Site icon இன்மதி

லாபம்: கோலிவுட்டில் காணாமல் போன கம்யூனிச கருத்துகள்

Read in : English

இந்த கதையின் சுருக்கத்தைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்
https://inmathi.com/wp-content/uploads/2021/09/WhatsApp-Audio-2021-09-24-at-9.57.51-PM-1.mp3?_=1

தமிழ் சினிமாவில் பல காலங்களில் பல்வேறு கருத்தியல் பேசப்பட்டு வந்தன. பொதுவாக வெகுஜன ஊடகமாக சினிமா இருந்தாலும் வியாபாரம் அதன் முக்கிய நோக்கமாக இருந்தாலும் சமூகக் கருத்துகள் பேசப்பட்டேவந்தன. விடுதலைப் போராட்ட காலத்தில் தணிக்கையைத் தாண்டி விடுதலை பேசிய படங்கள் இருந்தன. விடுதலை பெற்றபின்“ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என்று பாரதியார் பாடல் பாடி அதைக் கொண்டாடிய படங்கள் இருந்தன. விடுதலைபெற்ற பின் சமூக கருத்துகள் பேசும் படங்களும் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்வை சித்திரிக்கும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’ போன்ற திரைப்படங்களும் வெளிவந்தன. இந்திய தேசியத்துள் தமிழ் தேசியம் பேசிய ம.பொ. சிவஞானம் பல புராணப் படங்களையும் கொடுத்தார். தமிழையும் அரசியலையும் திராவிட இயக்கத்தவர் இணைத்த காலத்தில் தமிழையும் மதத்தையும் சேர்க்கும் புராணப் படங்களும் வெளிவந்தன.

பெரும்பாலான இயக்குனர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கம்யூனிசமோ மார்க்சியமோ தெரியாத நிலையில் அவர்களுக்குத் தெரியாத ஒன்றை அவர்கள் எப்படி சினிமாவில் காட்டுவார்கள்?

விடுதலைப் போராட்ட காலத்திலேயே திரைத்துறையில் கால்பதித்து சிறந்த சமூகக் கருத்துகளையும் திராவிட இயக்க சிந்தனைகளையும் விதைத்து சினிமாத் துறையையே தங்கள் ஆதிக்கக்த்தில் கொண்டுவந்தது திராவிட இயக்கம். ஆனால், உலகம் முதலாளித்துவம் என்றும் சோஷலிசம் என்றும் இருவேறு பிரிவுகளாகப் பிரிந்தநிலையிலும் தமிழ் சினிமாவில் சிவப்பு சிந்தனைகள் அந்த அளவு தாக்கம் செலுத்தவில்லை.

சமூக ஏற்றத்தாழ்வுகளால் பிரிக்கப்படும் காதலைப் பேசும் சரத்சந்திரரின் தேவதாசும் நேரடியாக ஏற்றத் தாழ்வுகளைப் பேசவில்லை. சமூக ஏற்றத் தாழ்வுகளையும் உழைப்பவன் ஒருவனாகவும் அதை அனுபவிப்பவன் இன்னொருவனாகவும் இருக்கும் கருத்துகளும் ஏழை பணக்காரன், பண்ணையாரின் சுரண்டல் போன்ற கருத்துகள் பரவலாக பல படங்களில் தூவப்பட்டாலும் அடிப்படை கம்யூனிச கருத்துகள் தமிழ் திரையில் மிகக்குறைவு. மலையாள திரைப்படங்களிலும் வங்கமொழிப் படங்களிலும் காணப்படும் கருத்தாழம் மிக்க கம்யூனிச சிந்தனைகள் தமிழ்நாட்டில் மிகக்குறைவு.

1960-களிலும் 1970-களிலும் எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதைகள் சில திரைப்படங்களாயின, ஆனால், ‘சில நேரங்களில் சில மனிதர்கள், தவிர வேறு படங்கள் வணிகரீதியில் வெற்றிபெறவில்லை. ‘யாருக்காக அழுதான்’ ‘பாதை தெரியுது பார்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ போன்ற படங்கள் பாராட்டப்பட்டாலும் வெற்றிபெறவில்லை. அதற்குப் பின் ‘சிவப்பு மல்லி’ போன்ற படங்களில் செங்கொடி தூக்கிய தொழிலாளர்கள் போராட்டம் தவிர வேறு எதுவும் இல்லை. கவிஞர் வைரமுத்துவின் கதைவசனத்தில் உருவான ‘நட்பு’ கம்யூனிச கருத்துகளை மேலோட்டமாகப் பேசியது.

மலையாள திரைப்படங்களிலும் வங்கமொழிப் படங்களிலும் காணப்படும் கருத்தாழம் மிக்க கம்யூனிச சிந்தனைகள் தமிழ்நாட்டில் மிகக்குறைவு.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவரான கமல்ஹாசன் மலையாள சினிமாவில் முதலில் நடித்தபோது அந்தத் திரைப்படங்களில் எழுத்தாளர்கள், இயக்குநர்கள் ஆகியவர்களுடன் பழகி சினிமாவில் கம்யூனிச கருத்துகளை கலைநயத்துடன் அடியோட்டமாக சொன்னார்.

