Site icon இன்மதி

விவேகானந்தர் வந்து சென்ற சென்னபுரி அன்னதான சமாஜம்: 125 ஆண்டுகளுக்கு மேலாக சப்தமில்லாமல் கல்விச் சேவை .

Read in : English

சமூகத்தால் கைவிடப்பட்ட ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு நூறாண்டு காலத்துக்கு மேலாக உணவு, உடை, உறைவிடம் அளித்து படிக்கவும் உதவி வருகிறது சென்னபுரி அன்னதான சமாஜம்.

சென்னைக்கு வந்த விவேகானந்தர், சமாஜத்துக்கு வந்து உரை நிகழ்த்தி, மாணவர்களுடன் சேர்ந்து மதிய உணவு அருந்தி இந்த சமாஜத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

டெலிகிராப் துறையில் குமாஸ்தா வேலை செய்த முகலூர் கண்ணையா செட்டியால் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்டு, சென்னை பார்க் டவுன் நைனியப்பன் தெருவில் தற்போதும் அதே மனித நேய நோக்கத்தோடு எந்தவித சுய விளம்பரமும் இல்லாமல் தொடர்ந்து இயங்கி வருகிறது.

முகலூர் கண்ணையா செட்டி

சென்னை பார்க் டவுனில் 1880இல் சாமானியக் குடும்பத்தில் பிறந்த முகலூர் கண்ணையா செட்டி, பச்சையப்பர் உயர்நிலைப் பள்ளியில் படித்து விட்டு மெட்ரிக் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். கல்லூரியில் படிப்பவதற்கு அவருக்குக் கலவி உதவித் தொகை கிடைத்த போதிலும்கூட, அதை விட்டு விட்டு 1882இல் டெலிகிராப் துறையில் ரூ.25 சம்பளத்தில் கிளார்க் பணியில் சேர்ந்தார். 1901இல் பின்னர் தலைமை கிளார்க் மற்றும் தலைமை அக்கவுண்டண்ட் ஆனார். 51வது வயதில் பணியிலிருந்து தானே விருப்ப ஓய்வு பெற்றார்.

சென்னையில் சமூகத்தால் கைவிடப்பட்ட பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ள விளிம்பு நிலை மக்கள், பார்வையற்றோர் ஆகியோரது அவல நிலையை தனது இளமைப் பருவத்திலேயே பார்த்து அவர்களுக்காக மனம் கலங்கியவர். தான் வசதி படைத்தவர் இல்லை என்ற போதிலும்கூட, தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், அதற்காக களம் இறங்கினார்.  1889இல் தனது நண்பர்களிடம் ஓர் அணாவிலிருந்து (ஓர் அணா ஆறு பைசா) நான்கு அணா வரை வசூலித்தார். அதன் மூலம் மாதத்துக்கு 3 ரூபாய் வசூலாகியது. அதை அய்யாப்பிள்ளை சந்தில் இருந்த தனியார் ஹோட்டலில் கொடுத்து, 8 ஏழைகளுக்கும் பார்வையற்றவர்களை அழைத்துச் செல்லும் குழந்தைகளுக்கும் சாப்பிட ஏற்பாடு செய்தார்.

இதைத் தொடர்ந்து ஆதரவற்ற ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதற்காக சென்னபுரி அன்னதான சமாஜம் 1980ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. 1933இல் அவர் இறக்கும் வரை அதன் கௌரவ செயலாளராக இருந்தார் கண்ணையா செட்டி  தொடக்கத்தில் 15 ஏழைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. வால் டாக்ஸ் சாலையில் உள்ள ஸ்ரீ லட்சுமி விலாஸ் நாடக சாலை உரிமையாளரான பசுபுல்லத்தி எத்திராஜுலு நாயுடு தனது அரங்கத்தின் பக்கத்தில் உள்ள இடத்தில் அந்த ஏழைகளுக்கு உணவு சமைப்பதற்கான சமையலறையைக் கட்டித் தந்தார். அத்துடன் சமையலுக்கான சாமான்களையும் வாங்கித் தந்துடன், அரங்கத்தின் மெயின் ஹாலில் உணவை வழங்குவதற்கும் அனுமதி அளித்தார். கிருஷ்ணசாமி முதலியார், எஸ். ராமசாமி நாயுடு ஆகிய நண்பர்களுடன் இணைந்து கண்ணையா செட்டி அன்ன தானத்தைத் தொடங்கினார்.

