Site icon இன்மதி

தம்பதியரின் பிணைப்பு நாகஸ்வரம்-கம்பீரநாட்டை இணைப்பு போல வலுவானது

Read in : English

நாகஸ்வரமும் கம்பீர நாட்டையும் (நாட்டையும்) இணைந்தது எந்நாளிலோ? இந்த இணைப்பு இன்றும் நீடித்து வருகிறது என்று எண்ண வைத்தது ஓஸிரா சிவதாசும் பிரசன்னா சிவதாசும், ஸ்ரீ ஜாலந்தர என்ற புகழ் மிக்க ஜயசாமராஜ உடையாரின் கீர்த்தனையை ஒரு அலங்கார ஆலாபனையுடன் ஆரம்பித்த போது.  ஓஸிரா என்பது இவர்களின் ஊர் என்பதைத் தெரிந்து கொண்டோம். தொடர்ந்து ஒன்பது “ஜோடிக் கச்சேரிகள்” எனும் வகையாக, பரிவாதிநி ஒருங்கிணைத்து நடத்தி வரும் “நவராத்ரி நவசக்தி கச்சேரிகள் – 2021ல்”, இது இரண்டாவது நாள் கச்சேரியாகும். விசேஷ தவில் விற்பன்னர்கள் பி கிருஷ்ணகுமாரும் பி ஸ்ரீகுமாரும்  லயசௌக்யானுபவத்தை நமக்களித்தனர்.

ஆரம்பித்த கீர்த்தனையின் பல்லவிக்கு ஸ்வரம் அமைத்து இருவரும் மாறி மாறி வாசித்தது சுவாரசியத்தை உண்டாக்கியது. அடுத்து இரண்டு நல்ல வேகத்துடன் கூடிய கீர்த்தனைகளை வழங்கினர் இருவரும் : ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் ஸாரஸமுகி என்பதும் (கௌடமல்லாரு) தியாகராஜரின் ஜானகி ரமண  (சுத்த சீமந்தினி)  இரண்டாவது கீர்த்தனையின் இடையில் ஸ்வரக்கோர்வைகள் இந்த பாடலின் போக்கிற்குத் தகுந்தாற் போல அமைத்திருந்தது அவர்களது ஆழ்ந்த இசை ஈடுபாட்டிற்கு அத்தாட்சியாக  அமைந்தது என்று சொல்லலாம். அடுத்து வந்த ஸாமா பாடல் அன்னபூர்ணே விசாலாக்ஷி என்பது. இதன் ராக ஆலாபனை ஸாமா ராகத்தின் அதி சாந்தத்தையும் அமைதியையும் ஒருங்கே அளித்தது.

Ochira V Sivadass & Prasanna Sivadass @ Parivadini Navaratri Navashakthi Series

இப்படி ஒவ்வொரு பாட்டாக விவரித்துக் கொண்டிருக்காமல் முழுக் கச்சேரியையும் ஒருமுகமாகப் பார்த்தால் ஒன்று நன்றாகத் தெரிந்தது. இருவரும் இணைந்து நிறைய அப்பியாசம் செய்திருக்கிறார்கள். இல்லாவிடில் இங்ஙனம் சேர்ந்து வாசிக்க இயலாது. கற்பனை வளத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லர். இருவரில் சிவதாஸ் சற்று அனுபவம் மிக்கவராகவும் கச்சேரியை முன்னெடுத்துச் செல்பவராகவும் இருந்தார். இங்கே பிரசன்னா அவர்களிடத்தில் குறையொன்றுமில்லை. அவரும் முன்னணி வித்வானாக விரைவில் திகழப் போவது உறுதி.

தவில் வித்வான்கள் இருவரும் கீர்த்தனைகளின் நிறைவிலும், ராக ஆலாபனைகளின் போது வித்வான் சற்று ஓய்வை நாடிய போதும் நல்ல நடைகளை, இருவருமே அளித்துச் சிறப்பித்தனர்.

Share the Article

Read in : English

Exit mobile version