Read in : English
நூறு ஆண்டுகளில் இல்லாத வெள்ளப் பேரழிவை கேரளம் சந்தித்து வருகிறது. இதன் தாக்கம் எதிர்வரும் நாட்களில் முழுமையாகத் தெரிய வரும். இதை எதிர்கொள்வோம். வரலாறு காணாத இந்தப்பேரிடரைச் சமாளிப்பதில் நம்மால் இயன்ற அனைத்து வழிகளிலும் கேரளத்துக்குத் துணைபுரிவது ஒவ்வொருவரின் தார்மிகக் கடமை.
கேரளத்தில் மழைப் பொழிவு அதிகமாகவே இருக்கிறது. ஆகஸ்ட் 18ஆம் தேதி நிலவரப்படி 39 மி.மீ. மழை பெய்துள்ளது. வழக்கமான மழைப் பொழிவுடன் ஒப்பிடும்போது, இது 164 சதவீதம் அதிகம். இந்தப் பேரழிவில் இடுக்கி மாவட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி 85.4 மி.மீ மழை பெய்துள்ளது. வழக்கமாகப் பெய்யும் மழையளவைவிட இது 391 சதவீதம் அதிகம். இதனால் அங்கு வெள்ள அபாயம்.
எனவே, வெள்ளம் முழுமையாக வடியும்வரை கேரளத்துக்கு அதிக நீர் செல்லாமல் பார்த்துக் கொள்வது, அந்த மாநிலத்துக்கு உதவும் வழிகளில் ஒன்றாகும். நாட்டில் தண்ணீர் பற்றாக்குறைக்கு பெயர் பெற்றது, கேரளத்தின் அண்டை மாநிலமான தமிழகம். அதனால், கேரளத்துக்கு அதிகத் தண்ணீர் செல்லாதபடி தடுத்து, அதைத் தனக்குப் பயன்படுத்திக் கொள்ள முயல வேண்டும்.
பெரிய அணைகள் பற்றிய மத்திய மத்திய நீர் வள ஆணையத்தின் பதிவேட்டின்படி நான்கு அணைகள், அதாவது பெரியாறு நதியிலுள்ள முல்லைப் பெரியாறு, சாலக்குடியிலுள்ள துணக்கடவு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் ஆகியவை கேரளத்தில் அமைந்துள்ள போதிலும் தமிழகப் பொதுப் பணித்துறையினால் பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. எனவே,கேரளத்திற்கு அதிக நீர் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லும்போது, இந்த நான்கு அணைகளையும்தான் நினைவில் கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு அணையைக் கருத்தில் கொண்டு இது குறித்து விளக்கலாம். (படத்தில் பெரியாறு அணை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
முல்லைப் பெரியாறு அணையில் சேரும் தண்ணீர் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழகத்திடம் இருக்கிறது. இந்தத் தண்ணீரை தமிழகத்திலுள்ள வைகை அணைக்கு அனுப்பலாம். அல்லது பெரியாறு நதி மூலம் கேரளத்துக்குச செல்லும்படி திருப்பலாம். தற்போது குமுளி என்னுமிடத்திலுள்ள இறச்சிப்பாலம் அணைக்கு முல்லைப் பெரியாற்றிலிருந்து தண்ணீர் அனுப்பப்படுகிறது. அங்கிருந்து 180 மெகாவாட் திறன் கொண்ட புனல் மின் நிலையத்துக்குக் குழாய்கள் மூலம் எடுத்துச்செல்லப்படுகிறது. பின்னர் வைரவனாற்றில் விடப்பட்டு, சுருளியாறு மற்றும் வைகை அணைக்குத் தண்ணீர் செல்கிறது.
