Site icon இன்மதி

தமிழ் அச்சு நூல்களின் தலை எழுத்து!

இந்திய மொழிகளில் முதன் முதலில் அச்சான நூல், 16-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கல்லில் ரோமன் வரிவடிவங்களுடன் வெளியான கார்த்திலியா (Cartilha) என்ற தமிழ் நூல்தான்

Read in : English

இந்திய மொழிகளில் முதன் முதலில் அச்சான நூல் தமிழ் நூல்தான். 16-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கல்லில் ரோமன் வரிவடிவங்களுடன் வெளியான கார்த்திலியா  (Cartilha) என்ற தமிழ் நூல், அச்சு நூல் வரலாற்றில் தமிழின் பெருமையை பறைசாற்றும் அரிய ஆவணம்.

“ஆகாசமும் பூமியும் படச்சவன் சர்வமும் ஆனவனே, பிதாவே தம்பிரானே விசுவாசம். அவ்வண்ணம் என்னடே கர்ததாவே யேசு கிறிஸ்து அவ்வனடே புத்ரனே ஒருவனே….” இந்த வாசகத்தை படித்துவிட்டீர்களா? தமிழில் அச்சாகிய முதல் புத்தகத்தின் ஒரு வாக்கியத்தைப் படித்த பாக்கியவான்கள் நீங்கள். தமிழில் அச்சு எழுத்துகள் வார்க்கப்படாத காலத்தில் ரோமன் எழுத்துகளில் 1554-ஆம் ஆண்டில் போச்சுக்கல் நாட்டில் லிஸ்பனில் அச்சிடப்பட்ட கார்த்திலியா என்ற இந்த நூல் வரலாற்று சிறப்பு மிக்கது. தமிழ் நூல் என்றாலும்கூட தமிழ் அச்சு எழுத்துகள் உருவாக்கப்படாத காலத்தில் அந்தப் புத்தகம் ரோமன் எழுத்துகளைக் கொண்டு வெளியாகியது.

இந்திய மொழிகளில் முதன் முதலில் அச்சான நூல் கார்த்திலியாதான். ஒன்றுக்கு மேலான வண்ணங்களில் அச்சான முதல் நூலும் அதுவே. நமது நாட்டின் எல்லைக்கு வெளியே அச்சான முதல் அச்சு நூல் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

போர்ச்சுக்கல் நாட்டில் பெலேமில் உள்ள ஆவணக் காப்பகத்தில் ஒரு இரும்புப் பெட்டகத்தில் இப்படி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகம் இருப்பது என்பதை மறைந்த பேராசிரியர் தனிநாயகம் அடிகள் சென்ற நூற்றாண்டில் கண்டறியும் வரை இந்த அரிய புத்தகம் பற்றி தமிழ் உலகுக்குத் தெரியாமலே இருந்தது.

இந்தியாவுக்கு மறைப்பணி செய்வதற்காக பாதிரியார்களுக்குப் பயன்படும் வகையில் இந்த நூல், போர்ச்சுக்கல் மன்னர் மூன்றாவது சுவாம் ஆணைப்படி அச்சிடப்பட்டது. இதில் உள்ள ஜெபங்களையும் மந்திரங்களையும் தமிழ் மொழியில் மொழிபெயர்த்தவர்கள் வின்சென்தே டி நசரேத், யோட்ஜ் காவல்கோ, தோமஸ் தே குருசு என்ற மூன்று தமிழர்கள். இவர்கள், அன்றைக்கு முத்துக்குளித்துறை என்று அழைக்கப்பட்ட தூத்துக்குடி பகுதியிலிருந்து போர்ச்சுக்கல்லுக்கு அழைக்கப்பட்டவர்கள். இந்த நூலை மேற்பார்வையிட்டு சரிபார்த்துத் திருத்தியவர் தமிழறிந்த சுவாம் ட வில்லா கொண்டே என்ற தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பணிபுரிந்த கத்தோலிக்க பாதிரியார்.  38 பக்கங்கள் கொண்ட, கார்த்திலியா 1554-ஆம் ஆண்டு வெளியானது. .

“இந்நூலில் இரு நிறங்களைக் கையாண்டிருக்கின்றனர். கிறிஸ்துவ செபங்களையும் கொள்கைகளையும் தமிழ் மொழியில் பருத்த எழுத்துக்களில் அச்சிட்டு, அவற்றினிடையே போர்ச்சுகீச மொழியிலும் அதே செபங்களையும் பிறவற்றையும் அச்சிட்டிருகின்றனர். மேலும் தமிழ்ச் செபங்களின் மொழிபெயர்ப்பை ஒவ்வொரு சொல்லுக்கும் நேர போர்த்துக்கீச மொழியில் செந்நிறத்தில் அச்சிட்டிருக்கின்றனர். இவ்வாறு கற்பிக்கும் புது முறைகளையும் இரு நிறங்களையும் திறமையான எழுத்துக்களையும் கொண்ட நூலை ஐரோப்பிய அச்சு வரலாற்றிலேயே காண்பது அரிது” என்று இந்தப்புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தனிநாயகம் அடிகள்.

