Read in : English
ஓர் உழவனாக, தலைமுறை தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கிறேன். இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தால் விவசாயிகளின் வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகிவிடும்.
இந்த வேளாண் சட்டத்தின் சில பிரிவுகள் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் கொண்டு வந்த நிதி மற்றும் தொழில்துறை சீர்திருத்தங்களின் போது மன்மோகன் சிங்கால் முன்மொழியப்பட்டவைத்தான். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது பேசப்பட்ட விஷயங்கள்தான் இவை.
இந்தியாவில் இப்போது 70 கோடிகள் விவசாயிகள் இருக்கிறார்கள். அவ்வளவு விவசாயிகள் தேவையில்லை. கிராமங்களில் 10 கோடிக்கும் குறைவான விவசாயிகள் இருந்தால் போதும். மற்றவர்கள் கிராமங்களைவிட்டு வெளியேற வேண்டும் என்பது மன்மோகன் சிங்கும், அப்போதையய ஒன்றியத் திட்ட குழு தலைமை செயலாளர் உள்பட பலரும் அடிக்கடி சொல்லி வந்ததுதான். தற்போது அதைத்தான் 3 வேளாண் சட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த மோடி அரசாங்கம் துடிக்கிறது.
முழுக்க முழுக்க நவீன, இயந்திரமயமாக்கப்பட்ட, கார்ப்பரேட் முதலாளிய விவசாய முறைக்கு இந்திய விவசாயத்தை மாற்ற வேண்டும் என்பதுதான் அதன் உள்ளார்ந்த நோக்கம். மீதமுள்ள 60 கோடிகள் விவசாயிகள், விவசாய கூலிகளின் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்விக்கு ஒன்றிய ஆட்சியாளர்கள், அதிகாரிகளிடம் எந்த பதிலும் இல்லை.
கடந்த நாற்பது ஆண்டுகளாக மக்கள் தொகை பல கோடி உயர்ந்துள்ளது. நடுத்தர, பணக்கார விவசாயிகளின் நிலங்கள் வாரிசுகளுக்கு பங்கு பிரிக்கப்பட்டு சிறு, குறு விவசாயிகளாக்கப்பட்டு விட்டனர். தமிழ்நாட்டில் 85 சதவீதம் பேர் சிறு, குறு, நடுத்தர, பணக்கார விவசாயிகள்.
விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களின் உற்பத்தியை விட ஒன்றரை மடங்கு லாபம் கிடைக்க செய்வோம் என்று பாஜக 2014 தேர்தலில் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் விவசாய இடுபொருட்கள், உரம், பூச்சி மருந்து, விதைகள் ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு ஏற்கனவே கிடைத்த லாபம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா காலத்தின் அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் 3 வேளாண் சட்டங்களை மோடி ஆட்சி கொண்டு வந்துள்ளது.
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல பொருட்களை நுகர்வோராகவும் இருக்கின்றனர் என்ற அடிப்படை உண்மையில் இருந்து இந்தச் சட்டங்களைப் பார்க்க வேண்டும்.
70 கோடி விவசாயிகள் நுகர்வோராகவும் இருக்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளில் விவசாயம் சந்தைக்கான உற்பத்தியாக ஆட்சியாளர்களால் மாற்றப்பட்டு விட்டது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் சந்தைக்காக ஒரேவிதப் பயிரை விளைவிக்க விவசாயிகள் பழக்கப்படுத்தப்பட்டு உள்ளனர். விவசாயிகளின் உற்பத்தியும், நுகர்வும் சந்தையுடன் இணைக்கப்பட்டு விட்டது.
இந்த சூழ்நிலையில், மோடி ஆட்சியில் சட்டமாக்கப்பட்டு உள்ள 3 வேளாண் சட்டங்களின் அடிப்படைகளைப் பார்க்கலாம்:
1.விவசாய விளை பொருட்கள் அனைத்தையும் அத்திவாசிய பொருட்கள் பட்டியல்களில் இருந்து நீக்கம் செய்தல்.