மழை வெள்ளம் ஏற்படும்போது அது பாய்ந்து செல்லும் பகுதியான கேரளத்தின் வண்டிப் பெரியாறு நீர்வழித் தடத்தைக் கவனத்தில் கொண்டால், ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 19வரை பெரியாறு அணைக்கும் கேரளத்துக்கும் வந்த தண்ணீரின் அளவு மிகமிக அதிகம். வண்டிப் பெரியாற்றில் இதுநாள் வரை பதிவானதில் மிக உச்சபச்ச வெள்ள அளவான 193.8 மில்லியன் அளவையும் தாண்டி 397.3 மில்லியன் என்பதாகப் பதிவாகியுள்ளது. அதாவது, உச்சபச்ச அளவையும் தாண்டி 3.5 மில்லியன் கூடுதல். இது மிகவும் அபாயகரமான பெருவெள்ளம். இந்த நிலை நான்கு நாட்களுக்கு மேல் நீடித்துள்ளது. இதைத் தவிர்த்திருந்தால், கேரளத்துக்கு அது பேருதவியாக இருந்திருக்கும்.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கும் அதே நேரத்தில் வைகை அணையிலிருந்து பாசனப் பகுதிகளுக்கும் அதிக அளவு தண்ணீரை தமிழகம் திறந்து விடுவதன் மூலம் கேரளத்துக்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாய்ந்தோடிய நீரைப் பெருமளவு குறைக்க முடியும்.
இரண்டாவது, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரைத் தேக்கி வைக்க தமிழகத்திற்கு அனுமதி உள்ளது. ஆனால், ஒரேயடியாக 142 அடிவரை தண்ணீரைத் தேக்கி வைக்க நினைத்திருக்கக் கூடாது. அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டாலும் இது முக்கியம். அணைக்கு நீர் வரத்து உள்ள காலத்தில் நீர்மட்டத்தை இயன்றவரை குறைந்தபட்சத் தேவை என்ற அளவில் பராமரிக்க வேண்டும். பெரியாறு பகுதிகளில் மழைக்கால நீர்வரத்து என்பது ஜூன் முதல் செப்டம்பர் முடியும் வரை தென்மேற்கு பருவமழைக் காலம் மட்டுமல்ல. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழை நீர்வரத்தும் அடங்கும். நீர்வரத்துக் காலங்களில் அணையில் நீர்மட்டத்தைக் குறைவாகப் பராமரித்தால், வெள்ள அபாயத்தைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பு அதிகம். இதன் மூலம் கேரளத்தின் பெரியாறு படுகையில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் வகையில் அணையிலிருந்து அதிக அளவு நீரைத் திறந்துவிட நேரிடும் அபாயத்தையும் தவிர்க்க இயலும்.
தற்போதைய நிலவரப்படி, வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியை (முழுக்கொள்ளளவு 71 அடி) எட்டியுள்ளது. வைகை அணையிலிருந்து பெரியாறு, திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்க்ர் பாசன நிலம் பயன்பெறும். இதை முன்கூட்டியே செய்திருக்கலாம். ஏனெனில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு பெருமளவில் தண்ணீர் திறந்து விடுவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். கேரளத்தின் பெரியாறு படுகைக்கு நீர் திறந்து விடுவதற்கான நிர்பந்தம் குறைந்திருக்கும்.
முல்லைப் பெரியாறு அணையில் தேக்கி வைத்துள்ள நீர்மட்டத்தின் அளவைக் குறைப்பது குறித்து ஆராயுமாறு தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவுக்கும் கேரளப் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவுக்கும் உச்சநீதிமன்றம் ஆகஸ்ட்17ஆண் தேதியன்று யோசனை கூறியுள்ளது.
மத்திய நீர்வள ஆணையத்துக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறது. ஏனெனில், அது தேசிய அளவில் நீர் வளம் மற்றும் வெள்ள முனனறிவிப்புகளை வெளியடும் முன்னணி தொழில்நுட்ப அமைப்பு. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, முல்லைப் பெரியாறு விஷயத்தில் ஆற்ற வேண்டிய அதன் பணி முக்கியமானது. ஆனால், இந்த விஷயத்தில் தனக்குரிய பங்கை ஆற்றுவதற்கு அது முற்றிலும் தவறிவிட்டது. இதன்மூலம் முல்லைப் பெரியாறு அணையிலிருநது கேரளத்துக்கு குறைந்த அளவே தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்திவதிலிருந்தும் அது தவறிவிட்டது என்றே கூறலாம்.
இனியாவது, தமிழகம் தனது கட்டுப்பாட்டிலுள்ள முல்லைப் பெரியாறு மற்றும் பிற அணைகளிலிருந்து கேரளத்துக்குத் தண்ணீர் பாய்ந்து ஓடுவதைக் குறைக்க வேண்டும்.
Read in : English