Read in : English
பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் ஐந்தாவது தம்பதியினர் திருவண்ணாமலையைச் சேர்ந்த பாலகணேஷும், பாகேஸ்வரியும்.
கர்நாடக இசையில் பரிச்சயமில்லாதவருக்கும் இந்தத் தம்பதியினர் வாசித்து வலையேற்றியிருக்கும் திரையிசைப் பாடல்கள் மூலம் இவர்களை அறிந்திருப்பர். குறிப்பாக இவர்கள் வாசித்ட்ன நறுமுகையே பாடலும், ஷங்கர் மகாதேவனின் ப்ரெத்லெஸ் பாடலும் இணயத்தில் பரவலாய் பேசப்பட்டவை.
விதுஷி பாகேஸ்வரி தனது ஏழாவது வயதில் நாகஸ்வரம் கற்கத் தொடங்கினார். இவர் முதல் குரு தந்தை இராமந்தான். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இசை இளங்கலை முடித்துள்ளார். தந்தையாருடன் சேர்ந்து அவரது பத்து வயதிலிருந்து கச்சேரிகள் செய்யத் தொடங்கியுள்ளார்.
வித்வான் திருவண்ணாமலை பாலகணேஷ் மூன்றாம் தலைமுறை நாகஸ்வர கலைஞர். முருகனூரை சேர்ந்த இவர் முதலில் அவர் தந்தையின் குருவான திருவண்ணாமலை முருகைய்யா பிள்ளையிடம் தன் பயிற்ச்சியை த் தொடங்கினார். பின் தன் தந்தை பிச்சாண்டியிடமும், தன் சகோதரி சாந்தியிடமும் பயிற்சியைத் தொடர்ந்தார். திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளியில் ஆலகிராமம் பக்கிரிசாமி அவர்களிடம் நுணுக்கங்களை விவரமாக பயின்றார். கல்லூரியில் திருப்பனந்தாள் திருநாவுக்கரசு ஓதுவாரிடம் தேவாரமும் தவிலாசிரியர் கபிலர்மலை தியாகராஜனிடம் ராகங்களில் நகாசுகளையும் கற்றார்.
விதுஷி அலமேலுவிடம் வாய்ப்பாட்டும் பயின்றுள்ளார். பின்னர் மேதைகள் மதுரை சேதுராமன்/பொன்னுசாமி சகோதரர்களில் இசைப்பேரறிஞர் பொன்னுசாமியிடம் நுணுக்கங்களை ஒரு ஆண்டுகாலம் பயின்றுள்ளார்.
“எதிர் நாயனம் போட்டு உட்கார்ந்து ராக நுணுக்கங்களைக் கற்றுக்கொடுப்பார். என்னைத் தன் பேரப்பிள்ளை போலத்தான் பாவித்தார். என் மாதா பிதா குரு எல்லாம் அவர்தான்.
திருப்பத்தூரில் ஒரு திருமண விழாவில் காலையிலும் மாலையிலும் இத்தம்பதியினர் தனித்தனியே இசைத்த நிகழ்ச்சியில்தான் இவர்கள் முதலில் சந்தித்தனர். 2009ல் மணமுடித்த இவர்கள் இணைந்து வாசிப்பத்ற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
“நாங்கள் இருவரும் விட்டு குடுத்து வாழ்வதால் எந்த சவாலும் பெரிதாக இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒருவரை ஒருவர் போட்டியாக நாங்கள் எண்ணுவதில்லை. உழைத்துக் கொண்டே இருந்தால் ஒரு நல்ல சந்தர்ப்பம் நமக்கு கிடைக்கும் என்று எண்ணி சாதகம் பண்ணுகிறோம்”. என்கிறார்கள்.
பெண்கள் நாகஸ்வரத்துறையில் ஈடுபடுவதற்கான சூழல் எப்படியிருக்கிறது என்று கேட்டதற்கு விதுஷி பாகேஸ்வரி,
”நாகஸ்வரம் கையாள்வது யாருக்குமே கடினம் தான். பெண்களுக்கு சற்று கூடுதலாக. ஆனால் பயிற்ச்சி இருந்தால் அது சுலபமாகிவிடும். தற்காலப் பெண்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குறார்கள். சவால்களை நன்றாக எதிர் கொள்கிறார்கள். தங்கள் குடும்ப வாழ்வையும், தேர்த்தெடுத்த துறையிலும் ஒரே நேரத்தில் சிறப்பாக செயல்படுவதே தற்போதைய சவால். பெண்கள் தற்போது ஆர்வமாக நாகஸ்வரத்தை கற்க முயல்கிறார்கள். பெரும்பாலான இசைப்பள்ளிகளில் ஆண்களில் பாதி அளவிலாவது பெண் குழந்தைகளும்பயில்கிறார்கள். அதுவே மிகப்பெரிய சந்தோஷம்”, என்கிறார்.
வருகிற நவராத்திரி நவசக்தி நாகஸ்வர விழாவில் வி.எம்.கணேஷும், கே.ராமகிருஷ்ணனும் இந்த ஜோடிக்குத் தவில் வாசித்துக் கச்சேரியைச் சிறப்பிக்கவுள்ளனர்.
Read in : English