Site icon இன்மதி

ஜெயமோகனுக்குச் சிறப்புச் சேர்க்குமா பொன்னியின் செல்வன்?

ஜெயமோகன் (Credit: Wikimedia Commons)

Read in : English

பல தலைமுறையினரால் போற்றபட்ட முக்கிய நாவல் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். தமிழ் சினிமாவின் மாஸ்டர்களில் ஒருவராக நம்பப்படும் மணிரத்னம் படமாக்கப் போகிறார் என்ற செய்தி வெளியான நாள் முதலாக, அது தொடர்பான ஒவ்வொரு தகவலும் பிரேக்கிங் நியூஸாகிறது. அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்பட முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது என்பதால் ரசிகர்கள் உற்சாகமாகியிருக்கிறார்கள். அடுத்த ஆண்டில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இன்னொரு சுவாரசியம் அதன் வசனகர்த்தாவான இலக்கிய உலக ஜாம்பவான் ஜெயமோகன். இந்தப் படத்தில் அவரது பங்களிப்பு என்னவாக இருக்கும்?

வியாபாரரீதியில் வெற்றிபெறாத கடல் திரைப்படத்துக்கு ஏற்கெனவே கதை வசனம் எழுதிய அனுபவமுள்ள ஜெயமோகன் மீண்டும் மணிரத்னத்துடன் கைகோக்கிறார். இந்தப் படம் தொடர்பாக அளித்திருக்கும் ஒரு பேட்டியில் சினிமாவுக்கு ஏன் எழுதுகிறீர்கள் என்னும் கேள்விக்கு, கம்பனுக்கு சடையப்ப வள்ளல் எனக்கு சினிமா என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் அவர். மேலும், தமிழில் அதிகமாக எழுதிவரும் தனக்கு இதுவரை கிடைத்த காப்புரிமைப் பணத்தைவிட இரு மடங்கு ஊதியம் பொன்னியின் செல்வனில் கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரை வடிவத்துக்குப் பின்னணியில் ஒரு வரலாறு இருக்கிறது. இயக்குநர் மகேந்திரனைப் பொன்னியின் செல்வன் திரைக்கதையை எழுதவைத்தவர் எம்.ஜி.ஆர். ஆனால், அவரால் அதைப் படமாக்க முடியவில்லை. மக்கள் திலகம் கைக்குத் தப்பிய அந்தப் படம் மணி ரத்னம் கையில் அகப்பட்டிருக்கிறது. அப்படியான பொன்னியின் செல்வனைத் திரைக்கதையாக்கும் வாய்ப்பு ஜெயமோகனுக்குக் கிடைத்திருக்கிறது. அது அவரது இலக்கிய உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்றே நம்புகிறார்கள் ஜெயமோகனின் வாசகர்கள். ஆனால், ஜெய மோகன் வாசகர்களுக்கு இந்தப் படத்தில் திருப்தி கிடைக்குமா?

 

தமிழில் ரப்பர், விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், ஏழாம் உலகம் எனத் தொடர்ந்து எழுதிக் குவித்துவரும் ஜெயமோகனின் மகத்தான சாதனை எனப் புகழப்படுகிறது மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய வெண்முரசு நாவல். அந்த நாவல் 25 ஆயிரம் பக்கங்களைக் கொண்டது; அதில் 2,000 கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. கேட்கும்போதே மலைப்பாக இருக்கிறதே அதைப் படைக்க எவ்வளவு அசுர உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? அப்படி உழைத்த ஜெயமோகன் வசனத்தில் வளர்ந்துள்ள படம் பொன்னியின் செல்வன் என்றபோதும், ஒரு விஷயத்தைச் சிந்திக்க வேண்டும். ரத்னச் சுருக்கமான வசனங்களை அதுவும் மிக மிக அவசியப்பட்ட இடங்களில் மட்டுமே பயன்படுத்துபவர் மணி ரத்னம். ஆனால், பொன்னியின் செல்வனோ வரலாற்றின் கற்பனை விரிந்து பரவிக் கிடக்கும் தமிழின் மிகப் பெரிய நாவல். அதற்கு வசனமெழுதியவரோ 25 ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவலை ஒருநாள் இடைவெளிவிடாமல் நாள்தோறும் அநாயாசமாக எழுதி முடித்தவர். மொத்தத்தில், மணிரத்னத்தின் வலிமை காட்சிகளில் வெளிப்படும்; ஜெயமோகனின் வலிமையோ சொற்களில் வெளிப்படும். எனும்போது, எழுத்தாளரான ஜெயமோகனுக்கு இந்தப் படத்தில் என்ன பெரிய வாய்ப்பு கிடைத்துவிடும் என ரசிகர்கள் முணுமுணுக்கிறார்கள்.