2.இடைத்தரகர்களை ஓழிப்பதாகச் சொல்லி குறைந்தபட்ச வேளாண் விளைபொருட்களுக்கு ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்வதை தவிர்த்து சர்வதேச சந்தையுடன், இந்திய சந்தையை முழுமையாக இணைத்து விடுவது.
3. ஒப்பந்த முறை விவசாயம் செய்ய, விளைபொருட்களை உற்பத்தி செய்ய விவசாயிகளை கட்டாயப்படுத்தி பழக்குதல்.
இவை விவசாயிகளுக்கு நன்மை செய்கிறதா என்று பார்க்கலாம்.
வெங்காயம், தக்காளி, பருப்பு, இன்னும் பல அன்றாட உணவு பொருட்கள் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியல்களில் இருந்து நீக்குவது சந்தை போட்டியில் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும் என்ற வாதம் ஒரு பக்க சார்பானது. கார்ப்பரேட் நிறுவனங்•கள் மிக பிரமாண்டமான கிடங்குகளைக் கட்டி, அத்தியாவசிய வேளாண் விளைபொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து வைக்க இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.
இப்படி இவர்கள் பெரும் கிடங்குகளில் சேமித்து வைத்து, கூட்டு சேர்ந்து விலைகளை உயர்த்தும் போது மக்கள் பெரிதும் பாதிப்பு அடைவார்கள். விவசாயிகளும்தான். நெல் விளைவிக்கும் விவசாயி மற்ற உணவு பொருட்களை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். தக்காளி, வெங்காயம் விளைவிப்பவர்களுக்கும் இதேகதிதான்.
நெல், கோதுமைக்கு இருப்பது போல் அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை (Minimum Support Price) அரசு நிர்ணயிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை. இதற்கு மாறாக சிறு, நடுத்தர விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நாடு முழுவதும் கொண்டு சென்று விற்பதன் மூலம் நல்ல லாபம் அடைவார்கள் என்றது இந்தச் சட்டம்.
100 ரூபாய்க்கு அதிகமாக டீசல், பெட்ரோல் விற்கும் நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறு, நடுத்தர விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை, வாடகைக்கு வாகனங்கள் அமர்த்தி கொண்டு சென்று விற்க முடியுமா? எங்கு குறைந்த விலைக்கு வேளாண் விளைபொருட்கள் கிடைக்கிறதோ அங்கு வாங்கி எங்கு அதிக விலைக்கு விற்கிறதோ அங்கு மிக அதிக விலைக்கு விற்பது தான் கார்ப்பரேட் நிறுவனங்களின் நோக்கமாகும். இதில் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைக்கும் கதைதான்!
இந்தியாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளுடன் ஒப்பந்த முறை விவசாயத்திற்கு கொண்டு வருவதுதான் வேளாண் சட்டங்களின் மையமான சாராம்சம். ஒப்பந்தம் போடும் பொழுது ஒப்புக்கொண்ட விலைக்கு மாறாக விளைபொருட்கள் தரம் குறைந்துள்ளது என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் எளிதாக ஒப்பந்தத்தை மீறுவார்கள்.
சிறு, நடுத்தர விவசாயிகள் இதற்கெல்லாம் நீதிமன்றங்கள் சென்று நீதி பெற இயலாது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஆண்டில் ஒரு கிலோ உயர்ரக ஆப்பிளுக்கு ரூ.88 என்று விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஆப்பிள் விளைச்சல் அதிகமானதால் உயர்ரக ஆப்பிள் ஒரு கிலோ ரூ.72 என்று விலையைக் குறைத்து நிர்ணயிக்கிறார்கள். ஆனால், அதை கிடங்கில் சேமித்து வைத்து கிலோ ரூ 300க்கு விற்பனை செய்கிறார்கள். ஒப்பந்த விவசாயத்தில் அனைத்து விளை பொருட்களுக்கும் இப்படித்தான் நடக்கும்.
