Read in : English
‘சாலி நெல்லின் சிறை கொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆக
காவிரி புரக்கும் நாடு கிழவோனே’
இப்படியாக கரிகால் பெருவளத்தானை, முடத்தாமக்கண்ணியார், பொருநராற்றுப்படையில் அழைக்கின்றார்.
இங்கு நாம் நோக்க வேண்டிய செய்தி, சாலி நெல் என்ற சொற்கோவை. வேலி நிலத்தில் ஆயிரம் கலம் விளையும் சாலி என்ற நெல்லைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பதிவிடப்பட்டுள்ள இந்தக் குறிப்பு அல்லது இந்த நெல் வகை இப்போது உள்ளதா? என்ற வினா நமக்கு எழுகிறது.
உரையாசிரியர்கள் இந்த நெல்லை செந்நெல் அதாவது சிவப்பு நிறம் கொண்ட நெல் என்று குறிக்கிறார்கள். இப்போது அரத்த சாலி என்ற நெல்லை புதுக்கோட்டை ஆதப்பன் வைத்துள்ளார். ஆனால் அதன் விளைச்சல் இன்றைய உயர்விளைச்சல் வகைகளுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது. ஆனால் நிறம் சிவப்பு, நெல்லும் சிவப்பு, அரிசியும் சிவப்பு.
தொல்காப்பியர் ‘நெல்லும் புல்லும் நேராராண்டே’ என்று மரபியலிலே பதிவிடுகிறார்.
ஓரரிவுயிர் என்ற வகைப்பாட்டு முறையில் சொல்ல வரும்போது இதைக் குறிப்பிடுகிறார்.முக்கூடற்பள்ளு, சித்திரக்கால் முதல் புனுகுச் சாம்பா வரையான 23 வகைகளைப் பட்டியலிடுகின்றது.
இப்படியாக தொல்காப்பியம் முதலாக முக்கூடற்பள்ளு வரையான பண்டைய இலக்கியங்கள் நெல்லைப் பற்றியும் அதன் தன்மைகள் பற்றியும் குறிப்பிடுகிறன்றன.
நெல் என்பது தமிழ் மக்களின் மிக முதன்மையானதும் மதிப்பிற்குரியதுமான உணவு. தினை முதலிய அருந்தவசங்கள் இருந்தாலும் நெல் மீதான காதல் தமிழர்களுக்கு அளவிடற்கரியது.
நம் பண்டை இலக்கியங்கள் நெல்லை வெண்ணெல் என்றும் செந்நெல் என்றும் பிரிக்கின்றன. ஐவனம் என்ற வெண்ணெல்லும், சாலி என்ற செந்நெல்லும் எடுத்துக்காட்டுகள் ஆகும்.
நெல் அரிசி என்ற இரண்டு சொற்களால் நாம் பகுத்து அழைக்கின்றோம். ஆனால் ஐரோப்பிய மரபு நெல்லுக்கு என்று தனிப்பெயரை (ஜீணீபீபீஹ்) மிக பின்னரே அறிமுகம் செய்து கொண்டது. அவர்கள் ரைஸ் என்றுதான் அழைத்து வந்தார்கள். கிரேக்கர்களும், அரேபியர்களும் இந்திய நாட்டிற்குள் நுழைந்த பின்னர்தான் அவர்களுக்கு அரிசி என்ற பொருள் கிட்டியது.
எனவே அரிசி என்ற சொல்லையே அவர்கள் தங்களுக்கு ஏற்றமாதிரி வைத்துக் கொண்டார்கள். அல்ருஸ் என்ற அரபிச் சொல் அரிசியைச் குறிப்பதாகும்.
நமது மரபு வழியாக வந்த பல நெல் வகைகள் இப்போது பயன்பாட்டில் உள்ளனவா? அவற்றின் சரியான பெயர் என்ன? அதன் ஊட்டச் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய ஆய்வு தேவையாக உள்ளது.
ஏனெனில் அண்மைக் காலங்களில் இந்த வகையான மரபை நோக்கிய பார்வையும் அதன் மீதான பற்றும் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.
அது மட்டுமல்லாது மரபு என்ற பெயரில் பழமைவாதமும், மூட நம்பிக்கைளும் அதற்கான அரசியலும் முன்னெடுக்கப்படுவதையும் உற்று நோக்க முடிகிறது.
