Site icon இன்மதி

சூர்யாவின் ஜெய் பீம்: மு.க. ஸ்டாலினின் மனக்கண் முன் நிழலாடிய நினைவில் நீங்காத வடு!

Read in : English

விளிம்பு நிலை மக்களான இருளர்களின் வாழ்க்கையும் அவர்களது துயரக்கதையையும், காவலர்களின் அத்துமீறல்களையும் சொல்லும்படமான ஜெய் பீம் படத்தைப் பார்த்துப் பாராட்டிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவசரநிலை காலத்தில் தானும் சிறையில் தாக்குதலுக்கு  உள்ளானதாகவும், தன்னைக் காப்பாற்றுவதற்காக சிறைத்துறையினரின் அடிகளை வாங்கி சிட்டிபாபு உயிரிழந்தது குறித்தும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவசர நிலைக் காலத்தில் பல்வேறு திமுக பிரமுகர்களுடன் சென்னை மத்திய சிறையில் மிசா கைதியாக ஸ்டாலின் இருந்தபோது 1976ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் நடந்தது என்ன? 

இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அவசரநிலைப் பிரகடனத்தை திமுக எதிர்த்ததை அடுத்து, 1976இல் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதையடுத்து தமிழகம் முழுவதும் திமுக முன்னணியினர் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அவசரநிலைப் பிரகடனத்தை திமுக எதிர்த்ததை அடுத்து, 1976இல் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.  

மு.க. ஸ்டாலினை தேடி போலீசார் கருணாநிதியின் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. மதுராந்தகத்தில் முரசே முழங்கு நாடகத்தில் நடித்து விட்டு வீடு திரும்பியதும், போலீசார் ஸ்டாலினை மிசாவில் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைக்கிறார்கள். அப்போது அவருக்கு வயது 23. திருமணமாகி 5 மாதங்கள்தான் ஆகிறது.

சிறையில் மு.க. ஸ்டாலினுடன் அறையில் இருந்தவர் சிட்டிபாபு. மு. க. ஸ்டாலின் ஒரு நாள் இரவு தனிமைப்படுத்தப்பட்டு, சிறை கண்காணிப்பாளர்களால் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டார். இதைக் கூற அவர் உயிர் தப்பிப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஸ்டாலின் தாக்கபட்டபோது சிட்டிபாபு குறுக்கேவந்து அந்த அடிகளை தாங்கிக்கொண்டார். இதனால் ஏற்பட்ட காயங்•களால் அவரது உடல் நிலை மோசமடைந்தது. பொது மருத்துவமனையில் வயிற்றில் ஆபரேஷன் நடந்தது. அதிலும் குணம் ஆகவில்லை. 3.1.1977இல் மீண்டும் அதே இடத்தில் அறுவைச் சிகிச்சை நடந்தது. ஆனால் அதுவும பலனின்றி 5ஆம் தேதி சிட்டிபாபு காலமானார்.

“நான் மயங்கிய நிலையில் கீழே விழுந்து படுத்திருக்கிறேன். பூட்ஸ் கால்களால் என் வயிற்றின் மீது ஏறி என்னை மிதிக்க முயற்சிக்கிறார்கள். அப்போது தியாக மறவன் – என்னுடைய ஆருயிர் அண்ணன் சிட்டிபாபு அவர்கள் துடிதுடித்து என்னை அடிக்க வருபவர்களை கை எடுத்து கும்பிட்டு, என் மீது படுத்து நான் வாங்கயிருந்த அத்தனை அடிகளையும் அவர் வாங்கிக் கொள்கிறார்.அவருக்குப் பலத்த காயம் ஏற்படுகிறது. அவரை மோசமான நிலையில் மருத்துவனைக்கு நாங்கள் அனுப்பி வைக்கிறோம். அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.அண்ணன் சிட்டிபாபு அவர்கள் இறந்துவிட்டார் என்ற செய்தி எங்களுக்குக் கிடைக்கிறது. அதைக் கேட்ட நாங்கள் கதறிப் புலம்புகிறோம். அவர் உடலைப் பார்க்க முடியவில்லை. அந்த வாய்ப்பை இழந்தோம்’’ என்று ஸ்டாலின் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்கிறார். அவசர நிலைக் காலத்தில் நிகழ்ந்த இந்த சோக நிகழ்வு, பின்னர்தான் பொது வெளிச்சத்துக்கு வந்தது. 

ஸ்டாலினை காப்பாற்றும் முயற்சியில் சிறைக்காவலர்களின் தாக்குதலுக்கு உள்ளான சிட்டிபாபு யார்? 1935ஆம் ஆண்டு  அக்டோபர் 19ஆம் தேதி திண்டிவனத்தில் பிறந்தவர் சி. சிட்டிபாபு. சென்னையில் உள்ள அரசு பயிற்சி இன்ஸ்ட்டியூட்டில் மோட்டார் என்ஜினியரிங்கில் டிப்ளமோ படித்தவர். திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர், 1958ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சிக் கவுன்சிலரானார். 1965இல் சென்னை மாநகராட்சியின் 29வது மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது பெல்கிரேடில் நடைபெற்ற சர்வதேச மேயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்.

மேயர் சிட்டிபாபு, 1967, 1971ஆம் ஆண்டுகளில் செங்கல்பட்டு நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  ‘Home Rule’ என்ற ஆங்கில வார இதழின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். சிட்டிபாபு ஸ்டாலினுடன் இணைந்து `நம்பிக்கை நட்சத்திரம்’ என்ற படத்தையும் தயாரித்து இருக்கிறார்.

சிறைச்சாலையில் ஸ்டாலின் மீது விழுந்த அடியை தன்மீது வாங்கிக் கொண்டு உயிரிழந்த சிட்டிபாபுவுக்கு அப்போது வயது 46. சிட்டிபாபுவின் சிறை டைரி புத்தகமாக வந்துள்ளது. மு. கருணாநிதியும் தனது நெ]ஞ்சுக்கு நீதியில் இந்த சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார். சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த மறக்க முடியாத நிகழ்வு குறித்து பல்வேறு சந்ததர்ப்பங்களில் ஸ்டாலின் நினைவுகூர்ந்திருக்கிறார்.

சென்னை மத்திய சிறையில் மிசா கைதியாக இருந்தபோது சிறைச்சாலைக் காவலர்களால் தனது வலது கையில் ஏற்பட்ட வடு இன்னமும் இருப்பதாகவும் அதுவே தனது உடல் அடையாளமாகி விட்டதாகவும் ஏற்கெனவே கூறியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். ஜெய்பீம் படத்தைப் பார்த்ததும் மீண்டும் அந்த வடு அவரது நினைவுக்கு வந்து அவரது மனக்கண் முன் நிழலாடியுள்ளது.

Share the Article

Read in : English

Exit mobile version