ஒன்றிய அரசின் இந்திய உணவு கார்ப்பரேஷன், தமிழ்நாடு அரசின் உணவுக் கழகம், கொள்முதல் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளிடம் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு அரசு நியாய விலை கடைகள், ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகிக்கப்படுகிறது. பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம், அம்மா உணவகங்களுக்கு இந்த வகையில் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகமாகிறது. இந்த வேளாண் சட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் இந்த விநியோக முறை முற்றிலும் நாசமாகும்.
நாடு முழுவதும் மக்களுக்கு உணவு வழங்க ஒட்டு மொத்த பட்ஜெட்டில் வெறும் 0.4 சதவீதம் மட்டுமே ஒன்றிய அரசு செலவழிக்கிறது. இந்தச் சட்டங்கள் அமலானால் இதுவும்கூட இல்லாமல் போய்விடும். தமிழ்நாடு அரசின் தானிய கொள்முதல் நிலையங்கள் மூடப்படும்.
இப்படியேபோனால், இந்தச் சட்டங்கள் வேளாண்மையை மாநில உரிமை பட்டியலில் இருந்து ஒன்றிய அரசின் பட்டியலுக்கு நிர்பந்தமாக மாற்றிவிடும்.
பகுதிவாரியாக சிறு-, நடுத்தர, -பணக்கார விவசாயிகள் இணைந்த கூட்டுறவு முறை பண்ணைகள் தான் இன்று உள்ள மாற்று. ஒன்றிய, மாநில அரசுகளின் உதவிகளும், மானியங்களும், திட்டமிடல்களும் இதற்கு இன்றியமையாதது. குறிப்பாக இந்தக் கூட்டுறவு விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களை, இயந்திரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். விளைபொருட்களைச் சேமிக்க தானிய குளிர்சாதன கிடங்குகளை ஏற்படுத்த வேண்டும். விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஒன்றிய அரசு நிர்ணயிக்க வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கும் ஒன்றிய அரசு, விவசாயிகளின் நலன்களுக்காக இதைச் செய்ய முடியாதா?
திமுக ஆட்சிக் காலத்தில் கருணாநிதி கொண்டு வந்த உழவர் சந்தை ஒழுங்கமைப்பு விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் மிகவும் நலம் பயப்பதாக இருக்கும். விவசாயிகள் தங்களது தோட்ட விளைபொருள்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக மக்களிடம் குறைந்த விலைக்கு விற்க இந்தத் திட்டம் உதவியாக இருக்கிறது.
இதுபோல, விவசாயிகளின் விளைபொருள்களை பாதுகாத்து வைக்க அந்தந்தப் பகுதிகளில் சேமிப்புக் கிடங்கு வசதிகளைச் செய்து வைப்பது அரசின் கடமை. இதுபோல, விவசாயிகளின் நலனுக்காக அரசு தரப்பில் செய்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. இதைவிட்டு, விவசாயத்தை விவசாயிகளிடமிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது சரியாக இருக்காது.
நேருக்கு நேர்
ஒரு விவசாயி ஏன் புதிய வேளான்மை சட்டத்தை வரவேற்க வேண்டும்? திருவாருர் விவசாயி ஒருவரின் அலசல்
மோடி அரசாங்கம் கொண்டுவர இருக்கும் புதிய வேளாண்மை சட்டங்களை வரவேற்கிறேன். இந்த சட்டங்கள் அமலுக்கு வரும்போது கிடைக்கும் வாய்புகளை பயன்படுத்திக்கொள்வதற்கு இப்போதே என்னை தயார்படுத்திவிட்டேன். இந்த சீர்திருத்தம் நரசிம்மராவ் அரசாங்கம் கொண்டுவந்த நிதி மற்றும் தொழிதுறை...
Read in : English