இந்தப்புத்தகம் லிஸ்பனில் பெலேம் ஆவணக் காப்பகத்துக்கு வந்ததே பெரிய கதை. 1598-இல் எவோரா என்ற ஊரில் சந்தியாச மடத்தில் இருந்த இந்தப் புத்தகம், காலப்போக்கில் லிஸ்பன் மாநகர நூல் கூடத்தின் தலைவரிடம் வந்து சேர்ந்தது. அப்புறம், அங்குள்ள நூலகத்திலிருந்து அந்தப் புத்தகம் சென்ற இடம் தெரியாத நிலையில், 1909-ஆம் ஆண்டில் எழுத்தறிவற்ற யாரோ ஒருவரிடம் இப்புத்தகம் இருந்ததைப் பார்த்த ஆவண காப்பகத் தலைவர், அதனை வாங்கி பெலேம் ஆவணக் காப்பகத்தில் சேர்த்தார்.

1948-ஆம் ஆண்டு அச்சுக்கலை பற்றிய நூல் எழுத விரும்பிய ஆய்வாளர் ஒருவர், அந்த ஆவணக் காப்பகத்தில் இப்படி ஒரு புத்தகம் இருப்பதைக் கண்டறிந்தார். 1954-ஆம் ஆண்டு தனிநாயகம் அடிகள் லிஸ்பனுக்கு சென்ற போது இந்த புத்தகத்தின் சில பக்கங்களுக்கான நிழற் படங்களை எடுத்து வந்தார். அத்துடன், தமிழின் முன்னோடி அச்சு நூல்கள் குறித்த கட்டுரையை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார். இந்த புத்தகத்தின் பதிப்பு ஒன்றை 1970-ஆம் ஆண்டில் அந்த ஆவணக் காப்பகம் இந்தப்புத்தகத்தின் பதிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் பிரதிகளை அருட்தந்தை பேராசிரியர் எஸ். ராஜமாணிக்கம், இந்தியாவுக்குக் கொண்டு வந்தார். புதுவை பிரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டும் இதன் பிரெஞ்ச் மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளது.

அந்தப் புத்தகம் காணாமல் போயிலிருந்தால் தமிழ் அச்சு வரலாற்றின் பெருமையை பறைசாற்றும் முக்கிய ஆவணத்தை இழந்திருப்போம். அதாவது, இந்தியாவில் அச்சு இயந்திரம் வருவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே 16-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வெளியானது இந்த நூல் என்பதிலிருந்தே இந்த நூலின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.

இதைப்போலவே, நமது நாட்டில் அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல் தம்பிரான் வணக்கம் . 1578- ம் ஆண்டு கொல்லத்தில் அச்சிடப்பட்டது. கிறிஸ்துவ திருமறையில் கையாளப்படும் செபங்களின் மொழிபெயர்ப்பு. இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் ஆகும். அருட்திரு அண்டிரிக் அடிகளார்,  மனுவேல் அடிகளார் உதவியுடன் இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்தனர். 16 பக்கங்கள் கொண்ட நூல் இது. Doctrina Christam என்பது நூலின் பெயர். அது, தம்பிரான் வணக்கம் என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கொல்லத்தில் உருவாக்கிய அச்சு எழுத்துகளில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் முதல் பக்கத்தில். `கொம்பஞ்ஞிய தே சேசூ வகையில் அண்டிறீக்கிப் பாதிரியார் தமிழிலே பிறித்தெழுதின தம்பிரான் வணக்கம்” என்ற தமிழ்க் குறிப்பும் `மலபார் என்ற தமிழில் கிறிஸ்துவ உபதேசம்” என்ற போர்ச்சுக்கீசியக் குறிப்பும் இதில் வருகின்றன.

இந்தப் புத்தகம் அச்சாவதற்கு முன்னதாக கோவாவில் 1577-ஆம் ஆண்டில் தமிழ் அச்சு எழுத்துக்கள் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் இருந்தாலும், அந்த அச்செழுத்துகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட புத்தகங்கள் ஏதும் காணக்கிடைக்கவில்லை. ஆனால், கோவாவில் உருவாக்கப்பட்ட அச்செழுத்துகளுடன் கொல்லத்தில் உருவாக்கப்பட்ட அச்சு எழுத்துகளும் தம்பிரான் வணக்கம் என்ற நூலின் கடைசிப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நூலை மொழிபெயர்த்த, அண்ட்ரிக் அடிகளார் பணிபுரிந்த முத்துக்குளித்துறை பகுதியில் உள்ள மீனவர்களின் பேச்சு மொழியிலேயே இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நூலில் போர்ச்சுக்கீசிய வார்த்தைகள் பயன்படுத்தப்படும் இடங்களில் எல்லாம், அந்த வார்த்தைக்கு இரு பக்கங்களிலும் ஜி என்ற குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்தக் காலத்தில் தமிழ் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி இல்லை (வீரமா முனிவர் காலத்தில்தான் தமிழ் எழுத்துக்ளுக்கு புள்ளி வைக்கும் வழக்கம் வந்தது). அதேபோல குறில், நெடில் வேறுபாடுகளும் தெளிவாக இல்லை. நெடில் சில இடங்களில் கூட்டெழுத்தாக உள்ளன.