1893இல் ஜனவரி 20ஆம் தேதி இந்த சமாஜம், பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து இந்த சமாஜத்தில் வாரம் இரு முறை ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. ராஜா சர் சவாலை ராமசாமி முதலியார், பைசானி மாதவச் செட்டி, மைசூர் மகாராஜா, கொச்சி ராஜா, கள்ளிக்கோட்டை ராஜா, ராமநாதபுரம் ராஜா சேதுபதி, புதுக்கோட்டை இளவரசர் ரகுநாத தொண்டைமான்…இப்படி அந்தக் கால பிரபலங்கள் சென்னபுரி அன்ன சமாஜத்தின் முயற்சிகளுக்கு உதவிகளைச் செய்தனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் அந்தக் காலத்தில் லட்சாதிபதியாகத் திகழ்ந்த திவான் பகதூர் கிருஷ்ணதாஸ் பாலமுகந்தாஸ், அன்னதான  சமாஜத்துக்கு நைனியப்பன் தெருவில் இருந்த பிரமாண்டமான தனது கட்டடத்தை நன்கொடையாக வழங்கினார். இந்த முயற்சிக்குத் துணை நின்றவர் ரெட்டி பிரான்சன். 1895இல் அன்றைய கவர்னர் எச்.இ. லார்டு வென்லாக் இந்தக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

சமாஜத்தின் உதவிச் செயலாளராக இருந்த செங்கல்வராய செட்டியார் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி ராஜாம்மாள், இந்தக் கட்டத்துக்கு மின்சார வசதி செய்து தந்தார். 1932இல் சமாஜம் சார்பில் ஆதரவற்றோர் இல்லம் தொடங்கப்பட்டு, அங்கு இருக்கும் மாணவர்கள் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்து வந்தனர். 1936இல் பழைய கட்டடத்தின் ஒரு பகுதி இடிக்கபட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதற்கு ஆகும் ரூ.5 ஆயிரத்தை  கௌரவ செயலாளராக இருந்த செங்கல்வராய செட்டியார் வழங்கினார். 1939இல் அவரது நண்பரும் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலக ஓய்வு பெற்ற கண்காணிப்பாளருமான சி.ஆர். ரகுநாத பிள்ளை, கட்டடம் கட்டுவதற்கு ரூ.2 ஆயிரம் வழங்கினார். அதைத் தொடர்ந்து எம். வெங்கடசுப்பராவ் ரூ. 5 ஆயிரம் வழங்கினார். இப்படி பல்வேறு புரவலர்களின் நன்கொடையால் அன்னதான சமாஜம் வளர்ந்து வ்ந்தது. 1932 பேருடன் தொடங்கிய சமாஜத்தில் 1950இல் 150 பேர் இருந்தனர்

1897இல் பிப்ரவரி 13ஆம் தேதி விவேகானந்தர், அன்னதான சமாஜத்தின் ஆண்டு மாநாட்டுக்கு வந்ததுடன், சமாஜத்தில் உணவருந்தி சென்றிருக்கிறார். அன்னி பெசன்ட், முத்துலட்சுமி ரெட்டி, தமிழக முதல்வராக இருந்த பொப்பிலி ராஜா, பக்தவத்சலம், அண்ணா, எம்ஜிஆர், ஆளுநர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சிவாஜி கணேசன் போன்ற சமூகத்தின் முக்கியப் பிரமுகர்கள் இந்த அன்னதான சமாஜத்துக்கு நேரில் வந்து இதன் பணிகளைப் பாராட்டிச் சென்றிருக்கிறார்கள். அறங்காவலர் குழுவில் முன்னாள் நீதிபதிகளும் சமூக ஆர்வலர்களும் இருந்து வருகிறார்கள். இந்த சமாஜத்தினஅ பழைய மாணவரான டி. லோகநாத ரெட்டி, 1949 ஆம் ஆண்டிலிருந்து 1975ஆம் ஆண்டு வரை கௌரவச் செயலாளராக இருந்த சமாஜத்தை வழிநடத்தினார். அவரது காலத்தின்தான் தொடக்கப் பள்ளி சமாஜத்தின் நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்டது. இங்கு படித்த பல முன்னாள் மாணவர்களும் இந்த அறப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

