Site icon இன்மதி

தீபாவளி பட்டாசுகளின் அட்டைப் பெட்டியில் விலை ரூ.1500; விற்பனை விலை ரூ.120; விலை குறைப்பு பின்னணி என்ன?

Read in : English

தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகையின் முக்கியமான ஓர் அங்கம் பட்டாசுகள். காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு போன்றவை பேசுபொருளாகிவிட்ட இந்தச் சூழ்நிலையிலும் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுபவர்கள் குறைவு. பட்டாசுதான் சிறுவர், சிறுமிகளுக்குத் குதூகலம்.

பட்டாசு வாங்கும்போது அந்த பெட்டியின் மேலுள்ள சில்லறை அடக்க விலையை, அதாவது எம்ஆர்பி விலையைக் கவனித்திருக்கிறீர்களா? ரூ.5,000 அல்லது ரூ.3,000 என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த அடக்க விலையைக் கண்டாலே தலை சுற்றும்.

ஆனால், விற்பனையாளர் அதை ரூ.500 அல்லது ரூ.300 விலையில் நமக்கு விற்பார். இது எப்படி சாத்தியம்? நமக்கு இவ்வளவு மலிவாக எப்படி பட்டாசு கிடைக்கிறது? சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், அட்டைப்பெட்டியில் வெளியிடப்பட்டுள்ள சில்லறை அடக்க விலை நமக்கானது கிடையாது.

“ஒவ்வொரு மாநிலத்தும், வட்டாரத்துக்கும் என தனியே நாங்கள் இந்த சில்லறை அடக்க விலையை பெட்டியில் அச்சடிப்பதில்லை. இந்த விலை நம்முடைய மொத்த விற்பனையாளர்கள் அல்லது வியாபாரிகள் கேட்பதற்கு இணங்க அச்சடிப்பது” என்கிறார் சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலை அதிபர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தான் இந்தியாவின் பட்டாசு தொழில் மையம். சிவகாசியைச் சுற்றியுள்ள 700க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில்தான் நமது நாட்டின் 80 சதவீத பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வறண்ட வானிலை, பரந்துவிரிந்த வறண்ட நிலங்கள், எளிதாக கிடைக்கும் மனிதவளம் என பட்டாசு உற்பத்தி செய்யக்கூடிய எல்லா சாதகமான அம்சங்களும் சிவகாசியில் உள்ளன.

வறண்ட வானிலை, பரந்துவிரிந்த வறண்ட நிலங்கள், எளிதாக கிடைக்கும் மனிதவளம் என பட்டாசு உற்பத்தி செய்யக்கூடிய எல்லா சாதகமான அம்சங்களும் சிவகாசியில் உள்ளன.

தீப்பெட்டி தொழிற்சாலைகளை சிவகாசியில் நிறுவிய தொழில்முனைவோர்கள் விரைவில் அதைச் சார்ந்த பட்டாசு தொழிற்சாலைகளையும் 1940களில் இங்கே கொண்டு வந்தார்கள்.

சாதாரண சரம், சக்கரம், புஸ்வானம், லட்சுமி வெடிகளைத் தயாரித்த தொழிற்சாலைகள் இப்போது விதவிதமான பட்டாசுகளை தயாரிக்கிறார்கள். வானத்தில் பல வண்ண ஜாலங்களைச் செய்யும் வாணவேடிக்கை வெடிகள் வரை வந்துவிட்டன.

நாட்டின் தென்பகுதியில் தயாராகும் பட்டாசுகள் வடக்கே காஷ்மீர் வரை அனுப்பப்படுகின்றன. இடுபொருட்கள் மற்றும் வேலையாட்களின் சம்பளம் போன்றவை தயாரிப்பு செலவு என்று கொண்டாலும், சில்லறை அடக்கவிலை பட்டாசுகளை கொண்டுசேர்க்கும் லாரி வாடகை, சுங்கவரி, விற்பனை வரி என பல்வேறு வரிகளையும் உள்ளடக்கியது.

மேலும் விற்பனையாளர்களுக்கு கொடுக்கவேண்டிய கமிஷன் தொகையும் சில்லறை அடக்க விலையோடு சேர்க்கப்படும். சிறு பெரு விற்பனையாளர்களுக்கு என இந்த கமிஷன் அளவும் மாறும்.

பட்டாசு உற்பத்தி செய்யும் சிவகாசிக்கு அருகில் உள்ள ஊரில் கொடுக்கும் விலையில் தொலைதூரத்தில் உள்ள ராஜஸ்தான் அல்லது உத்தரபிரதேசத்தில் விற்பனை செய்ய முடியாது என பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள்.

எனவே விற்பனையாளர்கள் கேட்டுக் கொள்ளும் சில்லறை அடக்க விலையை பட்டாசு பெட்டியில் அடித்து தாங்கள் வடமாநிலங்களுக்கு அனுப்பிவிடுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
“நாம் சிவகாசிக்கு அருகில் இருப்பதால்தான் குறைந்த விலையில் இங்கு பட்டாசுகளை நம்மால் விற்பனை செய்ய முடிகிறது,” என மதுரையில் தற்காலிக பட்டாசு கடை வைக்கும் வெங்கடேஷ் நம்மிடம் கூறுகிறார்.

ஆனாலும் தள்ளுபடி விலை பட்டாசை பொறுத்தும் பிராண்டை பொறுத்தும் மாறும் என்றும் அவர் சொல்கிறார். சாதாரண வெடிகள் குறைந்த விலையில் கிடைக்கும். ஆனால் வாணவேடிக்கைப் பட்டாசுகளின் விலை எப்பொழுதும் சற்று அதிகம்.

தள்ளுபடி விலை பட்டாசை பொறுத்தும் பிராண்டை பொறுத்தும் மாறும் என்றும் அவர் சொல்கிறார். சாதாரண வெடிகள் குறைந்த விலையில் கிடைக்கும். ஆனால் வாணவேடிக்கைப் பட்டாசுகளின் விலை எப்பொழுதும் சற்று அதிகம்

பிரபலமான உற்பத்தியாளர்களின் பட்டாசு என்றால் விலை சற்று கூடுதலாக இருக்கும் என்று வெங்கடேஷ் கூறுகிறார்.
அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டுள்ள சில்லறை அடக்க விலையில் வடஇந்திய வியாபாரிகளும் விற்கமாட்டார்கள். அவர்களும் வாடிக்கையாளர்களுக்கு விலையில் தள்ளுபடி செய்தே விற்பனை செய்வார்கள் என்று உற்பத்தியாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தள்ளுபடி என்பது வாங்க தூண்டும் ஒரு கருவி. தீபாவளி நெருங்க நெருங்க தள்ளுபடியும் அதிகமாகும். ஏனென்றால் பட்டாசு என்ற பொருள் தீபாவளி பண்டிகையைச் சார்ந்தது. தீபாவளிக்குப் பிறகு அதற்கான தேவை குறைந்துவிடும்.

தீபாவளி சீசனில்தான் பட்டாசுகளுக்கு கிராக்கி இருக்கும். அதனால், சீசன் முடிவதற்குள் தங்கள் கைவசம் உள்ள இருப்பை விற்றுத் தீர்க்க விற்பனையாளர்கள் முயற்சி செய்வார்கள்

அதனால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து தங்களது இருப்பை விற்பனை செய்து செய்வதற்கு தள்ளுபடி மிகவும் உதவியாக இருக்கும். அதனால்தான் அட்டைப் பெட்டியில் அதிக விலை வைத்து விட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்வது நடக்கிறது.

Share the Article

Read in : English

Exit mobile version