ஜெயமோகனுக்காக வரும் ரசிகருக்கு பொன்னியின் செல்வன் ஏமாற்றத்தையே தரும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் குமுதம் தீபாவளி சிறப்பிதழின் இலக்கியப் புத்தகத்தின் முகப்பில், புத்தருக்குத் தவம் எனக்கு எழுத்து எனப் போட்டு ஜெயமோகனைப் பற்றி எழுதியிருந்தார்கள். அதைத் தொடர்ந்து வெளியான மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் எழுத்தாளராக நடித்திருந்த மாதவன் ஒரு காட்சியில், “சில பேரு சொல்லுவாங்க எழுத்து ஒரு தவம்னு பிறவியிலேயே ஒரு ஸ்பார்க் வேணும்னு சுத்தப் பொய்” என்று வசனம் பேசுவார். அந்த வசனத்தை எழுதியவர் சுஜாதா. அந்த வசனம் குமுதம் இதழில் ஜெயமோகன் கூறியதற்கான சுஜாதாவின் எதிர்வினையோ என்ற எண்ணத்தையே தரும். மணி ரத்னத்தின் ராஜாங்கத்தில் சுஜாதா இருந்த இடத்தில் இப்போது ஜெயமோகன் இருக்கிறார்.
ஜெயமோகனுக்கு வெகுஜன எழுத்தாளரான சுஜாதா மீது பெரிய அபிமானம் இருக்க வாய்ப்பில்லை. பொழுதுபோக்கு இதழ்களில் எழுதிப் பெரும் வாசகப் பரப்பை அடைந்தவர் சுஜாதா என்றால், சிறு பத்திரிகையில் எழுதிப் பெரும்பாலானோரைச் சென்றடைந்த சுந்தர ராமசாமியின் தொடர்ச்சி எனத் தன்னை முன் வைப்பவர் ஜெயமோகன். என்ன ஆச்சரியம் என்றால், சுந்தர ராமசாமி எந்தப் படத்துக்கும் வசனம் எழுதியிருக்கவில்லை; அவரது தன்மானம் சினிமாவுக்காக வளைந்துகொடுக்கவில்லை. ஜெயமோகனோ சாமி இயக்கிய சிந்து சமவெளி திரைப்படத்தைக்கூட நழுவ விடவில்லை. அந்த வகையில் அவர் சுஜாதாவின் தொடர்ச்சி.

எனினும், திரைப்படத்தில் சுஜாதா தொட்ட உயரத்தை ஜெயமோகனால் தொட முடியவே இல்லை. சுஜாதாவை விடுங்கள் பாலகுமாரன் இடத்தைக்கூட ஜெயமோகனால் எட்டிப் பிடிக்க முடியவில்லை. சுஜாதா தீவிர இலக்கியவாதியல்லர் எனவே அவருக்கு சினிமா வசனங்கள் தீனி போட்டன ஆனால், ஜெயமோகன் தீவிர இலக்கியத்தில் அடியாழம் கண்டவர். அவரது யானைப் பசிக்குச் சோளப்பொறி போன்ற வாய்ப்பே சினிமா வாய்ப்பு வழியே கிடைக்கும். பிறகு எதற்கு சினிமாவுக்கு ஜெயமோகன் தேவைப்படுகிறார்? நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் அவரிடம் கேட்கலாம். எல்லாவற்றுக்கும் அவரிடம் கதை கிடைக்கும். மேலும், அவரது இலக்கியப் பங்களிப்பு காரணமாக இளைஞர்களிடையே அவருக்கு ஒரு பிரபலத் தன்மை கிடைத்திருக்கிறது. இப்போது சினிமாவை இளைஞர்கள்தான் அதிகமாகப் பார்க்கிறார்கள். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார் என்றால் அதன் சந்தை மதிப்பு கூடும் என சினிமாக்காரர்கள் நினைக்கிறார்கள். சினிமாவில் வசனம் எழுதினால், குறைந்த உழைப்பு அதிக வருமானம் என நினைக்கிறார் ஜெயமோகன். இதுதான் மணிரத்னம், ஜெயமோகன் கூட்டணிக்கான காரணம்.

மிக எளிய சொற்களைக் கொண்டு வசனம் எழுதினால் போதும் என்று சொல்லப்பட்டிருப்பதற்கும் அவர் கட்டுப்பட்டிருக்கிறார். சினிமாவில் வசனம் எழுத எதற்கு வெண் முரசு எழுதியவர் வேண்டும் என்று இறுமாப்போடு ஜெயமோகன் கேட்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இலக்கியத்தில் அடங்க மறுக்கும் ஆசான்- இப்படித்தான் இவரது வாசகர்களால் இவர் அழைக்கப்படுகிறார்- சினிமாவில் அடக்கியே வாசிக்கிறார். இலக்கியத்துக்குத் தான் புரவலன் என்றபோதும் சினிமாவுக்குத் தான் புலவன்தான் என்னும் உண்மை அவருக்குத் தெரிந்திருக்கிறது. இல்லையென்றால், புத்தருக்குத் தவம் எனக்கு எழுத்து என்று சொன்ன ஜெயமோகனால் கம்பனுக்கு சடையப்ப வள்ளல் எனக்கு சினிமா என்று சொல்ல முடியுமா?