பொதுவாக நாட்டு வகை நெல்லினங்களில் மீதான அக்கறையைத் தொடங்கி வைத்தவர் செங்கம் வெங்கடாசலம் என்ற வேளாண் அறிஞராவார். இவர் மிகச் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவரது மைந்தர் அறிவுடைநம்பியும் அத்துறையில் வல்லுநர். உயிரியப் பன்மயத்துறையில் ஆய்வறிஞர் பட்டம் பெற்றவர். இவர்கள் முதன்முதலாக திருவண்ணாமலைப் பகுதியில் மரபு நெல்லினங்களைப் பற்றிய பரப்புதலைத் தொடங்கினார்கள்.
களர்பாலை முதல் குள்ளகார் அறுபதாங்குறுவை என்று நாம் இன்று கூறும் நெற்களைக் கண்டறிந்து தந்தவர் வெங்கடாசலம். அதன் பின்னர் நெல் ஜெயராமன் அவர்கள் இதை ஓர் இயக்கமாக மாற்றினார். புதுக்கோட்டை ஆதப்பன் முதலிய பலர் இன்று நெல் திருவிழாக்களை நடத்தி பரப்பி வருகின்றனர்.
ஏன் நாட்டு நெல்லினங்கள் வேண்டும் என்ற வினாவிற்கான விடை மிக விரிவானது. இன்று நாம் உண்ணும் நெல் ஒரைசா சட்டைவா என்ற சீரினத்தைச் (species) சார்ந்தது. இதேபோல ஒரைசா களாபரிமா என்ற ஆப்பிரிக்க வகை நெல்லும் உள்ளது. இவை யாவும் ஒரைசா குடும்பப் பயிர்கள்.
புழக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டவை. புழக்கத்திற்கு வராத காட்டு நெற்களும் (wild rice) உள்ளன. பொதுவாக உயிரனங்களை இருபெயர் இட்டு அடையாளப்படுத்தும் முறையை கார்ல் லினக்ஸ் என்ற சுவீடன் நாட்டு புதலியல் அறிஞர் அறிமுகம் செய்தார்.
இவருக்கு முன்னதாக இன்றைய கேரளத்தின், அன்றைய தமிழகத்தின் இடுக்கி மாவட்டத்தில் இருந்த இட்டி அச்சுதன் என்ற மருத்துவர் இந்தப் பெயரிடல் முறையை ஐரோப்பியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்ற வியப்பிற்குரிய செய்தியை நாம் அறிய முடிகிறது.
அந்தப் பெயரிடல் முறையில் தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம் என்று அறியப்பட்டு பின்னர் சீரினம் என்று வகைப்படுத்துகிறார்கள். இதுவரை புதலியலாளர்கள் (Botanists) வந்து தங்கள் வகைப்பாட்டை முடித்துக் கொள்வார்கள். அதற்குப் பின்னர் பயிரியல் அறிஞர்கள், மரபீனியல் துறை அறிஞர் இதைத் தொடர்வார்கள்.
ஒரைசா சடைவா என்ற சீரினத்தில் மாப்பிள்ளைச் சம்பாவும் அடங்கும், குள்ளக் கார் நெல்லும் அடங்கும். இவற்றின் தன்மைகளைக் கண்டறிந்து அதன் குணக்கூறுகளைத் தனிப்பிரித்து வகைப்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக நெல்லின் உயரம், விதையின் நிறம், தடிமன், முளைக்கும் காலம், அறுவடைக்கான நாள், வாழ்நாள் என்று கண்டறிந்து அதைப் பின்னர் தரப்படுத்த வேண்டும் என்கிறார் அறிவுடை நம்பி. ஏனென்றால் அந்த நெல் விதைகளைப் பாதுகாக்கும்போது சரியான நேரத்தில் அறுவடை செய்தால்தான் நெல்லின் தரம் சீராக இருக்கும்.
எடுத்துக்காட்டாக நெல் தாளில் அடியில் உள்ள நெல் மணிக்ள முதிர்ந்தும், மேலே உள்ள நெல் மணிகள் முதராமலும் இருக்கக் கூடும். எனவே அடுத்த சாகுபடியில் இது பெருஞ்சிக்கலாக மாறும். எனவே சரியாக முதிர்ந்த நெல்லை மட்டும் பிரித்து அறுவடை செய்து, அவற்றை மீண்டும் மீண்டும் சாகுபடி செய்த பின்னர் நமக்குச் சரியான தரமான ஒரேநேரத்தில் விளையும் நெல் கிடைக்கும்.