அபிசீனியா மன்னர் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த நாட்டுக்கு போர்ச்சுக்கல் மன்னர் அனுப்பி வைத்த அச்சு இயந்திரங்கள் எதிர்பாராத விதமாக கோவா வந்து சேர்ந்தன. அதன் வருகை இந்தியாவில் அச்சுப்பதிப்பின் தொடக்கமாக அமைந்து விட்டது. இந்தியாவில் அச்சானாலும்கூட, இதன் ஒரு பிரதிகூட இந்தியாவில் இல்லை என்பதுதான் சோகம். இந்தப் பதிப்பின் ஒரே பிரதி அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ளது. இந்தியாவில் அச்சான இந்தப்புத்தகம் 1779-ஆம் ஆண்டு ரோமுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் ஆஸ்திரிய நாட்டின் நூலகத்தில் அந்த நூலின் பிரதி காணப்பட்டது. பின்னர் அங்கிருந்து எப்படியோ ஐரோப்பிய புத்தகச் சந்தைக்கு வந்து, அங்கிருந்து அமெரிக்காவிற்கு போனது. பல கைகள் மாறிய அந்தப் புத்தகம் கர்ட் ரெட்சிங்கர் என்பவரது கைகளுக்குப் போனது. அவர் 1951-ஆம் ஆண்டில் அந்த புத்தகத்தை ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக அளித்தார். இல்லாவிட்டால், அந்தப்புத்தகமும் நமது பார்வைக்குக் கிடைக்காமல் போயிருக்கும். அந்த நூலின் நிழல் பட பிரதியை, அந்த நூலகத்திலிருந்து பெற்றவர் தனிநாயகம் அடிகள்தான். அவர்கள் கேட்ட பழமையான பிரதி ஒன்றைக் கொடுத்து, அதற்குக் கைமாறாக தம்பிரான் வணக்கத்தின் நிழல் பட பிரதியை கேட்டுப் பெற்றார்.

1963-ஆம் ஆண்டில் வணக்கம் என்ற நூலில் இந்த புத்தகத்தை பேராசிரியர் ராஜமாணிக்கம் பதிப்பித்தார். அதன் ஒளிநகல் வடிவத்துடன்கூடிய பிரதியை தஞ்சையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டையொட்டி தமிழ்நாடன் வெளியிட்டார்.

தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகங்கள் இந்தியாவில் அச்சானாலும் கூட, அதன் மூலப்பிரதிகள் இந்தியாவில் இல்லை என்பதுதான் சோகம். எனினும்கூட, இந்த அபூர்வ புத்தகங்களைக் கண்டறிந்ததில் முக்கியப் பங்கு தனிநாயகம் அடிகளுக்கும், அந்தப் புத்தகங்களைப் பதிப்பித்த பேராசிரியர் அருட்தந்தை ராஜமாணிக்கம் அவர்களுக்கும் உண்டு. அதேபோல, தமிழின் முதல் அச்சுப்பதிப்பு குறித்து ஆய்வுகளை செய்த சுராமர், கிரஹாம் ஷா ஆகியோரையும் நாம் நன்றியுடன் நினைவு கொள்ள வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழில் அச்சு எழுத்து மூலம் வெளிவந்த நூல்களை மொழிபெயர்த்தும்  அவற்றை தனி நூல்களாக 16-ஆம் நூற்றாண்டில் எழுதியும் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் அண்டிரிக் அடிகளார். போர்ச்சுக்கல்லில் பிறந்து இந்தியா வந்து தமிழ் மொழியை நன்கு கற்று இந்தியாவிலேயே வாழ்ந்து மறைந்தவர் அவர். தமிழின் அச்சுத் தந்தை என்று அழைத்து அவரது பெருமையை நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார் அருட்தந்தை ராஜமாணிக்கம். புன்னக்காயலில் தமிழ் பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்று முயற்சி எடுத்த அவரது தமிழ்ப்பற்றுக்கும் அவரது தமிழ்த்தொண்டுக்கும் தமிழ்கூறும் நல்லுலகம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது. அவரது மறைவுக்குப்பின், புன்னக்காயலிலிருந்து தூத்துக்குடியில் அடக்கம் செய்ய அவரது உடல் தூத்துக்குடி கொண்டுவரப்பட்ட போது, தூத்துக்குடியில் அனைத்து மதங்களையும் சார்ந்த மக்களும் திரண்டு வந்திருந்ததே அவரது தமிழ் தொண்டுக்கு எடுத்துக்காட்டு. கார்த்திலியா, தமிழ் அச்சு நூல்களின் தலை எழுத்து. அதிலிருந்துதான், தமிழ் அச்சு நூல்களின் வரலாறு தொடங்குகிறது! அதில் மறக்க முடியாத மைல் கல் – அண்டிரிக் அடிகளார்.

Share the Article

Read in : English

Exit mobile version