அவருக்கு அதிக ஊதியம் கிடைத்ததைப் பெருமையாக அவர் முன்வைத்தாலும் அவரது வாசகரைப் பொறுத்தவரை இருபது வயதுகளில் அவர் எழுதிய, ஒரு சிறு நாவல் என ஜெயமோகனே குறிப்பிடும் ரப்பர் தந்த திருப்தியில் பத்து சதவீத திருப்தியைக்கூட, அங்காடித் தெரு, நான் கடவுள் உள்ளிட்ட அவரது படங்கள் தந்திருக்கவில்லை என்கிறார்கள். எடுத்துக்காட்டாக ரப்பர் நாவலில் இடம்பெற்றுள்ள சில வாக்கியங்களை வாசித்தாலே வாசகர்களின் கூற்று உண்மை என்பது தெரிகிறது.

//ரப்பர் வந்த பெறவு மலையில் ஈரம் இல்ல, ஊற்று இல்ல.
இத்தனை செல்வம் எதற்கு மனிதனுக்கு? அது மனிதனை நல்ல வழியில் செல்லத் தூண்டாது… சுக போகங்களைக் குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிப்பது தான் மனிதமனம் கொள்ளும் வறட்சியின் எல்லை…
பிறர் உழைப்பிலும் உடைமையிலும் ஒரு அம்சத்தையாவது கவராமல் செல்வத்தை எப்படிக் குவித்துக்கொள்ள முடியும்? பணமும் பாபமும் பரஸ்பரம் பிரிக்க முடியாதவை.
ஒருபோதும் தன்னை மன்னித்துக்கொள்ள முடியாத செயலைச் செய்துகொண்டிருப்பதால் உள்ளூர மனம் சொன்னது. ஆனால், குரூரமான வெறி எக்களிப்புடன் அந்த விளையாட்டைத் தொடர்ந்தார் வேறு வழி ஏதும் இருக்கவில்லை.
லாரன்ஸ் புன்னகையுடன், “ஆகாயத்துப் பறவைகள் விதைப்பதில்லை, அறுவடை செய்வதில்லை” என்றான்.
பிரான்ஸின் சட்டென்று புல்லரித்தான் எத்தனை அற்புதமான வரிகள்! இவை ஏன் இதுவரை புரியவில்லை? திரும்பத் திரும்பக் கேட்டும் ஏன் மனதைத் தாக்கவில்லை? ஒவ்வொன்றுக்கும் ஒரு மனோபாவம் வேண்டுமா? ஒரு சந்தர்ப்பம், ஒரு காலம் வரவேண்டுமா?அந்த வார்த்தைகளைப் பலமுறை மனதுக்குள் திரும்பத் திரும்பக் கூறினான். சொல்லச் சொல்ல அவை மந்திரம்போல் அவனுள் விரிந்தன. புதுப்புது அர்த்தங்களுடன் வளர்ந்தன. ஆகாயத்துப் பறவைகள்! ஆகாயத்தில் ஒரு பறவை!//

இப்படியெல்லாம் ஒரு நாவலில் அதுவும் முதல் நாவலில் எழுத முடிந்தது ஏனெனில் அவருக்கு எந்தக் கட்டும் இல்லை. ஆனால், சினிமாவில் அப்படியன்று அவர் பணத்துக்காக மட்டுமே வசனங்களை எழுதுகிறார். ஆனாலும், அவரால் சினிமாவைத் தவிர்க்க இயலவில்லை என்பதை இலக்கிய வாசகர் அவரது பலவீனமாகத்தான் கருதுவார். அவரது இலக்கிய வாசகர்களுக்கு அவருடைய திரைப்படப் பங்களிப்பு எப்போதுமே திருப்தியை அளிக்கப்போவதில்லை. அப்படி இருக்கும்போது அதற்கு பொன்னியின் செல்வன் படமும் விதிவிலக்காக இருக்கப்போவதில்லை. பொன்னியின் செல்வன் மணி ரத்னம் காட்சிகளின் பிரம்மாண்டத்தால் கட்டியெழுப்பும் பெரும் மாளிகை அங்கே வசனங்களால் சிறு சிறு தீட்டல்களைத் தரும் வாய்ப்பு மட்டுமே ஜெயமோகனுக்கு இருக்கிறது. ஆக, ஜெயமோகனுக்காக வரும் ரசிகருக்கு பொன்னியின் செல்வன் ஏமாற்றத்தையே தரும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. இலக்கியத்தில் அவர் வாழை மரம் என்றபோதும் சினிமாவில் அவர் ஒரு ரப்பர் மரமே.
*

 

 

 

Share the Article

Read in : English

Exit mobile version