Site icon இன்மதி

பிரிட்டிஷ் ராணியின் சொந்த பறையர் ரெஜிமென்ட்

குயின்ஸ் ஓன் சப்பர்ஸ் மற்றும் மைனர்ஸ் (ஆதாரம்: விக்கிமீடியா காமன்ஸ்)

Read in : English

வட்டமேசை மாநாடுகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அம்பேத்கருடன் கலந்துகொண்ட அய்யா இரட்டைமலை ஸ்ரீனிவாசனுக்கு பல பெருமைகள் உண்டு. நான் தாழ்த்தப்பட்டவன் தானே என்று பிரிட்டிஷ் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ்க்கு கைகொடுக்க மறுத்தவர். 1931 – 32 வட்டமேசை மாநாடுகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனிப் பிரதிநிதித்துவம் கேட்டு வாதாடியபோது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் அமைய தன்னுடைய மக்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார். 

அம்பேத்கர் தன்னுடைய பேச்சுக்களில் இதை தெளிவாக பதிவு செய்திருக்கிறார். இந்தியாவை கைப்பற்ற மட்டும் அல்ல அதை தக்க வைத்துக் கொள்ளவும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் உங்களுக்கு உதவினார்கள் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தை சாடுகிறார். உண்மையில் தாழ்த்தப்பட்ட மக்களின் பங்களிப்பு இந்தியாவை வெள்ளை அரசாங்கம் கைப்பற்ற அவ்வளவு உறுதுணையாக இருந்தது. மெட்ராஸ் இராணுவம் உருவாக்க பட்டபோது அதில் பெருவாரியாக இணைந்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களான பறையர் இனத்தவரே. எந்த அளவு என்றால் பறையர்களுக்கென்று ஒரு தனி ரெஜிமென்ட் இருந்தது. 

கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வாளர் மனஸ் தத்தா மெட்ராஸ் இராணுவத்தை பற்றி தன்னுடைய கட்டுரையில் பறையர் ரெஜிமென்ட் பிரிட்டிஷ் ராணியின் சொந்த பிரிவாக அழைக்கப்பட்டதாக கூறுகிறார். இராணுவத்தில் சேப்பர் மற்றும் மைனர் என்னும் ஒரு படைப்பிரிவு உண்டு. ஆர்டில்லரி எனும் பீரங்கி படைப்பிரிவு பீரங்கிகளை கச்சிதமாக பொருத்த உதவவும் மற்றும் படைப்பிரிவுகள் பாதுகாப்பாக போர் புரிய பதுங்குகுழிகள் வெட்டவும், தேவை ஏற்படும்போது ஆயுதம் தாங்கி  போராட கூடியவைதான் இந்த சேப்பர் மற்றும் மைனர் என்று அழைக்கப்படும் படைப்பிரிவுகள். உழைத்து உழைத்து உரமேறி போன பறையர்கள்  ஆரம்பகால மெட்ராஸ் இராணுவத்தின் நம்பிக்கைக்குரிய காலாட்படை வீரர்கள் ஆனார்கள். அவர்களுடைய சேப்பர் மற்றும் மைனர் பிரிவுதான் பிரிட்டிஷ் ராணியின் சொந்த சேப்பர் மற்றும் மைனர் ரெஜிமென்ட் என்று அழைக்கப்பட்டது. 

இந்தியாவில் தங்களுடைய தொழிற்ச்சாலைகளையும் பண்டகசாலைகளையும் அமைத்த ஐரோப்பிய வணிக கம்பெனிகளுக்கு ஆயுதமேந்திய காவலாளர்கள் பதினேழாம் நூற்றாண்டில் தேவையாக இருந்தார்கள். வணிகத்தை தவிர வேறு நோக்கம் இல்லாதவரை ஐரோப்பிய இந்திய படைப்பிரிவுகள் இதற்குபோதுமானதாகவே இருந்தது. கம்பெனிகளின் ஆர்வம் இந்திய அரசியலை நோக்கி திரும்ப ஆரம்பித்தவுடன் வினையும் ஆரம்பித்தது. 1746ல் மெட்ராஸை பிரெஞ்சுகாரர்களிடம்  பறிகொடுத்த பின்புதான் பிரிட்டிஷாருக்கு இந்தியாவில் படைப்பிரிவுகளை உண்டாக்க வேண்டியதின் தீவிரம் புரிய ஆரம்பித்தது. அவர்களின் நல்ல நேரம் ஐரோப்பாவில் ஏற்பட்ட உடன்படிக்கை விளைவாக மெட்ராஸ் திரும்ப கிடைத்தது.

