Site icon இன்மதி

நெருங்கி வரும் புயல் ஆபத்து: அரசுகள் நடவடிக்கை எடுத்தும் 801 மீனவர்களின் கதி என்ன?

படம்: இந்திய கடலோர காவல்படையிடமிருந்து

Read in : English

வெள்ளிக்கிழமை   முதல்   5  நாட்களுக்கு   அதி கனமழை   நீடித்து  புயல்  வீசக்கூடும்  என்பதால்   கடலில்   ஏற்படக்கூடிய   பேராபத்து  குறித்து   தமிழகம்,  கேரளா,  புதுச்சேரி  ஆகிய   3  தென்மாநிலங்களிலும்   மத்திய  மாநில  அரசுகள்  சார்பில்  “ரெட் அலர்ட்”  அபாய  அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு   பருவமழை  முடிவடைய  உள்ள  நிலையில்  குமரிக்கடல்  பகுதியிலும், அரபிக் கடல் தென்மேற்கு பகுதிகளிலும், காற்றழுத்த   தாழ்வு   நிலை    புயலாகி   மாறி    தாக்கக்   கூடிய    அபாயமும்,  மிக  அதிகமான  மழையும்  பெய்யும்  என்று  தேசிய  வானிலை   ஆய்வு  அறிக்கையில்   தகவல்   தெரிவித்துள்ளது.

வடகிழக்கு  பருவ மழை வருகின்ற 8ந் தேதி தொடங்க  உள்ள  நிலையில்  தமிழகத்தின்  வடக்கு  மற்றும்   தெற்கு  கடலோர   மாவட்டங்களிலும்  புதுச்சேரி, காரைக்கால்,  மாவட்டங்களிலும்  வெள்ளிக்கிழமை  முதல்   5  நாட்களுக்கான   மழை   மற்றும்    அதி கனமழை  பெய்யும் என்றும்  வானிலை  மையம்   அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வருகின்ற  7ந்  தேதி  ஞாயிறு  அன்று  தமிழகம்,  கேரளா,  மற்றும் புதுச்சேரி  மாநிலத்தின்   சில  பகுதிகளில்   மிக  கன   மழை  பெய்யும் என்றும்   20.5  செ.மீ   அளவுக்கு    மேல்  அதிகமான   மழை    பெய்யும் என்றும்   எச்சரிக்கை    விடுக்கப்  பட்டுள்ளது.

இதனால்   தமிழக,  புதுச்சேரி,  கேரளா,   மாநில    அரசுகள்   உரிய  முன் எச்சரிக்கை   நடவக்கைகள்   எடுத்து  வருகிறது.

200  நாட்டிகல்  மைல்களுக்கு அப்பால்  தற்போதும்  தங்கியிருந்து  மீன் பிடித்து வரும்  சுமார்  89 விசைப்படகு   மீனவர்கள் புயல் எச்சரிக்கை பற்றி  தகவல் அறியாமல்  இன்னும்  கடலில்  இருந்து  வருகிறார்கள்.

பொதுவாக   மழை,  கனமழை   அவற்றுடன்  தொடர்ந்து  வரும் சூறைக்காற்று,  புயலில்   முதன்மையாக    பாதிக்கப்படுபவர்கள்    கடலில்  மீன்   பிடிக்கும்  மீனவர்கள்  மற்றும்   கடலோர  பகுதிகளில்   போதிய  பாதுகாப்பு    இன்றி    வசித்து   வரும்  மீனவர்களாவார்கள்.

அதனால்  மீனவர்களின்   உயிர்,  உடமைகள்,  மற்றும்  வாழ்வாதாரம் பாதுகாக்க  மூன்று  மாநில  அரசுகளும்  உரிய  முன்  எச்சரிக்கை  நடவடிக்கைகளை    எடுத்துள்ளனர்.

