Site icon இன்மதி

69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை?

Read in : English

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு எதிரான வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை சில அரசியல் கட்சிகளும் சமூக நீதி ஆதரவாளர்களும் முன்வைத்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், நாடு முழுவதும் 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட  சமூக பொருளாதார ஜாதி வாரி கணக்கெடுப்பு  புள்ளி விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்கிறார் தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்.

1931இல்தான் ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“அரசியலமைப்பு சட்டத்தில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு அளிக்கப்படக்கூடாது எதுவும் கூறப்படாத நிலையில், எந்த அடிப்படையில் 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என்று நீதிமன்றம் கூறுகிறது. தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டம் குறித்து அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட பிறகு, அதை எதிர்த்து எந்த அடிப்படையிலும் வழக்குத் தொடருவதை அனுமதிக்கக்கூடாது” என்கிற மணியரசன், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு அளிப்பதாக இருந்தால் தற்போதைய நிலையில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 90 சதவீதம் அளவுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டியதிருக்கும் என்கிறார் அவர்

“அரசியலமைப்புச் சட்டத்தில் 50 சதவீத ஒதுக்கீட்டுக்கு மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று எதுவும் கூறப்படவில்லை.” – நீதிபதி அரிபரந்தாமன்

“The percentage of reservations is not a matter upon which a court with no material at hand. For a court to say that reservation should not exceed 40%, 50% or 60% would be arbitrary and the constitution does not permit us (judges) to arbitrary” என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்ற சின்னப்ப ரெட்டி, இடஒதுக்கீட்டின் அளவை நிர்ணயிப்பது நீதிபதிகளின் வேலை அல்ல. மக்கள் பிரதிநிதிகளின் உரிமை என்று கூறியிருக்கிறார். எனவே, இட ஒதுக்கீட்டின் அளவை நீதிமன்றங்கள் நிர்ணயிக்க சட்டத்தில் அறவே இடம் இலலை என்கிறார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி.

“எந்த அடிப்படையில் 69 சதவீதம் ஒதுக்குகிறீர்கள்? கணக்கெடுத்தீர்களா? என்று நீதிமன்றம் கேட்கிறதே? எனவேதான் ஜாதிரீதியாக கணக்கெடுப்பு கேட்கிறோம். அம்மைக் கிருமியை உள்ளே அனுப்பி அம்மை நோயைக் குணப்படுத்துகிற மாதிரிதான் இது ஜாதி ஒழியும் வரை ஜாதிரீதியான இடஒதுக்கீடு அவசியம்” என்பதையும் அவர் வலியுறுத்தி வருகிறார்.

“தமிழகத்தில் இடதுக்கீட்டுப் பிரிவினரின் அளவு 87 சதவீதம் என்பது அம்பா சங்கர் ஆணையத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், கணக்கெடுப்பின் மூலம் உறுதி செய்யப்பட்ட ஒன்று அல்ல என்பதால் இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய சூழலில் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் அளவை உறுதி செய்வதுதான்” என்று  பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டம் 76வது திருத்தச் சட்டம் 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புப் பெற்று நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு விசாரணை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. எல்லா வகையிலும் பாதுகாப்பான இந்த சமூகநீதி சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கில் திறமையும், அனுபவமும், சமூகநீதியில் அக்கறையும் கொண்ட மூத்த வழக்குரைஞர்களை நியமித்து உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் விரைவாக மேற்கொள்ள வேண்டும்” என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“இதுவரை, உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர்தான் நீதிபதிகளாக இருந்திருக்கின்றனர்.   எட்டு ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட நீதிபதிகள் ஒருவரும் இல்லை” என்பதை சுட்டிக்காட்டும் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், “உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் இடஒதுக்கீடு வேண்டும் என்று பரிந்துரை செய்த சுதர்சன நாச்சியப்பன் கமிட்டி, முண்டா கமிட்டி பரிந்துரைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை” என்கிறார்.

“அரசியலமைப்புச் சட்டத்தில் 50 சதவீத ஒதுக்கீட்டுக்கு மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று எதுவும் கூறப்படவில்லை. ஜாதி ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை இந்த சமூகத்தில் சமூக ரீதியாகவும் கல்விரீதியாகயும் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அவசியம்” என்கிறார் நீதிபதி அரிபரந்தாமன்.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் இறுதிகட்ட விசாரணை நடைபெற உள்ள சூழ்நிலையில், இந்த விவகாரம், முக்கிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்துவதற்கான அறிகுறிகள் தற்போதே தொடங்கி விட்டன.

Share the Article

Read in : English

Exit mobile version