Site icon இன்மதி

விடைபெற்ற கர்நாடக இசைக் கலைஞர் கீதா பென்னட்… ! ஒரு சங்கீத நிபுணரின் தகுதிவாய்ந்த வாரிசு

Read in : English

1990களில் ஒருநாள் காலை, வானொலியில் இசையரங்கம் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. நான் கேட்க ஆரம்பிப்பதற்குள் நிகழ்ச்சி தொடங்கிவிட்டிருந்தது. வீணைக் கச்சேரியில் யாரோ தானம் இசைத்துக் கொண்டிருந்தார். அளவாகவும் அழுத்தமாகவும் ஒலித்த அந்த காம்போஜி ராக தானம் என்னை பெரிதும் கவர்ந்தது. வாசிப்பை வைத்து இந்தக் கலைஞரை அதுவரை நான் கேட்டதில்லை என்று மட்டும் புரிந்தது. மிகுந்த ஆர்வத்துடன் கச்சேரியை தொடர்ந்து கேட்டேன். கடைசியில் வந்த அறிவிப்பிலிருந்து அன்று வாசித்தவர் கீதா பென்னட் என்பதை அறிந்துகொண்டேன்.

எஸ்.ராமநாதன்

பின்னாளில் கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு வளர்ந்த போது சங்கீத கலாநிதி டாக்டர். எஸ். ராமநாதனின் இசையும் மற்ற பங்களிப்புகளும் என்னை பெரிதும் ஈர்த்தன. சிலப்பதிகாரத்தில் அவர் செய்திருந்த ஆராய்ச்சியைப் பற்றி பல குறிப்புகள் கிடைத்தாலும் அவரது ஆராய்ச்சியைப் புத்தகமாக எங்கும் காண முடியவில்லை. 2001-ல் மேற்படிப்புக்காக அமெரிக்காவில் இருந்த போது இணைய வழியாக நான் கீதா பென்னட்டை தேடி பிடித்தேன். அசட்டு தைரியத்தில் அவரை அழைத்து அந்தப் புத்தகம் கிடைக்குமா என்று விசாரித்தேன். முகமறியா ஒருவரிடமிருந்து அவர் அந்த அழைப்பை எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்.

மின்கோப்பாக்குவது இன்று போல் அன்று அத்தனை சுலபமாக இல்லை. அதனால் தன்னிடம் இருந்த ஒரே பிரதியை அனுப்பத் தயங்கினார். அதுதான் நான் அவரிடம் பேசிய ஒரே தருணம்.

நாட்பட எனக்கு டாக்டர். எஸ். ராமநாதன் என்ற ஆளுமையின் மேலிருந்த ஈர்ப்பு கூடிக் கொண்டே போனது. அவரது மற்ற உறவினர்கள், மாணவர்கள், ரசிகர்கள் என்று பலரிடம் அவரைப் பற்றி உரையாடி அறிந்து கொள்ள முடிந்தது.

சில மாதங்களுக்கு முன், டாக்டர். எஸ். ராமநாதனின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரின் மகள் கீதா பென்னட் எழுதிய கட்டுரையை ஹிந்து நாளிதழில் படிக்கும் வாய்ப்புகிட்டியது. ஆத்மார்த்தமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரை என்னை இன்னும் அறிந்து கொள்ளத் தூண்டியது. நான் கீதா பென்னட்டை சந்தித்து இன்னும் பல நுணுக்கங்களை தெரிந்துகொள்ள விழைந்தேன்.

அதற்காக அவரது மருமகளை தொடர்பு கொண்டேன். அப்போதுதான் புற்று நோயுடன் நீண்ட காலமாக கீதா போராடி வருவதை அறிந்துகொண்டேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவரை சந்திப்பது இயலாத காரியம் என்று உணர்ந்து கொண்டேன்.

சில வாரங்களில் அவர் தன் தந்தையின் நினைவாக நடந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வந்தார்.

தன் தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு கச்சேரி செய்தார். அன்று அவர் வாசித்த செஞ்சுருட்டி வர்ணம் (தியாகராஜரின் பெயரில் டாக்டர். எஸ். ராமநாதன் இசையமைத்து அனேகமாக இந்த ராகத்தில் அமைந்திருக்கும் ஒரே வர்ணம்) இன்றும் என் காதை நிறைத்துக் கொண்டிருக்கிறது. 50க்கு மேற்பட்ட கீமோ சிகிச்சைகளைக் கடந்தும் டாக்டர். ராமநாதனின் நூற்றாண்டில் தன் தந்தையின் பாடாந்திரத்தை பதிவு செய்யும் எண்ணத்தில் கீதா யூடியூபில் ஒரு முயற்சியை முன்னெடுத்தார். குறைந்த பட்சம் நூறு பாடல்களையாவது பாடி/வாசித்து வலையேற்ற தீர்மானித்திருந்தார்.

அந்த வீடியோக்களில் அவர் உடல்தளர்ர்ச்சியை காண முடிந்தாலும், பாட்டை பாடும் போது அவருக்குள் புத்துணர்வு ஏற்பட்டு பாட்டுடன் சேர்ந்து அவரும் மிளிர்வதை காணொளியில் கண்டுகொள்ள முடிகிறது.

அவர் கனவு முழுமை பெறாமல் போனது நமது துரதிர்ஷ்டம். அவர் கனவை டாக்டர் ராமநாதனின் குடும்பத்தினரும் மற்ற மாணவர்களும் சேர்ந்து பூர்த்திச் செய்ய முயலலாம்.

போய் வாருங்கள் கீதா. உங்களை ஒரேயொரு முறையேனும் நான் சந்தித்திருக்கலாம்….

Share the Article

Read in : English

Exit mobile version