குறிப்பாக  தமிழக  மீன் வளத்துறை  அமைச்சர்   டி. ஜெயக்குமார்,  புதுச்சேரி மீன்வளத்துறை  அமைச்சர்   மல்லாடி  கிருஷ்ணராவ்,  கேரளா  மாநில  மீன்வளத்துறை  அமைச்சர்  திருமதி  மெர்சி குட்டி அம்மா ஆகிய மூவரும்   ஒடுக்கப்பட்ட   மீனவ  சமுதாயத்தைச்   சேர்ந்தவர்கள்  என்பதால்  மீனவர்களின்   அன்றாட   வாழ்க்கை   நிலையை   நன்கு  உணர்ந்து  உடனடி  தீவிர   நடவடிக்கைகளில்   ஈடுபட்டுள்ளனர்.

தமிழக  மீன் வளத்துறை  அமைச்சர்  டி. ஜெயக்குமார்  இரண்டு  தினங்களுக்கு  முன்னாள்  தமிழக  மீன்வளத்துறையின்  மாவட்ட  மீன்வளத்துறை  அதிகாரிகளான  இணை இயக்குனர்கள், தஜுனை இயக்குனர்கள்,  உதவி  இயக்குனர்கள்  ஆகிய  அனைவருக்கும்  நேரடியாகவே  சுற்றறிக்கை  அனுப்பி   எத்தகைய   நடவடிக்கை  எடுக்க பட வேண்டும்  என்று  அறிவுறுத்தியுள்ளார்.  அமைச்சரின்   அறிவுறுத்தலில்  கூறப்பட்டுள்ளதாவது:

அக்டோபர்  5ந் தேதி முதல்  10ந்  தேதி  வரை  மழை  பெய்யும்  என்றும்   கனமழை, அதி கனமழை.  பெய்யும் என்று  வானிலை  ஆய்வு  மையம்   அறிவித்ததை  தாங்கள்  அறிவீர்கள்,  எனவே  தாங்கள்   உடனடியாக   கீழ்காணும்  நடவடிக்கைகளை  மேற்கொள்ள  வேண்டுமாய்   கேட்டுக்கொள்கிறேன்.

மீனவர்கள்  கடலுக்கு செல்ல வேண்டாம்  என்று  அறிவுறுத்த  வேண்டும்.

தெற்கு  கேரளா  கடல்  பகுதி  லட்சத்தீவு,  தென்கிழக்கு   அரேபிய  கடல்  பகுதிகளுக்கு   5ந்  தேதி முதல்  10ந் தேதி வரை  மீனவர்கள்  செல்லக்கூடாது   என்பதை    அவர்களுக்கு   தெரிவிக்க   வேண்டும்.

இவ்வாறு   அமைச்சர்  தமது  சுற்றறிக்கையில்   கூறியுள்ளார்.

புதுச்சேரி, கேரள  அரசு  மீன்வளத்துறை   அலுவலர்களும்   இது  போன்று  முன்  எச்சரிக்கை  நடவடிக்கைகளை   மேற்கொள்ள  அறிவுறுத்தப்  பட்டுள்ளனர்.    லட்சத்தீவு கேரளா, தமிழ்நாடு,  புதுச்சேரி,  கர்நாடக,   கோவா,  மகாராஷ்டிரா,  குஜராத்,  ஆகிய  மாநில மீனவர்கள்  தென்கிழக்கு மற்றும் மத்திய அரேபிய  கடலில்   அக்டோபர்  5 ஆம் தேதி முதல்  மீனவர்கள்   மீன்  பிடிக்க   செல்லக்கூடாது   என்றும்   ஆழ்கடல்   பகுதியில்  உள்ள   மீனவர்கள்  உடனடியாக   திரும்ப வேண்டும் என்றும் மத்திய   வானிலை   மையம்   அறிவுறுத்தியுள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடல்  பகுதியில்   உருவாகி  வரும்   காற்றழுத்த  தாழ்வு  நிலை   வலுவடைந்து  50 கிலோமீட்டர்   வேகத்துக்கும்   கூடுதலாகி  மேற்கு நோக்கி  நகர்ந்து  புயலாக  அரேபிய  கடலின்  தென்கிழக்கு  பகுதி வழியாக   ஓமான்  நாடு  நோக்கி  நகரும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில  அரசுகளின்  உரிய    நடவடிக்கைகள்   காரணமாக  பெரும்பாலான  மீனவர்கள் கரை திரும்பி  விட்டனர்.  மீனவர்கள்  கடலுக்கு செல்வதை  தவிர்த்து  விட்டனர்.