இரண்டு வருடம் கழித்து இந்திய இராணுவத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஸ்ட்ரிஞ்சர்  லாரன்ஸ் இங்கிலாந்திலிருந்து மெட்ராஸ் (இந்நாள் சென்னை) வந்து ஒரு தரமான படையை கம்பெனிக்காக உருவாக்கினார். 1757 வாக்கில் மெட்ராஸ் இராணுவம் கச்சிதமாக தயாராகி விட்டது. அதே வருடம் ராபர்ட் கிளைவ் தலைமையில் வங்காளத்துக்கு அணிவகுத்து பிளாசி போரில் வெற்றிவாகை சூடியது. 1760ல் எயரி  கூட் தலைமையில் வந்தவாசியை கைப்பற்றியதோடு பிரெஞ்சுக்காரர்களின் நாடு பிடிக்கும் ஆசைக்கு ஒரு முற்று புள்ளி வைத்தது. 

அதன்பின்னர் நடந்த போர்களில் மெட்ராஸ் இராணுவத்தின் பங்கு அளப்பரியது. கம்பெனி அரசு இந்தியாவில் அசைக்க முடியாத அளவுக்கு காலூன்றியதில் மெட்ராஸ் இராணுவத்தின் பங்கு மிக அதிகம். கம்பெனியின் மூன்று மாகாண படைகளில் மெட்ராஸ் இராணுவமே, முக்கியமாக தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமா இருந்த படைப்பிரிவுகளே, ஒழுக்கத்துக்கு பேர்போனதாகவும் உத்தரவுக்கு கட்டுப்படுவதாகவும் இருந்ததாக மனஸ் தத்தா குறிப்பிடுகிறார்.

  மதுரை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றும் ஜே பாலசுப்ரமணியன், மெட்ராஸ் இராணுவத்தில் சேருவது பறையர்கள் சமூகத்தில் உயர உதவியதை சுட்டிக்காட்டுகிறார். தங்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த சாதி விலங்குளை உடைக்க அதை ஒரு கருவியாக அவர்கள் கருதினார்கள்.

கம்பெனி இராணுவம் தாழ்த்தப்பட்டவர்களான பறையர்களை குறிப்பாக சென்னை மற்றும் வடக்கு தமிழகத்தில் இருந்தவர்களை அதிகமாக சேர்த்து கொண்டது. சமூகத்தில் அடிமட்டத்தில் தொழிலாளர்களாக தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட இந்த மக்களுக்கு வெள்ளை இராணுவம் சமூகத்தில் முன்னேற பெரிய ஊன்றுகோலாக இருந்தது எனவே சொல்லலாம். தங்களுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்த கம்பெனிக்காக அவர்கள் எதையும் தர தயாராக இருந்தார்கள். மதுரை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றும் ஜே பாலசுப்ரமணியன், மெட்ராஸ் இராணுவத்தில் சேருவது பறையர்கள் சமூகத்தில் உயர உதவியதை சுட்டிக்காட்டுகிறார். தங்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த சாதி விலங்குளை உடைக்க அதை ஒரு கருவியாக அவர்கள் கருதினார்கள். வெறுத்து ஒதுக்கப்படும் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழும் ஒரு வாய்ப்பாக  இராணுவத்தில் வேலை செய்வது அவர்களுக்கு உதவியது, என்று பாலசுப்ரமணியன் கூறுகிறார். 

பெங்கால் இராணுவத்துடன் ஒப்பிட்டு நோக்கும்போது மெட்ராஸ் அல்லது பம்பாய் இராணுவங்களை பிரிட்டிஷார் இலகுவாக கையாள முடிந்தது. மெட்ராஸ் மற்றும் பம்பாய் இராணுவங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நிறைய இருந்தார்கள் ஆனால் பெங்கால் இராணுவத்தில் உயர் சாதியினரே மிகுதியாக இருந்தனர். இந்த உயர் சாதி வீரர்களுக்கென்ற நிறைய சலுகைகள் சாதி தூய்மையை பாதுகாக்க கொடுக்க வேண்டியதாக இருந்தது. அதில் ஒன்றுதான் கடல் கடந்து போகவேண்டிய போர்க்களங்களில் இருந்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கு. மிருக கொழுப்பு பூசப்பட்ட துப்பாக்கி ரவை மட்டும் 1857 கலகத்துக்கு காரணமல்ல.

Madras Regiment

2013 குடியரசு தின அணிவகுப்பில் மெட்ராஸ் ரெஜிமென்ட் (ஆதாரம்: விக்கிமீடியா காமன்ஸ். மன்னத் ஷர்மா) 

தங்களை கடல்கடந்து போருக்கு செல்ல நிர்பந்திப்பார்களோ என்ற அச்சமும் கலகத்துக்கு ஒரு காரணமாகி போனது. பெங்கால் இராணுவம் ஆரம்பித்த கலகத்தை மெட்ராஸ் மற்றும் பம்பாய் இராணுவங்களின்  உதவியுடனே கம்பெனி நசுக்க முடிந்தது. 