முற்றிலும் அழுகிப் போன நிலையில் இருக்கும் சமூகத்தை படம்பிடிக்கும் ‘மகாநதி’ புரையோடிப்போன சமூக அவலங்களையும் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கும் சமூகப்போக்கில் ஒரு துளிமட்டும் தனியாக பயணிக்க முடியாது என்பதை உருவகமாகக் காட்டி சமூகம் ஒரு குறிப்பிட்ட போக்கில் செல்லும்போது தனிமனிதன் அந்த சூழ்நிலைக்குக் கட்டுப்பட்டவன் என்பதையும் படம் பேசியது. வன்முறையே வாழ்க்கையாகிப் போன சமூகத்தில் ஒருவன் மட்டும் வன்முறையை தவிர்க்க முடியாது என்பதையும் அவனும் வன்முறையைக் கையில் எடுக்கும் நிலைக்கு ஆளாவான் என்பதையும் ‘தேவர் மகன்’ சொன்னது.

 

சமீப காலமாக மார்க்சியம் பேசும் படங்கள் என்றால் இயக்குனர் ஜனநாதனின் படங்கள் என்று இருந்தது.  அவர் இயக்கிய பேராண்மை, புறம்போக்கு போன்ற படங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை பிரச்னைகளை பேசியது. புறம்போக்கு மரண தண்டனைக்கு எதிரான குரலாகவும் ஒலித்தது. படமும் பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அண்மையில் வந்த படம் ‘லாபம்’. மனிதர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள், மேல் தட்டு மக்களால் எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதை தெளிவாக விளக்கியிருப்பார்.

படத்தை உருவாக்கிய தன்மையில் ஏற்பட்ட பின்னடைவும், கொரானோ காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு நிலையால் படம் பேசப்படவில்லை என்பது உண்மை. அதே நேரத்தில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடியும் நிலையி்ல் எஸ்.பி. ஜனநாதன் காலமானார் என்பதும் இதன் காரணங்களில் ஒன்று.

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான சிஐ ஏ. பெரியளவில் பேசப்பட்ட படம். படத்தில் பாதி காட்சிகள் மார்க்ஸின் பொதுவுடமை கொள்கைள் பற்றியே நகரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் பொதுப்பிரச்சினைகள் பேசும் படங்கள் தற்போது அவ்வளவாக வெளிவருவதில்லை. பெரும்பாலும் வணிக சினிமாக்களாகவே இருக்கின்றன. காதலைத் தாண்டி வேறு எதுவும் உலகத்தில் இல்லை என்ற பிரமையை இளைஞர்களிடம் உருவாக்குவதில் முதல் இடத்தில் இருப்பது தமிழ் சினிமா. இதைத் தவிர சமூகத்துக்காகப் போராடும் வீரமான நாயகர்கள் வில்லனுடன் மோதும் படங்களே அதிகமாக இருக்கின்றன. இதனால் ஓரளவு வாழ்க்கை அனுபவத்தையும் உலகத்தையும் புரிந்துகொண்ட ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்கள் சினிமாவுக்குப் போவதையே நிறுத்திவிட்டனர். இப்போது இளைஞர்கள் மட்டும் பார்க்கும் ஊடகமாக தமிழ் சினிமாவின் சந்தை குறுகிப் போயிருக்கிறது. இளைஞர்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கம் மிகவும் குறைந்துபோய்விட்டதால் அவர்களுக்கு அவர்களுக்கு கார்ல் மார்க்ஸ் என்று ஒருவர் இருந்தார் என்பதே புதிய விஷயமாக இருக்கும். இந்த நிலையில் அவர்கள் மார்க்சிய சினிமாவை எப்படி பார்ப்பார்கள்? பார்த்தாலும் எப்படி புரியும்? சினிமாவில் மார்க்சியம் பற்றிய புரிதல் இருக்கும் முதலாளிகள் இருக்கின்றனரா? பெரும்பாலான இயக்குனர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கம்யூனிசமோ மார்க்சியமோ தெரியாத நிலையில் அவர்களுக்குத் தெரியாத ஒன்றை அவர்கள் எப்படி சினிமாவில் காட்டுவார்கள்?

தலித்துகளுக்காகப் போராடும் தலித் சினிமா வணிக அம்சங்கள் மாறாமல் தரப்பட்டுவருகிறது. ஆனால், கம்யூனிகக் கருத்துகளைத் திரையில் சொல்லும் அளவுக்கு கம்யூனிசம் கற்றவர்கள் தமிழ் சினிமாவில் தற்போது யாரும் இல்லை என்னும் நிலையில் கம்யூனிச கருத்துகள் திரையில் பேசப்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

சுதந்திரம் வந்த காலத்தில் தேசியத்தின் மூவண்ணம் சினிமாவில் வலம்வந்தது. அதற்குப் பின் திராவிட சித்தாந்தம் கோலோச்சியது. இயக்குனர் பா.ரஞ்சித் வருகைக்குப் பின் அம்பேத்கரின் நீலச்சிந்தனைகள் களத்தைப் பிடித்துள்ளது. சிவப்பு சிந்தனைகள் என்பது காணாமலே போய்விட்டது.

Share the Article

Read in : English

Exit mobile version