ஆனால்  கன்னியாகுமாரி   மாவட்ட  மீனவர்கள்  இந்தியாவிலேயே   தனித்தன்மை  வாய்ந்த   தொழில் நுட்பம் மற்றும்  தொடர்  உழைப்புடன் கடலில்  200  நாட்டிகல்    மைல்களுக்கு  தங்கள்  படகுகளில்  சென்று  மீன்பிடிப்பது  வழக்கம்.

அந்த  அடிப்படையில்  1 மாத காலம்   வரை  கடலில்   பயணித்து   தங்கியிருந்து  மீன்  பிடித்து   கரை  திரும்புவது  வழக்கம்.

அதனால்   தற்போது கடலில்  மீன்பிடித்து கொண்டிருந்த  பெரும்பான்மையான   மீனவர்கள், கனமழை, புயல் பற்றிய அறிவிப்பை  அறிந்து   கொண்டு   கரை   திரும்பி   விட்டனர்.

ஆனால்   200  நாட்டிகல்  மைல்களுக்கு அப்பால்  தற்போதும்  தங்கியிருந்து  மீன் பிடித்து வரும்  சுமார்  100 விசைப்படகு   மீனவர்கள் புயல் எச்சரிக்கை பற்றி  தகவல் அறியாமல்  இன்னும்  கடலில்  இருந்து  வருகிறார்கள்.

அவர்களுக்கு உரிய தகவல்கள் தெரிவிக்க  கடலோர காவல்   படை  மற்றும் கப்பல் படை  மூலம் தகவல்  தெரிவிக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக   கன்னியாகுமாரி   மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆனால்  இந்த 89  படகுகளில்   உள்ள  சுமார் 801  மீனவர்களின் கதி  பெரும்  அச்சத்தை     ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர்  மாதத்தில்   அதிதீவிரமாக   வீசிய ஒக்கி  புயல்  அரேபிய  கடலின்  தென்கிழக்கு   பகுதியில்   உள்புகுந்து   ஆழ்கடலில்   மீன்பிடித்து  கொண்டிருந்த   மீனவர்களை   பலி வாங்கியது.

உரிய  தகவல்   தொடர்பு  கிடைக்காததால்   ஏற்பட்ட  அது   போன்ற  பெரும்  சோகம்   மீண்டும்   ஏற்பட்டு   விடக்கூடாது  என்பதுதான்   மூன்று மாநில  மக்களின் அச்சமாக  தற்போது  உள்ளது.

ஏற்கனவே  அச்சத்திலிருந்து  மீளாத  கன்னியாகுமாரி  மாவட்ட  மீனவர்கள்   மீண்டும்   பதற்றம்   அடைந்துள்ளனர்.

மத்திய மாநில  அரசுகள்  போர்க்காக   அடிப்படையில்   செயல்பட்டு   புயல்,  கன  மழை   தாக்குவதற்கு முன்பாக   கப்பல்  படை,  கடலோர   காவல்  படை   விமானங்கள் மூலம்   ஆழ்கடலில்   உள்ள   மீனவர்களை   எச்சரித்து   கரைக்கு  திரும்ப   ஆவன   செய்ய  வேண்டும்   என்பதுதான்   அனைவரது   விருப்பமாக   உள்ளது.

ஆழ் கடல்   மீனவர்களுக்கு  சேட்டலைட்  தொலைபேசி  கருவி   வழங்குவது தான்   இப்பிரச்னைக்கு  நிரந்தர  தீர்வாக   இருக்கும்   என்று   மீனவ  சமுதாய   தலைவர்கள்  கருத்து  தெரிவிக்கின்றனர்.

Share the Article

Read in : English

Exit mobile version