இப்படியாக ஒவ்வொரு நெல் வகையும் தரப்படுத்தப்படுகின்றன. அடுத்ததாக வகையினங்களில் இரண்டு பிரிவுகள் உண்டு, செய்பாட்டுப் பயிர் எனப்படும், கலப்பின, உயர்விளைச்சல் வகைகள் உள்ளன.
மீண்டும் மரபின நெல்லுக்குள் நாம் வரவேண்டிய தேவை என்னவெனில், இன்றைய காலநிலை மாற்றம், நீர்ப்பற்றாக்குறை முதலிய பல்வேறு சூழலியல் அழுத்தங்கள் உருவாகி வருகின்றன.
இவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையிலான விதைகள் தேவைப்படுகின்றன. அது மட்டுமல்லாது பன்னாட்டு நிறுவனங்கள் விதை சந்தைக்குள் புகுந்து மக்களின் ஆதார உணவுக் கண்ணியான விதைகளைக் கைப்பற்றும் போக்கு அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றான மக்கள் இயக்கமாக விதைப் பரப்பியக்கம் தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது.
உலகமயமாக்களுக்கு எதிரான அல்லது மாற்றான உள்ளூர்மயமாக்கல் விதைகள் வழியாக நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு சிக்கல்களும் உள்ளன. விதைகளைக் கண்டறிவதில் இன்னும் போதாமைகள் உள்ளன. ஒரே வகை நெல்லுக்கு இடத்திற்கு இடம் மாறுபாடான பெயர்கள் உலாவுகின்றன.
அடுத்ததாக வாய்மொழித் தரவுகள் ஒவ்வொரு நெல்லைப் பற்றியும் உள்ளன. இவற்றை அறிவியல் முறையில் ஆய்வு செய்து வெளியிட வேண்டும். ஒடியாவில் உள்ள பல நெல் வகைகளை ஆய்வு செய்து அவற்றின் ஊட்டத் தரவுகள் வெளிடப்பட்டுள்ளன.
தஞ்சாவூரில் உள்ள மத்திய உணவு ஆராய்ச்சி நிறுவனம் சில வகை நெல்லின் ஊட்ட நிலைமைகளை ஆராய்ந்து வெளியிட்டுள்ளது. ஆனால் இன்னும் போதிய அளவு பெருவெளியில் அவை வரவில்லை.
‘மாப்பிள்ளைச் சம்பா உண்டால் மாப்பிள்ளை முறுக்கு வரும்’ என்பது வழக்கு. ஆனால் அது எப்படிப்பட்ட சத்துக்களால் ஏற்படுகிறது என்ற ஆய்வு தேவைப்படுகிறது. கல்லுண்டைச் சம்பா உண்டால் உடல் கல்போல இறுகும் என்றும், தங்கச் சம்பா உண்டால் உடல் பொன்போல் மிளிரும் என்றும் வாய்வழி வழக்குள் உள்ளன.
கருங்குறுவைக் காடி சித்த மருத்துவத்தில் உழைமருந்தாக (அனுபானமாக) பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சந்தைப் பொருளியல் தலையெடுத்த பின்னர் அவற்றில் பல புனைவுகளும் கட்டுக்கதைகளும் நுழைக்கப்பட்டுவிட்டன.
இவற்றைக் களைந்து முறையான ஊட்டத் தரவுகளையும், பயன்பாட்டையும் கண்டறிந்து வெளியிட வேண்டும். இது ஊட்ட அளவிலானவை, இவை தவிர களர்ப்பாளை என்ற நெல் வறண்ட களர் நிலத்திற்கு ஏற்றவை. அறுபதாம் குறுவை குறுகிய காலப் பயிர். இப்படியாக பன்னெடுங்காலமாக நமது முன்னோர்கள் தெரிந்து தெளிந்து தேர்ந்து விதைகளைக் கண்டறிந்துள்ளார். அவர்களே மூத்த அறிவியலளார்கள், பயிரியலாளர்கள்.
இப்படியாக ஊட்டப் பண்புகள், மருத்துவப் பண்புகள், சாகுபடிப் பண்புகள், சமையல் பண்புகள் என்று பலவகையான குணக்கூறுகளின் அடிப்படையில் நெல்லினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் செய்ய வேண்டியவையும் உள்ளன.