ஆனால் இந்த இராணுவம் கொடுத்த முன்னேற்றம் மற்றும் அவர்களுக்கென்று இருந்த ரெஜிமெண்ட்டுகள்  நீண்ட நாட்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலைக்கவில்லை. 1857 முதல் இந்திய சுதந்திர போருக்கு பின் மாகாண இராணுவங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் முடியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1890ல் எல்லா மாகாண இராணுவங்களும் இணைக்கப்பட்டு பிரிட்டிஷ் இந்திய இராணுவம் உருவாக்கப்பட்டது. இந்திய இராணுவத்தின் கமாண்டர் இன் சீப் லார்ட் கிச்சனர் இராணுவத்தில் மாற்றங்களை கொண்டு வந்தபோது தாழ்த்தப்பட்ட சமூகங்களில் இருந்து பெருவாரியாக ஆளெடுப்பதை நிறுத்தி ‘வீர வம்சங்கள்’  என கருதப்பட்ட ஜாதிகளில் ஆளெடுக்க பரிந்துரை செய்தார். 

இந்த கொள்கை மாற்றம் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் பாதித்தது. மெட்ராஸ் இராணுவத்தின் பறையர் ரெஜிமென்ட் போல பம்பாய் இராணுவத்தின் மஹர் ரெஜிமெண்ட்டும் பாதிக்கப்பட்டது. மஹர் ரெஜிமென்ட் தாழ்த்தப்பட்ட மஹர் மக்களை கொண்டு உருவாக்கப்பட்டது. 1818 பீமே கோரேகான் போர்க்களத்தில் எண்ணிக்கையில் மிகுந்த பேஷ்வாவின் மராத்திய படையை மஹர் மக்கள் அடங்கிய கம்பெனி படை எப்படி போராடி கட்டுப்படுத்தியது என்பது இராணுவ பள்ளிகளில் சொல்லித்தரப்படும் பாடங்களில் ஒன்று. பேராசிரியர் ஆ சிவசுப்பிரமணியன் மஹர் மக்கள்  இந்த வெற்றியை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என சுட்டிக்காட்டுகிறார். தங்களை தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கிய பேஷ்வாவின் படைகளை ஒடுக்கியதை அவர்கள் வருடாவருடம் கொண்டாடுகிறார்கள். மஹர்களின் பீமே கோரேகான் வெற்றி நாள் கொண்டாட்டம் ஆதிக்க சக்திகளுக்கு எவ்வளவு வெறுப்பாக இருக்கிறது என்பதின் வெளிப்பாடுதான் 2018ல் நடந்த வன்முறை, என்கிறார் சிவசுப்பிரமணியன். 

கலைக்கப்பட்ட மஹர் ரெஜிமென்டை மீண்டும் உருவாக்க வேண்டும் என அம்பேத்கர் விடாது முழங்கி வந்தார். ஆனால் முதல் இரண்டாம் உலகப்போர்களில் தன்னுடைய ஐரோப்பிய போர்களங்களுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்ட போது மட்டுமே பிரிட்டிஷ் அரசாங்கம் அதை செய்ய முற்பட்டது. ஆனால் போர் முடிந்தவுடன் ரெஜிமெண்ட்களை கலைக்கவும் செய்தது. 

சட்டமா வசதியா என்று வரும்போது வெள்ளை அரசாங்கம் வசதியை மட்டுமே விரும்பும் எனவும் தேவை முடிந்தவுடன் தனக்காக இரத்தம் சிந்திய மக்களை வசதியாக ஒதுக்கி விட்டதாக அம்பேத்கர் தன்னுடைய பேச்சுகளிலும் எழுத்துகளிலும் குறிப்பிட்டுள்ளார். வீர வம்சங்களில் இருந்து ஆளெடுப்பதாக இராணுவ விதிகளை மாற்றி பிரிட்டிஷ் அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரிய துரோகம் இழைத்தது என் அம்பேத்கர் கூறுகிறார். 

காலவோட்டத்தில், பறையர்களின் ரெஜிமென்ட் பிரிட்டிஷ் ராணியின் சொந்த படைப்பிரிவாக இருந்தது தாழ்த்தப்பட்ட சமூகத்தின் ஒரு அற்புதமான பொற்காலம் எனவே கூறலாம். 

Share the Article

Read in : English

Exit mobile version