனது ட்வீட் வழியே தெரிவித்திருந்தார்.

இந்த ட்வீட் சட்டெனப் பலரது கவனத்தையும் ஈர்த்தது. காரணம், பென்னி குவிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு அப்படியான கவன ஈர்ப்பைக் கொண்டது.

சீனு ராமசாமி (silverscreenindia.in)

முல்லைப் பெரியாறு அணை கேரளத்தில் இருந்தாலும் அதனால் பயன்பெறுபவை தமிழ்நாட்டின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள். இந்த மாவட்டங்களின் விவசாயத்திற்கும் மக்களின் குடிநீர் தேவைக்கும் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் பெயர் அடிக்கடி செய்திகளில் இடம்பெறுவது வாடிக்கை. ஏனெனில், அந்த அணை கட்டப்பட்ட காலம் முதலே அது தொடர்பான அரசியல் இரு மாநில மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளது.

அப்படியான, சர்ச்சைக்கான சாத்தியம் கொண்ட ஒருவரது வாழ்க்கை வரலாற்றை எப்படிச் சொல்லப் போகிறார் சீனு ராமசாமி என்பதே திரைப்பட ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு?

திரைக்கு வரப் போகிறது முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வரலாறு என்றவுடன் சர்ச்சை நினைவுக்கு வருவதற்குக் காரணம், 2011 நவம்பரில் வெளியான டேம் 999 என்னும் திரைப்படமே. ஷோகன் ராய் இயக்கிய இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டது.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வைப் புண்படுத்தும் வகையில் இந்தப் படம் ஒருதலைப் பட்சமாக உருவாக்கப்பட்டிருப்பதால் இந்தப் படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது என்று தமிழ்நாட்டின் முன்னணிக் கட்சிகளான திமுக, மதிமுக, பாமக போன்றவை கோரின. இதையடுத்து அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பட வெளியீட்டுக்குத் தடை விதித்தார்.

ஒரு கலைப் படைப்பை அதுவும் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற திரைப்படத்தைத் தடுப்பது சரியா தவறா என்னும் வகையில் விவாதங்கள் எழுந்தன.

டேம் 999 என்னும் திரைப்படம், சீனாவின் பாங்கியோ அணை உடைந்து இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயரக் கதையையே திரையில் சொன்னது

எங்கேயோ சீனாவில் உள்ள அணை உடைந்த கதை தமிழ்நாட்டில் ஏன் தடை செய்யப்பட்டது? அந்தப் படத்தின் தலைப்பில் உள்ள 999 என்னும் எண்ணைப் பின் தொடர்ந்தால் அதற்கான காரணம் விளங்கும். முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்றில் 999 என்னும் எண்ணுக்கு முதன்மையிடம் உண்டு.

1886 ஆம் ஆண்டில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான 999 ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானமும் சென்னை மாகாணமும் கையெழுத்திட்டிருந்தன.

ஆக, எங்கேயோ சீனாவில் உள்ள அணை தொடர்பான ஒரு திரைப்படத்துக்கு இப்படி சர்ச்சையான தலைப்பு வைத்திருப்பதன் நோக்கம் வெளிப்படையானது என்பதால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அதை எதிர்த்தன.

ஒரு திரைப்படம் இப்படியான இரு பகுதி மக்களின் வாழ்க்கை தொடர்பான சம்பவங்களைச் சித்தரிக்கும்போது மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும். ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்து நடுநிலை தவறிச் செயல்பட்டுவிட்டால் ஒரு பகுதி மக்களின் கோபத்துக்கு ஆளாகிவிடக் கூடும். அப்படியொரு விபத்துதான் டேம் 999 திரைப்படத்துக்கு நேர்ந்தது.

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பானது எனத் தமிழ்நாடும் அது தம் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்ற அச்சத்தைக் கேரளமும் தெரிவித்து வரும் நிலையில் அணை உடைந்து உயிரிழந்தோரது துயரத்தைச் சொன்னால் உடனே முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அதனால் என்ன ஆபத்து ஏற்படும் என்ற பதைபதைப்பு உருவாகிவிடாதா?

அதனால் தமிழ்நாடு, கேரள மாநில மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் அந்தப் படம் அமைந்துவிடாதா? இந்தக் கண்ணோட்டத்தினாலேயே அந்தப் படம் தடைசெய்யப்பட வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்தது.

ஒரு திரைப்படத்தால் அப்படியொரு பிளவை ஏற்படுத்திவிட முடியுமா என்று கேள்வி கேட்போர் அண்மையில் வெளியான ஜெய் பீம் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியைத் தயவுசெய்து நினைத்துப் பார்க்க வேண்டும்? அந்தப் படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை அதிகாரியான பிரகாஷ் ராஜ், தன்னிடம் இந்தியில் பேசும் நகை வியாபாரியைக் கன்னத்தில் அறைந்து தமிழில் பேசு என்று அதட்டுவார். இந்தக் காட்சி வட இந்தியாவில் பெரும் கொந்தப்பளிப்பை ஏற்படுத்தியது என்னும் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலானது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அந்தக் காட்சி உவப்பாயிருக்கலாம் ஆனால் இந்தி பேசுபவர்களுக்கு அது அவமானத்தைத் தந்திருக்கிறதே? அப்படியொரு காட்சியை நாகரிக மனம் ரசிக்க முடியுமா? இவ்வளவுக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரின் துயரத்தைப் பேசும் படத்திலேயே இப்படியொரு காட்சி இடம்பெற்றிருக்கிறது எனும்போது, திரைப்படத்தை எவ்வளவு கவனமாகக் கையாள வேண்டியதிருக்கிறது?