அடுத்ததாக சமைப்பதும் உண்பதற்குமான தேவையைப் பொருத்தும் நெல்லினங்கள் உள்ளன. மொழிக்கறுப்பு என்ற நெல் திருநெல்வேலி, தென்காசி மாவட்டப்பகுதிகளில் அதிகம்.
இது பருமனான அரிசியைக் கொண்டது, பழைய சோற்றுக்கு மிகச் சுவையானது. அனால் இப்போது பழைய சோறு சாப்பிடும் பழக்கம் இல்லாமல் போய்விட்டதால் அந்த நெல் சாகுபடியில் அருகிவிட்டது. கவுணி என்ற அரிசியில் களி செய்வது சுவையானது. ஆனால் களி உண்ணும் பழக்கம் மறைந்துவிட்டது.
இந்த ஒவ்வொரு சமைத்தல் செயல்பாட்டிலும் மருத்துவத் தன்மைகளும் உள்ளன. குறிப்பாக வைட்டமின் `சி’ ஒரு அரிசியில் இருப்பதாக ஆய்வுகள் கூறினாலும், அதை அப்படியே நமது உடல் எடுத்துக்கொள்ளாமல் போகவும் வாய்ப்புண்டு. எனவே அவற்றை முறையான சமையல் வழிமுறைகளில் பக்குவம் செய்து உண்ண வேண்டும்.
களியை விழுங்க வேண்டும், கூழைக் குடிக்க வேண்டும், சோற்றை மெல்ல வேண்டும். இதைத்தான் தொல்காப்பியம் மரபியலில் வேறு வகையில் கூறுகின்றது.
ஆக எந்த மண்ணில், எந்த விதையை, எந்தப் பருவத்தில் சாகுபடி செய்கிறோம் என்பது முகாமையானது, எப்படிச் சமைக்கிறோம், எப்படி உண்கிறோம் என்பதும் முகாமையானது. இதைத்தான் நாம் திணைக் கோட்பாடு என்கிறோம். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் மூன்றும் இணைந்த வாழ்வியல் நெறிப்படியே நெல்லினங்களை நமது முன்னோர்கள் கண்டறிந்து வகைப்படுத்தியுள்ளார்கள். இன்று அதற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
வளர்ச்சி என்ற பெயரிலும், தொழ்ல்நுட்ப முன்னேற்றம் என்ற பெயரிலும் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் இவற்றைக் கொள்ளையிட அணியமாகிவிட்டன. அரியவகை நெல் ஊன்மங்கள்(Germplasm) கொள்ளையிடப்பட்டு வருகின்றன. அவற்றை அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் தன்மயமாக்குகின்றன.
இதற்கு மாற்றாக உலகம் முழுமையும் இயற்கை வேளாண்மை இயக்கங்களும், சூழலியல் இயக்கங்களும், நுகர்வோர் இயக்கங்களும் போராடி வருகின்றன.
பெரும் வணிக நிறுவனங்கள் உயிரியப் பன்மயம் மிக்க காடுகளையும், மேய்ச்சல் பரப்புகளையும் தொடர்ந்து கையகப்படுத்துகின்றன. இதனால் தாய்த் தாவரங்களான காட்டு நெல் முதலிய உணவின் முன்னோர்கள் அழிந்து வருகின்றன.
வேளாண்மையை பெருநிறுவனமயமாக்கி உணவு உற்பத்தியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முனைகின்றன, இதன் மூலம் பெருகி வரும் உணவுச் சந்தையை கபளீகரம் செய்ய முனைகின்றன. இதற்கு அரசுகளை பெருநிறுவனங்கள் வளைத்துப்போடுகின்றன.
இந்த மும்முனைத் தாக்குதல் அடித்தட்டு மக்களை மட்டுமல்லாது, பிற உயிரினங்களையும் வாழ்க்கையில் இருந்து அப்புறப்படுத்துகின்றன. சமூக நீதியின் முன்னோடியான தமிழ்நாடு, சூழலியல் நீதி அல்லது திணையியல் நீதி பற்றியும் பேச வேண்டும்.
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்பது திருக்குறள். இதில் அனைத்து உயிர்களும் அடங்கும். அதுவே சூழலியல் நீதியாகும். நமது நெல்லும் நீரும் அதன் கூறுகளே.
(கட்டுரையாளர், இயற்கை விவசாய செயல்பாட்டாளர்)
Read in : English