Site icon இன்மதி

பாலியல் துன்புறுத்தல் வழக்குக்கு என்ன சாட்சிகள் தேவை?: நீதிபதி சந்துரு விளக்கம்

Read in : English

மீ டூ குறித்த செய்திகளும் சர்ச்சைகளும் முக்கியத்துவம் பெற்று வரும் சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய முன்னாள் நீதிபதி எம். சந்துரு இன்மதி இணைய இதழ் நிருபருக்கு  அளித்த நேர்காணல்.

பாலியல் பலாத்காரத்தால் துன்புற்ற பெண்களுக்கு நியாயம் கிடைக்க சட்டத்தில் வழியிருக்கிறதா? வழக்குத் தொடருவதற்கு என்னென்ன சாட்சியங்கள் தேவைப்படும்?

பாலியல் வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சட்டத்தில் வழி இருக்கிறது. வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்புணர்ச்சி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் அருகில் உள்ள காவல் நிலையத்தில் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். அதன்பிறகு முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்படும். குற்றத்தின் தன்மையைப் பொருத்து மாஜிஸ்திரேட் முன்போ அல்லது செஷன்ஸ் கோர்ட் நீதிபதி முன்போ வழக்கு விசாரணை செய்யப்படும். சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் ஆதாரங்கள் இருந்தால் வழக்குத் தொடரப்படும். சாதாரணமாக நான்கு சுவற்றுக்குள் நடக்கும் இந்த மாதிரிக் குற்றங்களில் மூன்றாம் நபர் சாட்சி என்பது மிகவும் அரிது. இறுதியில், பாதிப்புக்கு உள்ளானவர் அளிக்கும் சூழ்நிலை சந்தர்ப்ப சாட்சியங்களும் ஆவண சாட்சியங்களும் மட்டுமே இருக்கும்பட்சத்தில் அதை நீதிமன்றம் ஏற்கும். பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் (தடுப்பு, தடை மற்றும் பரிகாரம்) சட்டம் 2013இன் 4வது பிரிவின்படி,  இதுகுறித்து பணியிடத்தில் உள்ள புகார் விசாரணைக் குழுவிடம், சம்பவம் நடந்த ஓராண்டுக்குள் புகார் தெரிவிக்க வேண்டும். இச்சட்டத்தின்படி, தவறிழைக்கும் ஊழியருக்கு எதிராக துறைரீதியாக எடுக்கப்படும் நடைமுறைகளைப் போலவே இது இருக்கும். அதிகபட்சமாக குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படும்பட்சத்தில், குற்றம்சாட்டப்பட்டவர், பணியிலிருந்து நீக்கப்படலாம்.

சம்பந்தப்பட்டவரின் சம்மதத்துடனே நடந்தது என்று ஆண் வாதிட்டால் எப்படி உறுதிப்படுத்துவது?

வழக்குத் தொடர்ந்தவரின் சம்மதத்துடன்தான் நடந்தது என்று குற்றம் சாட்டப்பட்டவர் வாதிட்டால்,  ஏற்றுக் கொள்ளும் படியான சாட்சியங்களை சமர்ப்பித்து நிருபிக்க வேண்டும். பாலியல் வன்புணர்ச்சி சம்பந்தப்பட்ட குற்றமாக இருந்தால், தனது சம்மதம் இல்லாமல் நடந்தது என்று பெண் கூறினால், அவளது சம்மத்துடன் நடந்தது என்பதை நிருபிக்க வேண்டிய முழுப் பொறுப்பு குற்றம்சாட்டப்பட்டவரையே சார்ந்தது. பாதிப்புக்கு உள்ளானவரின் கடந்த காலப் பின்னணி குறித்து கேள்வி எழுப்புவதை சாட்சிச் சட்டம் தடை செய்துள்ளது.

”அவதூறு வழக்குத் தொடர்வது மட்டுமே, வழக்குத் தொடர்ந்த ஆணுக்கு எந்தப் பயனையும் அளித்துவிடாது” என்று கூறுகிறார் நீதிபதி சந்துரு 

உண்மைக்குப் புறம்பான வழக்குள் பற்றி…? இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிற்குமா?

1998ஆம் ஆண்டு தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் அல்லது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டால், வழக்குத் தொடர்ந்தவர் தான் குற்றமற்றவர் என்று விசாரணை நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது. பொய் சாட்சியத்துக்கு முயற்சி செய்தால் மட்டுமே, பொய் வாக்குமூலம் அளித்தகாக அவர் மீது வழக்குத் தொடர முடியும். எனினும்,  பொய் புகார் அளித்திருந்தது தெரியவந்தால், பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் (தடுப்பு, தடை மற்றும் பரிகாரம்) சட்டத்தின்படி (2013), அலுவலகப் புகார் விசாரணைக் குழுவின் விசாரணை முடிவுகளைப் பொருத்து அந்தப் பெண் ஊழியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். புகாரின் தன்மையையும் அதற்காக சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்களையும் பொருத்துதான் இந்த வழக்கு தாக்குப் பிடிக்குமா இல்லையா என்பது தெரிய வரும்.

ஒரு ஆண் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டால் என்னவாகும்? குற்றம்சாட்டப்பட்டவர் என்ன செய்ய வேண்டும்?

உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டப்போது, அதுகுறித்த மேல் நடவடிக்கையைத் தடுக்கவும் புகார் தொடர்பான செய்திகள் வெளியிடப்படுவதைத் தடுக்கவும் தில்லி உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த காலத்தில் இணைய தளத்தில் இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகள் நீக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தது. அவதூறு வழக்குத் தொடர்வது மட்டுமே, வழக்குத் தொடர்ந்த ஆணுக்கு எந்தப் பயனையும் அளித்துவிடாது. . அதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட பெண் பிரதிவாதியாக இருக்க நேரிடும். இதன் மூலம் அந்த ஆண் சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, வழக்குத் தொடர்பான  அனைத்து விவரங்கள் குறித்தும் குறுக்கு விசாரணை நடத்தப்படும். ஒரு வேளை அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாமல் இருந்தால், உள்நோகத்துடன் வழக்குத் தொடர்ந்தது அவதூறாகக் கருதப்பட்டு, சிவில் நீதிமன்றம் மூலம் அந்தப் பெண் நிவாரணம் பெற முடியும்.

Share the Article

Read in : English

Exit mobile version