கர்னல் பென்னி குவிக்(Source: Theni.M.Subramani –  Wikimedia Commons)

அதனாலேயே பென்னி குவிக்கின் வரலாறு படமாகப் போகிறது எனும்போது இயல்பாகவே ஒரு பதற்றம் தொற்றிவிடுகிறது. ஏற்கெனவே, ரஜினி காந்த் நடித்த லிங்கா திரைப்படத்தில் பென்னி குவிக்கின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்கள் இடம்பெற்றிருந்தபோதும், அது அதிகாரப்பூர்வமாக அவரது வாழ்க்கை வரலாறு என்று அறிவிக்கப்படவில்லை. அப்படம் தன்னுடைய கதை என்று வழக்குத் தொடுத்த ரவி ரத்தினம் என்பவர் அதற்குக் கொடுத்திருந்த தலைப்பு முல்லை வனம் 999 என்பதே.

அந்தப் படத்தில் ரஜினிகாந்த் என்னும் சூப்பர் ஸ்டார் நடித்திருந்ததால் பென்னி குவிக்கின் வாழ்க்கை வரலாற்றைச் சுரண்டிப் படம் எடுத்தது பெரிதாக விமர்சிக்கப்படவில்லை. ஆனால், நன்கு அறியப்பட்ட ஆளுமையான பென்னி குவிக் வாழ்க்கையைத் தழுவிப் படம் எடுத்தும் அது முழுக்க முழுக்க கற்பனையான கதை என்று சொன்னது கே.எஸ். ரவிகுமாருக்கோ ரஜினி காந்துக்கோ பெருமை சேர்க்குமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

அந்த வகையில் பென்னி குவிக்கின் வாழ்க்கை என வெளிப்படையாக அறிவித்து சீனு ராமசாமி படத்தை உருவாக்க விழைவது நல்ல அறிகுறியே. மேலும், இதுவரையான சீனு ராமசாமியின் படங்களைப் பார்க்கும்போது, அவர் சமூகப் புரிதல் கொண்ட இயக்குநர் என்பதை மறுக்கவியலாது. மீனவர் பிரச்சினையைக் களமாகக் கொண்ட நீர்ப்பறவையில் எதுவும் சர்ச்சையான சம்பவங்களோ காட்சிகளோ இருந்ததாக நினைவில் இல்லை.

அடிப்படையில் சீனு ராமசாமி சர்ச்சைகளை வைத்துப் படமோ பணமோ பண்ண விரும்பும் இயக்குநர் அல்லர்

ஆகவே, சமூகத்தின் ஒரு தரப்பைக் காயப்படுத்தும்படியான காட்சிகளைத் தவிர்த்துவிடுவார் என நம்புவதற்கு இடமிருக்கிறது. அப்படி அமைந்துவிட்டால் சீனு ராமசாமி படமெடுப்பதற்கு நியாயம் சேர்ந்துவிடும். அப்படியில்லாவிடின் அவசியமற்ற பதற்றத்தை இரண்டு மாநிலங்களிலும் உருவாக்கும் படமாக அது அமைந்துவிடும் ஆபத்து உண்டு.

ஒரு ட்வீட் தானே போட்டிருக்கிறார் அதற்குள் இந்த அளவு யோசிக்க வேண்டுமா என்று தோன்றக்கூடும். ஆனாலும், இப்போதே எத்தகைய ஆபத்துகள் எதிர்படக்கூடும் என்பதை ஊகித்தறிய அண்மைக்கால திரைப்பட உருவாக்கங்களின் பாணியே வழியமைத்துக்கொடுக்கிறது.

ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தைப் படமாக உருவாக்கும்போது படத்துக்கான விளம்பரம் எளிது. அந்த விஷயமே படத்தைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்துவிடும். அதனால் அதைச் சந்தைப்படுத்துவதும் எளிது. ஆனால், சமூக நலனிலும் மக்கள் நலனிலும் அக்கறை கொண்ட ஒரு படைப்பாளி வெறுமனே சர்ச்சைக்குரிய விஷயத்தை விரும்புவதில்லை.

அவர் தான் எடுத்துக்கொண்ட கதைக் களத்தை கலாபூர்வமாக அதே நேரத்தில் உணர்ச்சிவயப்படாமல், உணர்வுபூர்வமாகக் கையாண்டால் திரைப்படம் நல்லதாக அமையும். சீனு ராமசாமி உருவாக்கும் படம் அப்படியொன்றாக அமையும் என்று நம்புவோம்.

Share the Article

Read in : English

Exit mobile version