“சமாஜத்தில் தங்கியுள்ள மாணவர்கள் படிப்பதற்காக இ.என்.வி. சங்கத் தொடக்கப் பள்ளி, அரசு உதவியுடன் இயங்கி வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் நூறு மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த இல்லத்தில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் தவிர, வெளியிலிருந்தும் மாணவர்கள் வேன் மூலம் பள்ளிக்கு அழைத்து வரப்படுகிறார்கள். மாணவர்களுக்குத தொழிற் பயிற்சி அளிப்பதற்காக ரோட்டரி கிளப் (சென்னை மெரினா) உதவியுடன் சமாஜத்தின் சார்பில் ராஜா அண்ணாமலைபுரத்தில் கம்யூனிட்டி காலேஜ் இயங்கி வருகிறது.

ராஜா அண்ணாமலைபுரத்தில் டாக்டர் பி. வெங்கட்ட ரமணா ராவ் உயர்நிலைப் பள்ளி 1969 முதல் இயங்கி வருகிறது.கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகம் அன்னதான சமாஜத்துக்கு 75 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் இயங்கிய இடத்தில் இந்தப் பள்ளி இயங்கி வருகிறது.  2017 முதல் அது மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.   இங்கு சுமார் 250க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். தொழில் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் புரவலர்கள் பலரின் உதவியால் எங்களது பணி தொடர்ந்து எந்தவித சுணக்கமும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. எங்களது முயற்சிக்கு உதவுபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்” என்கிறார்  சென்னபுரி அன்னதான சமாஜத்தின்  கௌரவ செயலாளர் வி.ஆர். உதயசங்கர்.

“இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சமாஜத்தில் தங்கும் இடமும் அளித்து நல்ல தரமான உணவையும் வழங்குகிறோம். இங்கு படித்த மாணவர்களில் பலர் கல்லூரிகள் படித்து நல்ல நிலையை எட்டியிருக்கிறார்கள். பலர் வழக்கறிஞர்களாகவும் போலீஸ் அதிகாரிகளாகவும் வங்கி அதிகாரிகளாகவும் கல்லூரி ஆசிரியர்களாகவும் ஆகி இருக்கிறார்கள்.  தற்போது, இங்கு படிக்கும் விளிம்பு நிலை மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி தரமான கல்வி கிடைக்கச் செய்ய ஆசிரியர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இங்கு படிக்கும் மாணவர்கள் நன்கு படித்து நல்ல வேலையில் சேர்ந்தால் அதுதான் எங்களது முயற்சிக்கு கிடைத்த வெற்றி” என்கிறார் சமாஜத்தின் துணைத் தலைவரும் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான டி. அரிபரந்தாமன்.

“இந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளியை நடத்துவதற்காக ராஜா அண்ணாமலைபுரத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகம் 75 ஆண்டு குத்தகை அடிப்படையில் நிலம் வழங்கியது. தற்போது அந்த நிலத்தைக் கேட்டு கோவில் நிர்வாகம் வழக்குத தொடர்ந்துள்ளது. அந்த இடத்தில் எங்களது பள்ளியைத் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என்கிறார் அவர்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை உறைவிட வசதிகளைச் செய்து சமூக அக்கறையுடன் கல்வி வழங்கும் சென்னபுரி அன்னதான சமாஜத்துக்கு தமிழக அரசும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகமும் உதவிக் கரம் நீட்டினால் என்ன? அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.

Share the Article

Read in : English

Exit mobile version